Skip to main content

மனிசர் கொலையுண்டார்

“கல்லொன்று வீழ்ந்து 
கழுத்தொன்று வெட்டுண்டு 
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு 
சில்லென்று செந்நீர் தெறிந்து 
நிலம் சிவந்து 
மல் லொன்று நேர்ந்து 
மனிசர் கொலையுண்டார்” 
— தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி 

மே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் என் சக நான்களும்தாம் அவர்கள். அமைதி காப்போர். செயற்பாட்டுத்தளத்தில் இயங்காத சாதாரண மனிதர்கள். அதிகபட்சம் இந்த இப்பகிர்வைப்போல ஒரு குரலைக்கொடுத்துவிட்டு ஓய்ந்துவிடுவோர். இதுநாள்வரை அதிகாரத்துக்கு எதிராக என்ன குரலை நான் கொடுத்திருக்கிறேன் என்று யோசித்துப்பார்க்கிறேன். அவ்வப்போது சில கண்டனங்கள். குற்றவுணர்ச்சியை எதிர்கொள்ளமுடியாமல் செய்யும் சில உதவிகள். வேறு பெரிதாக என்ன புடுங்கியிருக்கிறேன் என்றால் ஒரு மயிரும் கிடையாது. இங்கே என்னைப்போலத்தான் பலரும் கொலையுண்டு கிடக்கின்றனர். அதுதான் மஹாகவி சொன்ன, 'மனிசர் கொலையுண்டார்'.

இரண்டாயிரத்து ஒன்பது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது நான் நாள் முழுதும் நெஞ்சு படபடக்க இணையத்தில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது. வயிற்றில் எந்நேரமும் ஒரு அமிலம் கரைந்துகொண்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் அந்நாள்களில் என்னால் சாப்பிட முடிந்தே இருக்கிறது. அலுவலகம் போய் வந்துகொண்டிருந்தேன். நண்பர்களோடு நாட்டு நிலைமைகள் பற்றிக் கதைகள் பல பேசியிருக்கிறேன். அன்றைக்கு அம்மாவும் அக்காவும் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பா நடப்புக் கதைத்துக்கொண்டிருந்தார். எனக்கு அழுகை எதுவும் வரவில்லை. மாசக்கணக்கில் இழுபட்ட பேரவலம் முடிவுக்கு வந்ததே என்ற சின்ன ஆசுவாசம் ஒன்று வந்தது. இறுதிப்போர் போன்ற நிலையை எதிர்கொண்டிருக்காவிடினும், தொடர்ச்சியாக இருபத்தைந்து வருடங்கள் போரையும் இடம்பெயர்வையும் எதிர்கொண்ட அனுபவம், சனியன் பிடிச்ச இந்தப்போர் முடிந்தால் போதும் என்ற எண்ணத்தைத்தான் அப்போது எனக்குள் விதைத்திருந்தது. 

வாழ்க்கைப் பிரமிட்டின் அடிப்படைத்தேவை, அன்றாடத்தேவை, வேலை, வீடு, குடும்பம் என்று ஒருவித சௌகரியத்தில் வாழ்ந்துகொண்டு, வசதியான பொழுதுகளில் குரல் எழுப்பிவிட்டு அடங்கிவிடுவது போன்ற ஒரு அபத்தம் வேறு இல்லை என்று தோன்றுகிறது. நிர்வாணக்கூச்சம் ஏற்படுகிறது. அப்படியே குரல் எழுப்பினாலும் அது யாரின் காதுகளை எட்டுகிறது என்றால், பக்கத்துத் தெருவில் நிர்வாணமாக நின்று கூவுகின்றவரைத்தான். சமயத்தின் என் குரலும் அவர் குரலும் ஒன்றாக இருக்கலாம். வேறு வேறாகவும் இருக்கலாம். ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ‘நண்பா’ என்பார். இல்லையா, நண்பருடன் சேர்ந்து என்னை எதிரியாக்கிக்கொள்வார். யாருமே சொல்லப்படுவதை கிரகிக்க முயல்வதில்லை. சொல்லப்படுவது தன் கருத்துக்கு ஒத்ததா இல்லையா என்பதைத்தான் கவனிக்கிறார்கள். சொல்கிறவர் தனக்கு ஒத்தவரா இல்லையா என்றுதான் பார்க்கிறார்கள். இங்கே கதைத்து என்ன மாளப்போகிறது என்ற எண்ணமே நம்மை அமைதியாக்குகிறது. 

நாம் ஒவ்வொருதடவையும் அமைதியாகும்போது அதிகாரம் எழுகிறது. 

அதிகாரம் எது? ஆயுதம் வைத்திருப்போரா? அரசா? பெரு நிறுவனங்களா? பீடங்களா? அவையெல்லாம் அதிகாரத்தின் வெறும் முகங்கள்தான். அதிகாரத்திற்கான விதை நம் எல்லோரிடத்தினுள்ளும் புதைந்துகிடக்கிறது என்பதுதான் உண்மை. நமக்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அது நம்மிலிருந்தும் வெளிப்படுகிறது. சமயத்தில் காளான்போல. சூழல் உருவாக்கிக்கொடுக்கும் சந்தர்ப்பம் பெரிதாக இருக்கையில் அது பெரு விருட்சமாக வெளிப்படுகிறது. அரசு அதிகாரத்தை உருவாக்கிக்கொடுத்தது யார்? நாம்தானே. நம்மில் ஒருவர்தானே அந்தக் கதிரையில் அமர்ந்திருப்பவர்? சமவுடைமை, சோசலிசம் என்று புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த பல அரசுகளால் சர்வாதிகாரத்தையும் அடக்குமுறையையும் எப்படி செய்ய முடிந்தது?வாக்காளர் பதிவேட்டை கையில் வைத்துக்கொண்டு, அதிலிருந்த தமிழர் முகவரிக்கெல்லாம் தேடிச்சென்று அங்கிருந்தவரை வெட்டிக்கொன்ற மனிதர்கள் யார்? அரசும் ஆயுதம் ஏந்திய காவல்துறையுமா? எமக்காகப் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் ஆயுதம் கையில் கிடைத்தவுடன் எம்மில் பலரையே சுட்டுக்கொன்றதை மறக்க முடியுமா? சிங்களப் பேரினவாதம் என்கிறோம். அதே சமூகத்தின் ஜேவிபி இளைஞர்களை அவர்கள் எப்படிக் கொன்று குவித்தார்கள்? அமைதிகாக்க வந்த இந்திய இராணுவம் செய்த கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் எத்தனை? தென் ஆபிரிக்க ‘மரிக்கானா’ கொலைகளின் குருதிகூட இன்னமும் ஆறியிருக்காது. அங்கே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றுகுவித்தது வெள்ளையின காவல்துறை கிடையாது, கறுப்பின காவல்துறைதான். தூத்துக்குடியில் நிகழ்ந்ததும் அதுதான். ‘எப்படி மிருகத்தை வேட்டையாடுவதுபோல் சக மனிதர்களைச் சுட்டுக்கொல்லமுடிகிறது?’ என்று நண்பர் ஒருவர் கவலைப்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய பழங்குடிகள் அப்படித்தான் வேட்டையாடப்பட்டார்கள். அதிகாரம் கொடுக்கும் போதை அதைச் செய்யவைக்கும். நம்மினத்துக்கும் இதுவொன்றும் புதிதில்லையே. எத்தனையைப் பார்த்துவிட்டோம். வீட்டினுள் வந்து, உட்கார்ந்து சோறு கறி சாப்பிட்டுவிட்டு, சோறு போட்டவரையே சுட்டுக்கொன்றவர்கள் இருந்த, இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். 

அதிகாரத்துக்குத் தேவை ஒரு முகமூடி. சமயத்தில் அது மதத்தை அணிந்துகொள்கிறது. அல்லது பேரினவாதம். தேசியம். சாதி. மொழி. கட்சி. கோட்பாடு. நிறுவனங்கள். அரசு. ஏதோ ஒரு முகமூடி. ஏனெனில் இந்த முகமூடிகள் அதிகாரத்துக்குச் சக்தியையும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் திரட்டிக்கொடுக்கின்றன. கூட்டம் சேர்க்க உதவுகிறது. அது அதிகரிக்க, அதிகரிக்க அதிகாரத்தின் சக்தியும் அதிகரிக்கிறது. இதை எதிர்ப்பதற்குத் தனித்து நின்று பயனில்லை என்பதுதான் உண்மை. அதிகாரத்துக்கு எதிரான கூட்டம் எப்போதும் பிரிந்துதான் கிடக்கிறது. இங்கே ‘அதிகாரத்துக்கு எதிரான குரல்கள்’ என்ற அளவில் நாம் ஒற்றுமைப்படுவது அவசியமாகிறது. பேரினவாதம் ஒரு அதிகாரம் எனில் பேரினவாதத்துக்கு எதிராக ஒற்றுமைப்பட்டு நிற்பது அவசியமாகிறது. பெருந்தேசியவாதம் ஒரு அதிகார மையமெனில் அதனை எதிர்க்க ஒற்றுமைப்படுவது அவசியமாகிறது. அப்படி நிற்கையில் நம் அருகே திருடரும் நிற்கப்போகிறார். நேர்மையானவரும் நிற்கப்போகிறார். வசதி படைத்தவரும் நிற்பர். ஏழையும் இருப்பர். எச்சாதியும் எம்மதமும் அங்கு நிற்கும். தம் நலனுக்காக வந்து நிற்போரும் இருப்பர். அதற்குள் சில அதிகார முகமூடிகளும் வந்து நிற்கும். அந்தச்சமயத்தில் யாரை நாம் எதிர்க்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அங்கே வைத்து முட்டையில் மயிர் பிடுங்குவது அதிகாரத்துக்கு நாம் கொடுக்கும் மூச்சுக்காற்றாகத்தான் போய்விடும். எல்லா அதிகார மையங்களையும் ஒரே சமயத்தில் எதிர்ப்பது வெறுமனே தவளைபோலக் கத்திக்கொண்டிருப்போருக்கு சாத்தியமே ஒழிய நடைமுறையில் சாத்தியமில்லை. அதனாலேயே பொதுப் புரிந்துணர்வுகளின் அடிப்படையில் நமக்கு முரணானவர்களுடனும் சேர்ந்து இயங்கவேண்டிய தேவை அவ்வப்போது ஏற்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களின்போது இதனைக்கொஞ்சம் கவனித்திருக்கலாமே என்ற ஆதங்கம் வந்தது. தூத்துக்குடி காவல்துறை வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும் இது பெருமளவில் பொருந்தும். காவல்துறை அல்லது அரசு ஒரு அதிகார மையம் எனில் அதற்கு எதிராக பிரிவினைகள் இன்றி ஒற்றுமைப்படுதல் அவசியமாகிறது. இதில் சாதி, மதம், கட்சி, கோட்பாட்டுப் பிரிவினைகள் அவசியமற்றவை. இந்தச்சூழலை பல அமைப்புகள் தம் இலாபத்துக்காகப் பயன்படுத்தத்தான் போகின்றன. அவற்றின்மீது அவதானமாக இருந்தபடி, ஆனால் நோக்கத்தைப் போட்டுடைக்காமல் இதனைத் தொடர்ச்சியாக இயக்குவது அவசியமாகிறது. 

இதைச் சொல்லும் தகுதியிலோ இடத்திலோ நான் இல்லை என்பது தெரியும். ஆனால் சொல்லும் பொருளில் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். போராட்டங்களின்போது மனுசர் கொலையுறாமல் பார்க்கவேண்டியது தலையாய கடமையாகிறது. காரணம் இக்கணம் யார் என்ன சொன்னாலும் சில மாதங்களில் இதுவும் கடந்துபோகத்தான் போகிறது. போராட்டம் செய்பவர் அடங்கிவிடுவர். அல்லது இதைவிடப் பெரிதான போராட்டத்துக்கான தேவை இன்னோர் இடத்தில் ஏற்பட்டுவிட அவர்கள் அங்கே போய்விடுவார்கள். ஊடகங்களுக்கு அலுத்துவிடும். முகநூலில் பேசுவதற்கு வேறுவிடயம் வந்துவிடும். என்னைப்போன்ற பலர் வேறு ஒரு புள்ளிக்கு நகர்ந்துவிடுவர். அதிகாரம் இன்னொரு மூலையில் தன் மூக்கை நீட்டத்தான் போகிறது. ஆனால் பலியான மனிதர்கள் மீளப்போவதில்லை. அவர்கள் வீட்டில் இல்லாமற்போன அண்ணனோ, அக்காவோ, தம்பியோ, தங்கையோ, கணவனோ, மனைவியோ, அவர் இனிமேல் திரும்பி வரப்போவதேயில்லை. காயப்பட்ட பலர் வாழ்நாள் ஊனத்தில் அல்லற்படப்போகிறார்கள். எத்தனை பெரிய இழப்பு அது. நம் வீட்டில் ஒரு இழவு விழும்போது மற்றவருக்கு அது வெறும் அஞ்சலி மட்டும்தான். ஆனால் நமக்கு அது ஒரு உறவின் இழப்பு. ஆண்டாண்டு கூடி வாழ்ந்த மனிதரின் பிரிவு. அதனால் இனியும் மனிசர் கொலையுறவேண்டாம். கொல்லப்படவும் வேண்டாம். அதிகாரத்திற்கு அதில் எந்த அக்கறையும் இல்லாதபோது அதற்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு அந்தப் பொறுப்பு மேலும் அதிகமாகிறது. 

தூத்துக்குடி சம்பவத்தில் பலியான உறவுகளுக்கு என் அஞ்சலிகள். அவர்களின் குடும்பத்தவர்களின் வலியை என்னால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது என்று தெரியும். செயற்பாட்டுத்தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் என் முழுமையான மனப்பூர்வமான ஆதரவு. அவர்களை நான் பெருமதிப்புடன் பார்த்து வியந்துகொண்டிருக்கிறேன். 

இறைஞ்சுவது ஒன்றை மட்டும்தான். 

‘இனியும் மனுசர் கொலையுறவேண்டாம்’

000

சார்புடைய கட்டுரைகள்Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட