Skip to main content

ஐடியா

 

lateral-thinking-puzzles

இராகவன்; அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர். தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக்கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய ஐ.கியூ அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார்.

இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதிவரையிலும் உருப்படியான மக்களுக்கு பயன்படும்வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்படமுடியாமல் போய்விட்டது. அவர் உருவாக்கிய எந்த மென்பொருளையும் எவரும் பயன்படுத்துவதில்லை. அவருடைய அப்ளிகேஷன்கள் அப்பிள் ஸ்டோரிலே யாராலுமே டவுன்லோட் பண்ணப்படாமல் தூங்குகின்றன. இன்றைக்கு இராகவன் ஏதோ ஒரு உப்புமா நிறுவனத்தின் உப்புமா மென்பொருளுக்காக தன்னுடைய திறமையை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்.

திறமைசாலியான இராகவனால் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியாமல் போனதன் காரணம் என்ன? இராகவன் என்றில்லை. சுரேஷ், மதிவதனி, ரேணுகா என்று எமக்குப் பரிட்சயமான பெயர்கள் எல்லாம் மனதிலே வந்துபோகிறது.

இவர்கள் எல்லாம் ஏன் இப்படிப்போனார்கள்?

“The thing is to really feel empathy, try to understand people by observing them”

என்கிறார் ஐடியோ நிறுவனத்தை உருவாக்கிய டேவிட் கெல்லி.

ஒரு சிறந்த கருவியோ கண்டுபிடிப்போ மக்களின் வாழ்க்கைநிலையை ஏதோ ஒரு வகையில் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். அவர்கள் எதிர்கொள்ளும் ஏதோவொரு சிக்கலை அது தீர்க்கவேண்டும். அதற்கு அவர்களுடைய கண்களினூடாக, அவர்களுடைய உணர்வுகளினூடாக அந்தச்சிக்கல்களை வடிவமைப்பாளர்கள் உள்வாங்கவேண்டும். தேவையின் வீரியம் அதிகமாகும்போதே அதற்கான தீர்வும் அடையப்படுகிறது. ஒரு விவசாயி நாளாந்தம் வயலிலே எதிர்கொள்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வினை குளிரூட்டப்பட்ட அறையினுள் கணனித்திரையின் முன்னால் முழுநாளையும் கழிக்கின்ற ஒருவரால் அடையமுடியாது. விவசாயியாலும் அதனை அடையமுடியாது. விவசாயிக்கு சமயத்தில் தனது தேவை எது? எதில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் தன்னுடைய வேலை மேம்படும்? எவையெல்லாம் சாத்தியம்? என்பதை உய்த்துணருகின்ற திறன்கூட இருக்குமென்று சொல்லமுடியாது. அதனால் பல்வேறு துறை சார்ந்தவர்களோடு, பல்வேறு திறன்களை உடையவர்களோடு அந்த விவசாயியும் தொழில்நுட்பவாதியும் இணைந்து செயற்படும்போது பிரச்சனை எதுவென்றும் அறிந்து அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடைவதும்கூட முடியுமான காரியமாகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில் பொதுப்புத்தியின்பாற் சிந்திக்காமல் வித்தியாசமாகச் சிந்தித்து முடிவுகள் எடுப்பது முக்கியம். ஏனெனில் இத்தனைகாலமும் சமூகத்தால் எதிர்கொள்ளப்படுகின்ற, தீர்க்கப்படாத சிக்கலையே இந்தமுறையின்மூலம் தீர்க்கப்போகிறார்கள். ஆகவே அந்தத் தீர்வு இதுவரையும் பயன்படுத்தாத புதுமாதிரியானதாக இருத்தல் அவசியம். அதற்கு நம் மூளைக்குப் பழக்கப்பட்ட சிந்தனைமுறைமையிலிருந்து அப்பாற்சென்று சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது.

jamie_foodmap_1

மேற்சொன்ன கருத்துகளைத் தாரக மந்திரமாகக்கொண்டே ஐடியோ நிறுவனத்தைத் தொண்ணூறுகளில் டேவிட் கெல்லி ஆரம்பித்துவைத்தார். அவர்களுடைய ஒவ்வொரு வேலைத்திட்டங்களிலும் பல்துறை நிபுணர்கள் இருப்பார்கள். தொழில்நுட்பவியலாளர், மனோதத்துவ நிபுணர், வைத்தியர், மொழியியலாளர், வர்த்தக நிபுணர்கள் என்று பல்வேறுபட்டவர்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வை அடைவதற்காக ஒன்றுகூடி செயற்படுவார்கள். ஐடியோ நிறுவனம் கணணி மவுசிலிருந்து, தளபாடங்கள், மின்கருவிகள், மருத்துவ உபகரணங்கள் என்று எண்ணற்ற புதுமையான கண்டுபிடிப்புகளை இதுவரைக்கும் நிகழ்த்தியிருக்கிறது.

ஐடியோ நிறுவனம் ஒருமுறை ஐந்துநாள் வேலைத்திட்டம் ஒன்றை நடத்தியது. பல்பொருள் அங்காடிகளில் பொருட்களைத் தள்ளிச்செல்லப் பயன்படுத்தும் வண்டியை (Shopping Cart) மேற்சொன்ன அணுகுமுறையின்மூலம் ஐந்து நாட்களில் மீள வடிவமைப்பதே அந்த ஐந்து நாள் வேலைத்திட்டத்தின் நோக்கம். பல்துறை நிபுணர்கள் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து விதம் விதமான தேவைகளை வரிசைப்படுத்தி அதற்கேற்றபடி பலவித டிசைன்களின் வண்டில்களை வடிவமைப்பார்கள். அந்த செயன்முறையே புதிதாக ஆச்சரியமானதாக இருக்கும். அதன் வீடியோ இணைப்பு இங்கே.

 

 

“Yarl IT Hub” ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. இன்றைக்கு நம் மத்தியில் பல பொறியியலாளர்கள் இருக்கிறார்கள். தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை நேர்த்தியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் உள்ளனர். திறமைக்குக் குறைவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமூகத்தின் பல்துறை சார்ந்த பிரச்சனைகளோ, அதற்கான தீர்வுகளோ அவ்வளவாகத் தெரியாது. அதுபற்றிய தகவல்களோ, அறிவோ அவர்களிடம் அவ்வளவாக இல்லை. “Yarl IT Hub”  நிறுவனம் அப்பொறியாளர்களையும் துறைசார் நிபுணர்களையும் ஒன்றிணைத்து ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்றை பரீட்சார்த்தமாக செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விவசாயம், மருத்துவம், கல்வி, மீனவம், மொழியியல் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழில்நுட்பத்துறையில் இயங்குபவர்களும் அன்றைய தினம் ஒன்றிணைவார்கள்.

நீங்கள் விவசாயம், மருத்துவம், கல்வி, மீனவம், மொழியியல் போன்ற துறைகளில் ஏதோ ஒன்றில் பணிபுரிபவராகவோ அல்லது அத்துறைசார்ந்து இயங்குபவராகவே இருந்தால் இந்த ஒருநாள் செயற்திட்டத்தில் இணைந்து உங்களுடைய பங்களிப்பை நல்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள். அத்துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் இனம்கண்டு அவற்றை பிரேரிக்கும்பட்சத்தில் எல்லோரும் இணைந்து அன்றையதினமே ஒரு தீர்வை நோக்கி முன்னேறும் சாத்தியம் உண்டு. பல்வேறு தேவைகள் இனம்காணப்படின் ஈற்றில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரச்சனை தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் பன்முகத்தன்மை வாய்ந்த குழுக்களால் அந்தப்பிரச்சனை ஆராயப்பட்டு, அந்த நாளின் இறுதியிலேயே செயற்படுத்தக்கூடிய ஒரு திட்டவரைவு முடிவுசெய்யப்படும். அடுத்துவரும் வாரங்களில் அந்தத்திட்டங்களையே தொழில்முனைவாக ஆரம்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படலாம்.

“Ideation Workshop” என்கின்ற இந்த ஒருநாள் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி (03-04-016) காலை ஒன்பது மணிமுதல் மாலை ஆறுமணிவரை இடம்பெறவிருக்கிறது.

மேற்சொன்ன துறை சார்ந்தவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் (அவர்கள் கணனித்துறை சார்ந்தவர்களாக இருக்கவேண்டிய தேவை இல்லை) இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து பங்களிப்புச் செய்யுமாறு “Yarl IT Hub” நிறுவனம் அழைப்பு விடுக்கிறது. புதுமையான சிந்தனைகளையுடைய மேற்சொன்ன துறைகளைச் சார்ந்தவர்களிடம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள். ஒரு விவசாயியும் வர்த்தகத்துறையாளரும் இலத்திரனியல் பொறியாளரும் கலந்து பேசும்போது புதுப்பரிமாணங்களில் பிரச்சனைக்கு தீர்வுகள் உருவாகலாம். ஒரு முழுநேர மீனவரும் கணனிப்பொறியாளரும் கலந்து திட்டமிடுகையில் ஏதாவது நடைமுறை மீன்பிடிப் பிரச்சனைகளுக்கு அறிவியல்ரீதியாகத் தீர்வினை எட்டமுடியும். மொழியியல் துறையில்கூட ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. தமிழைப் பிளையில்லாமல் எழுதுவதே ஒரு பிரச்சனைதான்! அதற்கு அறிவியல் ஏதாவது தீர்வினைக் கொடுக்கமுடியுமா? ஒன்றுகூடித் திட்டமிடலாம்.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பினால், தயவுசெய்து கீழ்காணும் இணைப்பிலுள்ள விண்ணப்பபடிவத்தினை மார்ச் இருபதாம் திகதிக்குள் பூர்த்திசெய்து அனுப்புமாறு அன்போடு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்வதற்கான இணைப்பு.

இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கு.

http://www.yarlithub.org/yarl/ideation-workshop

yarl-it-hub-logo


Yarl IT Hub

யாழ்ப்பாணத்தில் ஒரு சிலிக்கன் வாலி


படங்கள்

/www.learning-mind.com

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக