Skip to main content

ஏப்ரில் - குறுநாவல் - அத்தியாயம் 2


“ஒரு மின்னல் கோடு எங்கே போய் முடிவடைகிறது என்று எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அநேகமாக இன்னொரு மின்னலில் அது போய் முடியலாம். அல்லது தரையில்”

ஏப்ரில்

“ஶ்ரீலங்கனா?”

அம்மாவின் அந்த ஒரே வார்த்தையில்தான் எத்தனை கேள்விகள். எத்தனை உணர்ச்சிகள். அது ஆச்சரியமா? இகழ்ச்சியா? வெறுப்பா? இவள் எப்போதுமே இப்படித்தான் என்ற அவநம்பிக்கையா? அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ஒரு சிங்கப்பூரியனைத் தேடிக்கண்டடைவேன் என்று அம்மா முட்டாள்தனமாக யோசித்திருக்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் அது ஒரு சீன இனத்தவனாகவாவது இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கக்கூடும். குறைந்தபட்சம் வெள்ளை என்றாலும் இந்தளவுக்கு எதிர்வினை இருந்திருக்காது. மகிழ் பற்றி அவரிடம் சொல்லாமலேயே விட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் யாரோடாவது பகிர்ந்துகொள்ளத்தானே வேண்டும். மலையேற்றம் போகும்போது தெரிந்தவர் ஒருவராவது நான் எங்கே போகிறேன், எத்தனை நாளில் திரும்புவேன் என்பதை அறிந்துவைத்திருக்கவேண்டாமா? தொலைந்துபோய்விட்டால் எங்கென்று தேடுவார்கள்?

“எத்தனை நாட்களாகப் பழக்கம்?”

“ஆறு மாதங்களாக மமா… ஆனால் சீரியசாக இந்த மூன்று மாதம்தான்”

பேஃஸ்டைமில் அம்மாவின் முக உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அம்மா எதையும் காட்டிக்கொள்வதில்லை. சந்தோசம், கவலை, வெறுப்பு என்ற எந்த உணர்வுகளுக்குமான அம்மாவின் நரம்புகள் சிறு வயதிலேயே மரத்துப்போய்விட்டனவோ என்று நான் யோசிப்பதுண்டு. மிக அரிதாகத்தான் அவர் சிரிப்பார். அதுவும் மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்த சிரிப்பாகத்தான் இருக்கும். மற்றும்படி தனக்குள் அவர் என்ன நினைக்கிறார் என்பதை ஊகிக்கவே முடிவதில்லை. பாவம், அவரும்தான் யாரோடு அவற்றைப் பகிரமுடியும்? அப்பாவைப் பொறுத்தவரையில் அம்மா சம்பளம் கொடுக்கத்தேவையில்லாத வெறும் பணிப்பெண்தான். தம்பிக்கு அவர் சமைத்துப்போடும் ஒரு மெசின். நானுமே அம்மாவைத் தேவைக்குத்தானே பயன்படுத்துகிறேன். என்றாவது அம்மாவுக்காக அம்மாவோடு ஆரத்தழுவிப் பேசியிருக்கிறேனா? சமயத்தில் அம்மாவின் குணம்தான் எனக்கும் கொஞ்சம் வந்துவிட்டதோ என்று அச்சமாக இருக்கும். இல்லை. நான் அப்படியானவள் அல்ல திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். நான் அவரைப்போல அடிமை கிடையாது. சுதந்திரமானவள். இந்த உலகத்தைத் திகட்டத் திகட்ட ரசிக்கப் பிறந்தவள். பறவை. இராட்சதப் பறவை. எவராவது வழியை மறித்தால் எரித்துச் சாம்பராக்கிவிட்டுப் பறந்துகொண்டேயிருப்பேன்.

“உனக்கும் நாற்பது வயதாகிறது ஏப்ரில், அதனைப் புரிந்துகொள்”

அம்மா சொன்னபோது ‘அப்படிப் பேசாதீர்கள்’ என்று கத்தவேண்டும்போல இருந்தது. எனக்குள்ளேயிருக்கும் கேள்விகளை எல்லாம் எப்படி ஆறாயிரம் கிலோமீற்றர் தள்ளியிருக்கும் இந்த மனிசியால் அப்படியே அட்சரம் பிசகாமல் கேட்கமுடிகிறது? என் தனிமையும் வயதும் என்னையே மிரட்ட ஆரம்பித்துவிட்டதா? அப்படி என்ன அவசரம்? மகிழ்தான் கேட்டான் என்றால் நானும் ஏன் சம்மதித்தேன்? வெறும் மூன்றே மாதங்கள் பழகிய ஒருவனோடு ஒரே வீட்டில் வசிக்குமளவுக்கு எனக்கென்ன தேவை வந்தது? நல்ல வேலை. நிம்மதி. நினைத்த நேரத்தில் பிடித்ததைச் செய்யலாம் என்ற வாழ்க்கையை எப்படி இன்னொருவனோடு பகிரத் தயாரானேன்? மகிழ் நல்லவன்தான். பென்சனைவிட. சர்வ நிச்சயமாக ஏசனைவிட. ஏசன் போன்ற ஒரு நாயைத் திருமணமும் முடித்து இரண்டு வருடங்களாக வாழ்ந்து தொலைந்தவளுக்கு மீண்டும் ஒரு உறவில் எப்படி நம்பிக்கை வந்தது? ஏன் நான் மகிழைக் காதலிக்கிறேன்? உண்மையிலேயே நான் அவனைக் காதலிக்கிறேனா? நாற்பது வயதில் வரக்கூடிய காதலுக்கு காதல்மட்டும்தான் காரணமா? இல்லை சின்னதான அச்ச உணர்வும் அதில் உள்ளதா? உலகம் என்னை மட்டும் தனியே விட்டுவிட்டு அதுபாட்டுக்கு சுற்றிக்கொண்டிருக்கிறது என்கின்ற பதைபதைப்பா? நன்றாக யோசித்துப்பார் ஏப்ரில். அந்த வீட்டுக்குள் காலடி வைத்தால் அவ்வளவுதான். காலையில் எழுந்தால் வலது பக்கம் மகிழ் கிடப்பான். பாத்ரூமில் என் பற்தூரிகையோடு அவனுடையதும் கலந்திருக்கும். ஒரே பற்பசை. ஒரே குளியல் திரவியம். அவன் தூங்கும்போது நிம்மதியாகக் கக்கூஸ்கூட போகமுடியுமா? சத்தம்போடாதே என்பானா? அந்த வீட்டில் என் இஷ்டத்துக்கு உள்ளுடைகளுடனேயே எழுந்து சென்று கோப்பி ஊற்றிக் குடிக்கமுடியுமா? இது எங்கு போய் முடியப்போகிறது? நான் இதனைச் சமாளிப்பேனா? என் முன்னைய உறவுகளின் பிரிவுகள் எதுவுமே இன்னொரு பெண்ணாலொ ஆணாலோ இடம்பெற்றதில்லை. பென்சனுக்கு வாழ்க்கையில் எந்தவித அடிப்படை அறங்களும் கிடையாது. ஏசன் எவரை ஏமாற்றியேனும் முன்னேறவேண்டும் என்று துடிப்பவன். இரண்டுமே நாய்கள்தான். நல்லவர்களாக நடிக்கத்தெரிந்த மோசமான நாய்கள். தேவைக்கு நக்கி எல்லாமே தீர்ந்தபின்னர் நடுவீட்டிலேயே மலம் கழித்து சுற்றியிருப்பவர்களையும் கடித்து களிப்புறும் விசர் நாய்கள். அதிலும் ஏசன் திருமணம் முடித்து இரண்டு வருடங்களாக நடிக்கத் தெரிந்தவன். ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் ஒருத்தன் தன் சுய முகத்தைக் காட்டமுடியுமா? வேண்டாம் என்றுதானே சேரும்போதே பேசிக்கொண்டோம். அப்புறம் என்ன திடீரென்று குழந்தைப்பாசம்? வாரிசு, தலைமுறை ஆசைகள்? ஆண்கள் என்ற இந்த முட்டாள்களின் கூடத்தில் எப்படி மீண்டும் மீண்டும் போய் விழுந்துகொண்டிருக்கிறேன் நான்? என்னால் இன்னொரு ஆணோடு சேர்ந்து வாழத்தான் முடியுமா? ஒரு வருடத்துக்கேனும் என் கொதிநிலை தாங்குமா? அதிகப்பட்சம் இரண்டு வருடங்கள்? அப்புறம் இன்னொரு பிரிவுக்கு நான் தயாராக இருக்கிறேனா? நாற்பத்து மூன்று வயதாகிவிடும் ஏப்ரில். உன் வண்டி ரைட் ஓஃப் ஆகிவிடும். வேண்டாம். ரயில் பயணத்தில் கடக்கும் அத்தனை அழகான ஊர்களிலும் குடிபுகவேண்டும் என்று ஆசைப்படாதே. பெட்டி படுக்கைகளுடன் புறப்படாதே. வேண்டுமானால் விடுமுறையில் மூன்று நாட்கள் தங்கி ஊரை ரசித்துவிட்டு வருவதைவிட்டு இதென்ன விபரீதம்? எத்தனை தடவைதான் ஒருத்தி விழுந்து எழ முடியும்? தவறு செய்துவிட்டேனே. இப்போதே மகிழை அழைத்து என்னால் வரமுடியாது என்று சொல்லவேண்டியதுதான். கடினமான முடிவுதான். ஆனால் வாழ்வில் கடினமான முடிவுகள் எல்லாமே மிக இலகுவாக கண நேரம்கூட யோசிக்காமல் எடுக்கப்படக்கூடியவை. நாம்தான் தேவையேயில்லாமல் அவற்றைத் தாமதித்து வாழ்க்கையை அழித்துக்கொள்கிறோம். மகிழ் புரிந்துகொள்வான். புரிந்துகொள்ளாவிட்டாலும் சந்தோசம்தான். இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவனோடு எப்படிச் சேர்ந்து வாழ்வது? இடியட். இப்படி ஒரு இடியட்டுடன் கூட்டாகக் குடும்பம் நடத்துவதைக்காட்டிலும் தனியே பறந்து திரிவது எத்தனை சுகமானது?

“மமா நான் பின்னர் பேசுகிறேன். அவசரம்”

அம்மா தடுத்தார்.

“இல்லை. பொறு ஏப்ரில். வழமைபோல அவசரப்படாதே. யார் அந்த ஶ்ரீ லங்கன்? முதலில் அதைச் சொல்லு”

அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. நான் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுப்பவள் என்பது அவர் அறியாததா? அவருக்குத் தெரியும். ஆனால் அம்மா என்னைப்போலக் கிடையாது. அவர் எல்லோரையும் பொறுத்துப்போகிறவர். சிங்கப்பூரில் எந்நேரமும் எங்கள் பிளாட்டு வாசலில் வந்து தொல்லை பண்ணும் கடன்காரர்களை. அவர்களை எதிர்க்கும் தைரியம் இல்லாமல் அம்மாவைத் துவைத்து எடுக்கும் அப்பாவை. பதினேழு வயதிலேயே புகிட் பஞ்சாங் மாபியோவோடு இணைந்து அடிக்கடி சிறை சென்று மீளும் தம்பியை. தொழிலாளர் கட்சியில் உறுப்பினராகி குடும்பத்துக்கே ஆபத்தைத் தேடித்தந்த என்னை. அவருக்கு ஒரே பிடிமானமாக இருந்த நானும் நாட்டைவிட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட தனிமையை. அம்மா எத்தனையைத்தான் பொறுத்துப்போவார்?

நான் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட்டு, கட்டிலில் கால்களைக் குறுக்கே மடித்து உட்கார்ந்தேன்.

“ஓகே, தெயார் யூ கோ, மகிழ்ராஜா என்று பெயர். மகிழ் என்றுதான் கூப்பிடுவது. இங்கே மெல்பேர்னில்தான் இருக்கிறான். என்னோடு கூட வேலை செய்பவன். நல்லவந்தான் மமா. ”

அம்மா அமைதியாக இருந்தார். ஏசனையும் நான் நல்லவன் என்றுதான் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகம் வந்தது. அப்பாவும் ஆரம்பத்தில் நல்லவராகத்தான் இருந்திருப்பார். எல்லோருமே தீயவராக மாறும்வரை நல்லவர்கள்தான்.

“பார்த்தால் இளவயது அமைச்சர் தர்மன்போல இருப்பான். ஆனால் தலையில் நிறைய மயிர் இருக்கிறது”

அம்மாவின் இதழோரம் சின்னதாக ஒரு சிரிப்பு வந்துபோனது. சிங்கப்பூரில் நாங்கள் பிறந்து வளர்ந்த ஜூரோங் குழுத்தொகுதியில்தான் அமைச்சர் தர்மன் எப்போதும் போட்டியிடுவார். அவரும் ஒரு சிலோனிஸ் தமிழ்தான். அம்மாவுக்கு அவரைப்பிடிக்கும். லீ குவான் யூவைப் பிடிக்கும். மக்கள் செயல் கட்சியைப் பிடிக்கும். நான் பதின்மத்திலேயே எதிர்க்கட்சியான தொழிலாளார் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டேன். நாட்டில் இல்லாத ஜனநாயகமும் சக்தியுள்ள எதிர்க்கட்சியும் எங்கள் வீட்டினுள் தாராளமாகவே இருந்தது. இதைச்சொன்னால் வீட்டில் சண்டைதான் வரும்.

“தர்மன் அளவுக்கு ஸ்மார்ட்டா? அவரைப்பற்றிச் சொல்லு? குழந்தைகள் இருக்கிறதா?”
 
இந்தக் கேள்வி என்னை இப்போதெல்லாம் அதிரவைப்பதில்லை. தவிர நாற்பது வயதில் தன் பெண் ஒரு காதலனை அறிமுகப்படுத்துகையில் எந்தத்தாய்க்கும் வரக்கூடிய முதல் கேள்விதான் அது. அதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும் அம்மா எந்தச் சலனமும் இல்லாமல் மிகச்சாதாரணமாகக் கேட்டபோது கொஞ்சம் விசனமாகவே இருந்தது.

“ச்சைக்… அவன் திருமணமே முடிக்காதவன் மமா. ஓரிரு காதல்கள். அதுவும் இருபதுகளிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிட்டது. அவர்கள் கலாசாரத்தில் பெற்றோர்கள்தான் திருமணங்களைப் பேசித் தீர்ப்பார்களாம். அதுவும் சாதகம் பார்ப்பார்களாம். இவனுக்குரிய பெண் இன்னமும் கிடைக்கவில்லை என்று சொன்னான்”

“எத்தனை வயது என்று சொன்னாய்?”

“முப்பத்தாறு கடந்துவிட்டது. என்னிலும் மூன்று வயது இளமை. ஆனால் பார்த்தால் எனக்கே அங்கிள்போல இருப்பான்.அவந்தான் உண்மையில் கிழவன். ஆனால் என்னைக் கிழவி என்பான். ஶ்ரீலங்கன்கள் வயதுக்கு அதிகமான தோற்றத்தையும் அதற்கு நேரெதிரான அறிவையும் கொண்டிருக்கிறார்கள் மமா.”

சொல்லிவிட்டுப் படக்கென்று நாக்கைக் கடித்தேன். செல்பேசித் திரையில் என் முகம் கொஞ்சம் வெட்கப்பட்டதுபோல தெரிந்தது. ஏப்ரில் என்ன செய்கிறாய் நீ? இருபது வருடங்களில் நீ பட்ட அனுபவம் அவ்வளவுதானா? உடலும் உணர்வும் உன் சிந்தனைகளைப் பாதிக்க விட்டுவிடாதே. இந்த டோபமின் சாத்தானை மூளையில் கசியவிடாதே. ஏன் அதில் என்ன தவறு? பென்சனும் நேசனும் நான் அவர்கள்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை என்பதற்காக என் காதலை எப்படிக் குறைசொல்லமுடியும்? என் கடந்தகாலம் நான் எழுந்து நடமாடவிடாமல் தடுப்பதை நானே எப்படி அனுமதிக்கமுடியும்?

அம்மா பேச ஆரம்பித்தார்.

“திருமணம் முடிக்காதவன். உன்னைவிட இளமை. பக்குவப்பட்டவனோ தெரியாது. இந்தியர்களுக்கு இந்தப் பக்குவம் என்பது குறைவு மகள். பெண்களை இந்தியர்கள் கோயில்களில் மாத்திரமே கொண்டாடுவார்கள். உடை விசயத்தில் தலிபான்களுக்கு நிகரானவர்கள். நீ இப்படி குட்டைக் காற்சட்டையும் பனியனும் அணிந்து கால்களைக் குறுக்கே மடித்து அமர்ந்திருப்பதை எந்த இந்திய ஆணும் ஏற்றுக்கொள்ளமாட்டான். உன் முகிழ் எப்படியோ தெரியாது. ஆனால் இது அவர்களின் பொதுவான குணம். உன் அப்பா மோசமானவர்தான். ஆனால் அவர் சிங்கப்பூரியன். ஒரு சிங்கப்பூரிய ஆண் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்தே நான் உன் அப்பாவைத் திருமணம் முடித்தேன். உனக்கு இந்தப் பையனை எந்தளவுக்குத் தெரியாது என்பதை நீ அறிந்துகொள்வது அவசியம். ஆச்சரியங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் தயாராக இரு. ஆனால் உனக்குப் பிடித்திருந்தால் எனக்கும் ஒகே. நீ சந்தோசமாக இருந்தால் போதும். உன் மமாவுக்கு அதைவிட வேறு என்ன வெண்டும் சொல்லு?”
“மமா, முதலில் அவன் பெயர் மகிழ். அடுத்தது அவன் இண்டியன் கிடையாது. ஶ்ரீ லங்கன். ம்ம்ம் அவனுக்குத் தன்னை ஶ்ரீலங்கன் என்று சொன்னாலும் பிடிக்காது … ஏதோ அவர்கள் நாட்டு அரசியல், நமக்கெதுக்கு…எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது மமா… ஹி இஸ் பப்ளி… கியூட்… கோமாளி… மீரண்டா…அன்றைக்கு வேலைக்கு வெள்ளை சொக்சையும் கறுப்பு சொக்சையும் ஒவ்வொரு காலுக்கும் மறந்துபோய்ப் போட்டுவந்தான் தெரியுமா? சரியான ஷாசு… மமா … அவர்களின் சாப்பாடு எல்லாம் கொஞ்சம் உறைப்பாக இருக்கும். தாய்லாந்துக்காரர்கள்போல எல்லாவற்றிலும் நிறையத் தேங்காய்ப்பால் சேர்ப்பார்களாம்”

நான் பரவசத்துடன் சொல்ல ஆரம்பிக்க அம்மா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மகிழோடு பேசுவதைக்காட்டிலும் மகிழைப்பற்றிப் பேசுவதில் அத்தனை இன்பமாக இருந்தது.
 
“உங்களுக்குச் சொல்லவேண்டுமே. பாட்டு ஒன்றில்தான் எல்லாமே ஆரம்பித்தது மமா. நான் அந்த லிங்கினை அனுப்புகிறேன். பொலிவுட் பாடல் ஒன்று. வெண்ணிலவே வெண்ணிலவே லலா லால லாலாலா”

நான் உற்சாகமாகப் பாட ஆரம்பிக்க அம்மா புன்னகைத்தார்.
 
“ஓகே ஓகே, உன் மகிழ் புராணம் போதும், ஏதோ அவசரம், அழைப்பைக் கட் பண்ணப்போகிறேன் என்றாய்?”

“அது … இல்லை. எல்லாம் ஓகே இப்போ.”

அம்மா சிரிக்க நானும் சிரித்தேன். இருவரும் சிரித்துப்பேசித்தான் எத்தனை நாட்களாகிவிட்டன. மகிழை அம்மாவுக்கு நேரடியாக அறிமுகம் செய்யவேண்டும். அவன் வழமையாகப்போடும் காற்சட்டை சேர்ட் இல்லாமல் கோடு போட்ட டிசேர்ட் ஒன்றை வாங்கி கழுத்து பட்டினையும் மாட்டிவிட்டு அம்மாவைக் கவரவெண்டும். நினைக்கவே சிரிப்பாக இருந்தது. அவன் நெற்றியில் எப்போதும் கீறியிருக்கும் கோட்டை நைசாக அழித்துவிட்டுத்தான் காட்டவேண்டும். முதல் சந்திப்பிலேயே அம்மாவைப் பதற்றமடைய வைக்கவேண்டாம். தன் மகள் மெதடிஸ்டாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு இந்துவாக மாறிவிடுவாளோ என்ற அச்சத்தை அவருக்குக் கொடுக்கவேண்டாம்.
 
“நீ இப்போதைக்கு அப்பாவுக்கு எதுவும் சொல்லவேண்டாம். அது எப்போதும்போலவே குடித்துவிட்டே வருகிறது. அதற்கு எதுவுமே தெரியவேண்டாம். உன் மனதைக் காயப்படுத்திவிடும். அந்த தியோங் டெக்கோடு பேசிப்பார் என்று கேட்கும்”

அப்பா. நல்ல அப்பாக்களைப் பெற்ற பெண்கள் எத்தனை பாக்கியசாலிகள். அந்த ஏசன்கூட நல்லவனாகத் தெரிந்ததற்கு அப்பாதானே காரணம். இப்போதுகூட ஐந்து நிமிடம் பேசினால் ஆறாவது நிமிடம் தியோங்கின் கதையை அவர் எடுத்தே தீருவார். அந்த ஐம்பது வயதுக் கிழவனோடு பேசிப்பார் என்பார். தன்னோடு கூடக் குடிக்கும் குடிகாரனைத் தன் மகளுக்கு சோடி சேர்க்கத் துடிக்கும் இன்னொரு அப்பா உலகத்தில் இருக்கக்கூடுமா? ஏசனையும் கொண்டாடித்தீர்த்தார் அல்லவா? நான் விவாகரத்து செய்யப்போகிறேன் என்றபோது ஒரு குழந்தையைப் பெற்றுப்போடுவது அத்தனை கஷ்டமா என்று கேட்டாரே? அம்மா ஏன் இந்த மனிதனைப் பொறுத்துப்போகிறார்? சதா இருட்டையே கரித்துக்கொட்டாமல் ஒரு விளக்கை ஏற்றிவைத்தால்தான் என்ன? அப்பாவைப் பிரிவது என்பது என்ன அத்தனை கடினமான முடிவா? உலகின் கடினமான முடிவுகள் எல்லாம் இலகுவில் எடுத்துவிடக்கூடியவை அல்லவா? நான் ஏசனைப் பிரிந்ததுபோல. நான் சிங்கப்பூரைப் பிரிந்ததுபோல. நான் இப்போது மகிழோடு கூடவே வாழப்போவதைப்போல.

“மமா புதுவீட்டில் இரண்டு அறைகள் இருக்கின்றன. நீங்கள் அப்பாவை விட்டுவிட்டுப் பேசாமல் அவுஸ்திரேலியாவுக்கே வந்துவிடுங்கள். நாங்கள் ஒன்றாக இருக்கலாம். மகிழிடம் நான் சொல்லிக்கொள்கிறேன். அவனுக்கும் உங்களை நிச்சயம் பிடிக்கும். உங்களைப் பிடிக்காத எவரும் இருக்கமுடியுமா? நீங்கள் வந்து எங்களுக்கு நாள் முழுதும் சமைத்துப்போடுங்கள். அந்தக் கரட் கேக் செய்து தாருங்கள். இங்கே கரட் கேக் என்றால் இனிக்குமா என்கிறார்கள். சிங்கப்பூரின் நூடில்சைத்தவிர இந்த ஊர்க்காரர்களுக்கு வேறு எதுவுமே தெரியாது மமா. மகிழ்வேறு ஶ்ரீலங்கன் சாப்பாடு என்று மலேசியன் சில்லி பராட்டாவைச் சொல்கிறான். நீங்கள் வந்து சமையல் என்றால் என்ன என்று எங்களுக்கு வகுப்பெடுங்கள்”

அம்மா சிரித்தார்.

“நான் ஆறுதலாக வருகிறேன். எங்கே வீடு பார்த்திருக்கிறீர்கள்? பெரிய வீடா?”

“சின்ன வீடுதான். இரண்டு அறை, ஒரு ஹோல். சேர்ந்தாற்போல சமையலறை. ரிச்மண்ட் என்று நகரத்துக்கு அருகிலேயே இருக்கிற ஒரு புறநகரம். வேலைக்குப் பத்து நிமிட நடைதான். இங்கேயும் எல்லாம் அபார்ட்மெண்ட்தான் மமா. எங்களுடையது நாற்பது மாடிக்கட்டடம். இருபத்தேழாவது மாடியில் எங்கள் பிளாட் இருக்கிறது. சின்ன பல்கனியும் உண்டு. சூரிய அஸ்தமனத்தை அங்கிருந்து பார்க்கலாம். வீடு பார்க்கும்போதே முடிவெடுத்துவிட்டேன். இம்முறையும் இந்த உறவு சரிவராவிட்டால் நான் இறங்கிவரப்போவதில்லை. அங்கிருந்தே குதித்துவிடப்போகிறேன்… அப்படியே பறந்து அந்தார்டிகாவுக்குப் போய்விட்டால் மனிதர்களை எதிர்கொள்ளவேண்டிவராதல்லவா?”

சொல்லிவிட்டு சடக்கென்று நாக்கைக் கடித்தேன். ஏன் அப்படிச்சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.

“அபசகுனமாக வெடுக் வெடுக் என்று பேசாதே ஏப்ரில். அந்த மகிழோடு அன்பாக இருக்கப்பார். அப்பாவை மறந்துவிடு. பென்சனை, ஏசனை மூளையிலிருந்து அழித்துவிடு. நினைவுகள்தான் எங்கள் சாபங்கள். சண்டை வந்தால் இரண்டு மணிநேரம் கதவைப்பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து, கோபம் அடங்கியபின்னர் வெளியே வா. மிக மோசமான சண்டைகளின்போது உங்களுக்கிடையே முன்னர் நிகழ்ந்த அற்புதமான கணங்களைக் கொஞ்சமேனும் நினைத்துப்பார். கோபம் கடந்துவிடும்”
“மமா இனஃப். எத்தனைதடவைதான் இந்த அறிவுரைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவீர்கள்? இருபது வருடங்களாகப் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன். எதுவுமே வேலைக்காகவில்லை”
அம்மா மறுபடியும் சிரித்தார்.

“சரி என்னமோ பண்ணு. உன் வாழ்க்கை. நீங்கள் எப்போது புதிய வீட்டுக்குப் போகப்போகிறீர்கள்?”
“இந்த ஞாயிறுதான்.”

அந்த ஞாயிறு மாலையே நானும் மகிழும் குடிவந்துவிட்டோம். என்னிடம் இரண்டே சூட்கேசுகள் மாத்திரம் இருந்தன. அவனிடம் ஒரு சூட்கேஸ். தளபாடங்களை எல்லாம் மார்க்கட் பிளேசில் மலிவு விலையில் வாங்கினோம். மகிழுக்கு அதில் கொஞ்சம்கூட சம்மதம் இருக்கவில்லை. எனக்கோ எதற்காக இத்தனை பணம் செலவழிக்கவேண்டும் என்றிருந்தது. இந்த உறவு தொடர்ந்து நீடிக்குமா என்பதே ஒரு கேள்வி. அப்படியே நிலைத்தாலும் இந்தக் குச்சு அப்பார்ட்மெண்டுக்குள் எங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கச் சந்தர்ப்பமேயில்லை. பின்னர் ஏன் எல்லாவற்றையும் புதிதாக வாங்கவேண்டும்? ஆனால் கட்டில் விசயத்தில் புதிதாக வாங்கியே தீரவேண்டும் என்று மகிழ் பிடிவாதமாக நின்று தான் ஒரு சிறுபிள்ளை என்பதை நிரூபித்தான். போனவுடனேயே பெட்டிகளைப் பிரித்து அந்தந்த இடங்களில் அடுக்க ஆரம்பித்தோம். பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சிறிய பிரிட்ஜ். சிறிய மைக்ரோவேவ். சில சமையல் சாமான்கள். துணி துவைக்கும் இயந்திரம். டிவி. ஒரு அறைக்கு மாத்திரம் கட்டில் வாங்கினோம். மற்ற அறைக்குள் அலுவலக மேசை. இரண்டு பேர் மாத்திரம் இருப்பதற்கான சோபா. இரண்டு பேருக்கான சாப்பாட்டு மேசை. ஒவ்வொன்றாக ஒழுங்கமைத்தோம். மகிழ் துணிகளை எடுத்து படுக்கையறை அலுமாரியில் கொழுவ ஆரம்பித்தான். நான் பல்கனியில் இரண்டு மூங்கில் கதிரைகளை வைத்து நடுவில் ஒரு ஓர்கிட் சாடியை நிறுத்தினேன். அப்போது அங்கே சிறு பாபிகியூ மெஷினுக்கும் இடமிருந்ததுபோலத் தோன்றியது. அதை மகிழிடம் சொல்லலாம் என்று படுக்கை அறைக்குள் ஓடிவந்தேன். உள்ளே நுழைந்தபோது சுவரில் மாட்டியிருந்த படத்தைப்பார்த்து அரண்டுவிட்டேன்.

“Who the fuck is this?”

மகிழ் எனக்குத் தெரியாமல் யாரோ ஒரு மனிதரின் படத்தை அங்கே மாட்டிவைத்திருந்தான். முசுட்டைத் தலையுடன் மஞ்சள் காவி அணிந்த அந்த ஆளைப்பார்த்தால் இந்து மத சாமியார்போலத் தோன்றியது. ஒரு கையால் இந்தியர்களின் பாணியில் ஆசீர்வாதம் செய்தபடி அந்த மனிதன் வாழ்க்கையில் பெண்களையே காணாததுபோல என்னைக் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருந்தது.

“இது வந்து … அம்மா படுக்கையறையில் எந்நேரமும் இந்தப்படத்தை வைத்திருக்கவேண்டும் என்று சொன்னார். பிளீஸ் ஏப்ரில்”

“உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? … இந்த மனிதன் பார்க்கத்தக்கதாக எப்படி நான் உடை மாற்றுவது? உன்னோடு கட்டிலில் படுப்பது? விளையாடுகிறாயா? முடியவே முடியாது. இந்தாளை வெளியே கொண்டு போ”

“இது இராசியான படம் ஏப்ரில். என் அம்மாவும் அப்பாவும் எப்போதும் தம் அறையில் இந்தப்படத்தை வைத்திருப்பார்கள், நான் பிறந்ததுகூட…”

“ஆர் யூ நட்ஸ்? என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா? ஒன்று நான் இந்த அறையில் இருக்கவேண்டும் அல்லது இந்தப்படம் இருக்கவேண்டும். அப்புறம் உன் உஷ்டம்”

நான் ஆத்திரத்தில் அந்தப் படத்தை பிடுங்கி அவன் கைகளில் வீசியெறிந்தேன். அவன் அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, எதுவும் பேசாமல் எடுத்துக்கொண்டு ஹோலுக்குள் சென்றான். அம்மா சொன்ன அதிர்ச்சிகள் முதல்நாளே ஆரம்பிப்பதை உணர்ந்தேன். எந்த உலகத்தில் சாமியாரின் படங்களைப் படுக்கையறைக்குள் மாட்டுவார்கள்? பெண்டிகோ போனபோது நாம் எடுத்த செல்பியை பிரேம் பண்ணி வைத்தாலாவது வேறு விடயம். இந்த அடிப்படைகூடத் தெரியாத சிறு பயலா இவன்? எரிச்சலாக வந்தது. அதே சமயம் கோபமாகத் திட்டிவிட்டோமோ என்றும் கவலையாக இருந்தது. ஏசியவுடன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டது பாவம். படுக்கையறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தேன். பல்கனியில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்து மாலைச்சூரியனையே மகிழ் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. நான் மெதுவாகப் பதுங்கிப்போனேன். அவன் எதிர்பார்க்காத தருணத்தில் தொப்பென்று அவன் மடியில் ஏறி அமர்ந்து அவன் கழுத்தை என் கைகளால் வளைத்துக்கொண்டேன்.
 
“என்ன ஶ்ரீலங்கனுக்குக் கோபம் வந்துவிட்டதா?”

“நான் ஶ்ரீலங்கன் கிடையாது”

“ஒகே சொறி … என்ன டமிலுக்கு கோபம் வந்துவிட்டதா?”, இன்னமும் நெருங்கி அமர்ந்து அவனை இறுக்கி அணைத்தேன். தீக்கோழி முட்டையன் உர்ரென்று சூரிய அஸ்தமனத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
 
“நான் மன்னிப்புக் கேட்டேன் அல்லவா. அந்தச்சுவரில் நாமிருவரும் சேர்ந்து நிற்கும் படமொன்றை மாட்டுவோம். அந்த முசுட்டு மயிரை அடுத்த அறையில் கொண்டுபோய் மாட்டிவிடு”

“அவர் பெயர் சாய்பாபா”

“கிரேட். உன் பபா அந்த அறையில் இருக்கட்டும். நாம் எம் அறையில் இருப்போம். அவர் மனதும் குழம்பவேண்டாம். எங்களுக்கும் சங்கடம் இல்லை. ஓகேயா?”

மகிழ் ‘ஓகே’ என்று சிரித்தபடியே என்னை அணைத்துப் பிடியை இறுக்கினான். அவ்வளவு உயரத்தில் அவன் மடியில் அமர்ந்திருந்து பார்க்கையில் மாலைச் சூரியன் காலடிகளுக்குள் புதைந்துபோவதுபோல தோன்றியது. அப்படியே வெளியே பாய்ந்து பறந்துபோவோமா என்று மனம் ஒரு கணம் உந்தியது. இவனுக்கும் பறக்கப் பழக்கலாம். நான் எழுந்து சென்று பல்கனித் தடுப்புக்கம்பிகளில் கைகளை ஊன்றியபடி அந்த அந்தி நேரத்து குளிர் காற்றை முகத்தில் அனுபவிக்கத்தொடங்கினேன். பின்னாலே வந்த மகிழ் என்னைக் கட்டியணைத்து, என் கழுத்தில் அழுத்தமாக முத்தம் கொடுக்க, கூச்சத்தில் நான் அனிச்சையாகக் கண்களை மூடிக்கொண்டேன்.
 
இப்போது நிஜமாகவே வானத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன். நாமிருவரும் மேலும் மேலும் உயரே பறந்துகொண்டிருந்தோம். கீழே இருள் சூழ்ந்த நகரத்தில் மின்சார விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. அவை புலப்படாத எல்லைவரைக்கும் நான் பறக்க ஆரம்பித்தேன். அவனையும் இழுத்துக்கொண்டு.

“மறந்தும் கீழே மட்டும் பார்த்துவிடாதே மகிழ்”

நான் சத்தமாகச் சொல்லவும் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கிய மகிழ், மறுபடியும் என்னை அந்த இருபத்தேழாவது மாடியிலேயே கொண்டுவந்து இறக்கிவிட்டான். பஃக்.

“ஆர் யு ஓகே ஏப்ரில்?”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக