Skip to main content

அஞ்சலிகள்

அஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ சாதித்துவிட்டுப்போனால் இறந்தபின்னும் வரலாறு கொண்டாடும், ஆகவே சும்மா இருக்காதே என்று இருப்பவனை தூண்டிவிடும் செயல்களே அஞ்சலிப் புகழுரைகள். எஸ்பொ நினைவு நிகழ்விலும் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் இப்படி அவரைக்கொண்டாடும்போது மனுஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் என்று. சார்வாகன் நினைவஞ்சலியில் சாரு ஒருபடி மேலே போயிருந்தார். "திட்டினாலும் பரவாயில்லை, எழுத்தாளர் உயிரோடு இருக்கும்போதே அவரை உட்கார்த்தி வைத்து திட்டுங்கள். நான் செத்தபின்னர் எவனாவது அஞ்சலிக்கூட்டம் வையி, ஆவியா வந்து துரத்தியடிப்பேன்" என்று சாரு பொருமியிருந்தார்.

முன்னமும் எழுதியிருந்தேன். Tuesdays With Morrie நூலில் வயோதிபரான Morrie தனக்குத்தானே மெமோரியல் சேர்விஸ் செய்வார். நண்பர்கள் எல்லோரும் பூங்கொத்தோடு வந்து அஞ்சலி உரைகள் செய்வார்கள். எல்லாத்தையும் கேட்டு மனுஷன் சந்தோசமாக அன்றைய நாளைக் கழிக்கும்.

ஒருவிதத்தில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற வஸ்துகள் அதற்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் லூசுப்பயலுகளுக்கு அவற்றைக்கொடுப்பதால் வலுவிழந்துவிட்டன.

ஒரு எழுத்தாளரை வாழும்போது கொண்டாடுவதில் என்ன தர்மசங்கடம் இருக்கப்போகிறது? எழுத்தாளர்கள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. எல்லோரும் முழுமையானவர்களும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் எந்த எழுத்தாளர்களையும் நாங்கள் கடந்துவரவே வேண்டும். அதுதான் அவர்களுடைய எழுத்துக்குப் பெருமை. ஒருத்தர் செங்கை ஆழியானோடோ ஜெயமொகனோடோ சுஜாதாவோடோ தங்கிவிட்டால் அது அவர்கள் எழுத்தின் குறைபாடாகவே பார்க்கவேண்டும். ஆகவே எழுத்தாளர்கள் வாசகர்களுக்குக் கொடுத்த அதி உயர் தருணங்களுக்காகவே நினைவு கூறப்படவேண்டும். இளையராஜாவை கொண்டாடுவது "தென்றல் வந்து என்னைத்தொடும்" தந்தமைக்காவே. "எடக்கு முடக்கான சரக்குக்கு" அல்ல.
எந்தப்பெரிய கலைஞனுக்கும் அங்கீகாரம் என்பது விவரிக்கமுடியாத உணர்வு. நான் ஒரு சாதாரண வாசகன். "உங்கட எழுத்தெண்டால் மண்ணெண்ணெய் முடிஞ்சு திரி எரியிறது தெரியாமல் வாசிப்பன்" என்று சொல்லும்போது செங்கை ஆழியானின் கண்கள் பளீரென்று ஒருமுறை மின்னியது.

"சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு"

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.