Skip to main content

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி




இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி.
மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல். இங்கே பாடசாலை காலையில் ஆரம்பிக்கும் அமளியில் இருக்கும்போது அந்தக்கதிரையில் அமர்ந்திருந்து தேநீரையும் அருந்தியபடி பேப்பர் வாசித்துக்கொண்டிருப்பார் அதிபர்.
பாடசாலையின் முதல்மணி அடித்ததும் அவர் பேப்பரை மடித்துவிட்டு எழுந்து அலுவலகத்தை நோக்கி நடந்துவர ஆரம்பிப்பார். மின்ன மின்ன பொலிஷ் பண்ணிய சப்பாத்து. நீட்டாக அயர்பண்ணிய ட்ரவுசரும் அரைக்கை சேர்ட்டும். டை. கிளீன் ஷேவ். மெலிதாகக் குளிரூட்டப்பட்ட கண்ணாடி. அவர் இப்படி நடக்கவேணும் என்று நினைத்து நடப்பாரா அல்லது இயல்பா என்று தெரியாது. ஆனால் செம ஸ்டைலாக கைகளை ஒருவித ஸ்லோமோசனில் அகட்டி வீசி, அங்குமிங்குமாக கண்காணித்தபடி, இடையிடையே கிடைக்கும் தயக்கமான குட்மோர்னிங் சேர்களுக்கு சிரித்தபடி பதில் சொல்லியபடி, பங்களோவிலிருந்து ஆரம்பித்து, மைதானத்தின் சுற்றுவீதிவழையாக, சயன்ஸ் ஹோல் தாண்டி, வில்லியம்ஸ் ஹோல் முன்றல் அறிவித்தல்பலகையில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுச்செய்திகளை வாசித்தபடி, பீட்டோ மண்டபம், ஹண்டி நூலகத்தைக் கடந்து தேர் தன் அலுவலகத்தை அடையும் முழு நீளக்காட்சி இருக்கிறதே. அப்படி ஒரு இன்றோ காட்சி எந்தத்திரைப்படத்திலும் இதுவரை வந்ததில்லை.
அந்தக்காட்சியின் ஹீரோதான் எங்கள் அதிபர். அவர் பெயர் தனபாலன்.
000
எங்கள் பாடசாலையின் அதிபர் என்றில்லை. சொல்லப்போனால் எல்லாப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் பின்னாலே இப்படி ஒரு கதை, காட்சி இருக்கும். ஞாபகங்கள் இருக்கும். எங்கள் பதின்மக் கனவுலகத்தின் ராஜாக்களாகச் கோலோச்சியவர்கள் அவர்கள். நம் எல்லோருக்கும் எங்கள் அதிபர்களோடு எங்களுக்கு மட்டுமே நினைவில் இருக்கக்கூடிய பல பிரத்தியேகத் தருணங்கள் நிகழ்ந்திருக்கும். காலத்தின் ஓட்டத்தில் நாங்கள் எதிர்மறையான நினைவுகளைக்கூட சுகமான நினைவுகளாக மாத்திரமே மீட்டிப்பார்ப்பதால், ஆசிரியர்கள், அதிபர்கள் எல்லோருமே எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிறார்கள். படிக்கும்போது நாங்கள் ஒருநாளேனும் ‘ஐயோ இன்றைக்குப் பாடசாலைக்குச்சென்று இந்தப் பள்ளி வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கவேணுமே’ என்று சிந்தித்திருக்கமாட்டோம். எப்போதடா உதைவிட்டு வெளியேறலாம் என்றுதான் யோசித்திருப்போம். ஆனால் பின்னாளில் பாடசாலை நாட்கள் பசுமையாகிவிடுகின்றன. பாடசாலை நாட்கள் என்றில்லை, நாங்கள் பஞ்சிப்பட்டுச் செய்த விறகு கொத்தல், கப்பியில் தண்ணி அள்ளல், சந்திக்கடைக்கு போய் சாமான் வாங்குதல், குப்பைக்குக் கிடங்கு வெட்டுதல் என எல்லா வேலையும் இன்றைக்குச் செய்யவேண்டிவராது என்று தெரிவதால் இனிக்கிறது. மற்றும்படி எல்லாமே அலுப்புப்பிடித்தவேலைகள்தாம். பாடசாலை உட்பட.
பிரின்சிக்குத் திரும்புவோம். எங்கள் பிரின்சியைப் பற்றி பலரும் பலதையும் ஏலவே எழுதியிருக்கிறார்கள். ஆளுமை. ஸ்டைல். க்ளாஸ். நுனிநாக்கு ஆங்கிலம். குத்துச்சண்டை வீரர். இலங்கைக் கிரிக்கட் அணி விளையாடிய முதலாவது டெஸ்ட் ஆட்டத்தின் ஆங்கிலமொழி வர்ணனையாளர். அருமையான ஸ்பின் பவுலர். யதார்த்தவாதி. இப்படிப்பல. உபரியாக நான் கேள்விப்பட்டது ஒன்று. சிங்கன் ஆரம்பத்தில் சைவ சமயம் படிப்பித்தவராம். பின்னாளில் கிருத்தவர் ஆகி, அங்கிலிக்கன் மாத்திரமே அதிபர் ஆகக்கூடிய கிருத்தவப்பாடசாலையின் அதிபரும் ஆகியிருக்கிறார். இண்டரஸ்டிங்.
இப்போது பிரின்சி பற்றிய நினைவுகளின் சில புள்ளிகள்.
ஒருமுறை ஜெகனும் நண்பனும் ஏதோ பிரச்சனையில் மாட்டுப்பட்டு பிரின்சி அலுவலகத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். அங்கே அவர்களுக்கு செய்த வேலைக்குக் கிழி விழுகிறது. இவர்கள் கண் கலங்கியபடி நிற்கிறார்கள். “You may go now” என்று பிரின்சி சொல்ல இவர்கள் கேவியபடியே “Thank you sir” என்றிருக்கிறார்கள். பிரின்சி போனவர்களைத் திரும்பவும் கூப்பிட்டு இப்ப எதற்கு நன்றி சொன்னீர்கள் என்று கேட்டிருக்கிறார். நன்றியைக்கூடத் தேவையில்லாமல் சொல்லக்கூடாது என்று சொல்லி மீளவும் அவர்களை அனுப்பியிருக்கிறார் பிரின்சி.
பிசிக்ஸ் குமரன் வாத்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைவர் எங்கள் பாடசாலையில்தான் ஆரம்பத்தில் பௌதீகம் படிப்பித்தவர். தொண்ணூற்று ஏழில் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்துபோன மக்கள் திரும்பிவந்தபின்னர், குமரன் வாத்திதான் பௌதீகத்தில் பிஸ்தா. சயன்ஸ் ஹோலில் முன்னூறு நானூறு சனம் அவரிடம் படித்தது. அதைவிட ஈசன், வடமராச்சி, தென்மராச்சி என்று அந்தாள் எல்லாவிடமும் கலக்கிக்கொண்டிருந்தது. ஆனால் வாத்தி என்றால் ஒரு பாடசாலையில் படிப்பித்தால்தானே மரியாதை? அதனால் பாதி தனியாரான பரியோவானில் அண்ணர் அப்பொயின்மெண்ட் எடுத்துப் படிப்பித்துவந்தார். பெயருக்குத்தான் ஆள் பாடசாலையில் ஆசிரியர். ஆனால் காலையில் டே கிளாஸ் முடித்துவிட்டு பத்து மணிக்குத்தான் சீமான் பாடசாலைக்கு வருவார். ஒரு மணிக்கெல்லாம் பறந்துபோய்விடுவார். எல்லோரையும் டியூசனுக்கு வரச்சொல்வார். சிலபஸ்படி போகாமல் டியூசனில் படிப்பிக்காத செக்சனை பாடசாலை வகுப்பில் படிப்பிப்பார். சும்மா சொல்லக்கூடாது, பௌதீகம் படிப்பிப்பதில் குமரன் ஒரு மாதா என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நீட்டாக, ரசிக்கும்படியாக, உள்ளே இறங்கிப் படிப்பிக்கும் அந்தாள். ஆனால் அடிப்படை அறம் என்ற மாட்டர் எல்லாம் ஆளிடம் இல்லை, வகுப்பில் அவரிடம் டியூசன்போகாத சாவகச்சேரி பெடியளும் சிலர் இருந்தாங்கள். அவர்களை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு வழமைபோல வாற டைமில என்ன தோன்றுதோ அதைப் படிப்பிக்கும் குமரன். இடையிடையே சினிமாப்பாடல்கள். அவ்வப்போது புதிர்க்கேள்விகள். பூமியின் விட்டத்திற்கூடாக ஒரு துளையைப் போட்டு அதற்கூடாக ஒரு உருண்டைக்கல்லைப் எறிந்தால் என்னாகும் வகை உரையாடல்கள். சுவாரசியமாகத்தான் இருக்கும்.
ஒருநாள் குமரன் வாத்தியை வேலையிலிருந்தே தூக்கிவிட்டதாகச் செய்தி பரவியது. எங்கள் எல்லோருக்கும் ஷொக். குமரன் வாத்திக்கு அறம் இல்லை, அவர் லேட்டாக வந்தது தவறு, ஒழுங்காகச் சிலபஸ் பலோ செய்யவில்லை எல்லாம் நான் இப்போது சொல்வது. ஆனால் அச்சமயம் குமரன் நமக்கெல்லாம் பௌதீக ஆசிரியர். குமரனிடம் படித்தால்தான் பிசிக்சுக்கு ‘ஏ' வரும். முக்கியமாக குமரனிடம் படிக்காதவர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வுவார்கள். குமரன் வாத்திக்குப் பின்னாலே மொத்த யாழ்ப்பாணமுமே திரிகிறது. ஒவ்வொரு பாடசாலையும் குமரன் வாத்தியை அழைத்தபோதும் தலைவர் எங்கள் பாடசாலையைத் தெரிவு பண்ணியது நாங்கள் செய்த புண்ணியம். இப்படி எல்லாம் அபிப்பிராயங்கள் எங்கள் எல்லோரிடமும் இருந்தது. ஆக, ஆளைத் தூக்கிவிட்டார்கள் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியோடு கோபமும் வந்தது. எங்கள் பட்ச்சைவிட எங்கள் சீனியர் பட்ச்தான் இன்னமும் கோபப்பட்டது. காரணம் அவர்களுக்குத்தான் பரீட்சை இன்னுஞ் சில மாதங்களில் இருந்தது. உடனே எல்லா உயர்தர மாணவர்களும் அதிபர் அலுவலகம் நோக்கிக் கூட்டாக படையெடுத்தார்கள். எங்கள் கோரிக்கை எல்லாமே ஒன்றுதான்.
“குமரன் சேரை பாடசாலை மீளவும் பணிக்கு அழைக்கவேண்டும்”
அங்கிருந்த ஏனைய வாத்திமாரெல்லாம் தயக்கத்தோடு ஒன்றும் சொல்லாமல் நின்றார்கள். சற்று நேரத்தில் பிரின்ஸி வெளியே வந்தது. அதே அரைக்கை சேர்ட், டை, டவுசர். குளிர் கண்ணாடி. வந்த மனுசன் ‘என்ன விசயம்?’ என்று கேட்க, மாணவர்கள் கோரிக்கையை சொன்னார்கள். பிரின்ஸி குமரன் வாத்தியின் வண்டவாளங்களையெல்லாம் லிஸ்ட் பண்ணிவிட்டு முடிவை மாற்றமுடியாது என்று சொன்னதோடு கடைசியாக ஒரு விசயம் சொன்னது.
“ஒரு ஆசிரியர் இல்லாமல் போவதாலோ, நூறு மாணவர்கள் எதிர்ப்பதாலோ இருநூறு வருடங்கள் பழமையான இந்தப்பாடசாலைக்கு எதுவும் நேர்ந்துவிடப்போவதில்லை. ஆனால் ஒரு வாத்தியார் அடிப்படை அறம் இன்றி தான் நினைத்த நேரத்துக்கு வருவதையும், தான் நினைத்ததைப் படிப்பிப்பதையும் அனுமதித்தால் அப்போது இந்தப்பாடசாலையின் பாரம்பரியம் கெட்டுவிடும். ஆக இதில எவருக்கும் விதிவிலக்கு கிடையாது”
000
நான் பாடசாலையில் இணைந்த முதல் மூன்று வருடங்களுக்கு எனக்கும் பிரின்சிக்குமிடையில் எவ்வித நேரடித் தொடர்புகளும் இருந்ததில்லை. அவ்வப்போது ஏதாவது கோட்டமட்டப்போட்டி சேர்டிபிகட்டுகளை அசெம்பிளியில் வாங்கும்போது மாத்திரமே நான் அவரை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். மற்றும்படி அந்தாள் வரும்திசையில் நான் தலைவைத்தே படுப்பதில்லை. நான், நானுண்டு என் வேலை உண்டு என்று இருப்பவன். பாடசாலை. நூலகம். கொஞ்சம் விளையாட்டு. வீடு. இவைதான் என் உலகம். பெரிதாக குழப்படிகளும் செய்ததில்லை. நல்லவன் என்பதால் அல்ல. குழப்படி செய்ய எனக்குப் பயம். அவ்வளவுதான்.
என்னுடைய ஆகப்பெரிய குழப்படி என்னவென்றால் வகுப்பறையில் கச்சான் சாப்பிடுவது.
கச்சான் சாப்பிடுவது எனக்கு அம்மாவிடமிருந்து தொத்திய பழக்கமாக இருக்கவேண்டும். மனிசி கச்சான் சாப்பிடுவதில் ஒரு மன்னி. அதுவும் ஒரு கையில் ரமணிச்சந்திரனை வாசித்துக்கொண்டே மறு கையால் கச்சானை எடுத்து கோது உடைத்து வாய்க்குள் போடக்கூடிய அளவுக்கு கச்சான் சாப்பிடுவதில் அம்மா கை தேர்ந்தவர். அதே பழக்கம் எனக்கும் வந்துவிட்டது. பேப்பர் வாசிக்கும்போதும் ரேடியோ கேட்கும்போதும் சைக்கிளில் பயணம் செய்யும்போதும் படிக்கும்போதும் கச்சான் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன். கச்சான் தீர்ந்தால் அதற்கப்புறம் சும்மா அதன் கோதை நன்னிக்கொண்டிருப்பதில்கூட ஒரு சந்தோசம் இருக்கிறது. இதே பழக்கம் எனக்குப் பாடசாலையிலும் தொடர்ந்தது.
பாடசாலையில் எங்கள் “வாழ்க்கைத் திறன் கல்வி” கருணைநாயகத்தார் ஒரு விவசாயக் கண்டீன் நடத்திவந்தார். இடைவேளையின்போது அந்தக் கண்டீனில் கரட், போஞ்சி, வறுத்த கச்சான் என பலவற்றை விற்பார்கள். இரண்டு ரூபாவுக்கு சிறிய கச்சான் சரை ஒன்று கிடைக்கும். என்னிடம் ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் இருக்காது. ஆனால் வாரத்துக்கு ஒருமுறை எப்படியோ இரண்டு ரூபாய் பிரட்டிக் கண்டீனின் கச்சான் சரை வாங்கிவிடுவேன். மிஞ்சிப்போனால் ஒரு சரையில் பத்துக் கச்சான்கள் இருக்கும். சரையை வாங்கியதும் அதை கண்டீனடியிலேயே வைத்துச்சாப்பிட முடியாது. அதைப் பறித்துத்தின்னவென்றே அங்கு ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருக்கும். அதனால் இடைவேளை முடியும் மணி அடிப்பதற்கு ஒரு நிமிடம் இருக்கையில் நான் ஓடிப்போய் ஒரு சரையை வாங்குவேன். அப்போது பறிக்க நிற்கும் கூட்டம் குறைந்துவிடும். பின்னர் வகுப்புக்குக்குத் திரும்பிவந்து மேசையின் இலாச்சிக்குள் சரையை ஒளித்துவைத்து வாத்திக்குத் தெரியாமல் ஒவ்வொன்றாகச் சாப்பிட ஆரம்பிப்பேன். அனேகமாக காசியர்தான் இடைவேளைக்கு அடுத்த பாடத்தை எடுப்பதுண்டு. பாடம் தமிழ் அல்லது சைவ நெறியாக இருக்கும். காசியருக்கு பிலாப்பழத்தை முன்னே வச்சு பிரிச்சு மேய்ஞ்சாலே தெரியவரப்போவதில்லை. வெறும் கச்சான்சரையையா அந்தாள் கண்டு பிடிக்கப்போகுது?
அப்படி ஒருநாள் காசியர் தன்பாட்டுக்கு எதையோ சொறிந்துகொண்டிருக்கையில் நான் பின்னாலிருந்து சாவகாசமாகக் கச்சான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். அது எங்கள் பிரின்ஸி ரவுண்ட்ஸ் வருகின்ற நேரம். நான் கவனிக்கவில்லை. நான் என் பாட்டுக்குச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். எங்கள் வகுப்படிக்கு நெருக்கமாக பிரின்சியைக் கண்டதும்தான் நான் சுதாகரித்து கச்சானை படக்கென்று லாச்சிக்குள் தள்ளிவிட்டு நளவெண்பாவைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன். நல்லகாலம் பிரின்ஸி கவனிக்கவில்லை. அந்தாள் எங்கள் வகுப்பைத்தாண்டி அடுத்தவகுப்புக்குப் போய்விட்டது. நான் அப்பாடி என்றபடி, பிரின்ஸிக்கு புறத்தாலை சின்ன நெக்கையும் காட்டிவிட்டு, மீளவும் கச்சானை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறேன். ஒரு கச்சான். மச்சல். இரண்டாம் கச்சானுக்குள் மூன்று விதைகள். ஒவ்வொன்றாக முடிந்துவிடப்போகிறதே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நன்னிக்கொண்டிருக்கயில்,
‘யூ … கம் அவுட்’
பிரின்சியின் குரல். அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நிமிர்ந்துபார்க்கிறேன். காசியும் நிமிர்ந்து பார்க்கிறது. மொத்த வகுப்பும்தான். றோட்டுக்குக் குறூக்கால போகும் மாட்டுப்பட்டிக்கு ஹோர்ன் அடிக்கும்போது எல்லாமே ஏக சமயத்தில் திரும்பிப்பார்ப்பதுபோல நாங்கள் திரும்பிப்பார்க்கிறோம். வகுப்புக்கு வெளியில் பிரின்ஸி. நான் எனக்குப்பின்னாலிருக்கும் ஐசக்கைத் திரும்பிப்பார்க்கிறேன். அந்தக்கணத்திலேனும் அவர் கூப்பிட்டது என்னையில்லை, ஐஸக்கைத்தான் என்றொரு நம்பிக்கை.
‘இட்ஸ் யூ, கம் ஹியர்’
என்னையே தான். வாழ்க்கையில் நான் அந்தளவுக்கு முன்னரெப்போதும் பயந்ததேயில்லை. எத்தனையோ செல்லடிகள். ஹெலிகள். சியாமா செட்டி, சுப்பர்சோனிக் என்று பார்த்துவிட்டேன். ஆனானப்பட்ட புத்த பிக்குவைக்கூட நான் கிட்டவாகப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் இந்தளவுக்குப் பயந்ததில்லை. ஆனால் பிரின்ஸி கூப்பிட்டபோது வெலவெலத்துப்போனேன். நடுங்கியபடியே பிரின்ஸிக்கு முன்னாலே போய் நிற்கிறேன். கிட்டத்தட்ட முழு வகுப்புமே நடுங்கிக்கொண்டிருக்கிறது. காசி சொறிவதைக்கூட நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் நிற்கிறது. யாருக்கும் நான் என்ன தவறு செய்தேன் என்பதுகூடத்தெரியாது.
‘சொறி சேர்…’
பிரின்ஸி ஒன்றுமே சொல்லாமல் தன் கைக்கடிகாரத்தைக் கழட்டினார். சில்வர்கலர் கடிகாரம். சீக்கோ பைவாக இருக்கலாம். கவனிக்கவில்லை. ஆள் என்ன நினைக்கிறார் என்பதும் குளிர் கண்ணாடியூடாகத் தெரியவில்லை. என்ன நிகழப்போகிறது இங்கே? ஏன் ஆள் தன் கைக்கடிகாரத்தை கழட்டுகிறார்? தரப்போகிறாரா? அப்படி என்ன சாதனையை செய்துவிட்டேன் நான்? அன்னை பூபதி பொது அறிவுப்பரீட்சை சில வாரங்களுக்கு முன்னர்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் பர்மாவின் தலைநகர் எது என்ற கேள்விக்கே நான் சரியாகப் பதிலளிக்கவில்லை. என்னாகப்போகிறது? பிரின்சி நான் கச்சான் சாப்பிட்டதைக் கண்டிருக்க சாத்தியமில்லை. வேறு என்ன தவறு செய்தேன்? நான் அந்தாள் கடிகாரத்தைக் கழட்டுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“பளார்”
அதே ‘யூ மே கோ நவ்’. சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான். நான் அழ ஆரம்பித்தேன். அவமானம் என்றால் அப்படி ஒரு அவமானம். எங்கள் பி கிளாஸ் என்றில்லாம் ஏ, சி எல்லாமே நான் அடிவாங்கியதைப் பார்த்தபடி இருந்தது. அத்தனை வாத்திகளும் அதைப்பார்த்தார்கள். எல்லோருக்கும் இவன் ஏன் ஒரு பாவப்பட்ட கேஸ் இப்படி அடி வாங்கினான் என்ற எண்ணம். காசியர் என்னைப்பார்த்து ‘சரி சரி கண்ணைத் துடைச்சுட்டு போய் இரும்’ என்றார். அது தனக்கு விழ இருந்த அடியோ என்று அவருக்கு யோசனை. நான் போய் என் கதிரையில் இருக்கிறேன். அழுகை விக்கலாக மாற ஆரம்பிக்கிறது. நிறுத்தமுடியவில்லை. பக்கத்தில் பப்பாவோ பிரசாந்தோ இருந்தார்கள். ஞாபகமில்லை. எவனோ ஒருத்தன் டிரிங்க் பொட்டில் கொடுத்தான். வாங்கிக்குடித்தேன். வகுப்பில் நளவெண்பா தொடர்ந்தது. காசியும் சொறியத்தொடங்கியது. வகுப்பு உடனேயே பழையபடி மாறியது. எல்லோருக்குமே யாரோ ஒருத்தன் வழமைபோல அடி வாங்கியிருக்கிறான், இதுவும் கடந்து போகும், அடுத்த சோலியைப் பார்ப்போம் என்ற எண்ணம்.
ஆனால் எனக்கு நான் யாரோ ஒருத்தன் கிடையாதே.
வாழ்க்கையில் நான் கன்னத்தில் எவரிடமும் அறை வாங்கியதில்லை. அம்மாகூட விறகுக்கட்டை எடுக்கவா என்று மிரட்டுவாரே ஒழிய ஒருபோதும் அடித்ததில்லை. சில வாத்திமார் காதைத் திருகியிருக்கிறார்கள். பிரம்பால் அடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடிக்கும்போதே அதிலிருக்கும் கரிசனை தெரியும். சிரித்துக்கொண்டே அடிப்பார்கள். அடித்தபின்னாடி என்னை சமாளித்தும் இருப்பார்கள். எவருமே கன்னத்தில் வெளுத்ததில்லை. ஆனால் ஒரு மாணவன் தன்னுடைய ஆதர்சமாக எண்ணி மதித்துக் கொண்டாடும் அதிபரே அவனை அப்படி வெளுத்தால்? வெளுத்துவிட்டு எதுவும் பேசாமல் அகன்று விட்டால்? பாடசாலைகள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கவேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். டிசிப்பிளின், பங்குசுவாலிட்டி, வட் எவர் த பக், எல்லாமே முக்கியம்தான். ஆனால் அதனை வன்முறையின் துணையோடு செய்தல் என்பது சுத்த முட்டாள்தனம். எல்லாவற்றையும் மிரட்டி, அடித்து பழக்கப்படுத்தியதால் வெளியில் சமூகத்தில் எதை முன்னெடுப்பதிலும் ஒரு தயக்கம் வந்துவிடுகிறது. அந்த அடியின் மிரட்டல் அகன்றதுமே மீண்டும் அவிழ்த்துவிட்ட நாயின் துடிப்பும் தொத்திவிடுகிறது. இது பாடசாலை என்றில்லை, குடும்பம், சமூகம் என எல்லாவற்றுக்குமே பொருந்தும். வகுப்பில் கச்சான் சாப்பிடுவது தவறுதான். ஆனால் அதனை எனக்கு அவர் சொல்லித் திருத்தியிருக்கலாம். எச்சரிக்கை செய்திருக்கலாம். ஆனால் பொதுவில், எல்லோருக்கும் தெரியத்தக்கதாக வெளுத்தது என்பது, ஒரு அபியூஸ், மன்னிக்கமுடியாத வன்முறை. அதனை செய்த பிரின்ஸி மறந்திருக்கும். ஏனைய மாணவர்கள் எல்லோரும் மறந்திருப்பார்கள். ஆனால் நிகழ்ந்து இருபத்தைந்து வருடங்கள் போனாலும் பாதிக்கப்பட்டவன் மறக்கப்போவதில்லை.
பின்னாளில் அவன் அந்த ஆசிரியருக்கு டிரிபியூட் எழுதினாலும் அதில் இப்படிக் குறிப்பிடாமல் விடப்போவதுமில்லை.
000

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக