பூமியை அழகாக்குபவர்கள்

May 4, 2018


இன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்டேன். ஊட்டிவிடுகையில் சாப்பிடாமல் ஏய்த்தபடி அங்குமிங்கும் திரியும் மழலையைப்போல அந்தச்சிறுகதை என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

ஒரு வயோதிப தம்பதிகள் வந்தார்கள். காலியாக இருந்த முன் சோஃபாவில் அமரலாமா என்று அனுமதி கேட்டார்கள். ‘ஒப்கோர்ஸ்’ என்று சிரித்தேன். ‘காலையிலேயே பிஸியாக வேலையா?’ என்றார்கள். ‘இல்லை, ஒரு சிறுகதை எழுதுகிறேன், அதான்..’ என்றேன். ‘ஓ லவ்லி’ என்றார்கள். நான் என்ன காரணம் சொல்லியிருந்தாலும் அவர்கள் ‘லவ்லி’ என்றுதான் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றியது. அதன்பிறகு என்னைக்குழப்பக்கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, தங்கள்பாட்டில் உட்கார்ந்து தமக்குள் பேச ஆரம்பித்தார்கள். கணவர் ஆஸியிலேயே பிறந்து வளர்ந்தவராக இருக்கவேண்டும். மனைவியின் ஆங்கிலத்தில் ஐரிஷ் வழக்கு இருந்தது. இருவரும் மிகக்குறைவாகவே கதைத்தார்கள். கணவன் அன்றைய ஹெரால்ட்சன்னை பிரித்து வாசித்துக்கொண்டிருந்தார். மனைவி கையில் பென்குயின் பழைய புத்தகம் ஒன்றிருந்தது. ஜேன் ஒஸ்டின் நாவல். பெயரை விரல்கள் மறைத்து நின்றன. இருவரும் அவ்வப்போது வாசிப்பதை நிறுத்திவிட்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே எண்பது வயதுக்கு மேலேயே இருக்கும். இருவருமே அழகாக உடை உடுத்தியிருந்தார்கள். கணவர் டெனிம் அணிந்து, மேலே சேர்ட்டு, அதன்மேலே ஆமைக்கழுத்து ஸ்வெட்டர் அணிந்திருந்தார். மனைவியும் டெனிம் போட்டு, மேலே இளம் மஞ்சள் சட்டை அணிந்து அதன்மேல் மென்சிகப்பில் கார்டிகன் போட்டிருந்தார். முடி பொப்ட் கட் பண்ணியிருந்தார். உலகின் மிக அழகான ஆணும் பெண்ணும் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். இவர்கள் இருவரும் ஐம்பதுகளில் காதலித்திருக்கக்கூடும். எங்கு சந்தித்திருப்பார்கள்? மதுச்சாலையிலா? அல்லது அவர் டப்ளினில் வேலை செய்யச்சென்ற இடத்திலா? அயர்லாந்தில் எப்போதும் மழை பெய்யுமாமே? இள வயதில், எப்போதும் சீராகத்துமித்துக்கொண்டிருக்கும் மழை நாளில், இப்படித்தான் ஒரு கஃபேயில் அமர்ந்திருந்து இருவரும் காதல் கதைகள் சொல்லியிருப்பார்களோ? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை என்றே தோன்றியது. அன்றுதான் சந்தித்தவர்கள்போலவே இருவர் மத்தியிலும் காதல் ஒரு நீரோட்டத்தைப்போல உள்ளோடிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுவே உண்மையாகக்கூட இருக்கலாம். இருவரிடமும் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அல்லது வெளியில் எடுக்கவில்லை. ஏதோ ஒரு பத்திரிகைத்துணுக்கை வாசித்துவிட்டு கணவன் அதை மனைவிக்குக் காட்டினார். மனைவி தோள்களைக் குலுக்கியவாறே “Biscuits to a bear” என்று சொல்லிவிட்டுத் தன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். ‘எம்மா’, அதுதான் அந்த நாவலின் பெயர். எப்படியும் இந்த நாவலை ஐந்து தடவையேனும் ஏலவே அவர் வாசித்திருக்கக்கூடும் என்று தோன்றியது. வாசித்தவற்றை மீள வாசிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. அவை எமக்கு அதிர்ச்சிகளைத் தரமாட்டா. அப்படி ஏதேனும் பக்கங்கள் இருந்தாலும் அவற்றை இலகுவாகத் தாண்டிச்செல்லமுடியும்.

இந்த வயோதிபர்கள் இருவரும் செய்த எந்த விடயத்திலும் எந்த அவசரமும் இருக்கவில்லை. இன்னும் பல மணித்தியாலங்களுக்கு இவர்கள் இங்குதான் அமர்ந்திருக்கப்போகிறார்கள். அவர்களிடம் எந்தப்பதட்டமும் இருக்கவில்லை. இந்தக்காலைப்பொழுதை இவர்கள் இம்மி இம்மியாக அனுபவிப்பார்கள். இன்று பொழுது இவர்களுக்காகவே விடிந்திருக்கவேண்டும். இவர்களுக்காகவே குளிர்ந்திருக்கவேண்டும். இவர்களுக்காகவே கொஞ்சம் கொஞ்சமாக இனி அது வெம்மை அடையும். மாலை மயங்கி இருளும். இவர்கள் தூங்கும் பொழுதில் இரவு இலவுகாத்துக் கிடக்கும். மீண்டும் நாளைய பொழுதும் இவர்களை நாடியே விடியும். இவ்வகை மனிதர்கள்தாம் நம் உலகத்தை அழகாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. வெறுப்பும் கீழ்மையும் காழ்ப்பும் இகழ்ச்சியும் நிறைந்த உலகில் இவர்களே சிறு வெளிச்சத்தைக் கொடுப்பவர்கள். இந்த வெளிச்சத்தை ஒரு தீபம்போல உலகம் முழுதும் சுமந்து சென்றால் என்ன என்று தோன்றுகிறது. இவர்களைப்போன்றவர்களையும் தாங்குகிறோம் என்பதனால்தான் நம் பூமி காய்த்தல் உவத்தல் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் இவர்கள் மறைந்துபோனால் இந்தப் பூமியும் அலுத்துப்போய் சுற்றுவதை நிறுத்திவிடுமோ என்ற அச்சமும் கூடவே வருகிறது.

நான் மீண்டும் என் கதைக்குத் திரும்பினேன். கதையின் வரிகள் இன்னமும் பிடிமாட்டேன் என்று அடம்பிடித்தது. ‘நீ வரும்போது வா’ என்று அதை விட்டுவிட்டேன்.

எனக்கு எந்த அவசரமுமில்லை.

Contact Form