Skip to main content

பர்தா : உடைவழி அதிகாரம்



மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை.

“ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகிறீர்கள். உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் பெண்களாகிய எங்களது உடலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்?”

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மாவடியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரையா என்கின்ற பெண்ணின் வாழ்க்கைதான் இந்நாவல். சிறுமியான சுரையா வளர்ந்து, பெரியவளாகி, மணம் முடித்து, குழந்தைகள் பெற்றுக்கொண்ட பின்னருங்கூட, உடை ஒரு கலாசாரமாக, அரசியலாக, அதிகாரமாக எப்படித் தொடர்ச்சியாக அவளது வாழ்வில் திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதை மிகத் தீவிரமாகவும் கருத்தியல் நேர்த்தியுடனும் சொல்லுகின்ற நாவல் பர்தா.

மாவடியூரில் பெருநாள் கொண்டாட்டம். அதற்காக மிரியாகமவுக்கு பணிமாற்றம் கிடைத்துப் போயிருந்த ஹயாத்து லெப்பையின் குடும்பம் ஊர் திரும்புகிறது. பெருநாளுக்கென்று ஹயாத்து லெப்பையின் மனைவியான பீவி கிளியோப்பற்றா சேலை அணிந்திருக்கிறார். கண்ணாடி ஜோர்ஜட் துணியில் மாங்காய் வடிவம்கொண்ட வெள்ளிச் சரிகைகளைக்கொண்ட அழகான சேலை அது. சிறுமியான சுரையா தலைக்கு ‘டயானா கட்’ பண்ணியிருக்கிறாள். பிங்க் நிறத்தில் மினி ஸ்கேர்ட்டும் வெள்ளை டீசேர்ட்டும் அணிந்திருக்கிறாள். மொத்த மாவடியூருமே பெருநாளைக் கொண்டாடித்தீர்க்கிறது. ஊர் முழுக்க நாகூர் ஹனீபாவின் பாடல் ஒலிக்கிறது. றபான் ஓசை எழுகிறது. ஊரின் மத்தியில் உள்ள மைதானத்தில் இராட்டினங்கள் சுற்றுகின்றன. தன் மகளான சுரையா இராட்டினத்தில் சுற்றி விளையாடுவதைக் கண்டு தந்தை மகிழ்ச்சியில் திளைத்து அதைச் சுற்றிச் சுற்றிப் படமெடுக்கிறார்.

சில ஆண்டுகளில், சுரையா ஆடவர் முன்னிலையில் தாவணி போடவேண்டும் என்று வீட்டில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. வெறுமனே ஒரு செவ்வக வடிவத் துணியைக் கழுத்தில் சுற்றி மார்புப்பகுதியை மறைக்கும் வண்ணம் அணிந்திருக்கும் சட்டைக்கு முன்னே போடுவதுதான் தாவணி. முதலில் வீட்டில் எந்நேரமும் தாவணி அணியவேண்டும் என்பதுதான் விதியாக இருந்தது. அப்புறம் அது வசதியில்லை என்பதால் வேற்று ஆடவர் வீட்டிற்கு வரும் சமயமும் வெளியே போகும்போதும் தாவணி அணிந்தால் போதும் என்று சட்டம் தளர்த்தப்படுகிறது.

மதராஸா கல்விக்கூடங்களின் ஆதிக்கம் ஊரில் அதிகரிக்கிறது. பெண் குழந்தைகள் எல்லோரும் கைக்குட்டையைத் தலையில் போர்த்தியவாறே மதராஸா பள்ளியில் அல்குரான் ஓதவேண்டும் என்று பணிக்கப்படுகிறார்கள். கைக்குட்டையை மறந்து வருகிறவர்களுக்கு அடி விழுகிறது. சுரையாவுக்கு ஒரு அக்காளும் உண்டு. அவளது பெயர் அனீஸா. சுரையாயைவிட அனீஸாவுக்கு பன்னிரண்டு வயது அதிகம். அவள் இப்போது புதிதாக ஒரு உடையை அணிந்தபடி பாடசாலையிலிருந்து திரும்புகிறாள். ஈரானுக்குப் போன சபீக் மௌலவி ஊருக்குத் திரும்பியதும் பிறப்பித்த கட்டளை அதுவாம். இனிமேல் பள்ளியில் அத்தனை பெண்களும் அந்த உடையையே அணியவேண்டும் என்றும் அணியாவிட்டால் அல்லாஹ் தண்டனை கொடுப்பான் என்றும் அந்த மௌலவி சட்டம் இயற்றியிருக்கிறார். அனீஸா தன் தலையை மூடி அணிந்திருந்த உடையைச் சுரையா தடவிப் பார்த்தாள். அதற்கு என்ன பெயர் என்று அக்காளிடம் கேட்கிறாள். அனீஸாவுக்கு அந்தப் புதிய ஆடையின் பெயர் மறந்துவிட்டிருந்தது. அடுத்த நாள் பாடசாலையில் பெயரை விசாரித்துவிட்டு, வீடு திரும்பும்வரைக்கும் பெயரை மறந்துவிடக்கூடாது என்று அவள் அதனை உச்சரித்துக்கொண்டே வந்தாள்.

“பர்தா, பர்தா, பர்தா”

மாணவிகள் மாத்திரமின்றி ஆசிரியர்களும் பர்தா அணியவேண்டும் என்று பாடசாலையில் சட்டம் இயற்றப்படுகிறது. ‘உங்களுக்கு இப்படி உடுப்பு அணிந்துகொண்டு ஆண்கள் முன்னே நிற்க வெட்கமாக இல்லையா?’ என்று பர்தா அணியாத ஆசிரியைகளைப் பார்த்து ஆண்கள் கேட்கிறார்கள். சில ஆசிரியைகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பலர் எதற்கு வம்பு என்று பர்தா அணிய ஆரம்பிக்கிறார்கள். ‘பொம்புளப் புள்ளைகள பொத்தி வச்சு வளர்க்கவேண்டும்’ என்று பாடசாலையை ஆண்கள், பெண்கள் எனப் இரண்டாகப் பிரிக்கிறார்கள். பர்தா கலாசாரம் மெல்ல மெல்ல ஊர் முழுதும் பரவுகிறது. அலுவலகங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள்.

ஈரானுடைய கலாசார செல்வாக்கு இலங்கை முஸ்லிம்கள்மீது பாதிப்பை செலுத்த ஆரம்பிக்கிறது. இரண்டு அரசாங்கங்களும் நல்லுறவில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். அதனால் ஈரானுக்குப் பயணம் செய்து திரும்புபவர்கள் அதிகமாகிறார்கள். திரும்புபவர்கள் அந்நாட்டின் அடிப்படைவாதங்களையும் கூடவே சுமந்து வருகிறார்கள். அதே சமயம் ஊருக்குள் இந்தக் கலாசார மாற்றத்திற்கு எதிர்ப்பும் உருவாகிறது. அல்குர்ஆனில் பர்தா பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை என்று ஒரு குழு ஆட்சேபிக்கிறது. இவ்வகை போலி மாற்றங்கள் சமூகத்தில் பாரிய பிரச்சனைகளைப் பின்னாளில் ஏற்படுத்தும் என்று அக்குழு எச்சரிக்கிறது. வழமைபோல அக்குழுவின் குரலைச் செவிமடுக்கப் பலரும் தயாராக இருக்கவில்லை.

சுரையாவையும் இப்போது பர்தா போடுமாறு வீட்டில் வற்புறுத்துகிறார்கள். ஒரு உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக குஷ்பு கொண்டையும் வண்ணமயமான சுடிதாரும் அணிந்து தயாராக இருந்த சுரையாவுக்கு பழுப்பு நிறத்தில் பர்தாவை தாயார் அணிந்துவிடுகிறார். தொடர்ந்து இனிமேல் அவள் பர்தாதான் போடவேண்டும் என்று தந்தை கட்டளையிட மகள் மறுக்கிறாள். அப்போது கோபத்தில் ‘இந்தா சப்பு’ என்று அவள் செத்தல் மிளகாய்களை சுரையாவின் வாயில் அவர் திணிக்கிறார். உடை மட்டுமின்றி மேலும் பல தடைகள் பெண்கள்மேல் விழுகிறது. திருமண நிகழ்வுகளில் பெண்கள் குலவை போடுவது ஹராம் என்று சொல்லப்படுகிறது.

‘அழகை மறைத்தலும் மறைத்தலின் அழகும்’ என்று ஒரு சஞ்சிகை வெளியாக ஆரம்பிக்கிறது. அதில் உடலை மறைப்பதன் அந்தரங்கமான குறுகுறுப்பைப் பற்றிய கட்டுரைகள் இருந்தன. இதனை வாசித்த சுரையாவுக்கு பர்தா அணிவதில் ஒருவித ஆர்வம் உருவானது. பர்தா அத்தனை மோசமான ஆடை ஒன்றும் இல்லை. அது அவளது அழகை மேலும் மெருகூட்டுகிறது என்ற நம்பிக்கையை அக்கட்டுரைகள் ஏற்படுத்தின. சஞ்சிகை ஊர் முழுதும் பரவ ஆரம்பித்தது. பர்தாவை கறுப்பு, வெள்ளை நிறாமென்றில்லாமல் பச்சை, நீலம், பிங்க் என்று பல வண்ணங்களில் அணியலாம் எனப் பெண்களுக்கு மதராஸாவில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது.

இப்போது புதிதாக பாவாடைக்குழு ஒன்று ஊருக்குள் நுழைகிறது. ஆண்களை அது பள்ளிவாசலுக்கு அழைக்கிறது. இறைவனை நெருங்குவதற்குப் பள்ளிவாசலிலேயே ஆண்கள் தங்கவேண்டும் என்று அது சொல்கிறது. பெண்களையும் குழந்தைகளையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்கிறது. பெண்கள் பர்தா அணிவதோடு மாத்திரமின்றி முகத்தையும் மூடித் துணிக்கவசம் போடவேண்டும் என்று பாவாடைக்குழு சொல்கிறது. ஒருமுறை தெருவில் யாருமில்லாத சமயத்தில் சுரையாவும் நண்பிகளும் முகத்திரையை அகற்றப்போக, அவர்கள் பிடிபட்டு தண்டனை பெறுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் முகத்தை மறைக்கும் முறைமைக்கு சமூகம் இசைவாக்கப்படுகிறது.

காலம் நகர்கிறது. ஈரானின் செல்வாக்கு அருகி சவூதியின் செல்வாக்கு இப்போது அதிகரிக்கிறது. பல பெண்கள் தொழில் நிமித்தம் சவூதிக்குச் சென்று திரும்புகிறார்கள். அவர்கள் ஊருக்கு வரும்போது உடை முழுதும் மறைத்து கண்களுக்கு மாத்திரம் திரை திறக்கும் ஹபயா என்ற உடையை அணிந்து வருகிறார்கள். ஊரில் பெண்களின் உடைகள் எல்லாம் கறுப்பாகின்றன. தலை போர்த்தி முகம் மறைக்கும் பர்தா ஒருபுறம். மொத்தமும் மூடி கண்கள் மட்டுமே திறந்திருக்கும் ஹபாயா மறுபுறம். எல்லாமே கறுப்பு நிறமாகின்றன. ஆண்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனை மனிதர்களும் இதற்கு ஆதரவாகவோ, அல்லது அச்சத்தால் எதிர்க்காமலோ இருக்க, கொஞ்ச நஞ்சமிருந்த ஆட்சேபங்களும் அடங்கிவிடுகின்றன.

சுரையா உயர்கல்விக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிச் செல்கிறாள். ஆனால் அங்குமே உடை அதிகாரம் அவளைத் துரத்துகிறது. அங்கிருக்கும் இஸ்லாமிய ஆண் மாணவர்கள் சுரையா எவ்வகையான உடையை அணியவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். அவளுடைய இஸ்லாமியக் காதலனுக்குக் கொஞ்சமேனும் புரிந்துணர்வு இருந்தாலும் சமூக அழுத்தத்தை மீற அவனால் இயலவில்லை. இருவரும் திருமணமாகி லண்டன் செல்கிறார்கள். அங்குமே ஆடை சுரையாவைத் துரத்துகிறது. குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களைச் சமயக் கல்விக்கு அனுப்ப முயற்சி செய்கையில் லண்டனிலும் அவளுடைய குழந்தைகள்மீது ஆடைகளுக்கான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்குப் பர்தாவும் ஹபாயாவும்தான் அழகு. அவர்கள் ஆடல், பாடல்போன்ற கலைகளில் ஈடுபடுவது ஹராம் என்று லண்டன் மதராஸாவில் பாடம் புகட்டப்படுகிறது. சுரையாவின் குழந்தையும் அதனை நம்ப ஆரம்பிக்கிறாள். அவளுக்குப் பர்தாமீது காதல் பிறக்கிறது. ஆடலை குழந்தை வெறுக்க ஆரம்பிக்கிறாள். சுரையாவின் குடும்பத்திலும் பிரிவு ஏற்படுகிறது. இதற்கிடையில் சுரையா அணிந்திருக்கும் உடையின் காரணமாகவே லண்டனில் அவளைச் சந்தேகத்துடனும் துவேசத்துடனும் வெள்ளையினம் வேறு பிரிக்கிறது.

ஒருபுறம் உடையை அவள்மேல் திணிக்கும் கூட்டம். மறுபுறம் உடையை அவளிடமிருந்து அகற்ற நினைக்கும் கூட்டம். ஊருக்குப் போனால் அவளை அந்நியமாகப் பார்க்கும் சொந்தம். இதற்கிடையில் பிரசாரங்களுக்கு எடுபட்டு அந்த உடையைக் கொண்டாடவேண்டுமென நினைக்கும் அவளுடைய குழந்தைகள்.

சுரையாவின் இந்த அவல வாழ்வுதான் பர்தா நாவல்.

இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் பெண்கள்மீது சுமத்தப்படும் உடை அதிகாரத்தை இத்தனை ஆழமாகப் பேசிய இன்னொரு தமிழ் நாவல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆப்கானிய சமூகத்தில் பெண்களின் வாழ்வு ஆட்சி மாற்றங்களோடு எப்படி அடக்குமுறைக்குள்ளானது என்பதை காலித் ஹூசெயினியின் “Thousands of Spendid Suns” என்கின்ற நாவல் அற்புதமாகப் பேசியிருக்கும். இலங்கைச் சூழலில் இடம்பெற்றுள்ள அவ்வகை முயற்சியாகப் பர்தா நாவலைக் குறிப்பிடமுடியும். உடை எனும் ஒற்றைச்சிக்கலைச் சுற்றி முழு நாவலையும் கட்டியமைத்ததன்மூலம் தனது பேசு பொருளைக் குழப்பங்களின்றி முன்வைக்க மாஜிதாவால் முடிந்திருக்கிறது. ஒரு சமூகத்தின் வாழ்வையும், அந்த வாழ்வில் இருக்கின்ற கொண்டாட்டங்களையும், அதன் மனிதர்களையும், மனிதர்களுக்கிடையே இருக்கின்ற அதிகார இச்சைகளையும், எப்படிப் பிறிதொரு கலாசாரம் இந்த மனிதர்கள்மீது திணிக்கப்படுகின்றது என்பதையும், எங்குமே பெண்கள்தான் கலாசாரத்தின் பிரதான பலிகடாக்கள் என்பதையும் பர்தா நாவல் மிகச்சிறப்பாகவும் துணிச்சலாகவும் பேசுகிறது.

இந்நாவல் முதன்மையாகப் பேசுகின்ற சமூகச் சிக்கல்தான் இதன் பெரும் பலம் என்றாலும் வாழ்வியலையும் அது பேசத்தவறவில்லை. கிழக்கிலங்கை இஸ்லாமியர்களின் பெருநாள் கொண்டாட்டம், அவர்களின் உணவு, திருமணங்களின் சடங்குகள், குலவை என பல விசயங்களை நாவல் தொட்டுச்செல்கிறது. பராஆத் ரொட்டியை தட்டில் ஏந்தியவாறு முயல்கள்போல வீதியில் குழந்தைகள் தாவித் திரியும்போது நமக்கும் அந்த உற்சாகம் எட்டிவிடுகிறது. மொழிகூட ஆங்காங்கே அழகாய்த் தெரிகிறது. ஹயாத்து லெப்பை ‘நெருப்புத் தணலில் போட்ட பிலாக்கொட்டைபோல வெடித்துக்கொண்டேயிருப்பார்’ என்ற வரி அழகு. ‘திமிங்கிலமொன்றில் ஏறியிருப்பதுபோல சலவைக்கல்லொன்றில் அமர்ந்திருந்து துணி துவைக்கும் பீவி’ என்ற வரி அழகு. சுரையா மாவடியூரை விட்டு வெளியேறி கொழும்புக்கு பஸ்ஸில் பயணம் செய்யும்போது ‘அவளது பர்தாவுக்குள் ஒளிந்திருந்த முடிக்கற்றைகள் சில நெற்றியின் வழியே வெளியேறிக் காற்றின் இசையில் ஆனந்தக் கூத்தாடின’ என்ற வரிகள் சொல்லும் படிமம் அழகு. இப்படி நாவல்பூராக தன் மொழியின் சாத்தியங்களை மாஜிதா பரிசோதித்தபடியே செல்வார்.

பர்தா நாவலின் மிகப்பெரிய சிக்கல் என்பது அதன் காலப்பரிமாணம்தான். நாவலில் சம்பவங்கள் இடம்பெறும் காலத்தைக் கணிப்பது வாசிப்பவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. உதாரணத்துக்கு நாவலின் ஆரம்பத்தில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்கு வந்து எட்டாண்டுகளில் என்றொரு கூற்று வருகிறது. அப்படிப்பார்த்தால் ஆரம்ப அத்தியாயத்தில் சிறுமியான சுரையா டயானா கட் பண்ணிய காலம் 85ம் ஆண்டு என்றாகிறது. பின்னர் ரோஜாவைக் கிள்ளாதே படம் வெளியாகிறது. அது 93ம் ஆண்டு. அதன் பின்னர் சில காலம் கழித்து சின்னத்தம்பி வெளியாகிறது. ஆனால் சின்னத்தம்பி திரைப்படம் வெளியானது 91ம் ஆண்டு. அதுகூடப் பரவாயில்லை, நாவல் ஒரு கட்டத்தில் எண்பதாம் ஆண்டுக்குத் தாவுகிறது. அப்போதும் சுரையாவின் பாத்திரம் வருகிறது. இது எப்படி சாத்தியம் என்று புரியவேயில்லை. கதை சொல்லும் காலகட்டங்களை அவ்வப்போது நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளோடு காட்டும்போது ஏற்படும் இப்படியான குழப்பங்கள் வாசிப்புக்குப் பெருத்த இடையூறாக இருக்கவே செய்கிறது.

கருத்தியலை ஆழமாகவும் நேர்த்தியாகவும் சொல்லவேண்டும் என்பதில் காட்டிய அதீதக் கரிசனம் கதை சொல்லலில் இல்லையோ என்றும் சந்தேகம் வருகிறது. ஒருவிதத்தில் இந்நாவல் சுரையாவின் “Coming of age”வகை கதைதான். ஆனால் அதன் பிற்பகுதி அவசர அவசரமாக எழுதப்பட்டதுபோலத் தெரிகிறது. சுரையா நான்கு குழந்தைகளுக்குத் தாய் என்றும் அவர்களது ஒரு ஒற்றைக்குடும்பம் என்றும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படும். ஆனால் அது எப்படி நிகழ்ந்தது என்பதும் இர்பானுக்கும் சுரையாவுக்குமான உறவு என்னானது என்பது பற்றிய எந்தக் குறிப்புகளும் நாவலில் இல்லை. உண்மையில் நாவலின் பிற்பாதியில் ஒரு நவீன, படித்த ஒரு இஸ்லாமியக் குடும்பத்தினுள் இருக்கக்கூடிய சகிப்புத்தன்மைகள், அடக்குமுறைகள், அங்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை விரிவாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் மாஜிதாவுக்கு இருந்தது. ஏனோ அவர் அதனை மேலோட்டமாகவே கையாண்டிருக்கிறார்.

நாவலின் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்லி வருகிறார். அவரும் ஒரு இஸ்லாமியப் பெண்தான். எழுத்தாளர் மாஜிதாவாகக்கூட அவரைக் கற்பனை பண்ணிக்கொள்ளலாம். ஆனால் நாவல் என்ற அடிப்படையில் அந்தக் கதை சொல்லியையும்கூட நாம் புனைவாகவே அணுகவேண்டும். இலண்டனில் இடம்பெற்ற இரங்கல் கூட்டம் ஒன்றில் அந்தக் கதை சொல்லி சுரையா என்ற பாத்திரத்தைச் சந்தித்து உரையாடுகிறார். சுரையா தனது வீட்டுக்கு வருமாறு கதை சொல்லியை அழைக்கிறார். தனது மொத்த வாழ்வின் நிகழ்வுகளையும் இவரோடு பகிர்கிறார். அதனைத்தான் கதைசொல்லி நமக்கு முழு நாவலாகத் தருகிறார். நாவலின் ஆரம்பத்தில் வருகின்ற இக் கதைசொல்லி பின்னர் நாவலில் காணாமலேயே போய்விடுகிறார். இப்படி ஒரு நாவலில் கதைசொல்லி இன்னொரு பாத்திரத்தின் கதையைக் கேட்டு சொல்லும் நுட்பத்தை ஆங்கிலத்தில் ‘frame narrative’ என்பார்கள். பொதுவாக இவ்வகைக் கட்டமைப்பில் ஆரம்ப கதை சொல்லியாக எழுத்தாளரே தன்னை உருவகித்துக்கொள்வதுண்டு. சேட்டன் பகத்தினுடைய பல நாவல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. ‘இச்சா’ நாவலிலும் ஷோபா சக்தி இந்த நுட்பத்தையே பயன்படுத்தியிருப்பார். ‘பர்தா’ நாவலிலும் மாஜிதா ஏன் இந்த வடிவத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கதை சொல்லிமீது சந்தேகத்தை வரவழைத்து இது எழுத்தாளருடைய சொந்தக் கதை அல்ல, அவருக்கு யாரோ ஒருவர் சொன்ன கதை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் மாஜிதாவின் நோக்கம். சாதாரணமாக ஒரு எழுத்தாளருக்கு இப்படியான தோற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை இருப்பதில்லை. ஆனால் மத, இன அடிப்படைவாத எண்ணங்களைப் பெருமளவில் கொண்டிருக்கும் நம் சமூகங்களிடையேயிருந்து எழுதும்போது ஒரு பெண் எழுத்தாளராக மாஜிதாவுக்கு இருக்கக்கூடிய அழுத்தங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. எழுத்தாளரான மாஜிதா தனது நாவலின் பாத்திரங்களிலிருந்து தன்னைத் தள்ளிவைக்கவேண்டிய அவலத்தையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.

நாவல் என்னவோ இலங்கை இஸ்லாமியப் பெண்கள்மீது செலுத்தப்படும் ஆடை வன்முறையைப் பேசினாலும் இதன் மூலச்செய்தி எல்லாச் சமூகத்துக்குமானது. கலாசாரம் என்பது பல சமயங்களில் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஆயுதமாகத்தான் நம்மீது பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பெண்களைத்தான் நாம் கலாசாரத்தின் கொடி தூக்கிகளாக(flagbearers) நாம் முன்னிறுத்துகிறோம். பொதுவாக உற்று நோக்கும்போது ஆண்கள்தான் தாமே நிர்ணயிக்கும் கலாசாரத்தைச் சீரழிப்பவர்களாக இருக்கிறார்கள். போதை வஸ்து, பாலியல் துன்புறுத்தல்கள், வல்லுறவுகள், மிரட்டல்கள், கொலை, திருட்டு, அதிகாரத் துஷ்பிரயோகம், தீவிரவாதம் என்று சமூகத்தின் பெரும் அவலங்கள் என நாம் சிந்திப்பவை எவற்றையெடுத்தாலும் அதனை ஆண்களே முதன்மையாக முன்னெடுப்பவர்கள். ஆனால் இங்கே ஒரு பெண் தன் விருப்பப்படி உடையை மாற்றி அணிந்தாலே கலாசாரக் காவலர்கள் வீறுகொண்டு எழுந்துவிடுகிறார்கள். இவற்றைக் கேள்வி கேட்பவர்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள்.

சமூக முன்னேற்றம் என்பது ஒரு சமூகத்தின் வாழ்வையும் கொண்டாட்டங்களையும் அடியோடு நிராகரிப்பதல்ல. சமூக நீதியை நிலை நிறுத்தாத, சம நீதிக்கு எதிரான கொண்டாட்டங்களையும், பழக்க வழக்கங்களையும் வழமைகளையும் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்பதன்மூலம் மாற்றங்களை உள்வாங்க வைப்பதுதான் சமூக முன்னேற்றம். பொதுப்புத்தி அதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை. அது ஆட்டு மந்தைபோல வழமை எதுவோ அதனைப் பின் தொடர்ந்து செல்லும். இன்று வழமை எனப்படுவது சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சமூக மாற்றத்தின் விளை பயிர் என்பதை அது அறியப்போவதில்லை. அதனால் இன்றைய சமூகம் நாசூக்காக முன்வைக்கும் அதிகார வன்முறைகளைக் கண்டறிந்து எதிர்ப்பது என்பது இலக்கியங்களின் முக்கிய பணிகளுள் ஒன்று. பர்தா நாவல் அதனை மிகச் சரியாகச் செய்கிறது. இஸ்லாமியர்களின் வாழ்வியலை அது பதிவு செய்கிறது. அவர்களின் களியாட்டங்களை அது கொண்டாடுகிறது. ஆனால் அவற்றுக்கிடையே இடம்பெறும் அதிகார வன்முறைகளை அது விமர்சிக்கிறது. அதனூடு ஒரு சிறு அளவிலேனும் உரையாடலையும் மாற்றத்தையும் ஏற்படுத்த அது முயற்சி செய்கிறது. மாஜிதாவின் இந்த எழுத்துப் பக்குவம் சமூகத்துக்கு மிகத் தேவையான ஒன்று.

ஆணாதிக்கம் என்பது காலனித்துவம் போன்றதான ஒரு மனநிலை. காலனித்துவத்தை அறிமுகப்படுத்தி வைத்தது மேற்கத்திய அரசுகளாக இருக்கலாம். ஆனால் காலனித்துவ மனநிலையை இன்றைக்கும் சிக்கெனக் கடைப்பிடிப்பது யாரெனில் எமது உள்ளூர் அதிகாரபீடங்கள்தான். அதேபோலத்தான் ஆணாதிக்கமும். அதன் தோற்றுவாய் என்னவோ ஆண்கள்தான். ஆனால் அந்த மனநிலையை இன்றைக்கும் பெரும்பாலான ஆண்களோடு பெண்களும்கூட காவிக்கொண்டு திரிகிறார்கள். பல சமயங்களில் பெண்களே ஆண்களிலும் மோசமாக இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். பெண்கள் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல் ஆணாதிக்கம் இல்லையென்று ஆகிவிடாது.

நாவலில் ஓரிடத்தில் பர்ஹானா என்கின்ற படித்த, நகரத்தில் வளர்ந்த பெண் பர்தா அணிவது தனது சுய விருப்பம் என்று சுரையாவிடம் சொல்வாள். அதற்கு சுரையா சொல்லும் பதில் ஆணித்தரமாக இருக்கும்.

“பர்ஹானா. என்னை மன்னிச்சுக்கொள். உனக்கு இந்த பர்தாவில் இவ்வளவு விருப்பம் இருப்பது எனக்குத் தெரியாது. நமக்கு எந்த ஆடை விருப்பமோ அதைத்தான் நாம் அணிய வேண்டும். நீ சொன்னமாதிரி என்னைப்போன்ற பெண்கள் நிறையவே அனுபவிச்சதால எனக்கு இந்தப் பர்தா எப்பவுமே சுமைதான். நீ நகரத்துல பிறந்து வளர்ந்தவள். அதுவும் உன்னுடைய குடும்பம் வசதியானது. இப்ப நீ நினைத்தால் இந்தப் பர்தாவைக் கழற்ற முடியும். அது மட்டுமில்ல. பர்தாவை அணியிறது லேசான விடயம். நிறையப் பேரு ஆதிரிப்பாங்க. நமக்கும் நல்லவள் என்ற பெயர் வரும். ஆனால், அதைக் கழற்றுவது லேசான விடயமில்ல. என்னைப்போல பர்தாவை நாங்கள் விரும்பித்தான் அணிகிறோம் என்று சில பெண்கள் கூறுவதற்குப் பின்னால் ஆண்களின் அதிகாரம் நிறையவே இருகு”

சமூகத்தின் அநீதிகளைக் கலாசாரம் என்ற பெயரில் அணிந்து திரிவது இலகு. ஆனால் அது தவறு என்று தெரியும் கணத்தில் கழற்றி எறிதல் கடினமானது. அதிகாரமும் பொதுப்புத்தியும் அப்போது நம்மேல் வசை பாடும். கொலை மிரட்டல்கூடக் கிடைக்கும். எனினும் எதற்கும் அஞ்சாது சிலர் துணிந்து அதை முன்னெடுப்பார்கள்.

அவர்களே சமூகத்தின் நிஜமான கலாசாரக் காவலர்கள்.

***
இக்கட்டுரை அகழ் இணைய இதழில் பிரசுரமானது.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .