Skip to main content

மண்ணெண்ணெய்

 

PR9A9628

கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள்.

என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா?”
இல்ல கோமளா சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது
அதுக்கு?”

நமசிவாயம் தயங்கினார்.

” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா? எண்டு வந்திட்டன்.
ஏன் இங்க வந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும் போய் துலைஞ்சிருக்கலாமே

குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார்.

இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது....
ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள்.. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும்? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல

“கிளுக்”, உள்ளே படித்துக்கொண்டிருந்த பேரன் சிரித்த சத்தம் கேட்டது. நமசிவாயம் கூசிக்குறுகி போனார். திரும்பித்திட்டலாமா? வேண்டாம். சண்டை பெரிசாகும். சிவநாதனிடம் இல்லாததை போட்டுக்கொடுப்பாள். அவனும் மனிசிக்கு தான் வக்காலத்து வாங்குவான். கடைசிக்காலத்தில் மகனோடு சண்டை பிடித்து அவரும் தான் எங்கே போவார்? “எனக்கு வாய்த்தது இப்படி ஒரு மருமகள். இதில யார் என்ன செய்ய ஏலும்?”

நமசிவாயத்துக்கு பசி வயிற்றை கிள்ளியது. கிணற்றடியில் போய் முகத்தை அலம்பிவிட்டு, அப்படியே கொஞ்சம் வாளித்தண்ணியை குடித்துவிட்டு, மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தார். பரமேஸ்வரா சந்தியில் இருந்த சங்கக்கடையில் ஆரம்பித்த கியூ கம்பஸ், கலட்டி சந்தி வரை சென்று நாச்சிமார் கோயிலடியையும் தாண்டி நீண்டிருந்தது.. இரண்டு கட்டை கியூ இப்போது மூன்று கட்டை நீளத்தில். உரிஞ்சான் குண்டி சிறுவர்கள், மூக்குச்சளி சிறுமிகள், அரும்பு மீசை அரை காற்சட்டைகள், குடைவெட்டு பாவாடைகள், கூச்சல் போடும் கம்பஸ் மாணவர்கள், பத்திரிகை, புத்தகங்களோடு மூழ்கியவர்கள், அம்மாமாரின் விடுப்பு கதைகள் என்று ஒரு குட்டி யாழ்ப்பாணமே மண்ணெண்ணெய்க்காய் வெயிலில் எரிந்தது.

முதல் தடவை அவர் கியூவில் நின்ற இடம் இப்போது ஓரளவுக்கு முன்னேறி நெருங்கி இருந்தது. போய் அந்த இடத்திலேயே நிற்கலாம். ஆனால் பின்னால் நிற்பவர்கள் திட்டுவார்கள். ஊர்க்காரர்கள் தான். நமசிவாயத்துக்கு அவர்கள் எல்லோரையும் தெரியும். அவர் அதிலே நின்றுவிட்டு இடைநடுவில் ஏலாது என்று வீடு திரும்பியதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் விடமாட்டார்கள். ஒருவர் வரிசையில் குறைந்தாலும் பின்னால் நிற்பவருக்கு எண்ணை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால் தெரிந்தவரை கண்டாலும் ஒரு குட்டி தலையசைப்பு. அவ்வளவே. உதவமாட்டார்கள். முடியாது. மண்ணெண்ணெயின் தேவை இது எல்லாவற்றையும் மீறியது.

மூன்று நாளைக்கு முன்னர் தான் லங்காமுடித்தா யாழ்ப்பாணம் வந்திருந்தது. ஆறுமாதத்துக்கு பிறகு வரும் முதல் மண்ணெண்ணெய் கப்பல். கப்பல் எண்ணையை இயக்கம், அரச ஊழியர், ஆஸ்பத்திரி, விதானை, கடைக்காரர் என்று ஆளாளுக்கு எடுத்தபின்னர் குடும்பத்துக்கு அரைலீட்டர் என்று அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். சுட்டிவிளக்கில் சுண்டிக்கொண்டிருந்த வீடுகள் இனிமேல் கொஞ்சநாளைக்கு மண்ணெண்ணெய் விளக்குக்கு மாறும். இருள் எண்ணை தீரும்வரை கொஞ்சம் விலகியிருக்கும். அந்த அரை லீட்டருக்காக இத்தனை போராட்டம். உறவுகள், தெரிந்தவர்கள், அன்பு, பாசம் எல்லாமே அரை லீட்டர் மண்ணெண்ணெய்க்காய் எரிந்து சாம்பலாகும்.

எதற்கு தேவையில்லாத சோலி என்று நமசிவாயம் சத்தம்போடாமல் வரிசையின் கடைசியில் போய் நின்றார். உச்சி வெயில், தலையில் துவாயை போர்த்தி கொண்டு நின்றாலும் தலை சுத்தியது.

கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது.

கோள்முட்டி; இது வந்து வேவு பார்த்துவிட்டு போனால், அடுத்ததாக குண்டு விமானங்கள் விரைந்துவரும். எந்த பிரதேசத்தில் சுற்றுகிறதோ அந்த இடத்தை படம்பிடித்து கொடுக்கும். தொடர்ந்து பொம்மர்கள் வரும். வந்து மூன்று தடவைகள் சுற்றி சுற்றி பதிந்து குண்டுகளை பொழிந்துவிட்டு திரும்பிவிடும். சில இறப்புகள், செத்தவீடுகள், துப்புரவாக்கல்கள், சோககீதங்கள் என்று நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பிவிடும்.

இந்த சனியன் பிடிச்சவன் வெள்ளன கிடந்து சுத்துறான் .. எங்கட ஏரியாவில தான் இண்டைக்கு பூசை போல அதுக்குள்ள எண்ணைய வாங்கிட்டு வீட்ட போயிடோணும்.

கியூவில் முன்னால் நின்றவர் சொல்லிக்கொண்டிருக்க நமசிவாயத்துக்கு வெள்ளன நடந்த சம்பவங்கள் ஞாபகம் வந்தது.

*******************

வழமை போலவே அன்றைக்கும் நமசிவாயம் அதிகாலை எழுந்து கை கால் முகம் கழுவி, பூ ஆய்ந்து சாமியறை படங்களுக்கு வைத்தார். மனைவி படத்துக்கு முன்னே செவ்வரத்தை ஒன்றை வைத்து சிறிது நேரம் கண்மூடியபடி இருந்தவர், “நீ இருந்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா? அப்பனே முருகா” என்று சொல்லியபடியே வீபூதி பூசியபடியே, வெளியே வர, கோமளா சிரித்தபடியே நின்றாள். கையில் மண்ணெண்ணெய் கான் இருந்தது.

கோள்மூட்டியின் ரீ... சத்தம் அப்போது தான் தூரத்தே கேட்க ஆரம்பித்தது.

சங்கக்கடையில கூப்பன் கார்ட்டுக்கு அரை லீட்டர் மண்ணெண்ணெய் குடுக்கிறாங்கள் .. ஒருக்கா வாங்கியோண்டு வாறீங்களா மாமா?”

“மாமா” வில் ஓர் அழுத்தம் தெரிந்தது. நமசிவாயம் ஏதோ சொல்ல வாயெடுக்க முதலே,

தேத்தண்ணிக்கு இப்ப தான் தண்ணி வச்சிருக்கிறன் .. அதுக்குள்ள வாங்கியோண்டு வாங்க என்ன

“கா..” என்று ஆரம்பித்தவரை பேசவிடாமல் தொடர்ந்தார்

உங்கட கூப்பன் கார்ட்டும் எடுத்து வச்சிட்டன் மாமா .. இந்தாங்க .. டக்கெண்டு போயிட்டு வாங்க

அவர் பேசாமல் கானையும் கார்ட்டுகளையும் கோமளாவிடமிருந்து வாங்கினார். அறைக்குள் போய் தன் பேர்சை எடுத்து பார்த்தார். முந்தைய நாள் எடுத்த பென்ஷன் காசு ஆயிரம் ரூபாயில், கோமளாவுக்கு ஐநூறு, கடன் இருநூறு கொடுத்தது போக மீதி முன்னூறு ரூபாய் இருந்தது. கார்டுக்கு அரை லீட்டர் படி ஒரு லீட்டர் எண்ணை எண்பது ரூபாய் ஆகும். மிகுதி இருநூற்றிருபது ரூபாயில் அடுத்த பென்ஷன் வரை சமாளிக்கவேண்டும். முடியாது. நமசிவாயம் தயங்கினார்.

பிள்ள எண்ணைக்கு காசு?”

பென்ஷன் காசு முன்னூறு ரூவா இருக்கோணுமே? அதுக்குள்ள குடிச்சிட்டீங்களா?”

சொன்னபடியே கோமளா குசினிப்பக்கம் திரும்பிப்பார்க்காமல் நடந்துபோனாள். நமசிவாயம் தலைகுனிந்தபடியே கடைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். முற்றத்தில் மகன் சிவநாதன் தேநீர் குடித்தபடியே உதயன் வாசித்துக்கொண்டிருந்தான்.

ரீ... நெருங்கிக்கேட்டது.

***************

ஐயா என்ன வெங்கலாந்திக்கொண்டு நிக்கிறீங்க .. லைன் முன்னுக்கு போகுது .. ஆரும் பூரப்போறாங்கள்

நமசிவாயம் சுயநினைவுக்கு திரும்பினார். யாழ்ப்பாண உச்சி வெயில் அனல் பறந்தது. ரீ... சத்தம் கொஞ்சம் குறைந்தால் போல இருந்தது. அல்லது அது எப்போதே திரும்பியிருக்கலாம். ஆனால் காதுகளில் இன்னமும் கேட்டபடி இருந்தது. கியூ இப்போது நன்றாக முன்னேறிவிட்டது. முன்னேற முன்னேற நெரிசல் அதிகமானது. முன்னுக்கு நின்று எண்ணையை வாங்கியவர்கள் திரும்பிபோது இவர்களை பார்த்து ஒருவித வெற்றிப்பெருமிதத்தொடு ஏளனமாக சிரித்துக்கொண்டு போவது போல தோன்றியது. சிலர் மோட்டர் சைக்கிளில் வந்து முன்னால் நின்ற சிறுவர்களிடம் காசுகொடுத்து இடத்தை பிடித்துக்கொண்டார்கள். அந்த சிறுவர்கள் மீண்டும் கியூவுக்கு பின்னால் போய் நிற்கவென ஓடினார்கள். ஒரு நடுத்தர வயது பெண்மணி, குளிர்கண்ணாடி அணிந்தபடி ஒயிலாக மண்ணெண்ணெய் கானோடு கடையை நோக்கி போய்க்கொண்டிருந்தார். அந்தப்பெண் வரிசையில் நிற்காமலேயே வாங்கிவிடுவாள் என்று நமசிவாயம் நினைத்துக்கொண்டார். அவருக்கு முன்னால் வரிசையில் மெல்லிய சலசலப்பு உருவானது. கம்பஸ் மாணவர்களோடு புதிதாக வந்த சிலர் சிரித்து பேசி இடையில் நைசாக நுழைய முயன்றார்கள். நமசிவாயத்துக்கு முன்னால் நின்றவர் விடவில்லை.

தம்பியவை இப்பிடி இடைக்குள்ள பூந்தா எப்பிடி? நாங்க என்ன சிரைக்கவே இவ்வளவு நேரம் நிக்கிறம்?
வீட்ட வாங்க ஐயா .. சிரைக்கலாம்

ஒருத்தன் பதில் சொல்ல தொடர்ந்து சில “கூ” க்கள் சேர்ந்துகொண்டன. “இவங்களோட பேசி மானம் கெடுறதை விட பேசாம இருக்கலாம்” என்று முணுமுணுத்தபடியே சொன்னவர் அமைதியானார். நமசிவாயம் மௌனமாக தலையசைத்தார்.

*****************

சிவநாதன் முதன் முதலில் கோமளா விஷயத்தை வீட்டில் சொல்லியபோது நமசிவாயம் பதட்டப்படவில்லை. ஆனால் ஊர் பெயர் தெரிந்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டு போனார். "வேண்டாம்டா .. அந்த ஊர் பொம்பிளையள் ஆம்பிளையளை நிம்மதியா இருக்க விடமாட்டினம், கஷ்டப்படுவாய்" என்றார். "ஊரை வச்சு ஆக்களை எடை போடாதீங்க அப்பா .. அவள் நல்ல பெட்டை" என்றான் மகன். "சொல்லுறதை கேளு தம்பி". சிவநாதன் இவர் சொன்னதை கேட்கவில்லை. ஆனால் சொன்னதை அப்படியே கோமாளாவிடம் ஒப்புவித்திருக்கிறான். அங்கே ஆரம்பித்த கோபம் தான். பின்னர் நமசிவாயமே திருமணத்தை முன்னின்று நடத்தி, வீட்டை மகனுக்கு எழுதிக்கொடுத்து, கோமளாவை எந்த குறை சொல்லாமலும் நடத்தினாலும் அவள் பகைமையே பாராட்டினாள். அதுவும் நசுக்கிடாத பகைமை. நல்லவள் பட்டத்தை இலகுவாக வாங்கத்தெரிந்த கெட்டவள். நமசிவாயத்துக்கு எரிந்தது. சிவநாதன் ஏன் புரிந்து கொள்கிறான் இல்லை? புரிந்தும் இனி என்ன என்று நடிக்கிறானா? "எனக்கு வாய்த்தது இப்படி ஒரு மனைவி. இதில யார் என்ன செய்ய ஏலும்?" என்று நினைக்கிறானோ?

ஒருநாள் மா இடிக்க வந்த மனிசியிடம் "கிழடு செத்து துலயுதில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அப்போது இவர் கக்கூஸ் உள்ளே இருந்தார். அது தெரிந்தே கேட்கட்டும் என்று சொல்லியிருக்கலாம். இவருக்கு அவமானமாக போய்விட்டு. சத்தம் போட்டு உள்ளே இருப்பதை காட்டாமல் இருந்தார். தண்ணி ஊத்தி கழுவினால் சத்தம் கேட்கும் என்று அவள் அப்பால் போகும்வரை பொறுத்திருந்தார். போன பின்னர் வெளியே வந்தபோது மா இடிக்கும் மனிசி இவரை இளக்காரமாக பார்த்தது. நமசிவாயம் எதையுமே மறக்கவில்லை.

மனைவி உயிரோடு இருக்கும் வரைக்கும் இது எதுவுமே நமசிவாயத்துக்கு தோற்றவில்லை. ஆனால் அவள் இறந்தபின் எல்லாமே மாறியது. அப்போது நமசிவாயத்தின் மனைவியின் அந்தியேட்டி முடிந்து இரண்டு நாட்களும் ஆகியிருக்காது. கோமளா தான் ஆரம்பித்தாள்.

மாமா .. அவர் சம்பளத்தை தாற மாதிரி நீங்களும் உங்கட பென்ஷனை தந்து வையுங்கோவன் .. நானெண்டால் பத்திரமா வச்சிருப்பன்

கோமளா கேட்டபோது மறுக்கமுடியவில்லை. மறுக்கமுடியாதவாறு கேட்டாள். ஆனால் அது எவ்வளவு தவறென்று இரண்டே நாளில் புரிந்தது. பென்ஷன் நாளன்று விழுந்து விழுந்து கவனிப்பவள் காசு கை மாறியதும் கணக்கேடுக்கமாட்டாள். ஐந்து ரூபாய் வாங்க கூட மருமகளுடன் பத்து முறை கேட்கவேண்டியிருந்தது. அதை கூட ஏதோ தன் பணத்தை தருபவள் போல முகம் சுளிக்க ஆரம்பித்தாள். கணக்கு கேட்டாள். கேட்ட பணத்தை கொடுக்காது குறைத்து தர ஆரம்பித்தாள். கணக்கு கேட்டால் நெருப்பெடுத்தாள்.

நமசிவாயம் ஒருநாள் “இது சரிவராது, தான் வங்கியில் போடப்போகிறேன்” என்று சொல்லி கொடுப்பதை நிறுத்திவிட தான் குருஷேஸ்திரம் வெடித்தது. வீட்டில் இருப்பதென்றால் செலவுக்கு காசு தரவேண்டும், வீட்டு வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை போட ஆரம்பித்தாள். பொறுத்துக்கொண்டார். வடை, மோதகம் என எந்த நொறுக்கு தீனி செய்தாலும் நமசிவாயத்தை அது அண்டாது. கையில் இருக்கும் காசை எப்படியும் நோட்டம் பார்த்து நமசிவாயத்துக்கு செலவு வைத்துவிடுவாள். மகனை கொஞ்சி குலாவி அவள் வழிக்கு கொண்டுவந்து இவரை எதிரியாக்கினாள். “வயசு போன நேரத்தில சும்மா இரன் நீ” என்று மகன் திரும்ப திரும்ப சொல்லுவதை கேட்கும் திராணி அவருக்கு இல்லை. அவருக்கு மகன் வேண்டும். பேரன் வேண்டும். மருமகளை சமாளிக்கத்தான் வேண்டும். எவ்வளவு குண்டுகளையும் சமாளித்து இந்த வீட்டிலேயே வாழ்ந்து சாகவேண்டும். “நான் வெளியே போய் என்னத்த செய்யிறது?”

*******************

“அறுவாங்கள் வந்திட்டாங்கள்”

தூரத்தில் பொம்மர் விமானங்களின் சத்தம் கேட்க ஆரம்பித்தது. வரிசையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் கலையவில்லை. நமசிவாயத்துக்கு முன்னாலே ஒரு பத்துப்பேர் தான் நின்றிருப்பார்கள். “இன்னும் கொஞ்சப்பேர் தான் .. கடவுளே இவங்கள் இங்காலப்பக்கம் குண்டு போடக்கூடாது” என்று உள்ளே கும்பிட்டார். விமானம் முதல் தடவை தலைக்கு மேலேயே சுற்றியது. வரிசையில் பின்னால் நின்றவர்கள் அதை கண்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நழுவ தொடங்கினார்கள். நமசிவாயத்துக்கு முன்னாலே நின்றவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பிபார்த்தாலும் நகரவில்லை. சங்கக்கடைக்காரன் வேகவேகமாக எண்ணை கொடுத்துக்கொண்டிருந்தான். பத்து, ஒன்பது, எட்டு ஏழு ஐஞ்சு ஆறு .. கியூ வேகமாக முன்னேறியது.

kerosene_queue_1110517f

பொம்மர்கள் அந்த ஏரியாவையே வலம் வந்துகொண்டிருந்தது போல தெரிந்தது.

இவ்வளவு தான் .. பொம்மர் எங்கட பக்கம் தான் போடப்போறாங்கள் .. கடையை பூட்டப்போறம் எல்லாரும் போயிட்டு பிறகு வாங்கோ

சங்கக்கடை மனேஜர் சொல்ல நமசிவாயமும் முன்னால் நின்ற ஐந்து பேரும் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். போவதா? இவ்வளவு நேரம் நின்றுவிட்டு போவதா? திரும்பி வரும்போது மீண்டும் கியூவில் நிற்கவேண்டும். எண்ணை மீண்டும் கொடுப்பார்களோ தெரியாது. அனைவரும் அசையாமல் நின்றார்கள். பொம்மர் கூவிக்கொண்டு வந்தது. பின்னால் நின்றவர்கள் அனைவரும் கலைந்துவிட்டார்கள். நமசிவாயம் சைக்கிளையும் மண்ணெண்ணெய் கானையும் இறுக்க பற்றியபடி நின்றார். “குண்டடி பட்டு செத்தாலும் பறுவாயில்ல .. கோமாளாவிடம் வெறுங்கையோடு சென்று அவதிப்பட முடியாது, நாயெண்டும் மதிக்கமாட்டாள்”, தனக்குள் சொல்லியபடியே அசையாமல் நின்றார். பொம்மர் குனிந்தது. தலைக்கு மேலே கிறீச்சென்ற சத்தம். நமசிவாயமும் கூட நின்றவர்களும் விழுந்து படுத்தார்கள். ஒரு நூறு மீட்டர் தள்ளி குண்டு விழுந்து “டோம்” என்று வெடித்து சிதறியது. சன்னங்கள் பறந்தன. அமுக்கம் பக்கென்று தலையை அடித்துக்கொண்டு போனது. எங்கேயும் புகை.“முருகா முருகா”. “அம்மாளாச்சி”, “ஐயோ“ “ஓடுங்கடா எல்லாரும்”, “ஐயா விசரே உங்களுக்கு .. வீட்ட ஒடுங்க”, “ஐயோ எண்ட எண்ணை”. பல விதமான குரல்கள். பொம்மர் சத்தம் பலமாக கேட்டது. அடுத்த சுற்றுக்கு தயாரானது.

மண்ணெண்ணெய் கியூவை தான் டார்கட் பண்ணுறாங்கள் .. கெதியண்டு ஒடுங்க .. கடைல விழுந்தா பரலோட சேத்து கம்மாஸ் தான்

“முருகா முருகா” என்று சொல்லியபடியே நமசிவாயம் மெல்ல தலை நிமிர்த்தினார். முன்னுக்கு விழுந்து கிடந்தவர் தான் கத்திக்கொண்டே ஓடினார். இவர் மெல்ல எழுந்து நின்றார். பத்து நிமிடங்களுக்கு முன்னர் நின்ற குட்டி யாழ்ப்பாண கியூ வெறிச்சோடிப்போய் கிடந்தது. கடைகாரன் பூட்டிவிட்டு எப்போதோ ஓடிவிட்டான். “டக் டக் டக்” என்று எங்கோ ஒரு பற்றைக்குள் இருந்து இயக்கம் கலிபர் அடித்தது. பொம்மர் அசரவில்லை. பொம்மர் மீண்டும் அடுத்த குண்டை போடவென சுற்றியது. நமசிவாயம் விழுந்து கிடந்த சைக்கிளையும் மண்ணெண்ணெய் கானையும் எடுத்துக்கொண்டு வீடு போவோமோ என்று ஒருகணம் யோசித்தார்.

ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள்.. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும்? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கருமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல

“செத்தாலும் பறுவாயில்ல, எண்ணை வாங்காம இந்த இடத்தை விட்டு போறேல்ல” என்று நினைத்தபடி நமசிவாயம் நிதானமாக சைக்கிளை உருட்டிக்கொண்டு சங்கக்கடைக்கு முன்னாலே முதல் ஆளாக நின்றார். ஒருகையில் கூப்பன் அட்டையையும் மறு கையில் மண்ணெண்ணெய் கானையும் இறுக்கப்பற்றியபடி நின்றார். பொம்மர் குண்டுபோடவென கிறீச்சுக்கொண்டு பதிந்தது.

"கிழடு செத்து துலயுதில்ல"

நமசிவாயம் மண்ணெண்ணெய் கானை இறுக்கப்பற்றியபடி கடை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

************************

இது பதிவர் குழுமம் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. கதையில் சில திருத்தங்களை வழிமொழிந்த கேதா, வீணாவுக்கு நன்றிகள்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக