Skip to main content

ஒரு காண்டாமிருகத்தைப்போல



"This is a bondage, a baited hook.

There's little happiness here,
next to no satisfaction,
all the more suffering & pain."
Knowing this, circumspect,
wander alone
like a rhinoceros.”
"இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில்.
இங்கு இன்பம் குறைவு,
கொஞ்சமும் திருப்தி இல்லை,
துக்கமும் துன்பமுமே அதிகம்."
இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து
தனித்து நடமாடு
காண்டாமிருகத்தைப் போல.”
கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தனமாகிக்கொண்டிருந்த நேரம். எல்லோரையும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி, காடு [மீள] ஒரு பாலைவனமாக ஆகிக்கொண்டிருந்தது. மாதமொருமுறை செல்கின்ற வாசகர் வட்டச்சந்திப்புத்தான் ஒரே கொழுகொம்பு. அதையும் தவிர்க்கலாமோ என்ற எண்ணம் ஆரம்பித்திருந்த தருணம். வாசிப்பை எதற்காக மற்றவருடன் பகிரவேண்டும். என் கிணறு எனக்குக் கடல் அல்லவா?

இந்தச்சமயத்தில்தான் ஒருநாள் முத்துக்கிருஷ்ணன் அண்ணரிடமிருந்து “Wander Alone, Like a Rhinoceros” என்ற கவிதை வந்தது. கவிதையில் முதல் பகுதியே தூக்கிப்போட்டது. 
“Renouncing violence

for all living beings,
harming not even a one,
you would not wish for offspring,
so how a companion?

wander alone
like a rhinoceros

For a sociable person
there are allurements;
on the heels of allurement, this pain.
Seeing allurement's drawback,
wander alone
like a rhinoceros”

எவ்வளவு பெரிய உண்மை. “எறும்புக்குக்கூடத் துன்பம் ஏற்படுத்தக்கூடாது என்று நினைக்கிறாய், எப்படி உன்னால் உன் நட்புக்குத் துன்புறுத்தல் செய்ய முடியும்? வேண்டாம், ஒரு காண்டாமிருகத்தைப்போல தனியே அலைந்து திரி” என்கிறது இக்கவிதை. ஒரு சமுக விலங்குக்கு அதிகப்படியான கவர்ச்சிகள் கிடைக்கின்றன. அந்தக் கவர்ச்சிகளே அதற்குத் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றன. உனக்கு அது வேண்டாம். அந்தக் கவர்ச்சிகளின் மாயையை உணர்ந்தவராய்,  அவற்றை எல்லாம் விட்டுத்தள்ளி, நீ ஒரு காண்டாமிருகத்தைப்போல தனியே அலைந்து திரி. 


முத்துக்கிருஷ்ணன் என் மனநிலை அறிந்து இக்கவிதையை அனுப்பினாரா அல்லது எதேச்சையாகவா என்று தெரியவில்லை. ஆனால் கவிதை வரிக்கு வரி ‘சேம் பின்ச்’ சொல்லச்செய்தது. தெரிந்த எழுத்தாளர் ஒருவர் அடிக்கடி எனக்கு தொலைப்பேசி எடுத்துச் சொல்லுவார். ‘தம்பி, எழுதிறதைக் குறைச்சிடாதேயும், நீர் இப்பிடியே இருந்தால் எல்லோரும் உங்களை மறந்திடுவினம்’. அவர் என் நல்லதுக்குத்தான் சொல்கிறார் என்று தெரியும். ஆனாலும் ஒருநாள் பொறுக்காமல் கேட்டுவிட்டேன். ‘ஸோ வட்?’. அவருக்கு அது புரிந்ததா என்று தெரியவில்லை. ‘Its ok to be an introvert’ என்று ஒரு பிரபல வாசகம் இருக்கிறது. 

இந்த வரிகளைக் கவனியுங்கள். 
“பிருமாண்ட தோள்கள்கொண்ட ஒரு
பெருத்த வெள்ளை யானை - தன்
கூட்டம் துறந்து அடர் காட்டினிடை
அதன் இட்டப்படி அலைவதுபோல
நீயும் தனித்து அலை. ஒரு காண்டாமிருகத்தைப்போல” 
நாம் எவராவது வெள்ளை யானையைக் காட்டில் கண்டிருக்கிறோமா என்ன? அது தன்பாட்டுக்கு கண்காணாக் காட்டிடை அலைந்து திரிகிறது. அதனால்தான் அது வெள்ளை யானை. அதற்கென்று ஒரு கூட்டம்கூட இல்லை. அதன் வலி, அதன் சுகம், அதன் உறவு, பிரிவு என எல்லாமே அதற்கு மட்டும்தானே தெரியும். அதுபாட்டுக்கு அதன் வழி.



கவிதை அடுத்த வரிகளில் இப்படி நீள்கிறது. இன்றைக்கு ‘Social media filter bubble’ என்று பேசப்படும் விடயம். அப்போதே எப்படி அழகாகக் குறிப்பிடப்படுகிறது. 
"‘தன் கூட்டத்தின் குமிழிடையே பெரு மகிழ்ச்சியைப் பெறுபவன்
வாழ்வின் கணநேர ஈடேற்றத்தைக்கூட அடைய முடியாதவனாகிறான்’ 
சூரிய வம்சத்தவனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு நீயும்
தனித்து அலைவாயாக. ஒரு காண்டாமிருகத்தைப்போல."
‘சுத்த நீபாதம்’ என்கின்ற பௌத்த தர்மத்து பாளிமொழிச் சூத்திரங்களில் உள்ள சில கவிதைகள்தாம் இவை. தனித்து அலைதலைக் கொண்டாடுகின்ற சூத்திரங்கள். முத்துக்கிருஷ்ணன் அனுப்பியது இதன் ஆங்கிலவடிவம். வாசித்தவுடனேயே இதனைத் தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் கிளம்பியது. ஆயினும் இணையத்தில் தேடியதில் பா.இ. அரசு என்பவர் ஏலவே அதனை முயன்றிருக்கிறார். அதனால் இப்பிரதிக்குத் தேவையானவற்றை மாத்திரம் என் உள்வாங்கல்களுக்கமைய தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். இப்பாடல்கள் சுத்த நீபாதத்தில் ஒரு சிறு துளிதான். இதைப்போல ஏராளம் கவிதைகளும் கதைகளும் அதில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வாசிக்கையில், இந்தப் பௌத்த சூத்திரங்களை எப்படி நாங்கள் படிக்காமல் போனோம் என்ற ஆயாசம் வருகிறது. ஒரு மதத்தின் பேரில் மதத்தைப் பின்பற்றுவோர்கள் செய்யும் அடாவடித்தனம் சமயங்களில் அந்த மதத்தின்மேலேயே வெறுப்பை ஏற்படுத்துவதுதான் காரணம் என்று நினைக்கிறேன். இராமன் இராவணன், ஆரிய திராவிட பிரிவினை விவகாரத்தால் ஈடற்ற கம்பனின் படைப்பை சிலர் இளக்காரம் செய்வதும் இந்தவகையில்தான். 

அக்கவிதையிலிருந்து இன்னுஞ் சில வரிகள். 
“பேராசை வேண்டாம். வஞ்சனை வேண்டாம்.
தாகம் வேண்டாம். பாசாங்கு வேண்டாம்.
தோற்ற மயக்கங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்படட்டும்.
எந்த உலகத்தாலும்
எல்லா உலகத்தாலும்
நீ ஈர்க்கப்படாது
தனித்து அலை. ஒரு காண்டாமிருகத்தைப்போல” 
தனித்து அலைதலைப் பலர் ஒரு சமூகத்துக்கு விரோதமான, ஏளனத்துக்கு உள்ளாகும் செயலாகவே பார்த்து வருவதுண்டு. கூட்டத்துக்கு ஒவ்வாதவர் என்ற அவப்பெயர் அப்படி அலைபவருக்கு எப்போதும் கிடைப்பதுண்டு. அப்படிப்பட்டவரை ஒரு விரோதத்தோடும் விநோதத்தோடும் பார்ப்பவரே பலர். எல்லோரும் சேர்ந்து கல்லெறிவதற்கு வாசியான மனிதராக அவர் ஆவதுண்டு. காண்டாமிருகம் ஒரு அருகிவரும் இனமாவதற்கு அதுவே காரணமாகக்கூட இருக்கலாம். சொல்லப்போனால் அருகிவரும் இனங்கள் பலவும் தனித்து அலைபவைதாம்.

வாசிப்பின்மீதான பிடித்தம் அண்மைக்காலங்களில் குறைந்துவருவது ஏனென்று யோசித்துப்பார்த்தேன். எழுதுவதாலோ அல்லது அதிகம் வாசித்ததாலோ என்னவோ, வாசிக்கும் வரிகளுக்குப் பின்னேயான பிரம்ம இரகசியங்கள் புரிய ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு சொல்லையும் எட்டும்போது மனம் அடுத்த சொல்லையும் கணித்துவிடுகிறது. சொல்லாத அர்த்தங்களும் புரிகிறது. இது ஒரு சாபம். வாசிப்பு என்ற அற்புத துணையை நம்மிடமிருந்து பிரித்துவிடக்கூடிய துர்க்குணம் இது. யோசித்துப்பார்க்கையில் ‘வாசிப்பால் மனிதர் பூரணமடைகிறார்’ என்பது தவறான வாசகம் என்றே படுகிறது. வாசிப்பு பூரணத்துவத்துக்கான கதவைத் திறந்துவிடலாம். ஆனால் அதற்குமேலே அது ஒரு தடைக்கல்லாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில் வாசிப்பைத் துறத்தலே சாலச்சிறந்தது. 

சுத்த நீபாதம் சொல்லும் இந்த வரிகள் மிக அழகானவை. 
“பிறர் வழிகாட்டல் ஏதுமின்றி
எனக்குள் ஞானம் திரண்டுள்ளது.
தனித்து நீ அலைவாயாக.
ஒரு காண்டாமிருகத்தைப்போல” 

000 



சுட்டிகள்













Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக