Skip to main content

சமாதானத்தின் கதை - கருத்துகள்




'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள்.


-- லெ. முருகபூபதி --
கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை.

அன்புடன்
பிரிய வாசகன் முருகபூபதி

-- இளங்கோ டீசே --
காலச்சுவடில் வந்த ஜே.கே.யின் 'சமாதானத்தின் கதை'யைப் போல நம் சூழலில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. சமாதானம் என்ற பெயர் வந்ததைப் பூடகமாய்ச் சொல்வதற்கே அவர் நிறையப் பகுதிகளை இங்கே செலவழித்திருக்கின்றார். இப்படிப் பட்டப்பெயர்களைப் பூடகமாகப் பலர், தமது கதைகளில் சிறப்பாக எழுதியிருக்கின்றனர். அண்மையில் வாசித்ததில் உடனே நினைவுக்கு வருவது யதார்த்தனின் கதையான 'இலங்கைப்பூச்சி'.
மேலும் 'சமாதானதின் கதை' ஏற்கனவே சொல்லப்பட்டக் கதை என்றாலும் அதிலிருந்து வெளிவந்து வாசகரை வசீகரிக்கக்கூடிய எந்தத் தெறிப்பும் இதில் இல்லை என்பதுதான் பலவீனம். ஜே.கே.யின் அபுனைவுகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பைப்போல, அவரது புனைவுகளில் வாசித்தளவில் பெரிதும் இருந்ததில்லை.
அவர் கொஞ்சம் செவிமடுக்கக்கூடியவர் என்றால், அவர் ஒன்று ஜனரஞ்சகமான எழுத்துக்கு (அதில் எந்தத் தவறுமில்லை) முற்றாக நகரவேண்டும் இல்லாவிட்டால் அதன் எதிர்ப்புறத்துக்கு நகரவேண்டும். இரண்டுக்கும் இடையில் அல்லாடும் நிலைமையே அவரது கதைகளில் பொதுவாகக் கண்டுகொண்டிருக்கின்றேன். அது சிக்கலானது. ஒன்றின் கரையின் நின்றுகொண்டு விருப்பமெனில் இன்னொரு கரைக்கு நகரலாம். இல்லை எனக்கு இரண்டு பக்கமும் வேண்டுமென்றால் நாணயம் போல கதைகளில் ஒரு முழுமை ஒருபோதும் வந்துவிடாது என ஒரு வாசகராக அவருக்குச் சொல்லவிரும்புகின்றேன்.
         http://djthamilan.blogspot.com/2018/06/blog-post_21.html


-- சுபாசிகன் --
கன நாள் முன்பு எழுதிய பதிவிற்கு இப்போது கருத்து எழுதுகிறேன். என் வாசிப்பு, அன்றாட வேலையெல்லாம் கொஞ்சம் சோங்கல் பிடித்துப்போய் விட்டது.
சமாதானம் - பரிமளம். திறமையான படைப்பு. உள்ளே sensitive ஆக இருந்து, அன்புக்கு ஏங்கி, ஆனால் அதை வெளிக்காட்டாமல், பரிமளத்திற்குக் கடமை செய்வதை சந்தோஷமாகக் கொள்ளும் சமாதானம். சமாதானத்தை ஒருவித சுயநலத்துடன் பாவிக்கும் பரிமளம். புறக்கணிப்பில் உண்டாகும் மன அழுத்தம், சமாதானத்தின் உண்மையான உணர்வு / வேதனையைக் காட்டுகிறது. இன்னொருவிதத்தில் வாழ்வில் பாதிக்கப்பட்ட பரிமளத்தின் சரி-தவறு சொல்லமுடியாத தன்னலப் போக்கு. அவ்வாறே வளர்க்கப்படும் மகள் எம்மவரின் குடும்பப் போக்கைக் காட்டுகிறது. சமாதானம் - பரிமளம் பாத்திரம் இந்தக் கதையில் வருபவர்கள் போல் எல்லா ஊரிலும் இருக்கலாம். தவிர எல்லா உறவு, நட்புக்களிலும் உள்ளார்கள். உலகம் இந்த இரண்டுவித மனிதர்களால்தான் இயங்குகின்றது. ஆனால் இறுதியில் சமாதானம் பற்றி எவரும் அக்கறைப்படப் போவதில்லை.

ஜேகே, எழுத்து உங்கள் கொடை. எப்போதும் போல. தொய்வே அடையாத கதைப் போக்கு - நூல் பிடித்தது போல், பாத்திரப் படைப்புக்கள், அதைக் குறியீடாகக் கொண்டு எங்கோவெல்லாமோ சிந்திக்கத் தூண்டுவது, ஆழமான / உண்மையான எழுத்து, ஊர் வழக்குகள், மண் வாசனை, எப்போதும் கதைப் போக்கினூடேயே இழையோடும் நகைச்சுவை. என்னத்தைச் சொல்லுவது! எல்லாப் பதார்த்தங்களும் சரியான அளவில் ஒன்றாகக் கலந்து, அருமையாகச் செய்த சுவை மிகுந்த சாப்பாடு போல் என்று சொல்லலாமா? அப்படியே ஏப்பம் விட்டு அனுபவிக்கும் நிறைவு! ஆனால் குழைத்துச் சாப்பிட்ட மணம் கையை விட்டுப் போகாது. இப்படியும் கூடப் பறையலாம், சுருக்கமாக... நல்லதொரு மலையாளப் படம் பார்த்த மாதிரி!

-- தன்யா --
ஒவ்வொரு கோயிலடிக்கும் ஒவ்வொரு சமாதானம். I am familiar with this character. I have seen them exploited, taunted and chucked out. பல சமயங்களில் பரிமளமாகவும் சில சமயங்களில் நானே சமாதானமாகவும் இருந்திருக்கிறேன். Such a unique piece of writing.

-- அமுதன் --
வணக்கம். நீங்கள் எழுதிய சமாதானத்தின் கதையை வாசித்தேன். 30 ஆண்டுகளை முழுவதுமாக வாழ்ந்து கடந்த உணர்வு ஏற்பட்டது. உள்ளார்ந்த அனுபவ வெளியில் இருந்து இந்த படைப்பு உருவாகியிருப்பது புரிகிறது. மொழி நடை, தயக்கமின்றி படித்து கடக்க வைத்தது. அரசியல் வெளியும், சூழல் வெளியும் மனித செயல்பாட்டை நிர்ணயிப்பதை இந்த படைப்பின் ஊடாக காண முடிந்தது. மகிழ்ச்சி.
எளிய அன்பில்
அமுதன்

-- சரவணன் --
‘சமாதானம்’ போன்ற நபர்கள் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சமூகம் அவர்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையாகத்தான் கருதிவருகிறது.

000 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக