Skip to main content

குஷி



நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு, 
‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’
பதிலுக்கு நான், 
‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’
சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை. 

இரவு முழுதும் குஷி பார்த்த காலப்பகுதியை ஞாபகப்படுத்த முயன்றுகொண்டிருந்தேன். அந்தச்சமயம்தான் சாவகச்சேரிக்குள் இயக்கம் இறங்கியிருக்கவேண்டும். இயக்கம் எப்படியும் யாழ்ப்பாணத்தைப் பிடித்துவிடும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரில் எந்நேரமும் மல்டி பரல் இறங்கிக்கொண்டிருந்தது. இடம்பெயரும் தென்மராச்சி மக்களால் வலிகாமம் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. பொதுவாக இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தயக்கத்துடன் திறக்கப்படும் யாழ் நகர கேற்றுகள் இம்முறை நன்றி நவிலலுடன் திறக்கப்பட்டன. நாங்கள் எல்லோரும் உயர்தரப் பரீட்சை எடுத்துவிட்டு றோட்டு அடிபுன்னிக்கொண்டு திரிந்த காலம். சண்டை கொஞ்சம் உக்கிரமடையவும் அரியாலை, கொழும்புத்துறை சனங்களும் இடம்பெயர ஆரம்பித்திருந்தன. தட் மீன்ஸ், சுண்டுக்குளியுந்தான். அத்தனை நண்பர்களும் சுண்டுக்குளி பெண்கள் வீடுகளில் பொருட்களை எடுத்துக்கொண்டுபோய் மானிப்பாய், கோண்டாவில்பக்கம் வைத்துக்கொண்டிருந்தார்கள். 

அத்தியடியில்தான் பிரியாவின் வீடு இருந்தது. 

பிரியா வீட்டிலும் சாமான் ஏற்ற ஆரம்பித்திருந்தார்கள். அப்போது லொறி எல்லாம் கிடையாது. அந்த வீட்டில் சாமான் ஏற்றுவதற்கு பயங்கரப்போட்டி. ஆளாளுக்குக் கையில் கிடைத்ததைத் தூக்கிக்கொண்டு குளப்பிட்டி றோட்டில் இருந்த பிரியாவின் சொந்தக்காரர் வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொண்டிருந்தோம். வீட்டு முகவரி தெரியாதவர்கள் தங்கள் வீடுகளில் கொண்டுபோய் வைத்துக்கொண்டிருந்தார்கள். என்னிடம் அண்ணாவின் சி50 மோட்டர் சைக்கிள் ஒன்றிருந்தது. லைசன்ஸ் எதுவும் இருக்கவில்லை. அதில் ஒரு மூன்று ட்றிப் ஏற்றியிருப்பேன். முதலில் உடுப்புகள், சமையல் பாத்திரங்கள். அடுத்ததாக விறகு, அடுப்பு, வாளி போன்ற ஐட்டங்கள். அதற்கப்புறம்தான் டிவி, ரேடியோ போன்றவை. பெடியள் இரத்தமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான்காவது ட்றிப்புக்காக நான் திரும்பியபோது பிரியாவின் வீடு மொத்தமாகக் கழுவித் துடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பிரியாவும் அம்மாவும் மாத்திரமே மீதமிருந்தார்கள். நான் வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்தேன். பத்தியில் ஒரு பழைய கறல் பிடித்த மின்விசிறி ஒன்று கிடந்தது. 

‘இந்த பாஃன் வேலெய்யுமா?’ 

‘முந்தி வேலை செஞ்சுகொண்டுதான் இருந்தது. திருத்தோணும்’ 

எல்லா பாஃனும் ஒருகாலத்தில் வேலை செய்துதான் இருக்கும் என்கின்ற உண்மையை பிரியாவுக்கு நான் சொல்லவில்லை. பிரியாவையும் அம்மாவையும் பார்த்தேன். திடீரென ஒரு ஐடியா வந்தது. அந்த பாஃனை அலேக்காகத் தூக்கினேன். 

‘அன்ரி … அடுத்ததா கீர்த்தி வருவான். நீங்கள் அவனோட வாங்கோ … நானும் பிரியாவும் இப்ப போறம். பின்னால இருந்து பாஃனை பிடிக்க பிரியா வேண்டும்’ 

அன்ரி ஒன்றும் சொல்லவில்லை. நானும் பிரியாவும் புறப்பட்டோம். சி50 அறுபதில் பறந்தது. அந்த ஸ்பீடுக்கே கண்ணால் தண்ணி வழியும். ஹெல்மெட் எல்லாம் நாம் போடுவதில்லை. போகும் வழியில், பின்னால் இருக்கும் பிரியாவுடன் பேசிக்கொண்டே போனேன். நான் சொன்னது எதுவும் பிரியாவுக்குக் கேட்டிருக்க சாத்தியமில்லை. ஆனாலும் பேசினேன். பிரியா சும்மாவே கொஞ்சம் தொக்கை. அத்தோடு பாஃனையும் ஒருபக்கம் மடியில் வைத்துக்கொண்டுவந்ததால் சி50 திருப்பங்களில் உலாஞ்சியது. சமாளித்துக்கொண்டு பாரதியார் சிலை தாண்டி அரசடி றோட்டுக்குள்ளால் சி50 ஐ திருப்பினேன். 

'நல்லூரைக் கடைசியா ஒருக்காப் பார் பிரியா. இனி எப்ப இஞ்சால வருவமோ தெரியா… வந்தாலும் கோயில் இருக்குமோ ஆர் கண்டார்?'

சும்மா ஒரு டென்சன் ஏற்றத்தான் சொன்னேன். அது அப்போது ஒரு பழக்கம். எல்லாவற்றையும் மிகைப்படுத்துவதில் உள்ள இன்பம். டோறா அடித்தாலும் பெரிய அட்டாக்தான். காவலரண் தகர்க்கப்பட்டாலும் மாபெரும் வெற்றிதான். இப்போதும் இயக்கம் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கப்போகுது, நாப்பதினாயிரம் ஆர்மி சிக்கிவிட்டது. இந்தியா ஆர்மியை மீட்க வரப்போகுது. இந்தியன் ஆர்மியை கடலிலேயே வழிமறித்துத்தாக்கத் திட்டம் ரெடி. பழைய அடி அவங்களுக்கு மறந்திருக்காது. இதோட சிங்களவன் வழிக்கு வருவான். இப்படி சிந்திப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. வரும் வராது என்பது வேற விடயம். எது வந்தாலும் எமக்கு எந்தக்கல்லும் நகரப்போவதில்லை என்பது பின்னாளில் பின்நவீனத்துவ இலக்கியவாதிகள் சொல்லித்தந்தது. யார் என்ன சொன்னாலும் ‘சுதி’ என்றொரு விசயம் இருக்கல்லவா. அனுபவித்தவர்களுக்குத்தான் அது விளங்கும். 

பிரியா நான் சொன்ன எதற்கும் ரியாக்ட் பண்ணியதாகத் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டிருக்கவும் சந்தர்ப்பம் இல்லை. சி50 பழம் றோட்டில் திரும்பி ஆலடிச்சந்தியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஒரு ஆர்மி எங்களை மறித்தான். கையில் ஒரு பெரிய பொல்லு வைத்திருந்தான். 

‘எங்க போறது?’ 

‘வீட்ட’ 

அவன் பின்னாலே பிரியாவைப் பார்த்தான். மடியில் இருந்த துரு ஏறிய மின்விசிறி அவனைத் துருத்தியிருக்கவேண்டும். 

‘சாமான் ஏத்திறது?’ 

‘இல்ல சேர் …பாஃன் ரிப்பேர் … ரிப்பேர்கலா’ 

ஏ.எல் எடுத்துவிட்டு சிங்களக் கிளாசுக்குப் போய்க்கொண்டிருந்தேன். தென்னிலங்கைப் பல்கலைக்கழகம் எதற்கும் தெரிவானால் சிங்களம் தெரியாமற்போய்க் கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதனால். அப்படியானால் மூன்று பந்திக்கு முன்னாலே ஏறிய ‘சுதி’. அது வெறும் சுதி மட்டும்தான். இது வாழ்க்கை. 

‘பொரு பொரு … திரும்பிபோங்க … யாரும் சாமான் கொண்டுபோறது இல்ல.. யரேங்’ 

பொல்லை எடுத்து விரட்டினான். மோட்டர் சைக்கிளைத் திருப்பினேன். தந்திரோபாய பின்னகர்வு. 

‘இந்த பாஃன் இப்ப எதுக்கு? இங்கன எங்கையும் எறிஞ்சிட்டுப்போகலாம்’ 

‘விசரா உனக்கு … திருத்திப்பாவிக்கலாம் …. ஆர்மிக்கு உச்ச எனக்குத் தெரியும்.’ 

மோட்டர் சைக்கிளை அப்படியே மணத்தரை ஒழுங்கைக்குள்ளால் திருப்பி, சிவன் அம்மன் கோவில்வழி சென்று பரமேஸ்வராச்சந்திக்குப்போனால் அங்கேயும் ஒரு ஆர்மி தடியோடு. பிறகு திருப்பி அம்மன் கோயில் பின்பக்கத்தால் சென்று தபால்பெட்டிச்சந்தியால் மேஜர் டயஸ் வீதிக்குள் நுழைந்து, சுத்திச் சுழன்று ஒருவாறு குளப்பிட்டி வீதியில் இருந்த பிரியாவின் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தோம். அங்கே பிரியாவையும் பாஃனையும் இறக்கிவிட்டு, அந்த வீட்டில் கொடுத்த பிளேன்ரீயைக் குடித்துவிட்டு சி50 ஐ எடுத்தால் டாங்கில் எண்ணை அடிக்கட்டையில் நின்றது. பெற்றோல் அடிக்கக் காசு இல்லை. பிரியாவின் அம்மாவை கீர்த்தி போய் ஏற்றியிருப்பானா என்ற சந்தேகம் வந்தது. உடனே வீட்டுக்குப்போய் அண்ணாவிடம் நூறு ரூபாய் வாங்கிப்போய் பெற்றொல் அடித்தேன். சுண்டுக்குளி கோகிலவாணி வீடு மாம்பழச்சந்தியடியில் இருந்தது. இந்நேரம் பெடியள் அவள் வீடு மட்டுமில்லாமல் பக்கத்துவீடுகளையும் கழுவித்துடைத்திருப்பாங்கள். ஆனாலும் ஒரு நப்பாசை. பிரியாவின் அம்மாவை கீர்த்தி பார்த்துக்கொள்வான். மோட்டர்சைக்கிள் கோகிலவாணி வீட்டுக்குப் பறந்தது. அவள் வீட்டு கேற்றடியில் சி50 ஐ நிறுத்திவிட்டி உள்ளே போனால், உள்ளே கீர்த்தி இரும்புக்கட்டிலைக் கழட்டிக்கொண்டிருந்தான். 

பிக்பாஸில் மும்தாஜைக் கண்டதும் இவ்வளவும் கீர்த்திக்கும் ஞாபகம் வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத்தெரிந்து இராஜசுலோசனாவை இன்னமும் கற்பனையில் ரசித்துக்கொண்டிருக்கும் பெரிசுகளைத் தெரியும். இராஜசுலோசனா முதுமை அடைந்து இறந்துவிட்டிருக்கவும்கூடும். ஆனால் அந்தப்பெயரும் முகமும் அவர்களின் இளமைக்காலத்தை மீளக்கொண்டுவருகிறது. சிலருக்கு அது ஶ்ரீபிரியா ஆகிறது. அனுராதா என்று இன்னொருவர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருத்தர். இதே காரணம்தான் பாடசாலை பழையமாணவர் சங்கங்கள் செழிப்படையவும் காரணமாகின்றன. பழைய மாணவர் சங்கங்கள் மனிதர்களை அவர்களின் பதின்மத்துக்குக் கூட்டிப்போகின்றன. சங்க நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும்போது எண்பதென்றாலும் முப்பதென்றாலும் தம் வயதை பதினைந்தாகவே சிருட்டித்துக்கொள்கின்றனர். கோயில்கள் மரணத்தை வெல்லும் கனவை கட்டியெழுப்புகின்றன. பழைய மாணவர் சங்கங்கள் மார்க்கண்டேயர் கனவை கட்டியெழுப்புகின்றன. அதனாலேயே எம் சமூகத்தில் இரண்டுக்கும் அவ்வளவு கிராக்கி. வயதும் போகக்கூடாது. சாகவும் கூடாது. 

சரி அதைவிடுவோம். பாக் டு குஷி. 

ஆக அந்த சாவகச்சேரி அடிபாட்டு சமயம்தான் குஷி பார்த்திருக்கவேண்டும். விஜய் ஒரு மசுக்குட்டி மீசை வைத்துக்கொண்டு அந்தப்படத்தில் வருவார். ஜோதிகா இடுப்பு அந்தப்படத்தோடு மிகப் பிரபலமானது. கிளைமக்ஸில் லிப் டு லிப் கிஸ்ஸும் அடிப்பார்கள். முதன்முதலாக ஒரு முழுத் தமிழ்த் திரைப்படத்துக்கும் மைக்கல் ஜாக்சன், டல்கி பொண்டேஸ் போன்ற பல வெள்ளைக்காரர்கள் இணைந்து இசையமைத்திருப்பார்கள். இத்தனை சிறப்புகள் அந்தப்படத்துக்கு இருந்தாலும் நம்மை இரண்டாம் மூன்றாம் ஷோவுக்கும் திரும்பத் திரும்ப இழுத்தது ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல்தான். சங்கர் மகாதேவனும் வசுந்தராதாசும் சில குதிரைகளும் சேர்ந்து பாடிய பாடல். பொதுவாக இந்த மாதிரிப் பாடல்களை ஜானகிதான் தமிழில் முனகுவதுண்டு. இதில் வசுந்தராதாஸ் ஆங்கிலத்தில் முனகுவார். காட்சியில் நிறைய குதிரைகளும் கனைக்கும். மின்சாரக்கண்ணாவிலும் குதிரைகள் கனைத்திருக்கும். ஏன் இந்தமாதிரியான மாஸ்டர் காட்சிகளில் குதிரைகளை வைக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தேன். குதிரையை காமச்சிறப்புக்கு ஒப்பிடுகிறார்கள். உண்மையில் இந்த விடயத்தில் முயல்களும் செம்மறிகளும்தான் சிறந்தவை என்கிறது விஞ்ஞானம். இனிமேல் இப்படியான பாடல்களில் தமிழ் இயக்குனர்கள் செம்மறிக்கூட்டத்தை இடையிடையே கத்தவிடுதல் பொருத்தமானதாக இருக்கும். 

நண்பனோடு பேசிக்கொண்டிருந்தபோது நான் அவதானித்த இன்னொரு விடயம் தூஷணம். பாடசாலை நண்பர்களோடு பேசும்போது மாத்திரம் தூஷணம் எங்கிருந்தோ மழையாக வந்து கொட்ட ஆரம்பித்துவிடுகிறது. ஏனெனில் ஏழாம் வகுப்பு முதல் ஏ.எல் வரை தூஷணம் இல்லாமல் தமிழில் ஒரு வாக்கியத்தை முழுமையாக அமைக்க எமக்குத் தெரியாமலிருந்தது. நவீனத்துவ இலக்கியவாதிகளின் வார்த்தைப்பிரயோகங்களின் வீச்சு எமக்கு அந்த வயதிலேயே வசப்பட்டிருந்தது. எடுத்ததுக்கெல்லாம் தூஷணம்தான். ‘மச்சான் ஒரு பேனை தாறியா?’, ‘சைக்கிளுக்கு காத்துப் போயிட்டு’ போன்ற சாதாரண வாக்கியங்களில்கூட தூஷணம் மிக இயல்பாக இணைந்துவரும். ஆச்சரியம் என்னவென்றால் நண்பர்களோடு இருக்கையில் சிந்தியாமலேயே வந்துவிழுகின்ற வார்த்தைகள் வீட்டில் இருக்கையில் எப்படியோ பதுங்கிவிடும். பின்னாளில் அந்தப்பழக்கம் மறைந்துபோனாலும் பாடசாலை நண்பர்களோடு பேசும்போது மாத்திரம் தூஷணப்பிரயோகம் மீள ஞாபகத்துக்கு வந்துவிடும். இத்தனைக்கும் எங்களுக்கு ஒன்றும் தூஷணத்தில் பெரிய வொக்காபுலரி இருக்கவில்லை. தெரிந்தது ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால் அதற்கு முன்னாலே பின்னாலே பல அடைமொழிகளை சேர்த்துக்கொள்வோம். அவ்வளவுதான். கீர்த்தியோடு பேசுகையில் தூஷணம் மிகச்சாதாரணமாக வந்து விழுந்தது. இளையராஜாவுக்கு மெட்டு வந்து விழுவதுபோல. ஜஸ்ட் லைக் தட். வந்து விழுந்தது. பேசும்போதும் கேட்கும்போதும் அப்படி ஒரு ரிப்ரெஷிங் பீல். 

கீர்த்தி மும்தாஜை சப்போர்ட் பண்ணுகிறேன் என்று சொன்னதற்குப் பின்னாலே இவ்வளவும் இருந்திருக்கவேண்டும். அவன் அறியாமலேயே. 

இதை எழுதிக்கொண்டிருக்கையில் சாவகச்சேரி அடிபாடு உண்மையிலேயே எப்போது இடம்பெற்றது என்ற குழப்பம் வந்துவிட்டது. தேடிப்பார்த்தேன். அந்தச்சமயம் இறந்த மக்களதும் மாவீரர்களதும் பெயர்களும் காணக்கிடைத்தன. அந்தச்சண்டையில்தான் ஶ்ரீலங்கா இராணுவம் முதன்முதலில் மல்டிபரலைப் பயன்படுத்தியிருந்தது. வீடுகள் லைனுக்குத் தரைமட்டமாகின. அந்த அடிபாட்டிலிருந்து சாவகச்சேரி மீள்வதற்கு பெரிதும் சிரமப்பட்டது. உடைமைச்சேதங்கள் ஒருபுறம். இடம்பெயர்ந்த பலர் ஊருக்கு மீளவும் திரும்பாதது இன்னொருபுறம். நான் அந்த ஆண்டின் இறுதியிலேயே கொழும்பு சென்றுவிட்டேன். பிரியா குடும்பம் மீள அத்தியடிக்குத் திரும்பிவிட்டது. பிரியாவும் பேராதனை பல்கலைக்கழகம், பின்னர் நியூசிலாந்து என்று குடிபெயர்ந்து, திருமணமும் முடித்து இப்போது அங்கேயே செட்டில். கோகிலவாணி குடும்பம் கனடாவில். அந்த சி50 இப்போது எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் துரு ஏறிக்கிடக்கிறது. பிரியா வீட்டு மின்விசிறி குளப்பிட்டியிலேயே தூர வீசப்பட்டிருக்கலாம். எம்மை விரட்டிய ஆர்மிக்காரன் இப்போது அவன் கிராமத்தில்போய் செட்டில் ஆகியிருக்கலாம். அல்லது பின்னர் நடந்த போர்களில் மரணித்திருக்கலாம். சிவா மினிசினிமா மூடப்பட்டுவிட்டது. பதினெட்டு வருடங்களில் ஒருவர் பிறந்து வளர்ந்து வாக்களிக்கவே முடியும் எனும்போது … 

கீர்த்தியுடன் பேசி முடித்த கையோடு ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடலைப்போட்டுக்கேட்டேன். அதே மசுக்குட்டி விஜய். அதே மும்தாஜ். அதே குதிரைக்கனைப்பு. நோ நோ நோ முனகல்கள். 

எதுவுமே மாறாமல் அதே காட்சி விரிந்துகொண்டிருந்தது. 

000

Comments

  1. இளையராஜாவுக்கு மெட்டு வந்து விழுவதுபோல. ஜஸ்ட் லைக் தட். வந்து விழுந்தது. Ippayum appidithan boss

    ReplyDelete
  2. வயதும் போகக்கூடாது. சாகவும் கூடாது. 
    Semma jk Anna .Thalaimurai thandi ungal eluthukal rasikka pada Karanam irukirathu
    yatharthamaga neengal valntha valkai ippoluthu illai anna😔

    ReplyDelete
  3. இதுக்கு கமெண்ட்ஸ் போட வெளிக்கிட்டு ,,,,,,,எத்தனை தரம் அழிப்பது,,,, விட்டு விடுவோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட