Skip to main content
காலமை வெள்ளன ஏழரை ஆகியும்
காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும்
கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை
பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை.
அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது.
அண்ணலின் நடிப்போ மகாநதியானது.
அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது - ஒத்திய
புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது.
வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும்
கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி
நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான்
வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான்.
இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில்
மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ?- கொத்த
மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள்
பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ!
நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால்
நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா
நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள்.
வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!