நிலவு வேகமாய் எங்கோ
நகர்ந்து கொண்டிருந்தது.
திமிங்கிலத்திடமிருந்து
திமிறியோடும்
சிறுமீன்போல,
முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து
நிலவும் விரைந்து கொண்டிருந்தது.“நீயும் தொலைந்து விட்டாயா?”
ஒரு சிறுவனின் குரல்.
“எம்மோடு கூட வருகிறாயா?”
நிலவு குனிந்து பார்த்தது.
சமுத்திரக்காட்டினுள்
திக்குத்தெரியாமல்
தரித்து நின்றது ஒருபடகு.
பாதை தேடிய பயணம் ஒன்று
ஆழிநடுவே தத்தளித்தது.
முந்நூறு அகதிகள்.
மூவாயிரம் கனவுகள்.
நிறைமாதக் கர்ப்பிணியாய்
பரிதவித்தது படகு.
பல்லின தேசங்கள் பல
பத்தடிப் படகினுள்ளே
சத்தமின்றி முடங்கிக்கிடந்தன.
விடுதலைப் போராட்டங்கள்
கடுங்குளிர் தாளாமல்
விறைத்துக் கிடந்தன.வறுமை துரத்திய வறுமை.
மனிதம் துரத்திய மனிதம்.
அதிகாரம் துப்பிய உயிர்கள்.
கூதல்காற்று தாளாமல்
போர்த்துக்கிடந்தன.மண் நிராகரித்த மனிதர்களை
வாரிவிழுங்கி ஏப்பமிட
கோரப்பசியுடன்
கடல் காத்திருந்தது.“எம்மோடு கூட வருகிறாயா?”
நிலவு தயங்கியது.
"அப்துல்லா.மதுமதி.
அலான், நுவேன்.
எல்லோரும் சேர்ந்து
விளையாடலாம்.
என் வீட்டுக்கு வருகிறாயா?"நிலவு யோசித்தது.
"உன் வீடு எது?"
"இப்படகுதான்"
"நேற்று?"
"அது வேறு படகு"
"அதற்கு முதல்?"
"அகதி முகாம்"
"அதற்கும் முதல்?"
"இன்னொரு அகதிமுகாம்"
"நீ பிறந்தது எங்கே?"
"அதுவும் அகதிமுகாம்""நித்தம் ஒரு முகாமென
நிர்க்கதியாய் அலைகிறாயே?
வீடற்ற உன்னிடத்தில்
நான் எப்படி வருவது?”நிலவது கேட்டது.
"இல்லையே.
நிலவு காயும் முற்றமே என் வீடு.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.
என் அன்னை சொல்லியுள்ளாள்.
நிலவு காயும் முற்றமே என் வீடு.
சமயத்தில் அது கொட்டிலாகும்.
குண்டு வெடித்தால் தட்டியாகும்.
திறந்தவெளி பதுங்குகுழி
பயந்தொதுங்கும் பற்றைக்காடு
பனி பொழிந்தால் தரப்பாள் போர்வை
பாலைவனத்துப் பாய் விரிப்பு.
நடுக்காட்டின் மரவுச்சி.
சமுத்திரத்தில் சிறுபடகு.
எங்கெலாம் போனாலும்
என் வீட்டு முற்றத்தில்
எப்போதும் நிலவிருக்கும்.
என்றைக்கும் என் வீடு ஒன்றுதான்.
எம்மோடு வருவியா?”ஆயுள் முழுதும் நிர்வாணியாய்
ஆளே அற்ற தனிமரமாய்
பொட்டவெளி வானத்தில்
வெட்டிக்கழித்தது போதும் இனி.
இறங்கிவந்த நிலவு
சிறுவனுக்கு அருகே
நெருங்கி விழுந்தது.முகில்கள் பொழியும் மழை.
மழையும் உறையும் குளிர்.
குளிரில் நடுங்கியது நிலவு.
நிலவை அணைத்தனன் சிறுவன்.
குழந்தையின் வெதுவெதுப்பில்
முழுநிலவு
மூன்றாம்பிறையெனக் குறண்டிக்கொண்டது.கரையறியா கடல்பயணம்.
காத்திருப்பில் நாழிகையும்
நாட்கணக்கில் நீண்டுபோனது.
ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.விண்ணிலிருந்து ஒரு அசரீரி.
இன்னுமொரு அவதாரம்.
இரவலாக ஒரு ரொட்டித்துண்டு.
கானல்நீராய் ஒரு கரையேனும்
காணக்கிடைக்காதா?ஆழ்கடலில் அற்புதம் நிகழ்த்தவரும்
மீட்பருக்கான காத்திருப்பு அது.அதிசயமாய்
சென்றவர்கள் வந்தார்கள்.
”வந்தவழியே திரும்பிச் செல்லு” - என
சொல்லிவிட்டு மறைந்தார்கள்.
வெட்டவெளி கடல்தனிலே
வந்தவழி ஏது?
சென்றவழி ஏது?”திகைத்தது நிலவு.
"விடிவென்பதே இல்லையா நமக்கு?"
"நிலவுக்கு ஏது விடிவு?
விதித்தது இதுவே எமக்கு.
என்னோடு நீயிருந்தால்
இல்லை ஏதும் இல்லை எனக்கு.
நிலவு காயும் முற்றமே என்வீடு.வெண்ணிலவும் சிறுவனோடு
நிர்மலமாய் தூங்கிப்போனது.கரைகள் வெறுத்தாலும்
அலைகள் விடுவதில்லை.
அலைகள் எதிர்த்தாலும் – கரைசேரும்
கனவுகள் கலைவதில்லை.கிழக்கு வெளித்தது.
மேற்கின் கரையில்
நிலவோடு ஒதுங்கியது
சிறுவனது சடலம்.அப்போதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது
அவன் குரல்.நிலவு காயும் முற்றமே என் வீடு.
இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்கான அமைப்பு நடத்திய அனைத்துமொழிக் கவிதை வாசிப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கவிதையில் தமிழ் வடிவம்.
படங்கள் (For Fair Use for non commerical Purpose)
Murat Sayin
Steve Dennis
படித்தேன்...உணர்வுகளில் ழூழ்கிபோனேன்...😔
ReplyDelete