Skip to main content

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

 

IMG_55332
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட!கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர்.
கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர்.
இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர்.
உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

சுடர்மிக்க அறிவுடனே இடம் தவறி பிறந்திட்ட
இடர் கண்ட மூக்கு நான். என் உரை கொஞ்சம் கேட்டிடுவீர்.
அறிஞரெல்லாம் கூடி இங்கே சிறந்த கவி பாடையிலே
அறுந்த என் கதையை சொல்லி அறுக்கபோறன் சகித்திடுவீர்!

சடைமுடியான் முடியிழந்து கொடுங்காடு எய்தினனே.
அவன் உடையாள், கொடி இடையாள் கூடவே வந்தனளே.
இளையவனும் காத்திருக்க இருவருமே பருகிட்ட – கோதாவரி
கரையருகே என்கோதாரியும் வந்தனளே.

25206-1324227430-0
வந்தவளும் மையலுற வரிசிலை அண்ணலுமே நின்றனனே.
நின்றவனை கொண்டவனாய் கண்டதுமே எண்ணினளே.
வெந்ததுவோ காமம். விளைந்ததுவோ மோகம்
மோகத்தின் பசலைத்தீ பொய்யின் சுவைபோல படர்ந்ததுவே.

கோமகனை தன் அழகில் யாசகனாய் மாற்றிடவே
பங்கயத்தின் மந்திரத்தால் (பியூட்டி)பார்லர் போயும் வந்தனளே.
பொன்மகளின் வண்ணமதில் மன்னவனும் தயங்கினனே
இங்கிவளும் வந்தனை நீ, எங்கனம்? என இயம்பினனே.

கேட்டவனின் காதினிலே காமுற்ற கதை சொல்லி
ஏற்றிடு நீ என்னை என்று நொய்யலும் பையநின்றாள்.
உண்டாட்டம் புரிந்தவனின் உள்ளார்த்தம் அறியாது
தப்பாட்டம் புரியஏனோ திண்டாட்டம் அன்பே? என்றாள்.

பன்னசாலை வெளியே வந்த பெண்ணரசி அழகை கண்டு
அடங்காத அழுக்காற்றால் அழகியைப்போய் அரக்கி என்றாள்.
கவர்ந்திவளை கொண்டுசென்று மறைத்திட்டால் – மன்மதனை
கந்தர்வம் புரிய இனி தடையில்லை என நினைத்தாள்.

சூர்ப்பனகை சூழ்ச்சியினை அறிந்திட்ட இளையானும்.
பேச்சுவார்த்தை இவளோடு பேதைமை என உணர்ந்தானே.
உடைவாளை உரிந்தானே. முடிபற்றி உதைத்தானே
முலைக்காம்பு காதிரண்டை மூக்கோடு அரிந்தானே

அரிகரனின் அவதாரம் தமக்கில்லை ஆனபின்னர்.
அரிந்தவனை மணந்திடவே அரக்கியவள் இசைந்தாளே.
சண்டைக்காரன் காலில்விழும் இந்தகால வழக்கம்போல – தனை
ஒறுத்தவனை காதலித்து, மீள, மூக்கறுபட்டு போனாளே!

மனிதஉரிமை மறுக்கும்மண்ணில் அறுந்துபட்ட பெண்மணிக்கு
மனுநீதி காத்தருள இராகவனும் மறந்தானே.
அவதார நோக்கத்தை அடைய வேறுவழியின்றி
அரசியல் போல் மூக்கறுத்து இராவணனை சென்றடைந்தானே.

தம்பியுடை மன்னவரின் சட்டாம்பிதனம் போல
அம்பி நீயும் செய்த செயல் அடுக்காது கண்டீரோ.
இன்றைக்கும் அன்றைக்கும் இதுவே எம் இழிவுநிலை
இதை சொல்லும் எவருக்குமே மூக் கறுபட்டஅவலநிலை.

மூக்கறுந்த பின்னாலும் மோகம் அடங்கும் நோக்கமில்லை
ஏக்கமுற்ற மூச்சினிலே இராமன் வாசம்எங்கும் நீக்கமில்லை.
மோகத்தின் வாசத்தை முகர்ந்து அவள் தொடர்வள் என்றோ
மூக்கரிந்து போட்டுவிட்டு காட்டினின்று நீங்கிவிட்டீர்?

அவளுக்கென்ன அரக்கியன்றோ? அடுத்த மூக்கை ஆக்கிடுவாள்.
அறுந்து கிடக்கும் எனைஎடுத்து எவன் முகத்தில் ஓட்டிடுவான்?
ஆரியனும் அறுத்த புழை, ஊடாக ஓடும் சொரி
ஆயிராமாம் ஆண்டு கழிந்தும் இன்றும் ஆறாக ஓடுதடி.

ஆற்றருகே அனாதையாய் அரற்றும்என்னை விட்டுவிட்டு
கம்பநாடன் காப்பியமும் கடந்து சென்று போனதுவே.
ஆழிதாண்டி சீதையினை ஈழம் சென்று மீட்டபின்னும்
மூளி என்னை மீட்காது புய்ப்பகத்தில் பறந்ததுவே.

அருந்தகையை ஆசையுற்ற தவறு என்ன சொல்லீரோ?
பரம்பொருளில் மயங்காதோர் தரணியிலே எவருமுண்டோ?
ராதையோடு கோபியரை கோகுலத்தில் கொண்டவரே – சீதையோடு
மாதர் இரண்டை சிந்தை ஏற்றமாட்டீரோ?

பிரிந்துபோன காதலரின் இறுதி வார்த்தை துடிப்பு போல
அணைந்துபோன அகல்விளக்கின் எஞ்சியிருக்கும் திரிபோல
இறுமாப்பாய் வாழ்ந்து வீழ்ந்த ஈழத்தமிழன் நிலை போல – ராமா
மூக்கறுந்து கிடக்கேன் நான். மீட்டுப்போக வருவாயோ?

IMG_55192
அகலிகையின் விமோசனத்தை அடிஎடுத்து முடித்துவைத்தாய்.
அணைகட்ட மணல் கொடுத்த அணிலுக்கும் அருள் செய்தாய்
அய்யனுனை கண்டுவிட்டே சபரியவள் முத்தி எய்தாள் – ராமா
அறுந்த இந்த மூக்கைமீட்க அவ|தாரம் ஒன்று எடுப்பாயா?

அரிந்த நாசி சாபத்தாலே அடைந்த நாசம் கொஞ்சமில்லை
பிரிந்த தேவி தேடி நீயும் அலையா இடம் எங்குமில்லை
பறந்து திரிந்த சடாயுவும் இறந்துபட்டு போயினனே
புறத்து நின்று வாலியை வென்று தீரா.. பழி சுமந்தாயே

வானுயர்ந்த இலங்கை தேசம் வால் நுனியில் எரிந்ததுவே.
சாமகானம் இசைத்த வேந்தன் தலைகள் பத்தும் சிதைந்ததுவே
காடு விட்டு நாடு போயும் கண்டகோலம் என்ன சொல்லும்? – நீரு
மீட்டெடுத்த சீதை கூட சென்றுவிட்டாள் காடு மீண்டும்.

மூக்கறுத்த சாபம் உமை முச் சந்தியிலே நிறுத்தியதே – மீண்டும்
பிறப்பெடுத்து வந்துஎந்தன் கோபத்தினை குறைப்பீரோ?
வரும்போது சீதையினை மிதிலையிலே விட்டுவாரும்
அவசரக்காரனையும் அயோத்தியிலே இட்டுவாரும்.

அம்பு ஒன்றும் இங்கு வேண்டாம். அன்புமட்டும் கொண்டுவாரும்.
அண்ணலோட அவதாரத்தில் இனி அகிம்சை கொஞ்சம் சொல்லவேண்டும்.
அரக்கியோட சூழ்ச்சிக்கெல்லாம் மூக்கை இனி அறுக்காதீம்.
அன்பேசிவம் என்று (அவள்) மனதைதிருத்த முயற்சி செய்யும்.

இல்லுக்காக வில்லெடுக்கும்
வில்லங்கம் இனி வேண்டாம்.
இம்சை என்று பெண்ணொன்றை
பங்கப்படுத்தும் நிலை வேண்டாம்.

கங்கை கொண்ட சிவனை போல
பெண்ணை உந்தன் கொண்டை மேலே
தங்க இடம் கொடுத்திருந்தால்
சண்டை ஏதும் வந்திராதே!

போக்குமிடம் வழி இன்றி புலம்பலுற்ற கவியன்றி
வாக்கு சொன்ன மூக்கின் கதையில்  - மனதை
தாக்க எதுவும் சொல்லவில்லை.
தப்பு என்றால் மன்னித்திடும். நாக்கை வேண்டின் நறுக்கிவிடும்.
வம்பு என்றால் சொல்லிவிடும்.
பாவம்... தம்பிதானே விட்டுவிடும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏனைய கவிதைகள்
உயிரிடை பொதிந்த ஊரே!
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!
காத்திருப்பேனடி!
எங்கள் வீட்டில் இலக்கியம் ...

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக