யாரு நீங்க?

May 30, 2018கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா? 

தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

தம்பி எனக்கு கொஞ்சம் நடிக்கற திறமை இருக்கு. ஒரு ஸ்டைல், டைமிங் இருக்கு. அதை டைரக்டருங்க ரொம்ப நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. நான் பேசும்போதும் நடக்கும்போதும் ஒரு வேகம் இருக்கு. அது ஜனங்களுக்கு புடிச்சுது. அதை அப்பிடியே கரிக்டா பிடிச்சு பெரிய நடிகனா நான் வந்துட்டேன். அப்புறம் படங்களில அரசியல் பேச ஆரம்பிச்சேன். அதுக்கும் ஜனங்க கை தட்டினாங்க. அப்புறமா திரையில நான் பேசுற வசனங்களையும் அதுக்கு திரையில வர்ர ஜனக்கூட்டம் கைதட்டறதையும் பார்த்து அத நிஜம்னு நான் நம்பிட்டேன். அந்த வசனங்களை நான் யோசிக்கல. பாட்டு வரிகள நான் எழுதல. திரைக்கதைகளை நான் அமைக்கல. நான் வெறும் நடிகன்தான். டைரக்டர் சொல்றத அப்டியே கேட்டு ஸ்டைலா நடிச்சு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வெறும் நடிகன். ஆனா ஒரு கட்டத்தில, திரையில நடக்கிறத நிஜம்னு நானே நம்ப ஆரம்பிச்சேன். இந்த ஆதரவு உண்மைன்னு தோணிச்சு. இந்த மக்கள் எங்கிட்ட இருந்து நிஜமாவே எதையோ எதிர்பாக்கறாங்க என்று தோணிச்சு. அரசியலுக்கு வரணும், மக்களுக்கு சேவை செய்யணும் என்று நான் திங் பண்ணினேன். ஒரே ஒரு பாட்டு. ஐஞ்சு நிமிசம். நாடே சுபீட்சமாயிடும்னு கனவு கண்டேன். சந்தோஷ் நாராயணன் சாங்கு. கரண்டு பாஸாகி தூக்கம் கலைஞ்சதுதான் மிச்சம். 

இங்க பாருங்க தம்பி, இப்பலாம் அரசியல் முன்னமாதிரி இல்லை. முன்ன எம்ஜிஆர் இருந்தாரு. அவரு காலத்தில இந்த சோசியல் மீடியா எல்லாம் இல்ல தம்பி. மீம்சு இல்ல. அந்தக்காலத்தில் ஜனங்க முட்டாளா இருந்தாங்க. திரையில தெரியிறது உண்மை, அது வெறும் பொழுதுபோக்கு இல்லன்னு நினைச்சாங்க. ஆனா இப்ப காலம் மாறிப்போச்சு. திரையில அரசியல் பேசினா சூப்பர் என்னு கைதட்டுவாங்க. ஆனா நிஜத்தில அது வேறன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. தமில் மக்கள் தெளிவா இருக்காங்க. அரசியல் இப்போ மக்கள் மயமாயிடிச்சு. ஏன் எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணறாங்கன்னு எனக்கு புரியல. போராட்டம் பண்ணினாத்தான் குடிக்கற தண்ணிகூட எண்ணை கலக்காம கிடைக்குதுன்னு யாழ்ப்பாணத்திலயிருந்து எனக்கு பசங்க டூவீட்டு பண்ணுறாங்க. எனக்கு இதெல்லாம் புரியல. ரொம்ப கம்பிளிகேட்டட்டா இருக்கு. கோட்பாடு என்னான்னு கேக்கிறாங்க தம்பி. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணறேன்? சும்மா கூகிள் பண்ணிப்பார்த்தன். மார்க்சு, ஏஞ்சல்சு, ஆடம் ஸ்மித்துனு எக்கச்சக்கம் பேரு. எல்லா புத்தகங்களும் கிலோ கணக்கில இருக்கு. அப்புறம் லோக்கல்ல காந்தி பெரியார்னு ஒரு லிஸ்டு வந்திச்சு. நம்ம 2.0 ஜெயமோகன் சார்ட கால் பண்ணி கேட்டுப்பார்த்தன். ‘சூப்பர்ஸ்டாரின் கோட்பாட்டுத்தளம், இந்திய ஞானமரபின் அகவெளி’ ன்னு ஐயாயிரம் பக்கங்கள்ல ஒரு புஸ்தகமே இருக்குன்னாரு. அப்டியா, எக்ஸலண்ட், எங்க கிடைக்கும்னு கேட்டன். ஒரு டூ அவர்ஸ் தாங்க சார், எழுதிக்கொடுத்திடறேன் என்றாரு. எனக்கு தலை சுத்திரிச்சு. ரஞ்சித்கிட்ட கேட்டா அம்பேத்கார்னாரு. யாரு அவர்னேன்? அதான் சார், நீங்க கபாலில பஞ்ச் பேசும்போது பின்னாலேயே சிலையா நின்னாரே அவருதான் என்றாரு. நம்ம பின்னாடியே நின்ன அட்டக்கத்தி தினேசுக்குள்ள அவ்வளவு இருக்குன்னு எனக்கு அதுவரை தெரியாமலேயே போயிடிச்சு. 

நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க தம்பி? நமக்கு எதுவுமே தெரியல தம்பி. அரசியல் என்கிறது ஈஸின்னு நெனைச்சிட்டேன். அது அப்படியில்ல. அது ஒரு துறை. மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறது ஒண்ணு. அத எப்படி செய்யணும்? எதை எங்கே யாருக்கு எப்போ செய்யணும்? அது பத்தின தெளிவான சிந்தனையை எப்படி வளர்த்துக்கணும்? எதுவுமே எனக்குத் தெரியல. நம்மால இந்த போராட்டம் எல்லாம் இறங்கி பண்ண முடியாது. இங்க சிஸ்டம் சரியில்ல. அத சௌந்தரியாகிட்ட சொன்னா விண்டோஸ் அப்கிரேட் பண்ணுங்கப்பா என்கிறாங்க. ஏம்மா, யன்னல்லாம் நல்லாத்தானே இருக்குன்னு சொன்னேன். அது கம்பியூட்டர்ப்பா ன்னு சிரிச்சாங்க. நிறைய படிச்சவங்க. புத்திசாலிங்க. அவங்க பேச்சை கேக்கக்கூடாது தம்பி. முட்டாப்பயலுகளையே கூட வச்சிக்கிட்டு அவங்க பேச்சையே கேட்டுக்குன்னு இருக்கணும். அதுதான் கரிக்டு. 

தம்பி, என்னை நீங்கே அப்டியே தூக்கி சி.எம் செயார்ல வையுங்கன்னு சொன்னா ‘யாரு நீங்க?’ ன்னு பக்குனு கேட்டிட்டீங்க. சரி அதுவும் நல்லதுக்குத்தான் தம்பி. 

நடிகர் திலகம் அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. அமிதாப்பச்சன்கூட அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. என்னயும் அந்த லிஸ்ட்ல சேர்த்திடுங்க. தெரியாத்தனமா நம்ம தலையை பானைக்குள்ள வுட்டுட்டேன். வேணாம். தயவு செஞ்சு கழுத்த அறுத்திடாதிங்க. சின்னதா பானையை உடைச்சு வுடுங்க. தப்பிடுவேன். அடுத்த எலக்சன்ல நம்ம டெப்பாசிட்ட காலி பண்ணிடுங்க. என்னை மாதிரி நடிகர்களுக்கு இருக்கிற அரசியல் ஆசையை இல்லாமப்பண்ணிடுங்க. அப்பதான் நமக்கெல்லாம் அறிவு வரும். பாருங்க. நமக்குத் தெரிஞ்சது நடிப்புங்க. அத சரியா செய்யணும். அரசியலுக்கு வரணும்னா, இந்த நடிகன் எங்கிற சட்டையை உதறிப்போட்டிட்டு ஒரு மக்கள் தொண்டரா பூச்சியத்திலயிருந்து ஆரம்பிக்கணும். அதை நமக்கு உணர்த்துங்க. நா, மய்யம், நம்ம அணில்னு பூராபேரும் வரிசைல நிக்கிறாங்க. கொஞ்சம் பெரிய பலாப்பழம்தான். பரவாயில்ல. நான் சாப்பிட்டா மத்தவனுக்காவது கொஞ்சம் அறிவு வரும். 

தம்பி தேர்தல் என்கிறது சிவாஜி படத்தில ஒரு ரூவா காசை சுண்டுறதுமாதிரி. ஹா ஹா ஹா. நான் வென்றால் என்ன நடக்கும்னு யோசிங்க? எனக்கு எந்தமாதிரியான அரசியல் முன்னனுபவமும் இல்ல. ஒரு கட்சியையே முன்ன பின்ன நடத்தினதில்ல. எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த பழக்கமில்ல. நா எப்டிங்க ஏழு கோடி மக்களை ஆளமுடியும்? அது வேணாம். விட்டிடுங்க. 

ஆனா, நான் தோத்துட்டன்னா நிறைய நல்லது நடக்கும். இந்த அரசியல், ஸ்டண்ட் எல்லாத்தையும் விட்டிட்டு சிம்பிளா, எலிகண்டா நான் படம் நடிக்க ஆரம்பிக்கலாம். சீனி கம்னு ஒரு இந்தி படம். நான் அத எடுத்து பண்ணனும்னு ரொம்பநாளா நம்ம ரசிகன் ஒருத்தனோட ஆசை. செஞ்சிடலாம். ‘பிகு’ ன்னு ஒரு படம். அமிதாப்பும் தீபிகாவும் நடிச்சது. அவரு அப்பா. இவங்க பொண்ணு. பண்டாஸ்டிக்கா ரெண்டுபேரும் நடிச்சிருப்பாங்க. தமிழ்ல அத நானும் திரிஷாவும் பண்ணலாம். இதெல்லாம் நடக்கறதுக்கு எங்கிட்ட இருக்கிற இந்த அரசியல் ஆசை அடியோட விலகிடணும். அது உங்க கையிலதான் இருக்கு தம்பி. 

தயவு செஞ்சு என்னை காப்பத்திடுங்க.

000

Contact Form