Skip to main content

பேய்க்கிழவாண்டி - இறுதிப் பாகம்


தாத்தா யோசித்தார்.

“ஒரு கப் மாட்டு மூத்திரம் கிடைக்குமா? வந்ததுக்கு குடிச்சிட்டுப்போறன்”

ஸீ. நான் இந்தச் சம்பவத்தை எழுதி வெளியிட முயற்சி செய்யாததற்குக் காரணம் இதுகள்தான். தாத்தா பேசின பேச்சுகள் எல்லாவற்றிலும் ஒரு அரசியல் சமூக பிரச்சனையைப் பேசுவதற்கான லீட் வந்துகொண்டேயிருந்தது. ஆனால் நான் எழுதினால் வெறுமனே லீடுக்காகத்தான் தாத்தாவைப் பேசவைத்தேன் என்பார்கள். வேண்டாம். உண்மையைச் சொல்லும்போதே இவர் புனைவாக்குகிறார் என்று ****க் கதை கதைப்பார்கள். Again, ஆண்பால் சார்ந்த வசை. இந்தா பிடி விண்மீனை.

இதற்கிடையில் சூமில் டான்ஸ் கிளாஸ் முடிந்து மகள் அறைக்கதைவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். அவளையும் அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்து தாத்தா கொஞ்சம் குழம்பினாற்போலத் தோன்றியது. தீராந்தியில் நிலைகொள்ளாமல் தவித்த தாத்தாவைப் பார்த்து அவள் குழம்பினாள்.

“ராசாத்தி இஞ்ச வா … இதான் உன் பூட்டா. அப்பம்மாண்ட அப்பா”

நான் மேலே காட்ட அவளும் புதினம் பார்த்தாள். அவள் பயந்துவிடுவாளோ என்று எண்ணி, நான் நிதானமாக அவளுக்கு நிலைமையை எடுத்துச்சொன்னேன். ஒரு பிசாசைத் தன் மகளுக்கு நல்லவிதமாக அறிமுகப்படுத்திய முதல் தகப்பன் நானாகத்தான் இருப்பேன். செத்துப்போன பூட்டா திரும்பி வந்த கதைக்கு ராசாத்தி மிரண்டதாகத் தெரியவில்லை.

“ஹாய் பூட்டா”

“ஹாய் ராசாத்தி, உனக்குப்பயமே இல்லையா கண்ணு?”

தாத்தா கேட்க ராசாத்தி விட்டேற்றியாகப் பதில் சொன்னாள்.

“Why should I? A ghost is a person in the fancy dress”

ராசாத்திக்கு நன்றாகவே தமிழ் தெரியும். அவள் தமிழ் மீடியத்தில்தான் படிக்கிறாள். ஆனாலும் தாத்தாவுடன் ஆங்கிலத்திலேயே பேசினாள். அண்மையில்தான் ஸ்டீபன் கிங்கின் ‘இட்’ என்கின்ற பேய்ப்படத்தைத் திரையரங்கில் போய்ப் பார்த்திருந்தோம். அவள் பார்த்த பேய்ப்படங்கள் எல்லாமே ஆங்கிலத்தில்தான் இருந்தன. அதனால் பேய்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும் என்று நினைத்தாளோ என்னவோ.

"உதென்ன பிள்ளை சட்டை, அதுவும் பரதநாட்டியம் படிக்கிற பிள்ளை"

“பூட்டா நான் படிக்கிறது பரதநாட்டியம் இல்ல, பலே”

"அதென்ன பலே?"

ராசாத்தி கைகளையும் கால்களையும் வாகுவாக வீசி விட்டெறிந்து ஒரு பலே உருப்படியை ஆடிக்காட்டினாள். தாத்தா வியப்புடன் அதைப் பார்த்துப் 'பலே' என்று பாராட்டினார் . பேய்களுக்கு இந்த நடனம் மேலும் தோதாக இருக்கலாம், வானத்தில் பறந்து பறந்து ஆடலாம் என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆனால் சொல்லவில்லை.

“இதையெல்லாம் டீச்சர் இண்டர்நெட்டுக்கு அந்தப்பக்கம் நிண்டு ஆடுவாவோ?”

“அவ கதிரையில இருந்துதான் ஆடுவா. நாங்கள் பார்த்துப் பழகவேண்டியதுதான்”

தாத்தாவுக்கு எதுவுமே பிடிபடவில்லை. அவர் சிரமப்பட்டு தீராந்தியில் தொங்கியபடியே தான் கொண்டுவந்திருந்த லெகோ பெட்டியை அவளிடம் நீட்டினார். ராசாத்தி 'வாவ், தாங்க்ஸ்’ என்றாள். தாத்தா கேட்க, தன் பெயர், பாடசாலை எல்லாவற்றையும் வரிசையாகச் சொன்னாள். அம்மா கேட்டு தாத்தாவுக்கு 'கண்ணான கண்ணே' பாடிக்காட்டினாள். வழமையான பூட்டா பூட்டி உரையாடல் சம்பிரதாயங்கள் முடியவும், அவள் யோசித்துவிட்டுக் கேட்டாள்.

“செத்தாப்பிறகு என்ன நடக்கும் பூட்டா?”

என் மகள் எப்போதுமே இப்படித்தான். பெரியவர்களின் கேள்விகளையே கேட்பாள். அவள் கேள்விகள் எல்லாமே ‘ஏன் நாங்கள் பிறக்கிறம்?’, ‘எதுக்குக் குடும்பம்?’, ‘ஏன் சாமத்தியவீடு வைக்கிறினம்?’, ‘ஏன் இப்பவே சாகக்கூடாது?’ என்ற வகையறாக்களிலேயே இருக்கும். அவளை நான் வண்டி மாடுகளுக்கு அருகிலேயே கொண்டுபோவதில்லை. கேள்விமேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பாள். ஒரு புழுகர் குடும்பத்துப் பூட்டிக்கு இத்தனை புத்திசாலித்தனம் எப்படி வந்திருக்கும் என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் அந்த ஆச்சரியத்தை மறந்தும் என் மனைவியிடம் நான் சொல்லுவதில்லை.

“செத்தாப்பிறகுதான் எல்லாமே ராசாத்தி. நீங்க வாழுறது எல்லாமே ஒரு செத்தவீட்டு வாழ்க்கை. பிறக்கிறது. சாப்பிடுறது. கலக்கிறது. படுக்கிறது. எழும்பிறது. சாப்பிடுறது. பெறுகிறது. சாப்பிடுறது. வளக்கிறது. வளக்கிறது பெறுகிறதை திரும்பவும் வளக்கிறது. பெறுகிறது வளர்ந்து அதுவுங் கலக்கிறது. சாப்பிடுறது. ஒருநாள் சாகிறது. ஆனா அதுக்குப்பிறகுதான் உண்மையானே வாழ்க்கையே இருக்கு”

“விளங்கேல்ல தாத்தா”

நான் ராசாத்தியை உள்ளே போகச்சொன்னேன். இம்முறை ஆங்கிலத்தில்.

“Enough Honey … go to your study and finish your homework”

தாத்தா மறித்தார்.

“No, you stay here kid, homework can wait”

தாத்தா ஆங்கிலம் பேசுவது என்பது புதிது. உயிருடன் திரிந்தபோது அவர் மேல்சட்டையே போட்டு நான் பார்த்ததில்லை. பென்சன் எடுக்கப்போகும்போது மாத்திரம் நேஷனல் உடை அணிவார். ரயில்வே கடவை உத்தியோகத்தராகப் பணியாற்றியமைக்கான பென்சன். தாத்தாவின் ஐம்பதுவருட சேர்விசில் முப்பதுவருடங்கள் ஊரில் ரயிலே ஓடவில்லை. இருபது வருடங்கள் ரயில் ஓடத் தண்டவாளமே இருக்கவில்லை. இடையில் புலிகள்-பிரேமதாசா சமாதான காலத்தில் மாத்திரம் சில மாதங்கள் ரயில் ஓடியது. அவ்வளவுதான். ஆனாலும் அவருக்குப் பென்சன் மாத்திரம் மாதாமாதம் கிடைத்துக்கொண்டிருந்தது. அரச உத்தியோகத்தருக்கான கூப்பன் அட்டை இருந்தது. மாவட்ட சமாதான நீதவான் வேறு. அப்படிப்பட்ட ஒரு கடவை உத்தியோகத்தர் இப்போது ஆங்கிலேயர் ஆக்சண்டிலேயே ஆங்கிலம் பேசுவது என்பது உங்களுக்கு எப்படியோ, எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. பேயுலகத்து பிரிட்டிஷ் கவுன்சில் படிப்பாக இருக்கவேண்டும்.

தாத்தா தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பதிலளிக்க ஆரம்பித்தார். விமர்சனங்களைத் தவிர்க்குமுகமாக அவற்றைத் தமிழிலேயே தருகிறேன்.

“ஒரு மனுசன் செத்தாப்பிறகுதான் பிறக்கிறான் பிள்ளை. உங்கள் எல்லாருக்கும் வெறும் ஆறு அறிவுதான். அதுக்குள்ள இவ்வளவு ஆட்டமும் போடுறீங்கள். ஆனா நீங்கள் எல்லாருமே செம்மறியளுக்குக் கொஞ்சமும் குறையாத ஆக்கள். அதுக்குள்ளயும் ஒவ்வொருத்தரும் தான் ஒரு தனித்துவமான செம்மறி எண்டு காட்டுறதுக்கு காட்டாத சீன் எல்லாம் காட்டுவியள். குட்டியா ஒரு மண் கும்பி கிடைச்சா அங்கை ஏறி குண்டியை ஆட்டிக்கொண்டு நிப்பியள். எவ்வளவு பரிதாபமான வாழ்க்கை இது? செம்மறியளுக்காவது இருக்கேக்க மயிரும் இறந்தாப்பிறகு இறைச்சியும் எண்டு ஒரு பெருமை இருக்கு. உங்களுக்கு அதுவுமில்ல. என்ன சீரழிஞ்ச வாழ்க்கை இது?”

“அப்ப அங்கன உங்கட வாழ்க்கைல என்ன ஸ்பெஷல் பூட்டா?”

“சுதந்திரம்தான். செத்தாப்பிறகு ஆளாளுக்கு ஒரு உலகத்தைப் படைச்சு அதுக்குள்ள வாழலாம். தேவையானபோது மாத்தி அமைக்கலாம். விருப்பமில்லாட்டி எதுவுமே செய்யாம சும்மா கிடக்கலாம். பேயினத்துக்கு அடிப்படையில மொத்தமா நாற்பத்திரண்டு அறிவு இருக்கு. பிறகு அதுகளிண்ட வரிசைமாற்றம் சேர்மானங்களால அறிவுகளிண்ட எண்ணிக்கை ஒவ்வொரு பேய்க்கும் ஒவ்வொன்றாக இருக்கும். ஒரு முட்டாள் பேய்க்கு அதிகமான அறிவு கிடைக்கும். ஒரு அறிவான பேய் அதிகமான அறிவைத் தன்னகத்தே கொண்டிருக்க விரும்பாது. இயலுமான அளவு அது தன்னட்ட இருக்கிற அறிவை பாம்பு செட்டையை கழட்டுறமாதிரி கழட்டிவிட ஆரம்பிக்கும். ஊனோ விளையாட்டு மாதிரி. இதில வெற்றியடைபவரின் கையில் அறிவு அறவே இருப்பதில்லை. விளங்குதா?”

“Ignorance is intelligence மாதிரியா பூட்டா? அப்ப முட்டாள்கள்தான் அறிவாளிகளா?”

நான் சொன்னேனே. ராசாத்தி ஒரு பயங்கர மண்டைக்காய். பேயுலகத்து வரைவிலக்கணப்படி அவள் ஒரு அடி முட்டாள் ஆகிறாள்.

“அப்படி எண்டில்லை. ஆனா அறிவாளிகள் எல்லாம் படு முட்டாள்கள்”

“ஓகே பூட்டா. விளங்கிற்று. ஒரு சின்னச் சந்தேகம். எங்களுக்கு வெறும் ஆறறிவு எண்டதால எங்களை முட்டாள்கள் எண்டுவீங்களா அறிவாளிகள் எண்டுவீங்களா?”

ராசாத்தியின் கேள்வியில் தாத்தா குழம்பிப்போனார். மனிதர்களுக்கு குறைந்த அறிவு என்றால் அவர்கள்தானே அவருடைய வரைவிலக்கணப்படி பேய்களை விட அறிவாளிகள் ஆவர்? ஆக தாத்தாவின் ஆரம்ப லொஜிக் உதைக்கிறதே?

“சரி நீ போய்ப் படி பிள்ள”

தாத்தா அவளை உள்ளே அனுப்ப முயன்றார். ராசாத்தி அசைவதாக இல்லை.

“அப்ப இந்த ஆறறிவை வச்சுக்கொண்டு எப்பிடி இந்த ஊரில வாழ்வாங்கு வாழவேண்டும் எண்டு சொல்லுறிங்களா? இஞ்சயிருந்து போன ஆர் ஆரெல்லாம் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கிறினம்? பார்த்துச் சொன்னீங்கள் எண்டால் அவையளைப்போலவே வாழுவம் அல்லவா?”

திருக்குறள் ரெபரன்ஸ். அதனை ராசாத்தி ஒரு பேயிடம் உறுதிப்படுத்தக்கேட்கிறாள் என்பது விளங்கியது. பேயரும் அசராமல் பேசினார்.

“ஒரு மரம் மாதிரி வாழோணும் பிள்ளை. உன்ர பாட்டுக்கு வளர்ந்துகொண்டே இருக்கோணும். ஆளாளுக்கு வந்து கொப்பை வெட்டுவினம். பழத்தைப் புடுங்குவினம். குருவி கூடு கட்டும். மரங்கொத்தி பொந்து அடிக்கும். ஆனா மரம் எதுக்குமே ரியாக்ட் பண்ணாமல் தன்ர பாட்டில இருக்கும். அப்பிடி இருந்தா எந்த டென்சனும் வாழ்க்கையில வராது. உலகத்தில கனகாலம் குப்பை கொட்டின மரங்கள் எல்லாமே இப்பிடி டென்சன் இல்லாம வளர்ந்த மரங்கள்தான். ஊரில ஒரு எல்லை வேலி பூவரசு இன்னமும் நிக்குது. ஏழெட்டுத் தலைமுறை கண்ட பூவரசு. ஐம்பது பருவத்து வேலி முள்ளுக்கம்பி அதில செருகியிருக்கு. அரைவாசி கறல் கம்பி. ஆனாலும் மரம் நிண்டு பிடிக்குது. காணில ஐந்து வீடுகள் கட்டுப்பட்டு எல்லாமே தூர்ந்திட்டுது. அந்த மரத்தடில மூத்திரமடிச்சதுகள் எல்லாம் வளந்து, செத்துத் துலைஞ்சிட்டுதுகள். அங்க வாழ்ந்த பரம்பரையள் எல்லாம் இப்ப எங்கனையோ தெரியாது. ஆனா பூவரசு இன்னமும் நட்டுக்கொண்டு நிக்குது பிள்ளை”

தாத்தாவால் ஒரு பேய்க்கதை மெது மெதுவாக ஒரு இலக்கிய வடிவத்துக்குள் நுழைகிறதோ என்று ஒரு கணம் யோசித்தேன். அதில் எந்தத் தவறுமில்லை. உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாமே பேய்க்கதைகள்தானே.

‘I guess it makes sense’ என்று ராசாத்தி தோள்களைக் குலுக்கிவிட்டு அறைக்குள் போய் ஒளிந்துகொண்டாள். மனைவி தேநீர் போட்டுக்கொண்டுவந்து தாத்தாவுக்கு நீட்டினாள். ஸீ, இந்தச் சம்பவத்தில் ஒரு நாடகம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. ராசாத்தி இடது பக்கத்திரைக்குள் ஒளிகையில் மனைவி தேநீர் தட்டோடு வலது பக்கமிருந்து வருவதுபோல. அதிகம் பாத்திரங்கள் இல்லை. ஒரே லொக்கேசன். நாடகத்துக்குக் கலாதியான ஒரு களம். ஒருநாள் மேடையேற்றவேண்டும். ஐயையோ. அந்தச் சிந்தனையே வேண்டாம். பத்து ஒத்திகைகள். நடிகர்களைக் கெஞ்சிக் கூத்தாடி ஒத்திகைகளுக்கு அழைக்கவேண்டும். ரோல்ஸ் பற்றிஸ் வாங்கிக்கொடுக்கவேண்டும். பிந்தி வருவார்கள். நடப்புக் காட்டுவார்கள். நாடகம் நன்றாக இருந்தாலும் சொதப்பினாலும் ‘அருமையாக இருந்தது’ என்ற ஒரேயொரு விமர்சனம்தான் கிடைக்கப்போகிறது. அதற்குப்பிறகு சொல்லப்படும் நன்றி உரைக்கும் அதே அருமை விமர்சனம்தான். இந்த எருமைமாட்டு விமர்சனங்களுக்காக எதற்குக் குத்திமுறிவான்? ஒரு மயிரும் வேண்டாம்.

தாத்தா தேநீர்க் குவளையை எட்டி வாங்கினார்.

“நான் மாட்டு மூத்திரமல்லோ கேட்டனான். இதென்ன?”

“கொரணாக்கு மருந்து என்று ஆரோ சொன்னதில மாட்டு மூத்திரத்துக்குத் தட்டுப்பாடு தாத்தா. இது மாட்டுப்பாலில போட்ட ரீ. எல்லாமே மாட்டிலயிருந்து வாறதுதான். குடியுங்கோ”

“தேயிலை யோர்க்‌ஷயரா?”

“இல்ல டில்மா”

“சனியன் … நாங்கள் அங்கை இலங்கை பிராண்டை இன்னமும் புறக்கணிக்கிறமெண்டு தெரியாதா? நீ வெறும் பாலை மட்டும் காய்ச்சிக்கொண்டுவந்து தா…இந்தா போ”

மனைவி கடுப்பாகிவிட்டாள்.

“உங்களை இப்ப ஆரு ஆரத்தி வச்சுக் கூப்பிட்டது? பேயாப்போனா புளியமரத்திலயே கிடக்கவேண்டியதுதானே? அப்படியே வந்தாலும் வந்தமா, பார்த்தமா, சாப்பிட்டமா என்று நிண்ட சிலமனே தெரியாமத் திரும்பிடோணும். இவையள் ஆட்டிக்கொண்டு வருவினம், காட்டாத நடப்பு எல்லாம் காட்டுவினம். நாங்களும் பல்லை இளிச்சுக்கொண்டு நிக்கோணுமாக்கும். ஏதோ சபாரி ட்றிப் எண்ட நினைப்பு.”

அவள் புறுபுறுத்துக்கொண்டே கப்பை வெடுக்கென வாங்கிக்கொண்டு திரும்பினாள். நான் கதையை மாற்றினேன்.

“எங்களை எல்லாம் அங்கை மிஸ் பண்ணுறதில்லையா தாத்தா?”

“என்ன விழலுக்கு மிஸ் பண்ணோணும்? இஞ்ச எல்லாமே வேஸ்டு. ஒரு ரெயில்வே தடியை தூக்கிறதும் பதிக்கிறதும் ஒரு வேலை எண்டு செய்துகொண்டிருந்திருக்கிறன். இப்ப நினைக்கச் சிரிப்பா இருக்கு”

தாத்தா அதைக்கூட செய்ததில்லை என்பதுதானே உண்மை.

“ஒரு கேள்வி தாத்தா … கடவுள் இருக்கிறாரா இல்லையா?”

“ஓ அதுகளா? உண்மையிலேயே ஒருசில பேயள்தான் கடவுளா சீன் போடுறது. இப்ப நானே தாத்தா உருவத்தில வராம சிலுவையோடையோ அல்லது சங்கு சக்கரத்தோடயோ வாசலில வந்து தட்டியிருந்தா என்ன செய்திருப்பாய்?”

“கொரணா வந்திடும் எண்டு கதவைத் திறந்திருக்கமாட்டன்”

“உன்னை விடு … உண்ட கேள்விக்குப் பதில். கடவுள் இருக்கிறார்தான். ஆனா அவர் நீங்க நினைக்கிறமாதிரி சக்தி வாய்ந்தவர் கிடையாது”

மனைவி இப்போது பாலைக் காய்ச்சிக்கொண்டுவந்து தாத்தாவிடம் நீட்டினாள். தாத்தா அதனை வாங்கி மண்டிவிட்டுக் கப்பைத் திருப்பிக்கொடுத்தார். பேயுதட்டும் பால் கசிந்தது. தாத்தா புறங்கையால் அதைத் துடைத்துக்கொண்டார்.

“பாட்டி எப்பிடி இருக்கிறா தாத்தா?”

“ஓ அதுவா … செத்தவுடனே அங்கை வந்து என்னைத் தேடிக் கண்டுபிடிச்சுது. கொஞ்சநாள் என்னட்ட பேயுலக குப்பி எடுத்திட்டு ஒருநாள் எஸ்கேப் ஆயிட்டுது. கடைசியோ எங்கேயோ ஒரு கிராமத்தில அம்மாளா அருள் குடுக்கிறதா கேள்விப்பட்டன். உங்கட பாட்டி ஒரு கசவாரம் பிடிச்சது. அது அம்மாளா இருந்தா அந்த ஊர் உருப்பட்டமாதிரித்தான், தட்சணையளை வாங்கி விழுங்கிட்டு சனத்துக்கு ஒண்டுமே குடுக்காது."

"தனியாவா இருக்கிறா?"

"இல்லை, அதுக்கு சதாசிவப் பரியாரியோட சினேகம் எண்டு ஒரு கேள்வி. உயிரோட இருக்கேக்கையே அவையளுக்க பழக்கமாம். உந்த மசிர் ஆருக்குத் தெரியும்? எக்கேடு வேணுமெண்டாலும் கெடட்டும்”

"நீங்கள் எப்படித் தாத்தா தனியா சமாளிக்கிறியள்?"

"தனிய எண்டு சொல்லமுடியாது, உங்கடை செல்லமுத்து அன்ரியும் அங்கைதான் இருக்கிறா. ஊரில எனக்கொரு கோயில் கிடைச்சிட்டாப் போதும். அடிக்கடி வந்துபோய் காலத்தை ஓட்டிடலாம்"

தாத்தாவின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மனைவிக்கு எரிச்சல் வந்திருக்கவேண்டும். கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

“சரி செத்தனியள், செத்த மரியாதைக்கு அங்கேயே இருக்கவேண்டியதுதானே … இஞ்ச வந்து ஆருக்கு ஷோ காட்டுறியள்?”

தாத்தா கோபத்துடன் சளுக்கென்று தீராந்தியிலிருந்து பாய்ந்து செற்றியில் விழுந்து அட்டணக்கால் போட்டபடி அமர்ந்தார். அவரின் இரண்டு கைகளும் செற்றியின் கைப்பிடிகளை அவர் பறக்காவண்ணம் பிடித்துக்கொண்டிருந்தன.

“நானும் பாத்துக்கொண்டிருக்கிறன். பாவம் பிள்ளையள் எண்டு பாக்க வந்தா நடப்பு கதைக்கிறாய் என்ன? கோயிலில போய் அது வேணும் இது வேணும் எண்டு கேப்பியள். நீங்கள் ஹலோ எண்டா கிலோல வரோணும். ஆனா நேரில சும்மா பாக்க வரலாம் எண்டா சேட்டைக்கதையள் கதைக்கிறது. உன்னை என்ன செய்கிறேன் பார். உன் மேல் இடி விழ”

தாத்தா ஒரு கையை மனைவியை நோக்கிக் காட்டி ஏதோ சொல்லிச் சாபம் இட்டார். மனைவிமேல் மெல்லியதாக ஒரு இடி விழுந்தது. வழமையான இடி என்றால் மில்லியனுக்கும் அதிகமான வோல்ட் சக்தியுடையதாக இருக்கும். ஆளே எரிந்துவிடும். ஆனால் தாத்தா கொடுத்த இடி ஒன்றரை வோல்ட் அளவிலேயே இருந்தது. சாதாரண பென் டோர்ச் பட்டறியின் சக்திதான்.

“என்ன இது எறும்பு கடிச்சாப்போல, இவ்வளவுதான் உங்கட சக்தியா?”
மனைவி சிரித்துக்கொண்டே கேட்டாள். தாத்தா மேலும் கடுப்புடன் திரும்பவும் கையைக்காட்டி சாபம் போட்டார். சாபத்தின் சக்தி போகப் போக இறங்கிக்கொண்டே இருந்தது.

“பொறுடி நாளைக்கு செல்லமுத்தையும் கூட்டிவாறன் … அவள் நல்லா சார்ஜ் ஏத்தி இருப்பாள். இந்த வீட்டையே எரிக்கிறம் பாரு”
தாத்தா கோபத்துடன் வெளியேற, நானும் அம்மாவும் பின்னாலேயே ஓடினோம்.

“தாத்தா, உது லூசுண்ட கதையைக் கேட்டு நீங்கள் கோவிச்சுக்கொண்டு போகாதைங்கோ … பிளீஸ்”

“ஓம் தாத்தா, நாளைக்கும் வாங்கோ, நான் யோர்க்‌ஷைர் டீ வாங்கி ஊத்தித்தாறன். அப்பிடியே மறக்காம எங்கட சுவர் மணிக்கூட்டுக்கும் ஒரு இடி முழங்கிட்டுப் போங்கோ… நாளு நாளா பட்டறி போய் அது ஓடாமக் கிடக்கு”

மனைவி நக்கலுடன் சொல்லவும் தாத்தா பேய் அவமானத்தால் சிறு இலவம் பஞ்சாய்ச் சுருங்கி இரவின் மடியில் மிதந்து விலகிப் பறந்தார். நான் ‘தாத்தா, தாத்தா’ என்று கத்தியபடியே பஞ்சைப் பிடிக்கப்போனேன். அவர் சிக்கவேயில்லை. சற்று நேரத்திலேயே இருளில் அந்தப் பஞ்சு காணாமற் கரைந்துபோனது. பிரிவென்று வரும்போது பேய்களும் மனிதர்களைப்போலவே செயற்படுகின்றன என்று தோன்றீயது. ‘போய்ட்டுவாறன்' என்றுகூட அவை சொல்வதில்லை. நான் கவலையுடன் அம்மாவிடம் சொன்னேன்.

“தாத்தா போய்ட்டாரும்மா”

அம்மா சற்றுநேரம் வாசலில் தாத்தாவுக்காகக் காத்திருந்து பார்த்தார். பின்னர் கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே வந்து பிரிட்ஜில் குளிர் தண்ணி எடுத்து மடமடவென்று குடித்தார். இரவுக்கான அவருடைய மருந்துகளை எல்லாம் அருந்திவிட்டு பாத்ரூம்போனார். இதற்கிடையில் மனைவியும் ராசாத்தியும் தாத்தா கொண்டுவந்து கொடுத்த லெகோ பெட்டியை உடைத்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள். உயர்ந்த புகைக்கூண்டுடன் கூடிய பேய்வீடு. அங்கே ஒரு குடும்பமும் வயோதிபப் பேயும் இருந்தன. ஐந்து நிமிடத்தில் அந்த வீட்டை அவர்கள் கட்டி முடித்துவிட்டார்கள். விலை மலிந்த லெகோவாக இருக்கவேண்டும். நான் அந்த லெகோவை காலையில் குப்பைக்குள் கொண்டுபோய்ப் போட்டுவிடவேண்டும் என்று யோசித்தேன். பேய் தந்த பொருள் எதுவும் வீட்டில் இருக்கவேண்டாம். தரித்திரம்.

பாத்ரூம் போன அம்மா முகத்தை நன்றாகக் கழுவி, தலையை முடிந்து, பவுடர், திருநீறு, குங்குமம் எல்லாம் இட்டுப் பளிச்சென்று ஹோலுக்குத் திரும்பி வந்தார். சார்ஜில் கிடந்த தன் போனை எடுத்தார். செற்றியில் உட்கார்ந்து, லண்டனிலிருக்கும் சித்திக்கும் கனடாவிலிருக்கும் பெரியம்மாவுக்கும் வைபரில் வீடியோ கொன்பரன்ஸ் கோல் போட்டார். போனில் முகத்தை மறுபடியும் சரிபார்த்துத் துடைத்துக்கொண்டார். மறுமுனைகளில் சித்தியும் பெரியம்மாவும் ‘ஹலோ’ சொன்னதுதான் தாமதம்,

அம்மா ஓவென்று அழ ஆரம்பித்தார். தலைவிரி கோலமாய்.

--- முற்றும் ---

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .