Skip to main content

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 1



“காதல் உங்களைப் பூமியிலிருந்து தூரத்தே தள்ளி வைக்கும் வல்லமை கொண்டது. வெற்றியிலும் தோல்வியிலும்"


மகிழ்

தூக்கத்தில் எதேச்சையாக வலது பக்கம் புரண்டு ஏப்ரிலை அணைக்க முயன்றபோதுதான் இரவு அவள் என்னோடு படுக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. ‘ஃபக்’ என்று எரிச்சலாக முணுமுணுத்தபடி மறுபடியும் திரும்பிப்படுத்தேன். ம்ஹூம். தூக்கம் கலைந்துவிட்டது. உருண்டு சென்று கட்டில் கரை ஸ்டூலில் இருந்த செல்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை மூன்றரை மணி. ஏப்ரிலிடமிருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. ராங்கிக்காரி அனுப்பமாட்டாள் என்று தெரியும். தலை விண்ணென்று வலித்தது. முந்தைய இரவில் இரண்டாவது வைன் போத்தலுக்குப் போயிருக்கவேண்டாம். ஏப்ரிலோடு அப்படிப் பேசியிருக்கவேண்டாம். அவள் கத்தியபோது ஏட்டிக்குப் போட்டியாகக் கத்தியிருக்கவேண்டாம். அவளும் என்னை அப்படிப் பேசியிருக்கவேண்டியதில்லை. எல்லாவற்றிலும் ஏன் முரண்டு பிடிக்கவேண்டும்? முப்பத்தொன்பது வயதில் ஜசிண்டா ஆர்டன் பொறுமையாக ஒரு நாட்டையே ஆளும்போது என்னால் ஏன் இந்த ஏப்ரிலைச் சமாளிக்க முடியாமலிருக்கிறது? சரி நான்தான் அப்படி என்றால் கிழவிக்கு நாற்பத்திரண்டு வயது ஆகிறது அல்லவா? கொஞ்சமாவது பக்குவம் வேண்டாம்? முட்டாள். இந்த முட்டாளை மாத்திரம் காதலிக்காவிட்டால் என் வாழ்க்கை எத்தனை இதமாக இருந்திருக்கும்?
 
“Oh … I miss my bachelor life”
 
தலையைப்பிடித்துக்கொண்டே எழுந்து அமர்ந்தேன். அறைக்கதவை யாரோ கட கடவென மெதுவாகத் தட்டியது கேட்டது. கரடிதான். நான் முழித்துவிட்டது கரடிக்கு நிச்சயம் மணந்திருக்கும். தொடர்ந்தும் கட்டிலில் கிடக்கப்பிடிக்காமல் எழுந்துபோய்க் கதவைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல கரடி என்மேல் பாய்ந்தாள். ‘ஏய் கரடிக்குட்டி’ என்றபடி அப்படியே அவளைத் தூக்கிக் கொஞ்சினேன். நெற்றி, கன்னம், மூக்கு, நாடி என்று இடம்விடாது அவள் என்னை நக்க ஆரம்பித்தாள். தெரியாத்தனமாக ‘போதும், விடு’ என்று சொல்லிவிட்டேன். அவள் மேலும் ஆவலுடன் காதுகளையும் விடாமல் கவ்வினாள். ‘பரவாயில்லை உனக்காவது என்னிடம் பாசம் இருக்கிறதே’ என்றபடி அவளைக் கஷ்டப்பட்டு விடுவித்து லைட்டைப்போட்டு ஹோலுக்கு வந்தேன். கரடிக்கும் குடிக்க அவளது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டு கேற்றிலில் நீரை நிரப்பிக் கொதிக்கவைத்தேன். ‘ஸ்ஸ்ஸ்’ என்று கேற்றிலின் சத்தமும் ‘கிளக் கிளக் கிளக்’ என்று கரடி நீர் குடிக்கும் சத்தமும் அதற்கமைய அவளின் வாலினது சுழற்சியும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைந்து நீண்ட இந்த இரவை முடித்துவைக்கப் போராடியதுபோல தோன்றியது.
 
நான் குசினி பெஞ்சில் சாய்ந்தபடி நின்று கரடியையே பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அவளுக்குத் தாகமெடுத்ததா அல்லது என்னை மகிழ்விப்பதற்காகக் குடிக்கிறாளா என்பதை அறியமுடியவில்லை. மண்டிகூட விடாமல் அவள் பாத்திரத்தைக் கழுவித்துடைத்துக்கொண்டிருந்தாள். இந்தக் கரடி வீட்டுக்குள் நுழைந்த கதையை நினைக்கவே சிரிப்பு வந்தது. இவளை இங்கே கொண்டுவர எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது? எத்தனை மறுப்புகள், சண்டைகள், வாக்குவாதங்கள். ஒருவழியாக சென்றவருடந்தான் நாம் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம் என்ற முடிவையே எடுக்கமுடிந்தது.
 
நாம் என்று சொல்லிவிட்டேனே தவிர ஏப்ரிலுக்கு அதில் துண்டற இஷ்டம் இருக்கவில்லை.

பொதுவாக சிங்கப்பூரர்கள் எவருக்குமே நாய்களைப் பிடிப்பதில்லை. அதிலும் சிங்கப்பூரின் சீன இனத்துப் பெண்கள் அந்த நாடு போட்டு வைத்திருக்கும் சீரான நடைபாதைகளில், காதுகளில் இயர்போன் கொழுவிக்கொண்டு, செல்பேசித்திரையைப் பார்த்தபடி இரண்டு கைகளாலும் டைப் பண்ணியபடியே நடப்பவர்கள். அவர்களது வாழ்க்கையில் எந்த நாய்களுக்குமே இடமிருப்பதில்லை. கருப்பையிலிருந்தே படிப்பும் வீட்டுப்பாடமும் டியூசனும் அவர்களுக்கு ஆரம்பித்துவிடுகின்றன. இடையறாமல் படிப்பதால் ஆறாவது வயதிலேயே அவர்கள் கண்களில் கண்ணாடி மாட்டிவிடுவார்கள். அவர்களது பதின்மங்களும் பாடசாலை, பல்கலைக்கழகம், பரீட்சை, அசைன்மெண்ட் என்று படிப்பிலேயே முழுதாகக் கரைந்துவிடும். ஆண்களாவது இடைநடுவில் இராணுவ சேவைக்கு இரண்டு வருடங்கள் போய்வரவேண்டும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. படித்து முடித்ததுமே வேலை. வேலையென்றால் குறைந்தது தினமும் பத்து மணித்தியாலங்களாவது இருக்கும். இதில் வீட்டிலிருந்து செய்யும் வேலையும் வார இறுதி அவசர வேலைகளும் சேர்த்தியில்லை. இளவயதிலேயே பணிபுரிய ஆரம்பிப்பதால் அலுவலகங்களில் சக வயது ஆண்களுக்கு அவர்கள் எப்போதுமே மேலதிகாரிகளாக இருப்பார்கள். கொஞ்சம் ராங்கிக்காரிகள். புத்திசாலிகள். தமக்கு இன்னதுதான் வேண்டும் என்பதில் தெளிவானவர்கள். பணத்தை நிறையவே சேமிப்பார்கள். தம் மதிப்பை உயர்த்தி, பிடித்த பெறுமதியான காதலனைப் பொறுமையாகத் தேடிக் கண்டடைவார்கள். முந்நூறு பேரை அழைத்து, தம் நண்பர்கள் செய்ததுபோலவே அட்சரம் பிசகாமல் அலங்காரம், உடை, புகைப்படங்கள், வீடியோக்கள், உணவு, நடனம் எனக் கொண்டாட்டமாக ஒரு திருமணத்தை முடித்து, ஆளுக்கு இருநூறு என வந்தவர்களிடம் மொத்தமாக அறுபதாயிரம் டொலர்களை அறவிட்டு, தம் திருமண ஐந்தொகையில் வங்கி மீதி இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். பின்னர் இருவருமாகச் சேர்ந்து முதலில் சாதாரண அரச வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீடு வாங்குவார்கள். அப்புறம் சில வருடங்களில் அதை விற்றுவிட்டு நீச்சல் குளத்துடன்கூடிய தனியார் கொண்டமோனியத்தில் பிளாட் வாங்குவார்கள். சொகுசு மாடியில் வசித்துக்கொண்டு பொதுப்போக்குவரத்தில் போய்வரமுடியுமா என்ன? உடனேயே சொகுசுக் கார் ஒன்றையும் வாங்குவார்கள். அதிகாலையிலேயே கொண்டமோனியத்திலிருக்கும் ஜிம்முக்குப் போவார்கள். அப்புறம் வேலை. வேலை முடித்து வரும் வழியிலே எங்காவது உணவகத் திடல்களில் இரவுச் சாப்பாடு. சாப்பாடு முடித்து வீடு திரும்புகையில் காரிலேயே சண்டை ஆரம்பித்துவிடும். அற்ப விசயத்துக்காகத்தான் அது இருக்கும். கார்பார்க்கிலும் சண்டை தொடரும். லிப்டில் கொஞ்சம் அமைதியாகி மறுபடியும் வீட்டினுள் நுழைந்ததும் சண்டை. வாக்குவாதம் அதிகமானால் அவள் பிகினியை அணிந்துகொண்டு ஓடிப்போய் கீழே இருக்கும் நீச்சல் தடாகத்தில் குதித்துவிடுவாள். அவன் பிளேஸ்டேசனில் ஐசிஸ் தீவிரவாதிகளை இனங்கண்டு சுட்டுப்பொசுக்கி அப்பாவிப் பொதுமக்களை மீட்கும் வேலையில் இறங்க ஆரம்பிப்பான். வாரத்தில் ஒருநாள் அவர்கள் தத்தமது நண்பர்களோடு சென்று பட்மிண்டன் விளையாடுவார்கள். அப்புறம் வார இறுதியானால் நிச்சயம் ஒரு மேக்கப் அப்பொய்ன்மெண்ட் இருக்கும். ஒப்பனைகளில் சிங்கப்பூர்ப் பெண்கள் மிகக் கவனமாக இருப்பார்கள். வெள்ளையைத் தவிர மீதி எந்த நிறத்தையும் அவர்கள் மதிப்பதேயில்லை. அதனால் தம் மஞ்சள் மேனியை வெண்மையாக்குவதற்குச் சொத்தையே எழுதிக்கொடுக்கத் தயங்கமாட்டார்கள். காலையில் கட்டிலிலிருந்து எழும்போதுகூட அப்போதுதான் பியூட்டி பார்லரிலிருந்து திரும்பிய பூவரசம்பூபோல அத்தனை சிங்கப்பூரின் சீனத்துப் பெண்களும் பிரஷ்ஷாக இருப்பார்கள். காரணம் ஒவ்வொரு வாரமும் அவர்கள் தம் அழகுக்குச் செலவழிக்கும் பணம். அது தலைமயிராக இருக்கலாம். முகத்துக்காக இருக்கலாம். நகங்களைச் சுத்தம் செய்து மினுக்குவதற்காக இருக்கலாம். கால், கை, கமர்கட்டு மயிர்களை மழிப்பதற்காக இருக்கலாம். ஏதோ ஒன்று. எதுவுமே இல்லையென்றால் அவர்களை ஷொப்பிங் அழைத்துச்செல்லவேண்டும். சின்னச்சின்ன கட்ஜட்டுகளிலிருந்து பெறுமதியான லூய்வுட்டன் கைப்பைகள்வரை வாங்கிக்கொடுக்கவேண்டும். வாங்குவது எல்லாமே தள்ளுபடியிலும் இருத்தல்வேண்டும். இப்படியே சில வருடங்கள் ஓடிவிட ஒரு முப்பத்தைந்து முப்பத்தாறு வயதில் அவர்களுக்குத் திடீரென்று தாய்மை உணர்வு பீறிட ஆரம்பிக்கும். ‘எனக்கு ஒரு குழந்தை வேண்டும்’ என்று சண்டை பிடிப்பார்கள். அது தாய்மை உணர்வா அல்லது அலுவலகத்து நண்பிகளின் குழந்தைகள் பற்றிய பேச்சுகளால் ஏற்பட்ட அழுத்தமா என்பது ஆய்வுக்குரியது. சரி, உனக்குக் குழந்தை வேண்டும் என்றால், ஏன் வேண்டும், எப்போது வேண்டும், எப்படி வளர்க்கப்போகிறோம் என்று இன்ன பிற பிரச்சனைகளை ஆராயவேண்டும் அல்லவா? ம்ஹூம். அந்தக் கதையே கிடையாது. ஒன்று வேண்டும் என்றால் வேண்டும்தான். மூச்சுக்காட்டாமல் குழந்தையைப் பெறும் வழியைப் பார்க்கவேண்டியதுதான். ஆனால் குழந்தை என்ன வெண்டிங் மெசினில் காசு போட்டால் விழுகின்ற சோடாப்போத்திலா? அதுவும் முப்பத்தாறு வயதில். இருவரும் கிடந்து முக்குவார்கள். திடீரென்று ஒரு மூடுக்காக வார இறுதிகளில் புகீடுக்கும் பாலிக்கும் போய்வருவார்கள். ஒவ்வொரு நாள் காலையும் அவள் பாத்ரூமிலிருந்து கோபத்திலும் இயலாமையிலும் ஹிஸ்டீரியா வந்ததுபோலக் கத்துவாள். அவன்தான் பாவம். இத்தனை நாள் சிவனேயென்று பிளேஸ்டேசனில் ஐசிஸை எதிர்கொண்டவனை நிஜமான கலிபேட்டில் கொண்டுபோய் நிறுத்தினால் என்ன செய்வான்? நாளாக நாளாக வீட்டில் சண்டை ஆரம்பிக்கும். அடிக்கடி அவள் நீச்சல் குளத்தில் போய்க் குதிப்பாள். இதோ பிரிகிறேன் என்று வீட்டைவிட்டு வெளியேறுவாள். ஆனால் அப்படியெல்லாம் இலகுவில் பிரிந்துவிடமுடியாது. இந்த வசதி வாழ்க்கைக்கு இரண்டுபேரின் வருமானமே தகதிமியாக இருக்கும்போது தனியாக எப்படி தவிலடிக்கமுடியும்? எங்கே போவது? மீண்டும் திரும்பிவரத்தான் வேண்டும். அப்புறம் போலிக்காசுகளை வாங்கி இரும்பு பரலினுள் போட்டு எரிப்பார்கள். ஸ்பா சிகிச்சை செய்வார்கள். மகப்பேறு வைத்தியரிடம் செல்வார்கள். இப்படி அந்த ஊர் சாம, பேத, தான, தண்டங்களை எல்லாம் செய்து பார்த்ததில் ஒருநாள் காலை அவளுக்கு பாத்ரூமில் இரு கோடுகள் தெரிய, அவள் நிம்மதியில் வீறிட்டு அலற, அவன் மீடிறனில் மாற்றத்தை உணர்ந்து ஓடிவந்து இவளை அப்படியே அலேக்காகத் தூக்க, இருவரும் கட்டிப்பிடித்துக் கதறுவார்கள். பின்னர் என்ன? வழமைபோல கர்ப்பகாலம். குழந்தை வளர்ப்புக்குரிய தள்ளுபடிக் கொள்வனவுகள். பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைப்பொறுத்து, குழந்தைகளுக்கு என்னவோ வேறு நிறங்களே பிடிக்காததுபோல, வீட்டையே நீலமாகவே பிங்காகவோ மாற்றிவிடுவார்கள். பின்னர் பிடித்த பன்றி ராசியிலும் எட்டாம் இலக்கத்தில் வரக்கூடிய தேதியிலும் சிசேரியன் செய்வார்கள். கொஞ்சநாள் இருவரும் வீட்டிலிருந்து குழந்தையை வளர்ப்பார்கள். இரண்டாம் மாதமே அவள் ஜிம்முக்குப் போக ஆரம்பிப்பாள். மூன்றாவது மாதம் வேலை ஆரம்பிக்கும். பின்னர் வழமையான குழந்தை வளர்ப்புப் பிரச்சனைகள் தொடங்கிவிடும். காலையில் யார் குழந்தையைக் காப்பகத்தில் விடுவது? மாலையில் யார் போய் வாங்குவது? நாந்தானே கஷ்டப்பட்டுப் பெற்றேன், உனக்கு வளர்ப்பதற்கென்ன? யார் நப்பி மாற்றுவது? யார் பால் கரைப்பது? நடுச்சாமத்தில் குழந்தை அழுதால் யார் எழுந்துபோவது? வீட்டுக்கு ஒரு பணியாளர் வேண்டுமா? அப்படியென்றால் எங்கிருந்து அழைப்பது? வியற்நாமியா? தாய்லாந்துக்காரியா? பிலிப்பினோவா? ஶ்ரீலங்கனா? அதற்குத் தனியாக மாசம் எண்ணூறு டொலரை அழ முடியுமா? வருபவள் இளம் பெண் என்றால் கணவனை நம்பலாமா? பெலிசியாவின் புருசன் செய்த வேலையை யார் மறக்கக்கூடும்? முகமே அறியாத இன்னமுமே நியமிக்கப்படாத அந்த வீட்டுப்பணிப்பெண்ணோடு கணவனுக்கு உறவு என்று சந்தேகம் ஏற்படும். தினம் தினம் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள், பக்கத்து பிளாட்டுகள் தம் டிவி சத்தத்தைக் கூட்டி வைக்கும் நிலை வரும். மலிவான பொருட்கள் உடைக்கப்படும். மறுபடியும் அவள் நீச்சல் குளத்தில் போய் விழுவாள். குழந்தை தனியாகக் கிடந்து அழ இவன் காதில் ஹெட்போன் மாட்டுவான். அவள் வந்து இவன் ஹெட்போனைப் பிடுங்கி எறிவாள். அடிபடுவார்கள். அழுகைகளின் மீடிறன் கூடும். மன அழுத்தங்கள் கூடும். இடையிடையே அரவணைப்புகள், எங்கோ ஒரு புள்ளியில் இச்சைகள் கூடிவரும்போது கலவி, மறுபடியும் குழந்தையின் அழுகை, சண்டை, சில்லெடுப்பு, விழியினில், மொழியினில், நடையினில், உடையினில், அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்புத்தான் இந்தச் சிங்கப்பூரியனது பிறப்பு.
 
மூச்சிரைக்கிறது அல்லவா? அந்த நாட்டில் சாதாரண வாழ்க்கையே இப்படி நாய்ப்பிழைப்பாக இருக்கும் வண்டவாளத்தில் யாராவது எக்ஸ்றாவாக ஒரு நாயைக் கொண்டுவந்து நடுவீட்டில் விடுவார்களா என்ன?

நன்றாகவே தெரியும். நான் இப்படி யோசிப்பது அறிந்தால் சில சிங்கப்பூர்வாசிகள் இந்த நடுச்சாமத்திலும் வந்து என் வீட்டுக் கதவைத் தட்டக்கூடும். உனக்கென்ன தெரியும் எங்கள் நாட்டைப்பற்றி? லீ குவான் யூ எனும் மாமனிதன் செதுக்கிய நாடு அல்லவா இது. எங்களூர்ப் பெண்களைப்பற்றி உனக்கு அப்படி என்னதான் விளங்கும்? ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு எண்ணங்கள். சிந்தனைகள். அவர்களை எப்படி சும்மா ஒரே மூச்சிலே நீ பொதுமைப்படுத்தலாம்? என்றெல்லாம் என் கழுத்துக்கொலரைப் பிடிக்க முயலலாம். ஐ நோ பஃக்கர்ஸ். ஒக்கம ஐ நோ. ஆ ஊ என்றால் அலவாங்கோடு வந்துவிடுவீர்கள் என்று தெரியும். எல்லோரும் ஓரமாக அதைக்கொண்டுபோய்க் குத்திவிட்டு, நீங்களே ஏறிக்குந்துங்கள். நான் சிங்கப்பூர்க்காரியோடே இரண்டு வருடங்களாக குடும்பம் நடத்தும் ஒருத்தன். என்னோடு நீங்கள் வம்புக்கு வராதீர்கள். அதுவும் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எவரும் மூச்சுக்காட்டக்கூடாது. தினமும் பதினைந்து மணித்தியாலம் முதலாளிக்குப் பல்லைக்காட்டிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு செம்பவாங் கோயிலில் போய் ஓசியாக பொங்கலும் புளியோதரையும் சாப்பிட்டு, சனிக்கிழமை இரவு பிலிப்பினோவின் கடையில் குறைந்த விலைக்கு ரெமிமார்ட்டின் வாங்கிக் குடித்து, ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தியிலோ காயத்திரியிலோ மட்டன் வறுவலும் நண்டுக்குழம்பும் சாப்பிட்டு, அவ்வப்போது அம்மா அப்பாவை அழைத்துவந்து பறவைகள் பார்க்கில் கிளியோடு நின்று படமெடுத்துவிட்டு, ஜெயம் ரவியின் படத்தைக்கூட யீசூனில் முதல்நாள் ஷோ போய்ப்பார்த்து, சில நாட்கள் சிலோன் கிளபுக்கு சென்று தமிழ் கரியோக்கி பாடி, நான்கு வருடங்கள் கழித்து பி.ஆர் எடுத்து, கொஞ்சம் காசு சேர்த்தவுடன் வீடு ஒன்றைத் தேடி, ஹோலையும் அறை என்று கணக்கிலெடுத்து நாலு ரூம் வீடு பார்த்துவைத்திருக்கிறேன் என்று நாலு பேருக்குக் கதைவிட்டு, ஊரில் 'மாப்பிள்ளை சிங்கப்பூரா’ என்று தயங்கும் பெண் வீட்டார்களிடம் இல்லை விரைவிலேயே அவர் அமெரிக்காவுக்கோ அவுஸ்திரேலியாவுக்கோ மைகிரேட் பண்ணப்போகிறார் என்று அடித்துவிட்டு, அங்கிருந்து ஒரு குத்து விளக்கையும் கூட்டிவந்து, தினமும் அது சமைக்க நீ சாப்பிட, நீ சாப்பிட அது சமைக்க, வண்டி குண்டியாவும் குண்டி வண்டியாவும் தலைகீழாய் மாற, அவ்வப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்கள், லிட்டில் இந்தியாவில் ஆனந்த பவன், சென்னைத் தாலி, அட்சய திருதி வந்தால் ஐஞ்சு மஞ்சாடியில் ஒரு காதுக்குத்தி, ஆறாவது மாசமே குத்துவிளக்கு மாசமாகி, பின்னர் குழந்தை, இன்னொரு குழந்தை, குழந்தைகளின் படிப்பே கதியாகக் கிடந்து, விடுமுறை வந்தால் முஸ்தபாவை வழித்துத் துடைத்து எடுத்துக்கொண்டு பிறந்த ஊருக்கு ஒவ்வொரு வருடமும் போய் வந்து, எந்நேரமும் பிள்ளை எப்படி வளருமோ என்று டென்சனாகி, அது யாராவது சீனத்தையோ மலாயையோ கூட்டிவந்துவிடுமோ என்று டென்சனாகி, லெஸ்பியனா கேயா என்று டென்சனாகி, சிங்கப்பூரின் அரசியல் அறியாது, எஸ்பிளனேடில் இடம்பெறும் நாடகங்கள் தெரியாது, அறுபது காசு தமிழ்முரசையும் வசந்தத்தையும் சுப்பர் சிங்கரையும் குக் வித் கோமாளிகளையும் விட்டால் வேறெதையுமே ரசிக்கத்தெரியாது, உள்ளூரில் நிகழும் எந்த மண்ணுமே தெரியாது, மண்டரினிலும் மலாயிலும் சிங்கிள் சொல்லு தெரியாது, மலிவாக சாமான் வாங்கப்போகும் ஜேபியை விட்டால் சுற்றிவர இருக்கும் நாடுகள் எவற்றினது பெயரும் தெரியாது, பதினைந்து பனங்கொட்டைகளைத் தவிர்த்து உட்கார்ந்து ஆற அமரப் பேசுவதற்கு உள்ளூரில் ஆன நண்பர்கள் கிடையாது என்று சைனா டவுன் மார்க்கட்டின் கண்ணாடிப்பெட்டிகளின் சுவர்களை ஏறி ஏறி வழுக்கி விழுகின்ற அந்தத் தவக்களைகளின் வாழ்க்கையைவிட மோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நீங்கள், சிங்கப்பூர் சீனத்திகளைப்பற்றி என்னிடம் வக்காலத்து வாங்க வராதீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதியோ அருகதையோ கிடையாது.
 
ஆனால் சிங்கப்பூரையே பூர்வீகமாகக்கொண்ட, அங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு சீனத்து தேவதையைக் காதலித்துக் குடும்பம் நடத்தும் நான் சொல்லலாம்.

எல்லாப்பெண்களையும் அப்படி ஒரே கட்டத்துக்குள் அடக்கமுடியாதுதான்!
ஏப்ரிலும் அப்படியான விதிவிலக்குகளில் ஒருத்தி. பொதுவான சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை வெறுப்பவள் அவள். அதுவும் சீனத்துப்பெண்களைத் தன் நண்பர்கள் வட்டத்துக்குள்ளேயே சேர்க்கமாட்டாள். வித்தியாசமானவள். வழமையான சீனத்திகளைவிட உயரமானவள். படபடவென்று பேசுவாள். ஆச்சரியமாக அவள் ஆங்கிலத்தில் சிங்கிலிஷ் கலந்திருக்காது. ‘Can’ என்ற ஒற்றைச்சொல்லுக்கு மேக்கப்போட்டு வாழ்க்கையை ஓட்டமாட்டாள். பேசும்போது அவள் உதடுகளுக்குமேலே வெள்ளையாக ‘பொரு’ படர்ந்திருக்காது. ஏப்ரிலுக்கு சீனத்தவர்களைப்போன்ற மெல்லிய தேகம் என்றும் சொல்லமாட்டேன். அவள் கண்களும் வாளெறியாமல் மிக்கி மவுசுக்கு இருப்பதுபோல விரிந்து வட்டமாக இருக்கும். ஏப்ரில் தன் நிறத்தை வெள்ளையடிக்க முயலாத இயல்பான ஒரு மஞ்சளழகி. ஸீ. இதுதான் என் பிரச்சனை. அழகு என்பதை விவரிக்கையில் இன்னாரைப்போல, இன்னதைப்போல என்று சொல்லவேண்டுமல்லவா? ஏப்ரிலின் அழகை விளிப்பதற்கு என்னிடம் எந்த ரெபரன்ஸ் புள்ளியும் இல்லை. இப்படி இல்லை என்று சொல்லமுடிகிறதே ஒழிய அவள் இப்படியான பேரழகி என்று அவளைக் குறிப்பிடமுடியவில்லை. ஏப்ரில் ஏப்ரிலைப்போலவே அழகாக இருக்கிறாள் என்பதைத்தவிர. அவளொரு சுயம்பு அழகி. சிலவேளை நான் சீனத்தவனாக இருந்து சீனத்து பழம் பெரும் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தால் எங்கேனுமொரு புள்ளியில் ஏப்ரிலுக்கான ஒப்புவமைகளை அறிந்திருப்பேனோ என்னவோ. ஆனால் என்ன செய்ய? எனக்குச் சீனமே ஏப்ரிலினூடாகத்தான் தெரிகிறது. இத்தனைக்கும் அவள் சீனத்து பெரு நிலத்திலேயே காலடி வைத்து அறியாள். ஆனால் சீனம் என்ற சொல் அவளோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பாவம்.

ஏப்ரிலின் சிந்தனைகளும் சற்று வித்தியாசமானவை. சிங்கப்பூரை அவள் வியந்து பேசி நான் பார்த்ததேயில்லை. லீ குவான்யூவை கடவுள் என்று கொண்டாடுவதில்லை. அந்த நாடு தன்னைச் சிந்திக்கவே விடவில்லை என்று அவள் அடிக்கடி புலம்புவாள். அதன் இயந்திர கதியும் செயற்கைத்தனமும் பூசிமெழுகிய அரச அடக்குமுறையும் பிடிக்காததாலேயே அவள் தன் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வந்து குடியேறினாள்.
 
ஆனாலும் ஊரின் சில குணங்கள் பாடைவரையும் வந்து சேருமல்லவா?
 
நாய்கள் விசயத்தில் மாத்திரம் அவளின் வாலை நிமிர்த்தவே முடியவில்லை. நாய்களை ஏன் மனிதர்கள் வளர்க்கிறார்கள் என்பதை ஏப்ரிலுக்குப் புரியவைக்கவே முடியவில்லை. கூடி வாழ ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்களில் நான் எவ்வளவோ தடவைகள் அவளிடம் கெஞ்சிக் கேட்டுப்பார்த்துவிட்டேன். உனக்கு அவ்வளவு இஷ்டமென்றால் சாலையோரம் போகும்போது எதிர்ப்படும் நாய்களைக் கொஞ்சநேரம் பிடித்துக் கொஞ்சவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு ஏன் வீணாக வீட்டினுள் கூட்டிவந்து குளிப்பாட்டி வளர்க்கவேண்டும் என்று அவள் என்னோடு வாதம் செய்வாள். ஆனாலும் நான் அடம்பிடித்தேன். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட இந்த உறவு நரகத்தில் சென்று முடியாமலிருக்க ஒன்று நமக்கிடையே ஒரு குழந்தை வேண்டும் அல்லது என்றென்றும் நன்றி மறவாத ஒரு நாயேனும் வேண்டும் என்று அவளுக்கு விளக்கினேன். நானும் நீயும் நடுவில் ஒரு நாயும் மாலை வேளைகளில் பாதையோரம் நடைப்பயிற்சி செய்தால் எத்தனை அழகாக இருக்கும் என்பேன் நான். நான் ஒரு கனவு போகி. இயல்பையும் இருப்பையும் கனவாக சிருட்டித்தால்தான் என்னால் அதை அனுபவிக்கமுடியும். வெயில் நாளில் தூங்கும்போது படுக்கை அறையின் ஸ்பீக்கரில் மெல்லிதான மழைச்சத்தத்தின் ஒலியைத் தவழவிடுபவன் நான். ஆனால் ஏப்ரிலோ யன்னலைத் திறந்துவைத்து வெக்கையை உள்ளே வர அனுமதிப்பவள். எதற்காக நான்கு பருவங்கள் இந்த நாட்டில் இருக்கிறது? ஒவ்வொன்றையும் அதனதன் இயல்புக்கேற்ப ரசித்துப்பழகு என்பாள்.
 
இப்படியான ரசனை மிக்க ஏப்ரிலுக்கு நாய்களை ஏன் பிடிக்காமல்போனது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ‘அரைமணிநேர நடை அனுபவத்துக்காக நாள் முழுதும் ஒரு நாயை சீராட்டி வளர்ப்பது வேண்டாத வேலை அல்லவா?’ என்று ஏப்ரில் சொல்வாள். ஒரு நாயால் நிலைக்கவேண்டிய அளவுக்கு இந்த உறவு சீர்கெட்டுவிட்டதா என்று எள்ளி நகையாடுவாள். இல்லை நாய்கள் எம் மன உளைச்சலைக் குறைக்க உதவும் என்பேன் நான். உன் மன உளைச்சலை உன்னைத்தவிர வேறு யாராலுமே குறைக்க முடியாது என்று அவள் பதிலளிப்பாள். நாய்கள் நல்ல நண்பர்கள் என்று நான் சொன்னால், ‘நாய்களை எப்போதுமே நண்பர்களாக எண்ணாதே, அவை தம் சுய நலத்துக்காகவும் இருப்புக்காகவும் நம்மை நக்கி வைக்கின்றன, அவை எம்மிடம் அப்படித் தங்கியிருப்பது ஒருவித அதிகாரப் போதையை நமக்குக் கொடுக்கிறது. நாய் வளர்ப்புக்குப் பின்னால் உள்ள உளவியல் இதுதான்’ என்று ஏப்ரில் சொல்வாள். ஏதோ ஆயிரம் நாய்களை வளர்த்த ஆனந்த சிகாமணிபோலத்தான் அவள் பதில்கள் இருக்கும். நான் காண்டாமிருகத்தை வளர்க்கலாம் என்றாலும் ஒரு ‘டெட் டோக்’ செய்யக்கூடிய அளவுக்கு அவள் ஒரு ஆல் இன் ஆல் அழகுராணி. எல்லாவற்றுக்கும் ஒரு மறுமொழி வைத்திருப்பாள். தீர்வு வைத்திருப்பாள். She is always right. எல்லாப்பெண்களும் அப்படியா என்று எனக்குத் தெரியவில்லை. என் முப்பத்தொன்பது வயது இளமையில் நான் ஓரளவுக்கு முழுமையாக அறிந்த நான்காவது பெண் ஏப்ரில். முதல் மூன்று பெண்களுமே ‘நாயா, ஓ ஐ லவ் பப்பீஸ்’ என்று சொல்லக்கூடியவர்கள். நான் நாய் வளர்க்கலாம் என்று சொன்னால் உடனே எந்தச் சாதி நாய், என்ன பெயர் என்று யோசித்து அதுக்குப் போட சட்டையும் தைக்கத்தொடங்கியிருப்பார்கள். ஐ நோ. இந்நாள் ஏப்ரிலுக்காக முன்னாள் காதலிகளைப்பற்றி மோசமாகப்பேசுவது தவறுதான். But I just can’t help myself. அந்த உறவுகளின்போது அர்த்தமான கணங்கள் எதுவுமே இருக்கவேயில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவை எல்லாம் விரைவிலேயே பாம்பாய், பேயாய், வல்லசுரராகியதில் அத்தனை பிறப்புகளையும் பிறந்திளைத்துத்தான் நான் என் ஏப்ரிலை வந்தடைந்தேன். ஏழு மலை ஏழு கடல் என்பார்களே அது. அதனால்தான் ஏப்ரில்மீது அத்தனை பிரியம். ஏப்ரில் எல்லாவற்றையும் தீர ஆராய்வாள். கணக்கு வழக்கு பார்ப்பாள். ஊபர் ஈட்ஸில் டம்பிளிங்ஸ் வாங்கலாம் என்றால் ரேட்டிங்கை வாசித்து தீசிஸ் எழுதுவாள். உலகின் அத்தனை பிரச்சனைகளுக்குமான தீர்வுகளைச் சுமந்து திரிவதால் கொக்கத்தடிக்கு கொஞ்சம் கூனலும் வந்துவிட்டது. இப்படியானவளுடன் நானும் நாய்க்காக ஐந்தாறு மாதங்கள் முட்டி மோதிப்பார்த்துவிட்டேன். இனிமேல் நாய் வேண்டுமாயின் ஏப்ரில் போய் மே வந்தால்தான் உண்டு என்ற அபாயம் ஒரு கட்டத்தில் தோன்றவே, இல்லாத ஒரு நாய்க்காக இருக்கிற ஏப்ரிலை இழந்துவிடக்கூடாது என்று அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

ஆனால் என் நல்ல காலம். ஆபத்பாந்தவனாய் இந்தக் கொரானா லொக்டவுன் வந்து தொலைத்தது.

--- தொடரும் ---

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட