ஓவியன் மணியன்

பம்பலபிட்டிச்சந்தி. அதிலிருந்து வெள்ளவத்தை பக்கம் கொஞ்சம் நடந்தா வஜ்ரா பிள்ளையார் கோயில் வரும். வலு விசேசமான கோயில். அங்கே தென்னம்பாலையில் எல்லாம் பிள்ளையார் எழுந்தருளுவார்.

அந்தக் கோயில் வாசலில் ஒரு சாலையோர ஓவியன் இருக்கிறான். பெயர் மணியன், ஓவியன் மணியன். ஓவியக்கல்லூரியில் உபகாரச்சம்பளத்தில் படித்தவன், பள்ளி மூடப்பட்டதால் டிகிரி இல்லாமல் தெருவுக்கு வந்தவன். இப்போது கோவில் வாயில் வளைவின் சீமெந்து நிலத்தில் அவ்வப்போது படம் வரைகிறான். கலைஞன், செய்வதை நேர்த்தியா செய்வான். அவன் பக்கத்திலேயே ஒரு டப்பாவும் கொஞ்சம் சில்லறையும் இருக்கும். மணியன் ஒண்டும் கதைக்க மாட்டான். அமைதியானவன். எப்பவாவது ஒன்றிரண்டு சனம் அவன் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தோ அல்லது பாவமெண்டொ சில்லறைகளைப் போட்டிட்டுப் போவினம். அவன் தாங்க்ஸ் கூட சொல்லமாட்டான். அவனுக்கு பக்கத்தில ஒன்றிரண்டு சில்லறைப் பிச்சைக்காரரும் இருப்பினம். அவையள் ஒண்டும் செய்யமாட்டினம். காசு வந்தா ஓகே. இல்லாட்டியும் ஓகே. ஆனா அவங்களுக்கு மணியனை விடக் கூட சில்லறை கிடைக்கும். மணியன் அலட்டிக்கொள்ளமாட்டான். அவன் ஒரு கடின உழைப்பாளி. ஐ மீன் "ஹார்ட் வர்க்கர்".

வானிசை நேர்காணல்

சிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார்! சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா?” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார்.

சென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் "அழைத்துவந்த அறிவிப்பாளர்", "இளைய சக்தி" போன்ற நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன. ஆனால் எமிலுடன் பேட்டி எப்படிப்போகும் என்பதில் எனக்கு அவ்வளவாக ஆரம்பத்தில் சுவாரசியம் இருக்கவில்லை. என்ன வேலை, பிடித்த திரைப்படம் என்று கேட்டு அறுக்கப்போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் என் கணிப்பு பொய்யானது.

எமில்ராஜா நேர்காணலை மிகச்சிறப்பாகவே கையாண்டார். ஐந்தாறு வருடங்களி்ல் பல நேர்காணல்கள் செய்துவிட்டேன். எனக்குப்பேட்டி என்றால் கமல் விஸ்கிப்போத்தலோடு தகிட தகமி ஆடுவார். ஆனால் இது ஒகே போலப்படுகிறது. எவருமே ஆங்கில வாசிப்பு, எழுத்துப்பற்றி அதிகம் கேட்டதில்லை. எமில் லாகிரி பற்றி அதிகம் கேட்டார். “The Namesake” பற்றி மாத்திரம் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்போம். திருப்தியாக இருந்தது. கேட்பவர்களுக்கு எந்த பிரயோசனமுமல்லாத என்னுடைய படிப்பு, தொழில் பற்றிய கேள்விகளைத்தவிர்த்து ஏனைய கேள்விகள் நன்றாகவே அமைந்தன. சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்க இடம்கொடுக்காமல் நான் பதில்களை இழுத்துவிட்டதால் நிகழ்ச்சிக்குரிய நேரம் இடக்கு முடக்கு இடம்பெறாமலேயே முடிவடைந்துவிட்டது. மகிழ்ச்சி.

அறிமுகத்தின்போது நான் சமூகத்தொண்டுகள் செய்பவன் என்று நானே அறியாத விடயத்தைச்சொன்னார்கள். எழுத்தாளர் என்றால் சமூகத்தொண்டும் செய்வார் என்கின்ற default சிந்தனையாக இருக்கலாம். நான் செய்கின்ற மிகப்பெரிய சமூகத்தொண்டு சும்மா இருப்பது மாத்திரமே. அறியற்க!

எமில்ராஜாவுக்கும் குமாருக்கும் நன்றிகள். மீண்டுமொரு நிகழ்ச்சியை புத்தகங்களுக்காக மாத்திரமே எமில்ராஜாவுடன் செய்யலாம் என்று நம்புகிறேன்.

ஊரோச்சம் : சோ.ப


sopa

யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம்.

இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன்.

“சோ.ப சேர் இருக்கிறாரா?”

“ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி.

“பொடியள்
வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள்
வெடிகளில் எத்தனை வகை!”

என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும்.

நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடிகளின் மீதான ஆர்வம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? ஒரு சீனன் வெடியின் திரி உஸ்ஸ் என்று பற்றும்போதும் ஏன் அடிவயிறு நெருடுகிறது? அது பேப்பர்த்துண்டுகளைத் துப்பியபடி வெடித்துச்சிதறும்போது எங்கிருந்து ஒரு சிறுவனுக்குப் பரவசம் ஏற்படுகிறது? வெடிகளின் சத்தத்தில் அப்படி என்னதான் ஒரு ஈர்ப்பு? விளையாட்டுப்பொருள் அங்காடியில் பொம்மைத்துப்பாக்கிகளுக்கு என்ன வேலை? சிறுவர்களுக்கு அறிமுகமே செய்யக்கூடாத ஒன்றை எப்படி பொம்மைகளாக விற்பனை செய்கிறோம்? ஒவ்வொரு நல்லூர்த் திருவிழாவுக்கும் துவக்குத்தான் வேண்டும் என்று நான் ஏன் அடம்பிடித்து வாங்கினேன்? அப்பாவும் எப்படி வாங்கிக்கொடுத்தார்?

கவிதை நீள்கிறது. அந்தப்பொங்கலுக்கு மாமா மனமிறங்கி ஆனைவெடிப்பெட்டி ஒன்றை வாங்கிக்கொடுக்கிறார். மருமகனுக்கோ அள்ளுகொள்ளையாய்ச் சந்தோசம்.

“ஓட்டைப்பானைக்குள் ஒரு வெடி
தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு வெடி
அடிவளவில் நிற்கும்
நாவல் மரப்பொந்துக்குள் ஒரு வெடி
கொளுத்தி வேகமாக உயர வீசி
அந்தரத்தில் வெடிக்க வைக்கும்
அற்புதம் மற்றொண்டு”

காட்சி விரிகிறது. சீனன்வெடியின் திரியைப்பற்றவைத்து ஓங்கி உயரமாக வீசினால் பனைமர உயரத்திலே அது வெடித்து அத்தனையும் பறக்கும். அந்தநாளில் ஹெலி எரிகுண்டு வீசினாலும் அப்படித்தான். வானத்திலேயே அது எரியத்தொடங்கிவிடும். சீனன் வெடி வானத்தில் பறந்து வெடித்தால் குட்டி குட்டி பேப்பர் துகள்கள் எல்லாம் ஊரடங்குக்கால நோட்டிஸ் துண்டுகள்போல வெள்ளிச்சிதறல்களாய்ப் பறக்கும். அதைப்பார்த்த பெரியம்மா சொல்லுகிறார்.

“மாபாவி, தேடியதெல்லாம்
ஆகாசமாகப் போகுதடா!”

அவ்வளவுதான். கவிதை முடிபுற்றது. “சோ. ப”வினுடைய “சுவடெச்சம்” கவிதைத்தொகுப்பிலிருக்கும் கவிதை இது.

சதைகள்

 

sathaikal

“அழகியல் சார்ந்தும் அதன் அமைப்பு வடிவம் சார்ந்தும் நவீனத் தமிழ் இலக்கியப் பிரதிகளின் நீட்சியாகவே அனோஜன் பாலகிருஷ்ணனின் பிரதிகளைப் பார்க்கமுடிகிறது”

என்ற பதிப்பாளர் குறிப்போடு ஆரம்பிக்கிறது “சதைகள்” சிறுகதைத்தொகுப்பு. மொத்தமாகப் பத்து சிறுகதைகள். அநேகமானவை சமூகக்கதைகள். சிலது பாலியலைப் பற்றிச் சொல்லுகின்றன. சில நம் சமூகத்தின் உள்ளீடாக புரையோடிப்போயிருக்கும் சாதியச்சிக்கல்களைப் பேசுகின்றன. சிலது புலம்பெயர்ந்தவர் வருகையினை எதிர்கொள்ளும் உள்ளூர்க்காரர்களின் உணர்வுகளைப்பேசுகிறது. சிலது காதல். சிலது முன்னைய காதல். ஆங்காங்கே இயல்பான அரசியல். இப்படிப் பத்துக்கதைகளும் சுற்றுகின்றன.

சிறுவர்கள் சொல்லும் கதை

 

ja1

சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி.

ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம்.

சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம். சண்முகத்தின் தகப்பன் காசிப்பிள்ளையரின் முடி திருத்துனர். ஒவ்வொரு ஞாயிறும் எட்டரைக்கு சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு அவர் சந்திரனின் வீட்டுக்கு வருவார். மாமரத்தடியில் மேசை நாற்காலி ஒன்றில் காசிப்பிள்ளையர் வெற்று மேலுடன் அமர்ந்து பேப்பர் வாசிக்க, சண்முகத்தின் தந்தையார் காசிப்பிள்ளையரின் தலைமயிர் வெட்டி, முகத்தை கிளீன் ஷேவ் எடுத்து, உடம்பை எண்ணை தேய்த்து மசாஜ் பண்ணுவார். இது கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் இடம்பெறும்.

அந்த இரண்டு மூன்று மணிநேரம்தான் சந்திரனுக்கு சொர்க்கம்.