Skip to main content

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு
விளக்குமாறால் கூட்டித்தள்ளியும்
சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள்
மரத்தடி நிழலில் நாற்காலி
என் ராங்கிகார அம்மா,
கால்கள் மெல்லமாய் தாளம்போட
ஏதோ ஒரு பாட்டு
நாளை இந்த வேளையோ? 
541957_10151420977146654_20018706_nஇது நல்ல வேளையோ?
எப்படிச்சொல்வேன் நான்?
என்னை விட்டு போய்விட்டான் என்றா?
அதிர்வாளா? அழுவாளா?
யாருக்காக அழுவாள்?
ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி
ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு.
பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன்.
என்னடா?
சொன்னேன்.
என்னடி சொல்லுறாய்?
திரும்பவும் சொன்னேன்.
போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா?
அரற்றினாள்
விடம்மா.. போனால் போறான்.
அம்மாளாச்சி … போயிட்டாரா ..
அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ
அழுதாள். அரட்டினாள்.
அதிர்ந்து போனேன் நான்.
அம்மா நீ வந்து… 
உடம்பில் ஏதோ ஊர்வது போல
அவனை காதலித்தேனா?
அறிந்தேனா புரிந்தேனா?
என்ன கருமாந்திரம் செய்தேன் நான்?
நான் நினைத்தது தான் அவன் என்றேனோ?
அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ?
அறியவும் முயலாமல் முனிந்தேனோ?
அம்மாவை பார்த்தேன்.
கண்களால் கோதிவிட்டாள்.
இந்த அன்பு
அவங்கள் இல்லாதவிடத்தில் 
அம்மாவின் அன்பு
அவளுக்கு என் அன்பு
நடக்கும் என்று பயந்தது தான்
நடந்துவிட்டது
இனி என்ன?
இதே வீடு தான்
ஆண்கள் இல்லாத வீடு
இதே வேம்பு, தோட்டம், துரவு
அடுப்புக்கரி  சரவச்சட்டி
ஒழுகல் கூரை, தேடாவளையம்
பட்டி மாடு கன்றுக்குட்டி
கழுத்துவெட்டி சேவல் கோழி
கெக்கலிக்கின்றன
இது ஆண்கள் இல்லாத வீடு
 

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.