Skip to main content

பேய்க்கிழவாண்டி - முதற்பாகம்

வழமையான பேய்க்கதைகளைப்போலவே இக்கதையும் ஒரு மழைக்கால இரவில் ஆரம்பித்தது. இடி முழங்கியது. எதிர்பார்த்தாற்போலவே திடும்மென வீட்டுக் கதவு தட்டப்பட்டது.


“தட் தட்”

போய்த் திறந்தேன். வாசலில் என் தாத்தா. ஜம்மென்று நின்றார். விறாந்தை மாடத்தில் உழுத்துப்போன கறுப்புவெள்ளைப் புகைப்படத்தில் மெலிதாகச் சிரித்துக்கொண்டிருக்கும் அதே தாத்தா. ஏதோ ஒரு ஸ்டூடியோ திரைக்கு முன்னே அலங்காரக் கதிரையில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. மெல்லிய உருவம். ஜீவானந்தம் மாஸ்டருக்கு கொஞ்சம் தொந்தி சேர்த்தாற்போல.

தாத்தா மழையில் தொப்பென்று நனைந்திருந்தார்.

இப்படித் திடீரென்று வாசலில் செத்துப்போன என் தாத்தாவைப் பார்த்ததும் எனக்குப் பயம் வரவில்லை. இன்னமும் சொல்லப்போனால் சந்தோசம்தான் வந்தது. சொந்தக்காரர்கள் செத்துப்போனால் ஒப்பாரி வைக்கிறோம். தலைவிரி கோலமாய் அழுகிறோம். மொட்டை அடிக்கிறோம். சாப்பிடாமல் கிடந்து அரற்றுகிறோம். அஞ்சலிப்பத்தி வரைகிறோம், வருடாவருடம் முகநூல் மெமரியை மீளப்பகிர்ந்து அடுத்தவரைப் படுத்துகிறோம். இனி அவர்களை எங்கனம் காண்போம் என்று ஏங்குகிறோம். எம்மையும் கூடவே கூட்டிப்போயிருக்கலாமே என்று அங்கலாய்க்கிறோம். இவ்வளவையும் செய்த பிற்பாடு அவர்கள் பேயாகத் திரும்பும்போது மாத்திரம் எதற்காகப் பயப்படவேண்டும் என்று எனக்குப் புரிவதில்லை. லொக்டவுன் காலத்தில் யாருமே வீட்டுக்கு வராதபோது பேய் வந்தால் நல்லதுதானே? அதிலும் சொந்தக்காரப் பேய்கள் என்றால் வலு விசேசம் அல்லவா?

சிலர் பேய்களே இல்லை என்று வாதிடுவதுண்டு. கடவுள்கள் உண்டு என்று சொல்லி ஆயிரமாயிரம் கோயில்களையும் மசூதிகளையும் தேவாலயங்களையும் விகாரைகளையும் கட்டி சிக்கெனப்பிடித்துத் திரிபவர்கள்கூட பேய்களை நம்பமாட்டார்கள். நான் பேயைக் கண்டேன் என்றால் சிரிப்பார்கள். அட அரை வேக்காடுகளே, எனக்கு என் தாத்தாவைத் தெரியும். அவர் முகவெட்டு தெரியும். சிரிப்புத் தெரியும். குரல் தெரியும். பேயாக அவர் வந்தால் இனங்கண்டுகொள்வது எவ்வளவு இலகு? எனினும் அவரை நான் கண்டேன் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் எப்படி இருப்பார் என்றே தெரியாது, குணம் குறி கோட்பாடு எல்லாம் சொல்லிக்கேட்டது மாத்திரமே. என்றாலும் கடவுளைக் கண்டேன், நானே கடவுளின் தூதன், நானே கடவுள் என்று யாரும் சொல்லிக்கொண்டு வந்தால் ஆட்டிக்கொண்டு பின்னால் போவீர்கள். சரியான பேக் கூட்டம். ஆனால் நான் அப்படியில்லை. நான் கடவுள்களையும் அடிக்கடி காணுவதுண்டு. பேய்களோடு கூடிக் கும்மாளமடிப்பதுமுண்டு.

பேய்களைப்பார்த்து எப்போது நாம் அஞ்சத்தொடங்கினோம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு புளியமரத்திலும், ஆலம் விழுதுகளிலும், குளியலறைக் கண்ணாடிகளிலும், குசினி அடுப்படிப் புகைக்கூடுகளிலும் வசிக்கும் பேய்கள் எல்லாமே என்றோ ஒருநாள் இங்கேயே பிறந்து வளர்ந்த சக மனிதர்கள்தாமே. அவர்களைப்பார்த்து எதற்குப் பயம் வர வேண்டும்? தெரியாத கடவுள்களைவிடத் தெரிந்த பேய்கள் எவ்வளவோ நல்லது என்பது என் எண்ணம். பேய்களை நாங்கள் சமயத்தில் territorial threat ஆகவே பார்க்கிறோம். காரணம் கடவுள்கள் வானத்திலிருந்து வருபவர்கள். ஆனால் பேய்கள் நம்மோடேயே பூமியில் திரிபவை. எம்மை விட அவற்றுக்குச் சக்தி அதிகமோ, அவை நம்மைக் கட்டுப்படுத்திவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். அவை நமக்கு எப்போதுமே அநியாயம் செய்யும், நம்மைக் கொன்று தின்றுவிடும் என்ற தேவையில்லாத பயம். எனக்கு அந்தப்பயம் என்றைக்கும் இருந்ததில்லை. மனிதர்கள் என்றால்தான் எனக்குப் பேய்ப்பயம். பேய்களில் இல்லை.

So the point is this. பேயாக வந்த தாத்தாவைப் பார்த்ததும் எனக்குப் பயம் வராமல் அன்புதான் மேலிட்டது. ஆனாலும் தாத்தா இப்படி டக்கென்று எங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பார் என்று நான் எதிர்பார்க்காததால் சிறு அதிர்ச்சி மாத்திரமே. ஆரம்பத்தில் இது ஒரு கனவாக இருக்கும் என்று கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நொந்தது. நொந்ததால் மாத்திரமே அது கனவில்லை என்று எப்படித் தீர்மானிப்பது என்றொரு கேள்வியும் எழுந்தது. கனவில் எத்தனைபேர் எம்மை நோகடித்திருப்பார்கள். நீண்ட நாள் தனிமைப்படுத்தலின் பின்னரான ஹலூசினேசனாக இருக்கலாம் என்றுகூட யோசித்தேன். மன அழுத்தத்தில்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேனோ என்றும் எண்ணினேன்.

எது எப்படியாகினும் இந்த விசயத்தை எக்காலத்திலும் ஒரு கதையாக எழுதுவதில்லை என்று அக்கணமே தீர்மானித்தேன். பேய்க்கதைகளுக்கு எங்கள் ஊரில் மரியாதை கிடைப்பதில்லை. செத்தவர் மீள முடியுமா என்று அறிவுசீவித்தனமாகக் கொமெண்ட் போடுவார்கள். இலக்கியத்துக்கான எந்த அகச்சிக்கல்களும் இதில் இல்லை என்பார்கள். எதற்காக விழல்க்கதைகளை எழுதி மனுசரைச் சாகடிக்கவேண்டும்? எழுத வேறு ஏதுமில்லாமற்தான் இதை எழுதுகிறேன் என்பார்கள். எல்லாவற்றையும்விட இதனை வெறுமனே புனைவு என்று கடந்துவிடுவார்கள். இங்கேதான் எனக்குக் கோபம் வருவதுண்டு. நிஜ வாழ்வின் ஆச்சரியங்களை எழுதினால் இவர்களுக்கு அவை புனைவாகவே தெரிகின்றன. வாசகர்கள் எப்போதுமே விசித்திரமானவர்கள். நம்பும்படியாகப் புனைவை எழுதினால் அதனை உண்மை என்று நினைத்து வரலாறாகக் கொண்டாடுவார்கள். நம்பமுடியாத உண்மையை எழுதினால் அதனைப் புனைவு என்று வெறுமனே கடந்துவிடுவார்கள். பிளடி பக்கர்ஸ்.

வெளி லைட்டைப் போட்டுவிட்டு இப்போது தாத்தாவை நான் வடிவாகப் பார்த்தேன்.

சுருங்கிய முகம். சுருட்டேறிய உதடுகள். இரட்டை நாடி. தாத்தா கிளீன் ஷேவ் பண்ணியிருந்தார். பேய்கள் எப்படிக் கிளீன் ஷேவ் பண்ணும் என்று ஒரு யோசனை வந்தது. சிலவேளை எம்பாமிங் செய்தபோது சவரம் செய்திருப்பார்கள். அதன்பின்னர் தாத்தாவுக்கு முகத்தில் மயிர் வளராமலேயே போயிருக்கலாம். பேய்களுக்குக் கால்கள் தரையில் முட்டாது என்பார்கள். தாத்தா கொஞ்சம் எடை கூடிய செருப்பைப் போட்டிருந்தார்போலத் தோன்றியது. செருப்பின் கனம் அவரைத் தரைக்கு இழுத்து வைத்திருந்தது.

“அடேய் குமரா … நான்தாண்டா உன் தாத்தா”

ஸீ. இது என் பிரச்சனைகளில் ஒன்று. நான் ஒரு விடயத்தை மூன்று நான்கு பந்திகளாக அலசி ஆராய்ந்துகொண்டிருப்பேன். முன்னாலிருப்பவரோ நான் எதுவுமே புரியாமல் முழிக்கிறேன் என்று பனங்கொட்டைத்தனமாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்துக்கு ‘The Idiot’ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு நேர்காணலில் என்னைக் கேள்வி கேட்டார்கள். நான் உடனே நட்டாசியா பிலிப்போவ்னோவுக்கும் பலீனாவுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமை பற்றியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். மிஸ்கினுக்கு பிலிப்போனா அணிந்திருக்கும் இறுக்கமான உடையின் முதுகு முடிச்சுகளை அவிழ்க்கவே அரைநாள் ஆகியிருக்குமே என்றெல்லாம் என் சிந்தனை அக்கணத்தில் அலைபாயும். அல்லது அழகாக இருக்கிறது என்று அந்த நாய் அதை அவிழ்க்காமலேயே ரசித்துக்கொண்டுமிருக்கலாம். இப்படியெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருக்கையில் நேர்காணல் கேட்கும் மூதேவி பொறுமையே இல்லாமல் ‘இடியட் என்பது தோஸ்தாவஸ்கியின் நாவல்’ என்று சொல்லி நாவலின் கதையை விபரிக்க ஆரம்பிக்கும். உடனே இவருக்கு இடியட் பற்றிக்கூடத் தெரியவில்லை, என்ன எழுத்தாளர் இவர் என்று நகை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர் பொதுவெளியில் அதிகம் பேசமாட்டார், வெட்கப்படுவார் என்பார்கள். ஒரு எழுத்தாளர் என்றால் சிறந்த பேச்சாளராகவும் இருக்கவேண்டும் என்று ஒரு ஐன்ஸ்டீன் தான் கண்டறிந்த தத்துவத்தை உதிர்க்கும். ஒருவர் நிதானமாக வார்த்தைகளை அளந்து யோசித்து யோசித்துப் பேசினால் தமிழ் உலகம் அவரைப் பேச்சாளராகவே ஏற்றுக்கொள்ளாது. இங்கே பேச்சாளர் என்றால் மில் இயந்திரம்போல அரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அரிசியைப் போட்டாலும் மிளகாயைப் போட்டாலும் கிர் கிர் கிர்தான். பெல்ட் கழண்டாலும் மிசின் சுத்திக்கொண்டே இருக்கும். அவ்வப்போது சூடாற மில்லை நிறுத்தினால் போதும். ஆனால் நானோ அரைக்கும்போது ஆயிரம் விசயங்களை யோசிப்பவன். அரைப்பது எல்லாமே அரை படி அரிசிதானே என்ற ஏளனம் எனக்கில்லை. ஒவ்வொரு அரிசிக்கும் பின்னாலே அது பிறந்து வளர்ந்த வயலும் நாற்றும் கதிரும் இருக்கிறது. அதன் விதை நெல் வளர்ந்திருக்கக்கூடிய இன்னொரு வயலும் வரம்பும் என இன்னும் பல சாத்தியங்கள் இருக்கிறது. அதை விதைத்தவரின் கதை. அறுத்தவரின் கதை. உழுதவரின் கதை. உழுதவருக்கு உணவு கொண்டுவந்தவரின் கதை. விதைப்புக் காலத்தில் கிளி கலைத்த சிறுவர்களின் கதை. எல்லாவற்றையும் நான் யோசிப்பேன். வார்த்தைகளும் அப்படித்தான். ஒவ்வொரு வார்த்தையும் கொண்டிருக்கும் அர்த்தங்கள் ஏராளம். ஒரு வார்த்தையை உதிர்ப்பதால் வரும் அர்த்தங்கள். உதிர்க்காமல் தவிர்ப்பதால் உருவாகும் அர்த்தங்கள். இதுவெல்லாம் எப்படி மற்றவர்களுக்கு விளங்கப்போகிறது? நான் வார்த்தைகளின் உபாசகன் என்பதை வார்த்தைகளை பைட்ஸாகவும் பின்னர் வாந்தியாகவும் எடுத்துத் தொலைக்கும் நாதாறிகளுக்கு எப்படிப் புரியவைப்பேன்? அதிலும் செத்துப்போய்த் திரும்பிவந்து நிற்கும் தாத்தாவின் இந்த பேய் மண்டைக்கு எப்படித் தெளிய வைக்கமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள். இதனால்தான் நான் அவ்வப்போது இருக்கும் சிலமனே இல்லாமல் அமைதியாக இருப்பதுண்டு.

“என்ன யோசிச்சுக்கொண்டிருக்கிறாய் தம்பி … நாந்தான் உண்ட கொம்மாண்ட கொப்பர்… புழுகர் எண்டு சொல்லிக் கேள்விப்பட்டிருப்பியே”

எனக்குக் கோபம் வந்தது. இப்பதான் நான் விளக்கம் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்குள் திரும்பவும் முந்திரிக்கொட்டையாட்டம். என் இனிய புழுகர் தாத்தாவே. உன் பெயரை எப்படி மறப்பேன் நான். உன் புழுகு மூட்டைகள் அத்தனையையும் என் டி.என்.ஏயில் முடிந்து வைத்துவிட்டு நீ போய்விட்டாய். இன்று என்னையும் அல்லவா எல்லோரும் புழுகர்கூட்டம் பெற்ற புலுனிக்குஞ்சு என்று ஏளனம் செய்கிறார்கள். நான் என் செய்வேன்?

“தெரியுது தாத்தா … வாங்கோ.. என்ன திடீரென்று, அம்மோய்..”

நான் உள்ளிருக்கும் அம்மாவை அழைத்தேன். அம்மா இந்நேரம் சித்தி-2வில் அமிழ்ந்திருப்பார். சண்முகத்தின் மனைவி தன் காதலனுடன் ஓடிப்போக உதவி செய்தால் மல்லிகாவுக்குத் தான் காதலிக்கும் சண்முகத்தையே திருமணம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு. அம்மாவுக்கு எப்படி நான் அழைத்தது கேட்கும்?

“யோய் … அம்மா, காது செவிடா … இஞ்ச தாத்தா வந்திருக்கிறார்”

‘எந்தத் தாத்தாடா’ என்றபடி அம்மா வந்தார். வாசலில் நின்ற தாத்தாவைக் கண்டதும் ‘ஐயா’ என்றார். அழுதார். அரற்றினார். கட்டிப்பிடித்தார். மீதிக் காட்சியை நான் விளக்கத்தேவையில்லை. செத்துப்போன அப்பா திரும்பி வந்தால் ஒரு தமிழ் மகள் எப்படி அழுவாளோ அப்படி அம்மா அழுதார். அதிலும் என் அம்மா இருக்கிறாரே, அழுவதில் அவர் ஒரு மாதா. ஊரின் செத்தவீடுகள் ஒப்பாரிக்கெல்லாமே ஆதார சுருதி என் அம்மாதான். அப்படி அழுவார். தெரியாதவர்கள் செத்தால்கூட அம்மா சோகத்தை வரவழைத்து அழுவதில் வல்லவர். டயானா செத்ததுக்கே ஒப்பாரியிடப்போனவரைத் தடுத்து நிறுத்தியது நான்தான். அப்படிப்பட்டவர் தாத்தாவைக் கண்டால் சும்மா இருப்பாரா? ஆனால் எனக்கு அழுகை வரவில்லை. அதுதான் திரும்பி வந்துவிட்டாரே. எதற்கு அழுவான்? எனினும் முறைக்காகவென்று தாத்தாவைக் கட்டிப்பிடிக்கப்போனேன். நான் பேய்களைக் கட்டிப்பிடிப்பது இது முதற்தடவையல்ல. என் வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் பலவிதமான பேய்களை நான் கட்டி அணைத்திருக்கிறேன். ஆனால் எந்தப்பேயும் அணைக்கும்போது இத்தனை இலேசாக இருந்ததில்லை. தாத்தா இரட்சகன் சுஷ்மிதாசென்போல கைகால் முளைத்த காற்றாய் நின்றார். அப்படி ஒரு எடை லெஸ் பேய். இப்படி உன்னை ஏந்திக்கொண்டு இந்திரலோகம் போய்வரவா? இடையில் கொஞ்சம் வலியெடுத்தாலே புளியமரத்துக் கொப்பிலே கொழுவிவிடவா? எப்போதாவது இந்தச் சம்பவத்தை எழுத நான் முடிவு செய்தால் வந்தது தாத்தா அல்ல, கிராய்க் குளத்தில் குதித்துச் செத்துப்போன என் முன்னாள் காதலி கோகிலவாணி என்று கதையை நான் மாற்றிவிடவேண்டும்.

“உள்ளுக்க வாவனை”

அழுது முடித்த அம்மா தன் தலைமயிரை அள்ளிக் கொண்டை போட்டுவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டார். எந்தக்கணத்தில் அவர் தலைவிரிகோலமாய் மாறினார் என்பதை நான் கவனிக்கவேயில்லை. அழுது ஓய்ந்த பின்னர் பெண்கள் தலைமயிரை அள்ளிக் கொண்டை போடும்போது அந்தச் சூழலிலேயே ஒரு அமைதி உருவாகும். தாத்தா அம்மாவைக் கண்டதும் அழவில்லை. சாதாரணமாக விருந்தினர் வருவதுபோலவே உள்ளே வந்தார். ஹோல் அலுமாரியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து நக்கல் சிரிப்புச் சிரித்தார். நான் அவரைச் செற்றியில் இருக்கச் சொன்னேன். அமரர் அமர மறுத்தார். கூரையின் தீராந்திதான் வசதி என்று அதில் பாய்ந்து ஏறி அமர்ந்தார். அந்தப் பாய்ச்சலின் அதிர்வில் கூரைத் தூசு தரையில் கொட்டியது. அவர் வந்திருந்த கெற்றப்புக்குச் செற்றியிலேயே அமர்ந்திருக்கலாம். பேய் சீன் காட்டவேண்டும் என்பதற்காகவே தீராந்தியில் தாவி அமர்ந்தார் என்று தோன்றியது. சில பேய்களுக்கு இதுவொரு பழக்கம். சும்மா சீன் காட்டுங்கள். புதுப்பணக்காரர்போல. இவருக்கு இப்போதுதான் மனுசர் வீடுகளுக்குப் போக விசா கிடைத்திருக்கவேண்டும். நான் அலட்டிக்கொள்ளவில்லை. மனுசன் இவ்வளவு காலத்துக்குப் பிறகாவது திரும்பி வந்துதே. அது போதும். என்னத்தையும் காட்டட்டும்.

இதுவரையும் உள்ளே குளித்து வெளிக்கிட்டுக்கொண்டிருந்த மனைவி இப்போதுதான் ஹோலுக்குள் நுழைகிறாள். வந்தவள் தீராந்தியில் ஒரு வேட்டி சட்டை தொங்குவதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“யாரிது இந்த நேரத்தில? கூரை ஒழுக்கைத் திருத்த வந்திருக்கிறாரா?”

தாத்தாவும் குனிந்து இது யாரிது என்று பார்த்தார்.

“அதுக்கு இதில என்னெய்யிறியள் ஐயா? சாமியறைக்குள்ளதான் ஒழுகுது ... அந்த பிள்ளையார் படத்துக்கு நேர் மேலா ...”

“அது தாத்தாடி”

“அதான் கேக்க நினைச்சன் … ஏன் இந்தக் கிழட கூரை திருத்தக் கூப்பிட்டனிங்கள்? விழுந்து கிழுந்து துலைச்சா பொலிஸ் கேசாயிடும். எங்கடை பாட்டையே நாங்கள் பாக்கேலாம இருக்கு. இதில இந்த உவத்திரமும் சேர்ந்தா”

“அடியேய் அது செத்துப்போன எங்கட தாத்தாடி … அம்மாண்ட அப்பா… பேய் ரிட்டேர்ன்”

“பே…யா?”, அவள் அதிர்ச்சியுடன் தாத்தாவை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். தாத்தா இன்னமும் சரியாகத் தீராந்தியில் செட்டில் ஆக முடியாமல் மாறி மாறி சட்டத்தடிகளைப் பிடித்துச் செக் பண்ணிக்கொண்டிருந்தார். பொதுவாக ஜெனடிக்கலி ஈழத்து ஆடவர்களுக்குப் பெரிதாகக் குண்டித்தசை இருப்பதில்லை. அதனால் அவர்களுக்கு மரக்கிளையிலோ அல்லது கடினமான தரையிலோ அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் அந்த இடத்தில் அண்டி உக்கிர வலி எடுக்க ஆரம்பித்துவிடும். அவர்களுடைய சைக்கிள் சீற்றைப் பார்த்தால்கூட எக்ஸ்ற்றாவாக இரண்டடுக்குப் ஸ்பொஞ் கவர் போட்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பொட்டம்லெஸ்தான் காரணம். ஆனால் பெண்களுக்கு அந்தப் பிரச்சனையேயில்லை.

தாத்தாவுக்கு ஒரு பக்கம் அண்டியது. தவிர வெளியே செருப்பைக் கழட்டிவிட்டு வந்ததால், எடையற்ற அவரைக் கீழே இழுத்துப்பிடிக்க வெயிட் ஏதுமில்லாமல் சிங்கன் பிறந்தநாள் வீட்டில் அறுபட்ட பலூன்போலத் திரும்பத் திரும்பப் போய்க் கூரையில் முட்டிக்கொண்டிருந்தார். நான் சொன்னதைக் கேட்டு சிவனே என்று செற்றியைப் பிடித்தபடி அவர் அமர்ந்திருக்கலாம். ஆனால் சீன் காட்டப்போய் சீமான் மேலே சில்லுப்பட்டுக்கொண்டிருந்தார். என் மனைவிக்கு அவர் பட்ட பாட்டைப்பார்க்கவே புதினமாக இருந்தது.

“சரியான லூசுப் பேயாக இருக்கும்போல. உங்கட குடும்பம்தானே. வேறென்னத்தை எதிர்ப்பாக்கிறது?”

அம்மா மனைவியை முறைத்துப்பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

“எண்ட பூட்டியைக் காணேல்ல… எங்கை?”

“அவளுக்கு உள்ள டான்ஸ் கிளாஸ் நடக்குது தாத்தா. கொஞ்சநேரத்தில முடிஞ்சிடும்”

“டீச்சரும் அறைக்குள்ளயா இருக்கிறா? சத்தமே இல்லை?”

“சூமில நடக்குது தாத்தா. டீச்சர் அவண்ட வீட்டிலில இருந்து ஆடிக்காட்டுவா, இவள் இஞ்சாலப்பக்கம் இருந்து ஆடோணும்”

“சூமா?”

“ஓ உங்களுக்குத் தெரியாது என்ன, இண்டர்நெட் கேள்விப்பட்டிருக்கிறீங்களா?”

“இண்டரக்ட் கிளப்தானே? பேயுலகத்திலயும் இருக்கு. நான் ஒருக்கா செக்கிரட்டரியா இருந்தனான்”

மனைவி ஷிட் என்று முணுமுணுத்தது கேட்டது. ஷிட் ஜோக்தான். கதையாக எழுதினால் இதைச் சொல்லக்கூடாது என்று யோசித்தேன்.

“ஐயா .... நீ என்ன சாப்பிடுற?”, அம்மா கேட்டார். அம்மா, அவருடைய சகோதரங்கள் எல்லோருமே ஒருமையில்தான் தம் பெற்றோரை அழைப்பார்கள்.

“எலி இரத்தம் கிடைக்குமா? செத்தோன சாப்பிட்டது. அதுக்குப்பிறகு கிடைக்கவேயில்லை”

'அய்க்' என்று மனைவி கத்தினாள். ‘செத்தோன’ என்று சொன்னது அவர் செத்தவுடனா அல்லது எலி செத்தவுடனா என்றொரு கேள்வி எழுந்தது. செத்தவர்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. ஆனால் இந்தக் கேள்வி அவ்வளவு முக்கியமில்லை. எங்கள் வீட்டுப் பொறியில் கொஞ்சநாளைக்கு முன்னர்தான் ஒரு நள்ளிரவில் எலியொன்று மாட்டின சத்தம் கேட்டது. காலையில் எழுந்து அதைத் தூக்கிப்போடலாம் என்று போய்ப் பார்த்தால் வால் மட்டும் பொறியில் மாட்டியிருக்க மீதி எலியைக் காணவில்லை. எலி தன் வாலை அறுத்துவிட்டுப் பறந்துவிட்டது என்று நான் நினைத்திருந்தேன். இப்போது யோசித்தால், தாத்தாதான் அதனை வாலோடு நறுக்கி அறுத்துத் தின்றிருக்கவேண்டும். புளிக்கறி தின்ற பரம்பரை செத்துப்போனதும் எலிக்கறி தின்கிறது.

“தாத்தா மெய்யாலுமே எலி சாப்பிடுவீங்களா?”

“எலி மட்டுமில்லை புலியைக்கூட சாப்பிட்டு ஏப்பம் விட்ட பரம்பரைடா நாங்கள்”

செத்தாலும் புழுகர் புழுகர்தான் என்று அம்மா பெருமைப்பட்டுக்கொண்டார். அவர்கள் வீட்டில் வறுமை காரணமாக எப்போதுமே புளிக்குழம்பும் சோறும்தான் வைத்ததுண்டு. ஆனால் இப்போது கேட்க ஆள் இருக்கிறது என்று தாத்தா அடித்துவிட்டார். எனக்கு ஒரு லீட் கிடைத்ததுபோலத் தோன்றியது. தாத்தாவிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தால் கொஞ்சம் அரசியலையும் செருகலாம் என்று எழுத்தாளர்களுக்கேயான அற்பத்தனமான யோசனை. ஆனால் அம்மா அவசர அவசரமாக இடைமறித்துவிட்டார்.

“வீரபத்திரர் கோயில் கொடியேறிட்டுது ஐயா, நாம வீட்டில மச்சம் சாப்பிடுறதில்ல”

“அவன் வீரபத்திரன் ****க்கு கோயில் கட்டிக் கும்பிடுறதே ஓவர். அதில விண்ணருக்கு கொடியேற்றத்திருவிழா வேற”

தாத்தா சொன்ன தூஷண வார்த்தையை விண்மீன்களால் நிரவாமல் முழுமையாகவே வெளிப்படுத்தியிருக்கலாம்தான். இரண்டு பிரச்சனைகள். ஒன்று அது ஒரு பெண்சார் பாலியல் வசை. இன்னொன்று மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறேன் என்பார்கள். எழுத்தாளரைக் கண்டிக்கவேண்டும் என்று ஒரு குரூப் ஆரம்பிக்கும். கையெழுத்துப் போராட்டம் தொடங்கும். பின்னர் அது ஒரு பேய் சொன்னது. தமிழ் சூழல் இவ்வகை எழுத்தை உள்வாங்கும் ஆற்றலை இன்னமும் அடையவில்லை என்று நான் டகால்டி பண்ணவேண்டும். புனைவின் கட்டற்ற சுதந்திர வெளி, மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்றெல்லாம் விளக்கம் கொடுக்கவேண்டும். பின்னர் நானே ஒரு உண்மைச் சம்பவத்தை புனைவென்று அறிவித்ததாக ஆகிவிடும். இப்படியெல்லாம் குத்தி முறிவதற்கு அந்த வார்த்தை ஒன்றும் இச்சம்பவத்தில் அத்தனை முக்கியத்துவம் நிறைந்ததும் கிடையாது. அதனால் கீழ்க்கண்ட சில பந்திகளை எடிட்டிங்கில் அழிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

--- அகற்றப்படவேண்டிய பகுதி : start ---

இந்தச் சம்பவத்தை எப்போதாவது மனம் கேளாமல் எழுத நேர்ந்தால் தாத்தா சொல்லிய தூஷண வார்த்தையை என்ன செய்வது என்று திடீரென யோசனை வந்தது. தாத்தா பக்கிங் என்று ஏசியிருந்தால் அதைக் கூசாமல் எழுதி இருப்பேன். அது தமிழ் தூஷணம் என்பதால்தான் தவிர்த்தேன் என்று தூஷணப்பிரியர்கள் யாரும் கொதித்துவிடவேண்டாம். ஒரு ஈழத் தமிழ் எழுத்தாளர் என்றால் தமிழில் தூஷணம் கொட்டியே தீரவேண்டும் என்று ஒரு டபூ வந்துவிட்டது. ஸீ, எனக்குத் தூஷணம் பறைவதில் எந்தத் தயக்கமுமில்லை. தூஷணம் எனக்குத் தொட்டில் பழக்கம். தமிழில் மயிர், விழல் போன்ற வார்த்தைகளை நான் தினசரி பிரச்சனைகளில் மிகச் சரளமாகப் பயன்படுத்துவதுமுண்டு. முதலில் மயிர் ஒரு தூஷணமே கிடையாது. மசிர் என்றால் கொஞ்சம் தூஷணமாகிறது. ஆனால் அதுவும் தூஷணக் காட்டில் அலைபவனுக்கு வெறுமனே சின்னி எறும்புக்கடிதான். பாலியல் தூஷணங்கள் என்றால் அவை இருபாலாருக்கும் பொதுவாக இருக்கையில் எனக்கு ஓகே. ஆனால் பெரும்பாலான தமிழ் தூஷ்ணங்கள் எல்லாமே சாதி அல்லது ஒருபால் பாலியல் சார்ந்த வசைகளாகவே இருக்கின்றன. ஆங்கிலத் தூஷணமான பஃக் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பாலியல் நடுவுநிலைமை இருக்கிறது. ஆண், பெண், திருநர் என அத்தனை பால் நிலைகள் செய்யும் உறவை அவர்கள் பொதுவாக பஃக் என்று சொல்லிவிடுவார்கள். பக்கிங் இடியட் என்று நீங்கள் யாரையும் திட்டலாம். பிரச்சனையில்லை. ஆனால் தமிழில் அதற்கீடான வார்த்தை ஆண் செய்வதை மாத்திரமே விளிக்கிறது. Not fair.

தமிழ் தூஷணங்களை நான் எழுதாமல் தவிர்ப்பதற்கு இன்னொரு காரணம் மரபிலக்கியத்தின்மீது எனக்கிருக்கும் அதீத பற்று ஆகும். உதாரணத்துக்கு இந்தக் கம்பன் பாடல்.

‘மறிப்*** தேவர் காண, மணி வரைத் தோளின் - வைகும்
நெறிப் ***ரீகம் அன்ன முகத்தியர்முன்னே - நென்னல்
பொறிப் ***ரீகம் போலும் ஒருவனால், புனைந்த - மௌலி
பறிப்***ம், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை - உண்டோ?

சோகம் என்னவென்றால் இந்தப் பாடலை கம்பன் விழாக்களில்கூட எவருமே எடுத்துப் பேசுவதில்லை. ஏனெனில் தூசணமாம். கம்பனை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று என்னை அறிந்தவர் அனைவருமே அறிவர். அவன் வரிகளை எப்படி வசையாக வைவேன் நான்? கம்பனுக்கே விண்மீன்களைக் கொடுக்குமளவுக்கு அந்த வார்த்தை இன்றைக்கு ஒரு மெயின்ஸ்றீம் பாலியல் வசையாகிவிட்டது. இதில் தாத்தா வார்த்தை எம்மாத்திரம்? அடிமைத்துவத்தைக் குறிக்கும் சிலைகளை எல்லாம் இழுத்து விழுத்தும் இக்காலத்தில் வார்த்தைகளை புறக்கணிப்பதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது?

--- அகற்றப்படவேண்டிய பகுதி : end ---

நான் இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கையில் அம்மாவும் தாத்தாவும் புங்குடுதீவு தாண்டியிருந்தார்கள்.

“இல்லையனை … மூண்டாம் திருவிழாதான் எங்கட திருவிழா …நீ மறந்துபோனை…. உனக்கு ஞாபகம் இருக்கா? நீயும் சித்தப்பனும் வட்டுக்கோட்டையிலயிருந்து ஒரு பாண்டு கோஷ்டியை திருவிழாவுக்கு கூட்டி வந்தியள்”

“ஞாபகமிருக்கு …. எழுதுமட்டுவாழிலயிருந்து ஒரு கரகாட்டக்காரியையும் கொண்டு வந்தனான்”

“ஓமோம், அம்மா அண்டைக்கு கறுக்கு மட்டையால ஒரு வெறிக்குட்டிக்கு வெளுத்ததும் ஞாபகம் இருக்கு”

அம்மா சிரித்தார். தாத்தாவும் சிரித்துவிட்டு எதையோ சொல்ல முனைந்தார்.

“ஆனால் அந்த கர…”

என் மனைவி திடீரென்று புகுந்து அவர்கள் கதையை வளர்க்காமல் இடைமறித்தாள்.

“தாத்தா உங்களுக்குத் தேத்தண்ணி ஊத்தியரட்டா?”

“வேணாம் பிள்ளை… அது நெஞ்சை சுள்ளிவிட்டிடும்”

“அப்ப என்னதான் குடிப்பியள்? சைவமா?”

தாத்தா யோசித்தார்.

“ஒரு கப் மாட்டு மூத்திரம் கிடைக்குமா? வந்ததுக்கு குடிச்சிட்டுப்போறன்”

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .