Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் - ஒரு கண்ணோட்டம்





அண்மையில் பங்கு கொண்ட ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமெல் தாவூத்தினால் எழுதப்பட்ட "மறுவிசாரணை" மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இது அல்பேர்ட் காம்யூவின் அந்நியன் நாவலின் எதிரொலியாக எழுதப்பட்டது எனும் கருத்து எல்லோரிடமும் நிலவியது. கலந்துரையாடலில் பேசிய எழுத்தாளர் ஜேகே இந்தக் கருத்தை உடைத்துப் போட்டார். ஒரு நல்ல எழுத்து, அதனின்றும் அடுத்த சிந்தனைக்கு இன்னொரு எழுத்தாளரை இட்டுச் செல்லும், அந்நியனின் தொடர்ச்சியே மறுவிசாரணை நாவல் அன்றி, அதற்கு எதிராக எழுதப்பட்டதல்ல எனும் தெளிவான விளக்கம் ஜேகேயால் வைக்கப்பட்டது. ஜேகேயின் எழுத்துக்களில் வெளிப்படும் நுண்மாண் நுழைபுலம் கண்டு நான் அதிசயித்ததுண்டு. இலக்கியச் சந்திப்பிலும் சரியான கோணத்தில் சிந்திக்கும் இவரின் திறனிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

ஆங்கில அறிவியல் எழுத்தாளர் டக்ளஸ் அடம்ஸின் ‘The Hitchhiker’s Giude To The Galaxy’ என்ற நாவலின் பாதிப்பால், தமிழில் அங்கதச் சுவையுடன் எழுதப்பட்ட அறிவியல் புனைவு "கந்தசாமியும் கலக்சியும்".  நான் என்றுமே ஜேகேயின் எழுத்துக்கு இரசிகை. சிறுகதையாகட்டும், கட்டுரையாகட்டும், அல்லது நாவலாகட்டும், தொடக்கத்திலிருந்து முடிவுவரை எழுத்தின் ஓட்டமும், கருத்தின் ஆழமும், ஒரு விடயத்துடன் இன்னொன்றை இணைக்கும் உத்தியும், விவேகம் நிரம்பிய எள்ளலுமென வாசகரை வசமாக்கிவிடும். வாசித்தபின்னும் பல மணி நேரம் அதே சுழலுக்குள் மனதை வாரிச்சென்று வைத்திருக்கும். ஒரு அறிவியல் புனைவை இந்த எல்லா அம்சங்களும் கொண்டதாகப் படைத்துத் தொய்வின்றிய வாசிப்புக்கும், வித்தியாசமான அனுபவ மகிழ்வுக்கும் உள்ளாக்கிய எழுத்தாளனை எங்கனம் பாராட்ட?

கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவல் விஞ்ஞானம், புனைவு, நனைவிடை தோய்தல், அரசியல், தத்துவம், ஆன்மிகம் இவையெல்லாம் ஒருமித்துப் பதமாய்ச் சமைத்து, நகைச்சுவை என்னும் உப்பினால் சுவை எழுப்பி அளிக்கப்பட்ட பெரு விருந்து. உண்ட பின்னும் மீந்து நிற்கும் நாக்கின் சுவையாய், கையின் வாசனையாய் நினைவுகளின் மயக்கத்தில் நெடுநேரம் தொலைய வைக்கிறது. சில காலம் கழித்து மீண்டும் வாசிக்கையில், அறியப்படாத இன்னொரு சுவையையும், தேடலையும் அளித்து நிற்கிறது.

எக்காலத்துக்குமுரியதாக ஒரு படைப்பின் எழுத்தோட்டத்தை அமைக்க முடியுமானால் அது எழுத்தாளரின் பெரு வெற்றி. இந்தக் கருத்தைக்கூட தி. ஜானகிராமன் கதைகள் பற்றி ஜேகே பகிர்ந்து,
நான் கேட்டுள்ளேன். இத்திறன் ஜேகே எனும் எழுத்தாளருக்கும் கைவரப்பெற்றது. "கந்தசாமியும் கலக்சியும்", இன்னும் பல வருடங்கள் கழித்து வாசித்தாலும் இதே புத்துணர்வை அளிக்கக்கூடியது. இது கரும்பொருள் பற்றி என்னைக் கற்பனை செய்ய வைத்தது. அறிவுக்கு எட்டாத பிரபஞ்சம் பற்றி ஓர் ஆன்மீக விளக்கம் கேட்டது போல் விதிர்க்க வைத்தது. மஹாவம்சம் பற்றி மேலும் அறியத் தூண்டியது.
தொண்ணூறுகளின் பாடசாலை நாட்களுக்கு என் உள்ளத்தைத் தூக்கிச் சென்றது. போர் என்ற வடுவின்
மீது புன்னகைத்து நிற்கக்கூடியதாக, நையாண்டி எழுத்தால் நனைவிடை தோய்தலை நயமாக்கியது.
என் பிரதேசத்து மொழிவழக்கின் இனிமையில் இதயத்தை ஈரப்படுத்திற்று. எல்லாவற்றிற்கும் மேலாக
இந்த வாழ்க்கையின் அபத்தம் பற்றி எண்ணுந்தோறும் எள்ளவும், அதிரவும் வைத்தது. முதல் பகுதியான "பூமி அழிதல் படலம்", வாழ்க்கை எனும் மாயையில் நாம் செய்யும் அபத்தங்களை நக்கல் கூட்டிச் சொல்கிறது. இந்த அபத்தங்களிலிருந்து வேறுபட்டு "ஒரு மாதிரியான ஆளாக" கந்தசாமி போன்ற சாமானியர்களால் கருதப்படும் சுமந்திரன், முடிவில் எல்லாவற்றையும் ஆட்டிவைக்கும் "எலிதாசனாக" சித்திரிக்கப்படுவது தேர்ந்த முடிச்சு. தவிர, "சுமந்திரன்" என்னும் பெயருக்குள் இருக்கும் சூட்சுமத்தையும் விடுப்பு மீனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தோன்றுகிறது. இவ்வாறு எத்தனையோ பூடகங்கள்! "தப்பியோடும் படலம்", "விடை காண் படலம்", "கேள்வி தேடும் படலம்" ஆகிய பின்னைய
பகுதிகள் பிரபஞ்சத்தில் எதோ ஒரு கற்பனைக் கலத்தில் எம்மையும் பயணிக்க விட்டு, எம்  அபத்தங்களைக் கொஞ்சம் விரிவாக அசைபோட்டு விழிக்க வைக்கிறது.




இந்த நாவல் உள்ளர்த்தங்களுடன் நகையாடும் சம்பவங்களில் சில உதாரணங்கள்:

● குப்பைத் தொட்டிகளிலேயே பூமிக்கிரகத்தின் அத்தனை புரட்சியும், எழுச்சியும், வீழ்ச்சியும் இடம்பெறுகின்றன.

● மனிதன் கூர்ப்படைந்து ஆறறிவு உள்ள விலங்காக ஆகியதைப் பூமியிலுள்ளவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடித்தவரையும் கல்லால் அடித்துக் கொல்லும் லூசுக் கூட்டம் இவர்கள். - இதுவே இயேசு, கலிலியோ போன்ற சரியானதைச் சொல்பவர்களுக்கு இங்கு நடக்கிறது.

● எப்போதோ வாழ்ந்த ஞானிகள் வேதங்களில் எதிர்காலங்களைக் கணிப்பிட்டுக் கூறியமை.

● எல்லாப் புள்ளிகளும் எங்கேயோ இணையும் மெய்ம்மை.

● திராவிட வம்சாவளியினர்களான சோமரத்னவின் வம்சத்தினர் - இங்கு ஜேகேயின் படலை
இணையத் தளத்தில் செப் 16, 2020 இல் எழுதப்பட்ட "ஆதிக்குடிகள்" என்ற  அருமையான பதிவை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன். இதில் இவ்வாறு வருகிறது: 

"மரபணு ஆய்வுகளின்படி ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையான ஒற்றுமை ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையைவிட அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது"

● பிரேமதாச புலிக்கு ஆயுதம் கொடுத்தது, புலி மகிந்த ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது போன்ற அரசியல் உண்மைகள்.

● பூமி அழியத் தொடங்கிய தருணத்து விபரிப்பில், அப்படியே எமது போர்க்காலப் பதட்டங்களையும், இடப்பெயர்வு நிகழ்வுகளையும் மனக்கண் முன்னே காட்டியது.

● சோதிலிங்கம், குமரன் என்ற இரு விஞ்ஞானிகள் பற்றிய விபரிப்பு - இதனைத் தொண்ணூறுகளில் பௌதீகவியல் பாடத்திற்கு யாழில் ரியூசன் போனவர்கள் விழுந்துகட்டி இரசிப்பார்கள்.

● "துவாய்" என்ற சாமானின் பெறுமதி.

● மிகச்சிறந்த நூல்கள் என்று பாராட்டுப் பெற்றவை என்றுமே வாசிக்கப்படாத உண்மை.

● சூபிக் கிரகத்தின் சர்வதேச விருது பெற்ற சிறுகதையும், பூமிக் கிரகத்தினருக்கான அதன் மொழிபெயர்ப்பும்.

● தேவையே இல்லாத பூமி மனிதர்களின் பேச்சு. இதனாலேயே மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு.

● ஆராய்ச்சிகள் பற்றிய அபத்தமும், எல்லோரும் எப்போதும் எதையோ தொலைந்ததுபோல் தேடிக்கொண்டிருக்கும் தன்மையும், அதில் ஒளிந்திருக்கும் உண்மையும்.

● கடவுளர் பற்றிய அபத்தம்.

● பொதுநலன் என்று திரிபவர்களும் ஏதோ ஒருவிதத்தில் சுயநலத்துடன் செயற்படும் பெரு உண்மை.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். விடையைக் கண்டுபிடித்துப் பின் கேள்வியைத் தேடுவதாகக் கொக்கி போடுவதிலேயே நாவலின் விறுவிறுப்பை அறியலாம். கந்தசாமியாகவே கற்பனையில் எம்மைப் பயணப்பட வைத்ததுவும், அங்கங்கே சிறிது நேரம் புத்தகத்தை மடியில் வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்து பின் பெருமூச்சு விட வைத்ததுவும், எங்கும் நீக்கமற நிறைந்த நகைச்சுவையில், நிறைய ஞாபகங்களையும் தகவல்களையும் எடுத்துத் தந்ததுவுமெனச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் "கந்தசாமியும் கலக்சியும்" என்பதைச் சரியாக நயக்க பிரபஞ்சத்துப் பிரகராதியைத்தான் உதவிக்கு அழைக்க வேண்டும்!

நாவலை வாசித்துச் செல்லும் போது முதலில் விடை என்ன என்றும், பின்னர் கேள்வி என்ன என்றும் மண்டை அழிச்சாட்டியம் பண்ணியது. ஆனால் அந்தக் கேள்வி என்ன என்று இப்போதும் மாய்ந்து
ஓயவில்லை."இதுவும் கடந்து போகும்" என வாழா இருக்கவும் முடியவில்லை.

அந்தக் கேள்விதான் என்ன? இதன் கேள்வி தேடும் படலத்திலிருந்து இன்னொரு நல்ல நாவல் உருவாகலாம். மீண்டும் ஜேகேயிடமிருந்தோ, அல்லது இன்னொரு எழுத்தாளரிடமிருந்தோ உருவாகலாம். உருவாக வேண்டும். ஒரு நல்ல நாவல், அதன் தொடர்ச்சியாக அதனின்றும் அடுத்த ஒரு சிந்தனைக்கு இன்னொரு எழுத்தாளனை இட்டுச் செல்லும்!

எவர் அறிவார்? எப்பவோ முடிந்த காரியம்!

- சுபாசிகன்
ஈழத்து நாவல் இலக்கியச் சிறப்பிதழ், ஜீவநதி வெளியீடு

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட