Skip to main content

அப்பாவின் தொலைபேசி


எண்பதுகளில் எங்கள் ஒழுங்கையிலேயே புறொக்டர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. அந்த வட்டாரத்தில் இருந்த இருபது முப்பது வீடுகளுக்கும் அதுதான் ஒரே தொலைபேசி. அதிலும் நாம் போய் அழைப்பு எடுக்க அந்தப் புரொக்டர் மனிசி விடாது. ஆனால் அவசர அழைப்பு ஏதும் வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள். அப்படி அழைப்பு எடுத்து விசயம் சொல்லுமளவுக்கு அங்காலப்பக்கம் தொலைபேசி வசதிகொண்ட எவரையும் வட்டாரத்துக்கும் தெரியாததால் பெரிதாக அழைப்பு எதுவும் எமக்கு வருவதில்லை. வெளிநாட்டுக்கு ஆட்கள் போகத்தொடங்கியிராத காலம் அது. அல்லது போனவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுமளவுக்கு வசதியும் வந்திராத காலம். எப்போதாவது அப்பாவுக்கு வேலை விசயமாக அழைப்பு வரும். தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது என்றதுமே அப்பாவின் முகத்தின் பின்னே ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கும். அது செருப்பை அணிந்துகொண்டு, ஒழுங்கையால் நடந்து புரொக்டர் வீட்டுக்குப் போய், தொலைபேசியில் கதைத்துவிட்டுத் திரும்பும்வரைக்கும் நிலைத்து நிற்கும். வருகின்ற வழியில் சிங்கன் குறைந்தது நான்கு வீடுகளிலாவது கேற்றடியில் நின்று அந்த அழைப்பைப்பற்றிப் பெருமைப்பட்டுப் பீத்தாமல் வீடு சேர்ந்ததில்லை. வெறும் இன்கமிங் அழைப்புக்காகக் காட்டிய எடுப்பு இதுவென்றால் வீட்டிலேயே தொலைபேசி இருந்தால் எத்தனை பெருமை? அக்காலத்தில் அப்பாவும் தொலைபேசிக்கான விண்ணப்பத்தை டெலிகொம்மில் கொடுத்திருந்தாலும் அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. அது சரிவரும்போல இருந்த சமயம் இந்தியன் ஆர்மி வந்துவிட்டது. அப்புறம் தொடர்ச்சியான சண்டைகள். கடிதப்போக்குவரத்தே சிக்கலாகிப்போன காலத்தில் தொலைபேசி என்ன தொலைபேசி?

என் பதினேழாவது வயதில்தான் முதன்முதலாக நான் தொலைபேசியில் பேசினேன். வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா நெலுக்குளம் முகாமில் தங்கியிருந்த சமயத்தில் அது நிகழ்ந்தது. அப்போது அப்பா சவுதியில் இருந்தார். ஒரு கொமியுனிகேசனுக்குச் சென்று அப்பாவின் இலக்கத்தைக் கொடுத்தால் கடைக்காரர் அங்கே அழைப்பு எடுத்து தன் இலக்கத்தைக் கொடுப்பார். சில நிமிடங்களில் அப்பா அதற்குத் திருப்பி அழைக்க நாங்கள் ஒரு பூத்துக்குள் சென்று அப்பாவோடு பேசமுடியும். முதன்முதலில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தொலைபேசியில் அப்பா எப்போதுமே அன்னியமாகத்தான் தோன்றுவார். ‘ஹலோ’, ‘எப்பிடி இருக்கிறீங்கள்?’, ‘முகாமில நிலைமை பிரச்சனையில்லை’, ‘நான் மத்ஸ் படிக்கப்போறன்’, ‘பயோ கஷ்டம், எனக்குப் பாடமாக்கிறது சரிவராது’ இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே மேலே பூட்டியிருந்த டிஜிட்டல் நேரக்காட்டியில் நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது நெட் போன் வந்திருக்கவில்லை. இன்கமிங் பத்து ரூபாவோ என்னவோ. ஆக நிமிடத்துக்கு மொத்தமாக ஒரு ரியாலும் பத்து ரூபாவும் பறந்துகொண்டிருக்கும்போது ‘காம்பில ஆர்மிக்காரங்களோட கிரிக்கட் விளையாடினாங்கள், ஓப் சைடில ஒரு நாலு அடிக்கேக்க கோப்ரல் கொந்த ஷொட் எண்டவர்’ என்றெல்லாம் பேசமுடியாது. அம்மா, அக்கா என எல்லோரும் பேசி முடிக்க ஒரு பத்து நிமிடங்கள் எடுக்குமென்றால் ஆரம்ப அழைப்பு நூறு ரூபா, அப்பா திருப்பி எடுத்ததுக்கு நூறு ரூபா என்று இருநூறு ரூபாய்களை அழுதுவிட்டே நாங்கள் வெளியே வருவோம். அப்பாவுக்கு எத்தனை ரியால் போயிருக்குமோ தெரியாது.
நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியபோது சந்திக்குச் சந்தி சென்றிப் பொயிண்டுகளைப்போல கொமுயூனிகேசன் செண்டர்களும் நிரம்பி வழிந்தன. எங்களுக்கு அருகே துரையண்ணையின் வீட்டிலும் ஒரு கொமுயுனிகேசன் செண்டர் இருந்தது. இந்தப் பத்து வருடங்களில் வீட்டுக்கொரு போராளி உருவானாரோ இல்லையோ, வீட்டுக்கொரு வெளிநாட்டுக்காரர் உருவாகியிருந்தார்கள். தவிர அரைவாசி யாழ்ப்பாணம் கொழும்புக்குப் புலம்பெயர்ந்து போயிருந்ததால் அங்கிருந்தும் அழைப்புகள் வருவதுண்டு. அதனால் கொமுயூனிகேசன்களில் கூட்டம் அலைமோதியது. எங்களுக்கும் அப்பா, அக்கா என அடிக்கடி அழைப்புகள் வரும். அழைப்பு எடுத்துச் சொன்னால் கொமுயுனிகேசனில் வேலை செய்யும் அண்ணாவோ அக்காவோ வீடு தெடிவந்து சொல்லிவிட்டுப் போவார்கள். பத்து நிமிடங்களில் திரும்பவும் அழைப்பு வரும்போது நாங்கள் அங்கே தயாராக நிற்கவேண்டும்.
ஒருமுறை என் மச்சாள்முறை அக்காவுக்கு வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்த்திருந்தார்கள். ஆரம்பக் காலத்து யவன மாப்பிள்ளைகள் இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தே புரவிகளில் வந்தார்கள். பின்னர்தான் வைக்கிங்குகள், துருவக்கரடிகள் என மாப்பிள்ளைகள் இன்னமும் மேலேயிருந்த தேசங்களிலிருந்து வந்தார்கள். மச்சாளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை சுவிஸ்காரர். அவர் கோல் எடுக்கப்போகிறார் என்று தெரிந்ததுமே மச்சாளுக்கு வெட்கமோ வெட்கம். அன்று அவர் என்னையும் கொமுயுனிகேசனுக்கு அழைத்துப்போனார். கோல் வரும்முன்னரே ஒரு பூத்துக்குள் சென்று சாத்திக்கொண்டு அதிலிருந்த தொலைபேசியில் பேசிப்பார்த்தார். மொக் இண்டர்வியூ. பின்னர் வெளியே வந்து தான் கதைத்தது வெளியே கேட்டதா என்றார். தொலைபேசியில் எதற்காக ‘மைக் டெஸ்டிங் வன் டூ திரி சொன்னீங்கள்?’ என்றேன். உடனே அவர் உள்ளே திரும்பிப்போய் கொஞ்சம் மெதுவாகக் கதைத்துப்பார்த்தார். இம்முறையும் எனக்குக் கேட்டது. ஆனாலும் கேட்கவில்லை என்றேன். பின்னர் நிஜமான மாப்பிள்ளை அழைப்பு வர, மச்சாளும் அத்தானும் அலட்டத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ‘ஹலோ, எப்படிச் சுகம், இஞ்ச வெயில், அங்கை பனியா’ என்றமாதிரியான சங்கீத ஸ்வரங்கள்தான். பின்னர் அவரவர் தம் பெருமைகளையும் சாதனைகளையும் நாசூக்காகச் சொல்லிக்கொண்டார்கள். அம்மாள் கோயிலில் அடி அழித்த கதையை மச்சாள் அரை மணிநேரமாக விவரிக்க அங்காலப்பக்கம் யவனம் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. இவர்கள் எப்படிக் கலியாணம் கட்டிக் கட்டிப்பிடிக்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் அப்போதே எனக்குள் இருந்தது. இப்போதுமே நான்கு பிள்ளைகளாகிய பின்னருங்கூட இவர்கள் எப்படிக் கட்டிப்பிடித்தார்கள் என்ற ஆச்சரியம் எனக்குள் இன்னமும் இருக்கிறது.
அன்றைக்கு மச்சாளும் அத்தானும் பேசியது அத்தனையையும் அட்சரம் பிசகாமல் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அதே சமயம் பக்கத்து பூத்தில் ஒரு சண்டை. கணவன் கொழும்பு லொட்ஜில் வெளிநாடு போவதற்காகக் காத்திருக்கிறார். மனைவி இப்போதே எப்படித் தன்னையும் பிள்ளையையும் கூப்பிடப்போறீங்கள் என்று கேட்கவும் பிரச்சனை முற்றிவிட்டது. இன்னொரு பூத்தில் சத்தமே வரவில்லை, ஆனால் ஐந்து நிமிடங்களில் ஒரு அக்கா அழுதுகொண்டு வெளியே வந்தார். என் மச்சாளுக்கு அது முதல் கோல் என்பதால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். காசு பற்றிப் பிரச்சனையில்லை. அப்போது நெட் போன் வந்துவிட்டது. அத்தோடு வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வீட்டுக்குத் தெரியாமல் பொம்பிளைகளுக்கு போன் பேசுவதற்கு என்றே காசு அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். இவர்கள் அந்தக் கொமுயூனிகேசனிலேயே எக்கவுண்ட் வைத்திருப்பார்கள். உண்டியல் வந்ததும் பெற்றுக்கொள்வார்கள். உண்டியல் எப்போது எவ்வளவு வரும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சுத்த முடியாது. பூத் என்று பெயரே ஒழிய, யார் என்ன பேசினாலும் எனக்குக் கேட்டதுபோலவே எல்லா விசயமும் கொமுயுனிகேசன்காரருக்கும் கேட்கும்தானே. இப்படி எத்தனைக் காதல், கலியாணம், காணிப்பிரச்சனை, கோயில் கும்பாபிசேசங்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். கொமுயூனிகேசனில் வேலை செய்த எவருமே ஏன் பெரு நாவல்களை எழுதி இலக்கியவாதிகள் ஆகவில்லை என்று இப்போதும் நான் யோசிப்பதுண்டு.
எண்பதுகளில் அப்பா டெலிகொம்மில் போட்ட அப்ளிகேசனின் பலன் இரண்டாயிரத்து மூன்றில்தான் கிடைக்கப்பெற்றது. எங்கள் வீட்டில் டெலிபோன் வந்தபோது நான் கொழும்புக்குப் போய்விட்டேன். ஆனாலும் புட்டுக் குழைக்கும்போது பிழைக்கும்போதோ, றொட்டிக்கு பச்சை மாவா அவித்த மாவா என்ற குழப்பங்கள் வரும்போதோ அம்மாவை அழைப்பெடுத்துக் கேட்பதற்கு அந்தத் தொலைபேசி உதவிசெய்தது. அப்போது என்னிடம் ஹட்சிசன் என்று ஒரு பசிலன் சைஸ் தாட்டான் அலைபேசி இருந்தது. பின்னர் அது எரிக்சன் T-10, நோக்கியா 3310, N95, Motorola என்று பரிணாம வளர்ச்சியில் சிறுத்து பின்னர் சிங்கப்பூரில் ஐபோன் வன்னிலிருந்து இன்று மக்ஸ்வரை பெருத்தது வேறுகதை.
ஆனால் எங்கள் யாழ்ப்பாண வீட்டின் டெலிகொம் தொலைபேசி அப்படியே மாறாமல் இருந்தது. அப்பாவைப் பொறுத்தவரை அது ஒரு கௌரவத்தின் அடையாளம். காண்பவர், போகிறவர் எல்லோரிடமும் 02122 என்று இலக்கத்தைச் சொல்லிக் கொடுக்காமல் அவர் விடுவதில்லை. அந்தத் தொலைபேசியை அவர் அனுமதியின்றி நாம் தொடமுடியாது. ஒரு கம்பளித்துணியால் அது போர்த்திவைக்கப்பட்டிருக்கும். பக்கத்திலேயே டெலிபோன் டிரக்டரியும் இருக்கும். அதில் அப்பாவின் நம்பரும் பெயரும் உள்ள பக்கம் நுனி மடிக்கப்பட்டு அவர் பெயர் அடிக்கோடிடப்பட்டிருக்கும். அடிக்கடி அந்தத் தொலைபேசியை அவர் ஓடிக்கலோனால் துடைப்பதுண்டு. அவர் சுத்தமாக வைத்திருந்த ஒரே பொருள் அதுதான் என்று நினைக்கிறேன். அவர் தன் வீட்டு அலுவலகத்திலிருந்து பிளான் கீறிக்கொண்டிருக்கும்போதோ அல்லது காணி அளக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதோ தொலைபேசி மணி அடித்தால் சில கணங்கள் தாமதித்து ஒரு எடுவையோடு அதை எடுத்துப் பேசுவதைக் கவனித்திருக்கிறேன். அதிலும் அந்தப்பக்கம் சிங்களவர் என்றால் இவர் ஆங்கிலமும் சிங்களமும் கலந்து பயங்கரப் படம் காட்டுவார். அதுவரை ஐயா என்று சொல்லிக்கொண்டிருந்த காணி அளக்கவந்தவர் உடனே சேர் என்று சொல்லிப் பேசத்தொடங்குவார். அப்பாவிடம் நிறைய மினுங்கல்கள் ஒட்டிய விசிட்டிங்கார்ட் இருந்தது. வீட்டு வாசலிலும் ஒழுங்கை முகப்பிலிருந்த மின் கம்பத்திலும் ‘உத்தரவு பெற்ற நில அளவையாளர்’ போர்டு தொங்கியது. எல்லாவற்றிலும் அந்தத் தொலைபேசி இலக்கம் தனியாக மின்னும். முன்வீட்டுப் புறொக்டர் குடும்பம் எப்போதோ அவுஸ்திரேலியா போய்விட்டது. வீட்டையும் விற்றுவிட்டார்கள். அதனால் எண்பதுகளில் புறொக்டருக்கு இருந்த செல்வாக்கு இரண்டாயிரங்களில் தனக்கு வந்திருப்பதாக அப்பா நினைத்திருக்கக்கூடும். அந்த வீட்டுத் தொலைபேசிதான் மணிமகுடம் தலை மாறியதற்கான அடையாளம். கிறவுண்.
அப்பா அந்த மணிமகுடத்தைத்தான் இப்போது மிஸ் பண்ணுகிறார். அவுஸ்திரேலியாவில் அவர் வெறுமனே ஒரு வயோதிபக் குடிமகன்தான். நடந்துபோகும்போது வழிப்போக்கர்கள் எவரும் அவரை இனங்கண்டு கொள்வதில்லை. அம்மாவும் அக்காவும் நானும் சொல்வதைச் சத்தம்போடாமல் கேட்டு, லங்காசிறியில் செத்தவீட்டுச் செய்திகளை வாசித்து, தெரிந்தவர்களுக்கு நேரங் கெட்ட நேரத்தில் அழைப்பெடுத்துப் பேசிக்கொண்டு, பேஸ்புக்கில் அழகாகத் தமிழ் பேசும் குழந்தைகளினதும், குருவாயூரப்பன் காணொலிகளையும் லைக் செய்வதாக நினைத்துத் தெரியாமல் ஷெயார் பண்ணும், எப்போது இந்தக் கொராணா தீரும், எப்போது ஊருக்குத் திரும்பலாம், வேலி அடைக்கலாம், வீட்டுப் பத்தியில் தூசு படிந்து கிடக்கும் அந்த மணி மகுடத்தை எப்போது திரும்பத் துடைத்துச் சூடிக்கொள்ளலாம் என்று ஏங்கும் சாதாரண யாழ்ப்பாணி அவர்.
நேற்று அக்கா அழைப்பு எடுத்தார்.
அந்த டெலிபோனுக்கு வீணாகக் காசு கட்டவேண்டியிருக்கு, இணைப்பைத் துண்டிக்கப்போகிறேன் என்று சொன்னார். அதற்கு அப்பாவின் கையெழுத்துடன் ஒரு கடிதம் வேண்டுமாம். ஏன், அவசரத்துக்கு பாவிக்கமாட்டிங்களா என்று கேட்டேன். ஏற்கனவே வயரைப் பிடுங்கிவிட்டதாகச் சொன்னார். அவர் சொல்வதும் நியாயம்தான். யார் இந்தக்காலத்தில் லாண்ட் லைனைப் பாவிக்கிறார்கள்? ஆனால் தான் இதை அப்பாவுக்குச் சொல்லமுடியாது, நீதான் சொல்லவேண்டும் என்று அவர் என்னை மாட்டிவிட்டார். எனக்கு இதனை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சாப்பிடும்போது தயங்கியபடியே சொன்னேன்.
“அந்த லாண்ட் லைனை கான்சல் பண்ணோணும் எண்டு அக்கா சொல்லுறா”
அப்பா எதிர்பார்க்கவேயில்லை.
“விசரா உனக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த கனக்சன் தெரியுமா? இனி விட்டா இந்தக்காலத்தில திருப்பி எடுக்கேலாது”
“இல்லை … ஒருத்தருமே பாவிக்கிறதில்லை, வீணாக்காசு போகுது எண்டு…”
“நான் திரும்பிப்போய்ப் பாவிப்பன், இப்பவே எனக்கு காணி அளக்கிறதுக்கு ஆக்கள் அதில கோல் பண்ணிக்கொண்டிருக்கிறாங்கள்… யாழ்ப்பாணத்தில இண்டைக்கு ஒரு ஆன சேவயர் இல்லை. நான்தான் போய் எல்லாத்தையும் அளந்து குடுக்கோணும்”
அப்பாவின் கைகள் நடுங்கியதில் சில புட்டுத்துகள்கள் தட்டில் விழுந்தன. எண்பது வயது மனுசன் திரும்பி யாழ்ப்பாணம் போய்க் காணி அளக்கவேண்டும் என்று நிக்குது. இது செய்தாலும் செய்யக்கூடியது. வழுக்கையாறு மாரியில் வழிந்து ஓடிய காலத்தில் லோங்சை மடிச்சு வெள்ளத்துக்குள்ள தியோடலைட்டை நிறுத்தி அதை அளந்த கடும்பிடி மனுசன் இது.
அம்மா தேவையில்லாமல் புகுந்து குட்டையைக் குழப்பினார்.
“ஒழுங்கா புட்டை குழைச்சு சாப்பிட முடியேல்ல, இவர் போய் காணி அளந்து பிளான் கீறப் போறார். நீ பேசாமல் ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டுவா, சைன் வைப்பார்”
அப்பா தலை குனிந்தபடியே சாப்பிடத் தொடங்கினார். நான் பேசாமல் டிவி பார்க்கத் தொடங்கினேன். அவர் கைகழுவிவிட்டு வந்தபோது நான் கையோடு பிரிண்ட் பண்ணி வைத்திருந்த கடிதத்தை அவரிடம் நீட்டினேன். கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்துகொண்டு கடிதத்தை வாசித்தார். கைகள் இப்போதும் நடுங்கிக்கொண்டிருந்தன.
“ஆறு மாசத்துக்கு டெம்பரரியா சஸ்பெண்ட் பண்ணி வச்சா என்ன?”
“அக்கா பிறகு மறந்திடுவா… திரும்ப பில் வரேக்கதான் ஞாபகம் வரும். ஒண்டடியா கான்சல் பண்ணுவம்”
நான் சொல்ல அப்பா எதுவுமே பேசாமல் கடிதத்தில் தன் கையெழுத்தை விசிறி விசிறிப் போட்டுக் கடைசியில் ஒரு குத்தும் போட்டார. இன்னமும் அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
“அக்காக்கு இதை அனுப்பி விடு. அதோட சந்திக் கரண்ட் போஸ்டில மாட்டியிருக்கிற என்ர போர்டில இந்த நம்பர்தான் கிடக்கு. அதைப் பெயிண்ட் அடிச்சு அழிச்சிட்டு அவவிண்ட ஹாண்ட்போன் நம்பரை எழுதிவிடச்சொல்லு. இல்லாட்டி காணி அளக்க வாறாக்கள் திரும்பிப்போயிடுவினம். நீதாம் சொல்லோணும். நான் சொன்னாக் கத்துவாள்.”
அவருடைய போர்டுகள் எல்லாம் கழட்டப்பட்டு பழைய கோழிக்கூட்டுக்குள் போடப்பட்டிருக்கின்றன என்ற தகவலை நான் அவருக்குச் சொல்லவில்லை. அந்தக் கடிதத்தை வாங்கி போனில் படம் பிடித்தேன். உருட்டி உருட்டிப் போட்டிருந்த அப்பாவின் கையெழுத்து பளிச்சென்று தெரிந்தது. முப்பத்தைந்து வருடங்களாக அந்தக் கையெழுத்தில் சின்னன் மாற்றத்தைக்கூட நான் கண்டதில்லை. எத்தனை பிளான்கள். எத்தனை லோன்கள். எத்தனை ரிப்போர்ட் கார்டுகள். எத்தனை செக்குகள். இப்போது அவருடைய பெருமைமிகு மணி மகுடத்தைத் தாரை வார்க்கும் ஒப்புதலுக்கான கையெழுத்து. பேசாமல் போட்டோவையும் அழித்து, கடிதத்தையும் கிழித்துப்போட்டுவிடுவோமா என்று கணம் யோசித்தேன். பின்னர் சுதாகரித்து கடிதத்தை அக்காவுக்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். அம்மா இன்னமும் குசினியில் எதையோ கழுவித் துடைத்துக்கொண்டிருந்தார். அப்பா பட்டரி தீர்ந்த ரிமோட்டில் சானல் மாற்றமுடியாமல் அதை மொத்திக்கொண்டிருந்தார். நான் புறப்படப்போகிறேன் என்று சொன்னதும் அவரும் எழுந்தார். வாசல்வரை என்னோடே வந்தார்.
“அக்காக்கு அனுப்பிட்டியா?”
நான் ஓம் என்று சொன்னபோது அவர் முகம் தொங்கியதைக் கண்டேன். நான் ‘வாறன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் காரடிக்கு நடந்தேன். பின்னால் அவர் என்னைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார் என்று தெரியும். அந்தப் புறொக்டர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து பின்னர் யாழ்ப்பாணம் திரும்பாமலேயே இறந்துபோனார் என்ற விசயம்வேறு ஞாபகத்தில் வந்து மண்டையைக் குடைந்தது. இன்று அப்பா தூங்கப்போவதில்லை. வைபரில் பளிச்சிடும் இலக்கங்களுக்கெல்லாம் தொலைபேசி எடுத்துப்பேசப்போகிறார். கனடாவுக்கு விடியும்வரை தூங்காமல் காத்திருந்து சொந்தக்காரர்களுக்கு எடுத்துக் கதைகள் சொல்லப்போகிறார். நித்திரை வராமல், லங்காசிறியில் செத்தவர்கள் யாராவது தனக்குத் தெரிந்தவரா என்று தேடிக் களைப்பார்.
யாராவது எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், வயர் பிடுங்கிக் கிடக்கும் அவரது யாழ்ப்பாண வீட்டுத் தொலைபேசிக்கும் அவர் ஓயாமல் அடிக்கவுங்கூடும்.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட