சிறுவர்கள் சொல்லும் கதை

Mar 29, 2016 5 comments

 

ja1

சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி.

ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம்.

சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம். சண்முகத்தின் தகப்பன் காசிப்பிள்ளையரின் முடி திருத்துனர். ஒவ்வொரு ஞாயிறும் எட்டரைக்கு சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு அவர் சந்திரனின் வீட்டுக்கு வருவார். மாமரத்தடியில் மேசை நாற்காலி ஒன்றில் காசிப்பிள்ளையர் வெற்று மேலுடன் அமர்ந்து பேப்பர் வாசிக்க, சண்முகத்தின் தந்தையார் காசிப்பிள்ளையரின் தலைமயிர் வெட்டி, முகத்தை கிளீன் ஷேவ் எடுத்து, உடம்பை எண்ணை தேய்த்து மசாஜ் பண்ணுவார். இது கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் இடம்பெறும்.

அந்த இரண்டு மூன்று மணிநேரம்தான் சந்திரனுக்கு சொர்க்கம்.

சண்முகத்துக்கு சந்திரனைவிட ஐந்து வயது அதிகமாகவே இருக்கலாம். ஆனாலும் அவன் சந்திரனோடு இணைந்து விளையாடுவான். பொதுவாக வீட்டு முற்றத்தில் குவித்திருக்கும் விறகுமரங்களுக்கிடையில் கள்ளன் பொலீஸ் விளையாடுவார்கள். இருவரும் அதிகம் பேசமாட்டார்கள். விளையாட்டில் ரூல்ஸ் ஏலவே தெரியுமாதலால் அந்தமூன்று மணிநேரத்தையும் ஒரு கணம்கூட வீணாக்காமல் விளையாடுவதுதான் அவர்களின் நோக்கம்.

ஆனால் அடிக்கடி சண்முகத்தை தோட்டாட்டு வேலைகளுக்காக காசிப்பிள்ளையரின் மனைவி அழைப்பார். முருங்கக்காய் பிடுங்குவது, பால் கொடுத்துவிட்டு வருவது, கறிவேப்பிலை பிடுங்குவது, இறைச்சி கழுவுவதற்கு தண்ணி வார்த்துக்கொடுப்பது என்று குட்டி குட்டி வேலைகள் விளையாட்டுக்கிடையில் சண்முகம் செய்யவேண்டிவரும்.

நடுவிலே ஒரு தேநீர் இடைவெளி. காசிப்பிள்ளையரின் மனைவி எல்லோருக்கும் தேநீர் கொண்டுவருவார். ஒரு பெரிய கேத்தில்பூராக பிளேன்ரீ வீட்டு முற்றத்துக்கு வரும். வேலை செய்யும் அனைவரும் வீட்டுக்குப் பின்னாலே வைக்கப்பட்டிருக்கும் தத்தமது தேங்காய்ச் சிரட்டைகளை எடுத்துக் கழுவிக்கொண்டு வருவார்கள். காசிப்பிள்ளையரின் மனைவி ஒவ்வொரு சிரட்டைக்குள்ளும் தேநீர் வார்த்துவிடுவார். கூடவே ஒரு ஓலைப்பெட்டிக்குள் பனங்கட்டித்துண்டுகள் தேநீருடன் சேர்த்துக்கடிப்பதற்குக் கொடுக்கப்படும். பாண் வெட்டப்பட்டு சுளகுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கதலிக்குலை ஒன்றும் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும்.

சந்திரன் குசினிக்குள்போய் தன்னுடைய எவர்சில்வர் டம்ளரில் தேநீர் குடித்துவிட்டு வருவான். முடிந்ததும் மீண்டும் சண்முகமும் சந்திரனும் விளையாட ஆரம்பிப்பார்கள்.

ஒரு தென்னை மட்டையை சீவி வெட்டித் துவக்கு செய்து சந்திரனிடம் சண்முகம் கொடுத்திருந்தான். நெருப்புக்குச்சி மருந்துகளை சிறிது தண்ணீர் தடவிக் குழைத்து, உருட்டி, பேப்பரால் சுற்றிக்கட்டி, திரி இணைத்து, அதனை சிரட்டைக் கண்ணுக்குள்ளால் வெளியே எடுத்து, பின்னர் சிரட்டையை பேப்பர் உருண்டையின்மேல் கவிழ்த்துவைத்து, குறுமண் தூவி, தூரத்திலிருந்து திரியை கொளுத்தி, நெருப்பு திரியினூடாக ஊர்ந்து சிரட்டைக்குள் புகுந்து, உருண்டை வெடித்து குறுமண் பறக்க சிரட்டையை “பொப்” என்று மேலே பாயும். இந்த வித்தையை சண்முகம் செய்துகாட்ட சந்திரன் மாமரத்துக்கு பின்னே கவர் எடுத்தபடியே ஆவென்று பார்த்துக்கொண்டிருப்பான்.

பிரதி ஞாயிறுதோறும் அட்சரம் பிசகாமல் இவ்வளவு விடயங்களும் காசிப்பிள்ளையரின் வீட்டில் தவறாமல் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

ஒருநாள் பாரிய சத்தத்துடன் தபால்பெட்டிச் சந்தியில் கண்ணிவெடி ஒன்று வெடித்துச்சிதறியது.

&&&&&&&&&&&&&&&

இந்தச்சிறுகதை ஒரு பிரதிபிம்பம். காசிப்பிள்ளையரின் வீட்டினுடைய ஒரு ஞாயிற்றுக்கிழமைப்பொழுதின் காட்சிப்பிரதிகளை தொகுப்பதன்மூலம், யாழ்ப்பாணத்தில் ஒரு தலைமுறையின் சாதிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சொல்லுகின்ற முயற்சி இது. சந்திரன் சண்முகம் என்ற சிறுவர்களின் நடவடிக்கைகளின்மூலம் அடுத்த தலைமுறையினிடையே உருவாகும் சிறு நூலிழை மாற்றம் பதிவாக்கப்படுகிறது. அவர்கள் அனைவரது வாழ்வும், இந்த முதலாளித்துவ சாதியக் கட்டமைப்பும் என்னவாகப்போகிறது என்கின்ற சிந்தனைத்தூண்டுதலை இறுதிவரி ஏற்படுத்துகிறது. அவ்வளவுதான்.

இந்தச்சிறுகதையில் வேறு எதையுமே நீட்டி விளக்கத்தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பு, அதன் வேறுபாடுகள், ஒடுக்குமுறைகள் என எல்லாமே சிறுகதையில் ஊடாடினால் போதுமானது. எதையுமே விளக்குப்பிடித்துக் காட்டத்தேவையில்லை. அப்போதுதான் வாசிப்பவருக்கு அது முகத்தில் அறையும். அதேபோல சிறுவர்களின் குண இயல்புகளையும் வாசகர்களிடம் விட்டுவிடவேண்டும். முடிவும் அப்படியே. ஏன் குண்டு வெடிக்கிறது? யார் சாகிறார்கள்? இந்தக்குடும்பங்கள் எல்லாமே என்னாயின? சந்திரன் வளர்ந்து என்னானான்? சண்முகத்துக்கு என்ன நடந்தது? வாசித்து முடித்ததும் வாசகர் இவை எல்லாவற்றையும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அசை போடுவதற்கான உந்துதலை சிறுகதை கொடுக்கவேண்டும். கொடுத்தால்தான் அது சிறுகதை.

இதே சிறுகதையை நாவலாகவும் எழுத முயலலாம். சந்திரன் சண்முகம் இருவரையும் ஆதார பாத்திரங்களாகக்கொண்டு நாவலை நகர்த்தலாம். எண்பத்து மூன்றில் சிறுவர்களாக இருப்பதால் உள்நாட்டுயுத்தத்தோடு சேர்ந்தே இருவரும் வளரப்போகிறார்கள். சந்திரனின் குடும்பம் ஒவ்வொன்றாக சொத்துகளையும் சுகபோகங்களையும் போரினால் இழக்கிறது. சண்முகத்தின் குடும்பத்திற்கும் அதே நிலைதான். இருவரும் வளர்கிறார்கள். சண்முகம் இயக்கம் ஒன்றிலே இணைகிறான். சந்திரனுக்கும் அவனுக்குமிடையிலான நட்பு இன்னமும் தொடர்கிறது. ஒருகட்டத்தில் இயக்கத்தில் இணைய வருகின்ற சந்திரனை சண்முகம் வேண்டாமென்று திருப்பி அனுப்புகிறான். வயதுக்கட்டுப்பாட்டு பாஸ் கிடைத்து சந்திரன் கொழும்பு போவதற்கும் சண்முகம் உதவுகிறான். சந்திரன் ஒரு ஏஜண்டைப்பிடித்து பம்பாய், எத்தியோப்பியா, மலாவி, பிரான்ஸ் என்று அலைந்து கடைசியில் கனடாவுக்குப்போய்ச்சேருகிறான். சண்முகம் இயக்கத்தில் படிப்படியாக உயர்ந்து தளபதியாகிறான். இயக்கத்திலேயே ஒரு பெண்ணை விரும்பி திருமணம் முடிக்கிறான். சந்திரனும் சொந்தத்தில் ஒரு பெண்ணை மணம் முடிக்கிறான். சந்திரனுக்கு ஒரு பெண் குழந்தை. சண்முகத்துக்கும் ஒரு பெண் குழந்தை.

இறுதிப்போர் வெடிக்கிறது. யுத்தத்தில் சண்முகமும் மனைவியும் மரணமடைகிறார்கள். சண்முகத்தின் மகளும் வயோதிபரான சண்முகத்தின் தந்தையும் உயிர் தப்புகிறார்கள்.

நாவலின் ஆரம்ப அத்தியாயம் சண்முகத்தின் தந்தை வவுனியாவிலிருந்து கனடாவிலிருக்கும் சந்திரனுக்குதொலைபேசி அழைப்பு எடுப்பதில் ஆரம்பிக்கிறது. இறுதி அத்தியாயம் சந்திரன் சண்முகத்தின் மகளை பணம் கொடுத்து முகாமிலிருந்து மீட்டு கனடாவுக்கு வரவழைப்பதோடு முடிகிறது.

இரண்டு பக்கச்சிறுகதை, இருநூற்றைம்பது பக்கம் அல்ல, இரண்டாயிரம் பக்கங்களுக்குக்கூட நாவலாக நீளலாம்.

&&&&&&&&&&&&&&&

“Children in literature offer an ethical alertness and a fresh perspective untainted by the cynicism of adulthood” – Richard Locke

ஒரு சமூகக் களத்தை, அதுவும் போர்ச்சூழல், புரையோடிப்போயிருக்கும் சாதியம் போன்ற கூறுகளைக்கொண்ட களத்தை சொல்வதற்கு சிறுவர் பாத்திரங்களைப் பயன்படுத்துவது அந்தக்களத்தை அதன் அபத்தங்களோடு படம் பிடித்துக்காட்ட மிகவும் வசதியாகவிருக்கும். சிறுவர்களுக்கு சாதியம் என்றால் என்னவென்று தெரியாது. அரசியல் தெரியாது. தேசியம் தெரியாது. இனம், மதம் என்பவற்றில் போலித்தனமான வெறி கிடையாது. யுத்தம் என்றால் என்ன? எதற்காக யுத்தம் நடக்கிறது? ஒடுக்குமுறை என்றால் என்ன? ஏன்? எதற்கு? எதுவுமே தெரியாது. அவர்களின் அக்கறையும் அதுவல்ல. அவர்களின் நாட்கள் அன்றைய பொழுதை எப்படி மகிழ்ச்சியாக கழிப்பது என்கின்ற எளிமையான விளையாட்டுத்தனங்களால் நிரம்பியிருக்கும். அதனை முதலில் வாசகர்களுக்குச் சொல்லவேண்டும். வாசகர்களை அவர்கள் மறந்துபோயிருக்கும் குழந்தைப்பருவத்துக்கு கொண்டுபோகவேண்டும். பின்னர் அந்த எளிமையையும் விளையாட்டுத்தனத்தையும் சமூகக் கட்டமைப்பு எப்படி அவர்களிடமிருந்து பறித்தெடுக்கிறது என்பதைச் சொல்லும்போது வாசகருக்கு ஒரு சீற்றம் வரும். நாவலிலுள்ள சிறுவருக்கு வராது. ஆனால் வாசிக்கும்போது சிறுவர்களாகவே மாறிப்போயிருந்த பெரியவர்களுக்கு அது வரும். அது சமூகத்தின் மீதான விமர்சனமாக உருவெடுக்கும். இப்போது சுரணையுள்ள பெரியவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கான தீர்வையும் சில நாவலாசிரியர்கள் கோடிகாட்டுவார். ஒரு இலக்கியத்தில் அறம் என்று குறிப்பிடப்படுகின்ற விடயம். பல பின்நவீனத்துவ நாவல்கள் தீர்வைச் சொல்லாமல் சுரணையை மட்டுமே தூண்டிவிடும். ஆனால் கொண்டேம்பரரி என்கின்ற சமகாலத்து நாவல்கள் பல சமயங்களில் தீர்வையும் சொல்ல முயலுகின்றன.

kkr

“There is a way to be good again”

என்பது பிரபல சமகாலத்து நாவலான “The Kite Runner” இன் வாசகமாகும். மேலே சொன்ன சண்முகம் சந்திரனின் நாவலின் கரு கைட் ரன்னரிலிருந்தே எடுக்கப்பட்டது.

நாவலின் கதை, எழுபதுகளில் ஆப்கானிஸ்தான் கொஞ்சகாலம் குண்டுவெடிப்புகள் குறைந்து ஆசுவாசமாக இருந்த சமயத்தில் காபுலிலிருந்து ஆரம்பிக்கிறது. அமீர், ஹாசன் என்று இரண்டு நண்பர்கள். அமீர் மேல்வர்க்க பாஷ்டூன் சாதியை சேர்ந்தவன். அவன் வீட்டு வேலைக்காரரின் மகன் ஹாசன். ஹாசன் சிறுபான்மை தாழ்த்தப்பட்ட ஹசாரா சாதியை சேர்ந்தவன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆனாலும் அந்த நட்பு ஒருவித மேல்சாதி கீழ்சாதி நட்புத்தான். அமீர் சொல்வதை ஹாசன் மறுபேச்சு இல்லாமல் கேட்பான். அவன் வாசிக்கும் கதைகளை மீண்டும் மீண்டும் அலுக்காமல் செவிமடுப்பான். அமீருக்கு ஒன்றென்றால் ஹாசனால் தாங்கமுடியாது. ஆனால் ஹாசனை எல்லோரும் ஹசாரா என்று ஏளனப்படுத்தும் போது அமீர் ஒன்றும் சொல்லமாட்டான். உள்ளூர பயந்த, பொறாமையும் குற்ற உணர்வும் மிக்க சாதாரண மனிதகுணம் அமீருக்கும்.

அந்த ஏரியாவில் பட்டம் விடும் போட்டி பிரபலம். ஊருலகத்தில் இருக்கும் குஞ்சு குருமன்கள் எல்லாம் பட்டம் ஏற்றுவார்கள். பட்டங்கள் தங்களுக்குள் வெட்டி வெட்டி சண்டை போட்டுக்கொள்ளும். ஒவ்வொன்றாக விழுத்தப்படும். மாறி மாறி பட்டங்கள் விழுத்தப்பட இறுதியில் இரண்டு பட்டங்கள் மட்டுமே வானத்தில் எஞ்சி நிற்கும். அவற்றுக்குள் இறுதியாக சண்டை. ஒன்று அறுபடும். அறுபட்ட பட்டத்தை ஓடிப்போய் எடுக்கவேண்டும். அதற்கும் போட்டி. சண்டை. அந்த பட்டம் எங்கே போய் விழும், எப்படி போய் எடுப்பது, காற்றின் திசை எல்லாவற்றையும் கணித்து ஓடவேண்டும். இறுதியில் அறுந்த பட்டத்தை எடுப்பவனும், அந்த பட்டத்தை தன் பட்டத்தால் அறுத்தவனும் வெற்றி வீரர்கள். அமீர் பட்டத்தை அறுப்பான். அறுந்த பட்டத்தை ஓடிப்போய் கைப்பற்றிக்கொண்டு கொடுப்பவன் ஹாசன்.

ஹாசன் அமீரின் Kite Runner!

ஒரு முறை அமீருக்கு அந்த கிராமத்து முரட்டு இளைஞனால் சிக்கல் வந்தபோது ஹாசன் தன் ஹெட்டபோலை நீட்டி மிரட்டி, அந்த இடத்தில் இருந்து தப்ப வழி செய்கிறான். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஹாசனுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டபோது பயத்தினாலோ என்னவோ, அமீர் அதை தூர நின்று வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறான். அப்படி செய்தததால் அமீருக்கு குற்ற உணர்ச்சி. தன் கையாலாகத்தனத்தை மறைக்க அமீர் ஹாசனையே திருடன் என்று பழி சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான். அமீரின் இயல்பு அது. ஹாசன் அளவுக்கு தன்னால் நல்லவனாக நேர்மையாளனாக இருக்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை. தாழ்வுமனப்பான்மையும் குற்ற உணர்ச்சியும் மேலிடும்போது இன்னொருவனை நாம் குற்றவாளியாக்க முயலும் மனிதகுணம். அமீரினால் தன் தந்தை ஹாசனையும் தன்னைப்போலவே நடத்துவதை சகித்து கொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு இயல்பான பலவீனங்கள் உள்ள உயர்சாதி சிறுவன் அமீர். எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவன்.

ஐந்து வருடங்களில் சோவியத்படைகள் காபூலை ஆக்கிரமிக்க, அமீரின் குடும்பம் பாகிஸ்தானின் பெஷாவருக்கு இடம்பெயருகிறது. அங்கிருந்து அவர்கள் கலிபோர்னியாவுக்கு அகதிகளாகச் செல்கிறார்கள். அங்கே ஆயிஷா என்ற பெண்ணை அமீர் திருமணம் முடிக்கிறான். எழுத்தாளர் ஆகிறான். அப்போதுதான் பாகிஸ்தானில் இருந்து அமீரின் மாமா அவனுக்கு தொலைபேசியில் அழைக்கிறார். ஹாசனின் குடும்பம் தலிபானின் தாக்குதலில் இறந்துவிட்டது என்றும் அவன் மகன் மட்டும் உயிர்தப்பி தலிபான்களிடம் துஷ்பிரயோகத்துக்குள் ஆட்பட்டிருக்கிறான் எனவும் சொல்லுகிறார். வேறொரு முக்கிய உண்மையும் சொல்லி, நீ போய் அவனை காப்பாற்றவேண்டும் என்கிறார்.

“There is a way to be good again.”

அமீர் எப்படி ஆப்கான் போகிறான், அங்கே போய் ஹாசனின் மகனை மீட்டுக்கொண்டு அமேரிக்கா வருகிறான் என்பது மீதிக்கதை.

&&&&&&&&&&&&&&&

காலித் ஹொசெய்னி எழுதிய இந்த நாவல் உலகம் முழுதும் மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது. ஆப்கானின் எளிமையான வாழ்வியலை அதற்கேயுரிய பலவீனங்களோடு சிறுவர்களினூடாக முன்வைத்து, வாசகர்களைச் சிறுவர்களாக்கி, நாவல் மூலமாக அவர்களை ஆப்கான் யுத்த சூழலினூடாக பயணம் செய்ய வைத்தமைதான் அந்த நாவலின் வெற்றி. மிக எளிமையாக, படிமங்கள் அதிகமாக சேர்க்காமல் சாதாரண வாசகருக்கும் போய்ச்சேரும் எழுத்து காலித் ஹொசெய்னியோடது. அவருடைய ஏனைய நாவல்களான “Thousands of Splendid Suns”, “And the mountains echoed” போன்றவைகூட ஏறத்தாழ இதே உத்தியைக்கொண்டு எழுதப்பட்டவை.

இப்படி சிறுவர்களுக்கூடாக பெரியவர்களுக்கான நாவலை எடுத்துச்செல்லும் உத்தியை, குறிப்பாக போர்ச்சூழலை விளக்கும் உத்தியை பல எழுத்தாளர்கள் கையாண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்தக்காலத்தை மையமாகாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் பல சிறுவர்களை முன்னணிப்பாத்திரங்களாக வைத்து வந்திருக்கின்றன. குறிப்பாக “The Boy  In The Stripped Pyjamas” ஐ சொல்லலாம். ஒரு நாஸி படையதிகாரியின் மகனுக்கும் யூதத்தடுப்பு முகாமிலுள்ள சிறுவனுக்குமிடையிலான நட்புத்தான் அந்தக்கதை.

சிறுவர்களை மையப்படுத்தி எழுதப்படக்கூடிய நாவல்களுக்கு ஈழத்துச்சூழல் ஒரு அற்புதமான களன். சமூக இன முரண்பாடுகளும் அபத்தங்களும் நிறைந்த ஈழத்துச் சூழலை மிக இயல்பாக சிறுவர் பாத்திரங்களைக்கொண்டு வெளிச்சம்போட்டுக்காட்டலாம். ஆனால் சிறுவர்களின் கண்களினூடாக சொல்லப்பட்ட நாவல்கள் எதுவும் ஏதோ ஒரு காரணத்தால் ஈழத்துச்சூழலில் எழுதப்படவில்லை.

நிரோமி டி சொய்சாவின் “The Tamil Tigress” நூலை இந்த வகைகளுக்குள் அடக்கமுடியாது. குழந்தைப்போராளிகள் பற்றிய தற்புனைவு நூலென்று அதனை நிரோமி குறிப்பிட்டாலும், இயக்கத்தில் இணையும்போது அவருக்கு பதினேழு வயது என்கிறது அந்தப்புத்தகம். பல விமர்சகர்கள் உண்மையில் அவரின் வயது பதினெட்டு என்று புத்தகத்தில் குறிப்பிடப்படும் சம்பவங்களைக்கொண்டே நிரூபிக்கிறார்கள். எது எப்படியோ, அந்தப்புத்தகத்தின் கதை சொல்லும் போக்கு கூட பெரியவர்களால் பெரியவர்களுக்கு சொல்லும் பெரிய பெரிய விசயங்களாகவே இருந்தது. “The Tamil Tigress” சிறுவர் பாத்திரங்களினூடு கதை சொல்லப்பட்ட நூல் அல்ல.

அந்த நிலையில் சிறுவர் பாத்திரங்களினூடு கதை சொல்லப்பட்ட ஒரேயொரு ஆங்கில நாவலாக, அவுஸ்திரேலிய எழுத்தாளர் ரொபேர்ட் ஹில்மென் எழுதிய “மாலினி” என்கின்ற நாவலையே கூறலாம்.

மாலினியும் அவள் தங்கை பன்னியும் திருகோணமலை நகரத்துக்கு தெற்கே உள்ள குக்கிராமத்தில் வசித்துவருகிறார்கள். இறுதியுத்தம் ஆரம்பித்ததும் புலிகள் அவர்களையும் ஏனைய மக்களையும் மனிதக்கேடயங்களாக தம்மோடு கூட்டிப்போகிறார்கள். நிலைமை மோசமாவதை அறிந்ததும் மாலினியின் தந்தை அவளிடம் ஒரு மொபைல்போனைக் கொடுத்து தப்பியோடுமாறு சொல்கிறார். மாலினியும் பன்னியும் காட்டுக்குள் தப்பி ஓடுகிறார்கள். தப்பி ஓடுகையில் அவர்கள் நந்தா என்கின்ற சிங்களச் சிறுமியையும் அவளோடு கூடவிருந்த இரண்டு சிறுவர்களையும் சந்திக்கிறாள். அவர்களும் தப்பித்தான் ஓடுகிறார்கள். கந்தன் என்கின்ற சிறுவர் போராளியையும் சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி காட்டுக்குள்ளால் தப்பி பல மைல்கள் தூரத்திலிருக்கும் தம் தாத்தா வீட்டுக்குப்போகிறார்கள் என்பதே மீதிக்கதை.

மிக மோசமாக, மிகத்தவறான புவியியல் மற்றும் வரலாற்று தகவல்களோடு எழுதப்பட்ட ஒரு குப்பை நாவல் இந்த மாலினி. ஆனாலும் ஓரளவுக்கு பலராலும் அவுஸ்திரேலியாவில் இது வாசிக்கப்பட்டமைக்கு காரணம் அது பயன்படுத்திய சிறுவர்களினூடாக போரியல் அவலத்தை சொல்லும் உத்திதான். ஆனால் பகைப்புலம் பற்றிய எந்த அறிவோ, போரிடும் தரப்புகளினதும் மக்களினதும் எண்ணங்களைப்பற்றிய அறிவோ, நடந்த நிகழ்வுகளைப்பற்றிய எந்த விவரங்களோ இல்லாமல் வெறும் பத்திரிகைச்செய்திகளை மட்டுமே நம்பி எழுதப்பட்டதால் மாலினி மிக மோசமான நாவலாகப்போய்விட்டது.

“The Boy In The Stripped Pyjamas” இலும் இதே தவறு நிகழ்ந்தது. யூத வதை முகாம் பற்றிய சித்திரிப்புகள், ஒரு யூத வதைமுகாமில் சிறுவன் ஒருவன் தப்பியிருப்பது போன்ற சாத்தியமில்லாத விடயங்கள் அந்த நாவலில் இருந்தது. பகைப்புலம் பற்றிய அறிவும், அதை அறியவேண்டும் என்கின்ற ஆர்வமும் எழுத்தாளருக்கு இல்லாமல்போனதே அதற்குக் காரணம். இந்தவிடயத்தில்தான் கைட் ரன்னர் வேறுபடுகிறது. அதை எழுதிய காலித் ஹோசெய்னி ஆப்கானைச்சேர்ந்தவர். காபுலில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவர் குடும்பம் அமரிக்காவுக்கு தஞ்சம் புகுந்ததெனினும் தந்தையின் தொழில் காரணமாக காலித் நாட்டோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். இவை எல்லாமே கைட் ரன்னரையும் அவருடைய ஏனைய இரு ஆப்கான் தளத்து நாவல்களையும் நிறைய நிஜங்களோடு தருவதற்கு ஏதுவாக அமைந்தது.

போர்ச்சூழல் இல்லையென்றாலும் ஹார்ப்பர் லீ எழுதிய “To Kill A Mocking Bird” நாவலும் சமூகத்தின் அவலங்களை சிறுவர்களினூடாக சொன்ன நாவல்தான். எஸ்.ராவின் நாவலான நெடுங்குருதியின் நாகு பாத்திரம்கூட இவ்வகை கதை சொல்லல் உத்திக்கே பயன்படுத்தப்படுகிறது. அருந்ததி ராயின் “The god of small things” நாவலையும் இதற்குள் சேர்க்கலாம். ஏன் விகாஸ் சுவார்ப் எழுதிய “Q & A” நாவல் கூட கொஞ்சம் அந்த வகையிலேயே வருகிறது.

&&&&&&&&&&&&&&&

ஈழத்துச்சூழலில் எழுதப்படக்கூடிய “The Kite Runner” போன்ற ஒரு ஆங்கில நாவலை புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். சிறுவயதில் ஈழத்தில் வளர்ந்து, பின்னர் புலம்பெயர் நாடொன்றில் பள்ளிப்படிப்பை முடிக்கக்கூடிய ஒரு தலைமுறை எழுத்தாளரிடம் கதைக்களனும் இருக்கும். அதனை ஆங்கிலத்தில் முதன்மையாக எழுதக்கூடிய மொழியாளுமையும் இருக்கும். காலித்துக்கு அமைந்ததுபோல நாவலை ஓரளவுக்கு சந்தைப்படுத்தக்கூடிய தொடர்புகளும் கிட்டும்.

ஆங்கிலத்தை விட்டுவிடலாம், தமிழில் ஏன் இவ்வகை நாவல்கள் ஈழத்துச்சூழலிருந்து வருவதில்லை? நிறைய காரணங்கள். முதலில் நம் மத்தியில் தீவிரமாக இயங்கும் புனைவு எழுத்தாளர்கள் அரிது. முழுநேர தொழிலாக எழுத்தைக் கொண்டுசெல்லக்கூடிய சூழலும் தமிழில் இல்லை. இங்கே எழுதுகின்ற அனேகம்பேர் வாழ்க்கை அனுபவங்களை நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் மாற்றுகின்ற நாற்பதுகளில், ஐம்பதுகளில் வாழும் எழுத்தாளர்கள். அவர்கள் எவருமே குழந்தைகளின் பார்வையில் கதை சொல்லும் நிலையில் இல்லை. சிறுவர்களினூடு கதை சொன்னால் எங்கே அது சிறுவர் இலக்கியமாகப்போய்விடுமோ என்கின்ற அபத்த சிந்தனை வேறு இங்கு உள்ளது. அப்படியே எழுதினாலும் மெயின்ஸ்ட்ரீம் நாவல்களையோ சமகாலத்து கொண்டம்பரரி நாவல்களையோ அவர்கள் எழுதத்தயாராக இல்லை. எழுதுவதெல்லாம் படிமங்களும் அகவெழுச்சிகளும் நிரம்பிய சுத்தமான இலக்கிய நூல்கள். நான்காவது பக்கத்தோடே வாசகரின் முடியையெல்லாம் பிடுங்கிப் பைத்தியமாக அலையவைக்கும் மொழிநடையை கொண்ட புரியாத தமிழ் நாவல்கள். அல்லது நிறைய யுத்தம். நிறைய ஆயுதங்கள். நிறைய துரோகங்கள். இயங்கங்களிடையே முரண்பாடுகள், சமூகத்தின்மீதான நக்கல்கள். போராட்டங்கள் மீதான நக்கல்கள் என்று பெரியவர்களால் பெரியவர்கள் பாத்திரங்களினூடு சொல்லப்படும் கதைகள். நம் எழுத்தாளர்கள் பலருக்கு தம்முடைய நாவல்களில் அவர்களுடைய அறிவுஜீவித்தனம் ஜொலிக்கவேண்டும் என்பது முக்கியம். அவர்களுடைய நேர்மையும் அரசியலும் விமர்சனங்களும் மக்களைச்சென்றடையவேண்டும். வாசிக்கும்போது பாத்திரங்களைவிட எழுதிய எழுத்தாளர் முன்னே வரவேண்டும். இவர்களால் சிறுவர்களைக்கொண்டு விகாரமடையாத பருவத்து எண்ணங்களைக்கொண்டு சிறுவர்களுக்கேயுரிய அப்பாவித்தனங்களோடு எப்படி சமூகத்தின் அபத்தங்களை படம்பிடிக்கமுடியும்?

இலங்கையிலிருந்து சிறுவர்களினூடு எழுதப்பட்ட ஒரு அற்புத நாவல் மார்டின் விக்கிரமசிங்கவின் மடோல் டூவா. சுந்தரம் சியாமளன் தமிழில் அதனை மடோல் தீவு ஆக்கினார். உபாலி, ஜின்னா என்ற அதே சந்திரன், சண்முகம் வகை சிறுவர்களை மையப்படுத்தி ஒரு சிங்களக்கிராமத்தின் வாழ்க்கை, சிறுவர்களின் உலகம் என்று மடோல் டூவா பெரியவர்களும் ரசிக்கும்படி இருக்கும். இந்நாவலுக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

போரையும் சிறுவர் பாத்திரங்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு தமிழ் நாவலாக ஷோபா சக்தியின் “பொக்ஸ், கதைப்புத்தகம்” நாவலைச் சொல்லலாம்.

“கார்த்திகை” என்கின்ற சிறுவனை முன்னிலைப்படுத்தி போருக்குப்பின்னரான வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லுகிறது பொக்ஸ். வெறுமைசூழ்ந்த நிறைய அகக்கூறுகளை பாத்திரங்களினூடு படிமமாக்கி எழுதப்பட்ட முக்கியமான நூல். அந்த நூலில் காணப்படுகின்ற அதிகப்படியான இலக்கியக்கூறுகள் அதில் வருகின்ற சிறுவர் பாத்திரங்களின் எளிமையையும் அப்பாவித்தனத்தையும் கூறுபோட்டுவிடுகின்றன. கார்த்திகை ஒரு நேர்ந்துவிட்ட பிக்கு. அவன் செய்வதெல்லாம் பெரிய பெரிய விடயமாகவிருக்கிறது. கார்த்திகை மரம் ஏறினால்கூட அதில் ஒரு படிமம் இருக்கிறதா என்று வாசகர் தேடுகிறார். அனேகமானவை வயதுக்குமீறிய சிந்தனைகளும் செயற்பாடுகளும். திடீரென்று ஏனைய சிறுவர்களுக்கு முன்னாலே அவன் சுயமைதுனமும் செய்கிறான். கார்த்திகை ஒரு விகாரமடைந்த சூழலின் படிமமாக இருக்கலாம். ஆனால் அது அவ்வகைச்சிறுவனின் இயல்பாக இருக்கமுடியுமா என்பது ஆய்வுக்குரியது. பொக்ஸ் சிறுவர் பாத்திரங்களை முன்வைத்து எழுதப்பட்ட நாவல். ஆனால் சிறுவர்களின் எண்ண ஓட்டங்களோ சிந்தனைகளோ அதில் இல்லை. சிறுவர்களின் இயல்பான சிறுபிள்ளைத்தனத்தோடு கதையினைச்சொல்லி சமூகத்தின் சிறுபிள்ளைத்தனத்தை வெளிப்படுத்தும் உத்தி அதில் இல்லை. அது ஒரு மெயின் ஸ்ட்ரீம் நாவலும் கிடையாது. இலக்கியப்பிரதி. அவ்வகையில் பொக்ஸ் நாவலை “Kite Runner”, “Madal Doova” வகை லிஸ்டிலே சேர்க்கமுடியாது.

ஈழத்துப்போர்ச்சூழலை மையமாக வைத்து மிக எளிமையான சிறுவர்களினூடு கதை சொல்லும் பெரியவர்களுக்கான நாவல்கள் தமிழிலும் முடியுமானால் ஆங்கிலத்திலும் வெளிவரவேண்டும். அது அதீத இலக்கியத்தை விடுத்து எளிமையான வாசகர்களுக்காக ஒரு நேர்கோட்டில் எழுதப்படவேண்டும்.

சந்திரனும் சண்முகமும் வேண்டும்.

 


இந்தக்கட்டுரை “புதிய சொல்” சஞ்சிகையின் தை, 2016 இதழில் வெளியானது.

படங்கள்

https://www.flickr.com/photos/adam_jones/14190672462/

Comments

 1. பலருக்கும் பயன் தரக்கூடிய வகையில் கதை சொல்லும் உத்தியை விளக்கியதுக்கு நன்றி. படித்து இரசித்தேன்

  ReplyDelete
 2. நன்றி மோகன்.

  ReplyDelete
 3. Can we expect Chandran & Sanmugam from you in the future?

  ReplyDelete
  Replies
  1. Will try akka. Right now my mind is with another novel plot :)

   Delete
 4. where can i get madol doova"s tamil version sir

  ReplyDelete

Post a comment

Contact form