Skip to main content

ஆக்காட்டி நேர்காணல் - 1பிரான்சிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி சஞ்சிகையின் ஜூலை-ஓகஸ்ட் இதழிலே என்னுடைய நேர்காணல் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் சாதனா ஈமெயில் மூலம் அனுப்பிவைத்த கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் இவை. நேர்காணலை magzter தொடுப்பிலும் வாசிக்க முடியும்! இங்கே வெளியிடப்படுகின்ற பதில்களில் சில எழுத்துத்திருத்தங்கள் உண்டு.
உங்களுடைய இளம் பராயம், வாழ்க்கைச் சூழல், பள்ளி, எழுத்தின் ஆரம்பம், முதல் படைப்பு இது பற்றி விரிவாகக் கூற முடியுமா?
இளம்பராயம் முழுதும் போர்ச்சூழல்தான். ஆனாலும் எமக்கு அதுதானே தெரிந்த ஒரே வாழ்க்கை. அதனால் எல்லாச்சிறுவர்களையும்போல ஒவ்வொரு கணத்தையும் சந்தோசமாகவே கழித்தோம். குறைந்தபட்ச வாழ்க்கைமுறை வாசிப்பதற்கான சூழலை தோற்றுவித்தது. கண்டபாட்டுக்கு வெளியே சுற்றித்திரிய முடியாது. ஊரடங்குகள், சண்டைகள் எங்களை வீட்டுக்குள்ளும் பங்கருக்குள்ளும் முடக்கின. புத்தகங்கள் நண்பர்களாகின. அக்காலத்தில் ஊரில் இருந்த அத்தனைபேரும் புத்தகங்களை கைமாற்றி கைமாற்றி வாசித்துக்கொண்டிருந்தார்கள். தனியார் வீடுகளில்கூட நூலகங்கள் இருந்தன. எங்கள் சந்தியிலிருந்த சிவன் ஸ்டோர்ஸ் பலசரக்குகடையில் ஒரு அலுமாரி வைத்து புத்தகங்களை இரவல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் மூன்று ரூபா. அரிசி, பருப்புபோல புத்தகவாசிப்பும் ஒரு அத்தியாவசிய பண்டமாக இருந்தகாலம் அது. என்னையும் அது பிடித்துக்கொண்டது ஆச்சரியமான விடயம் அல்ல. அடுத்தது எங்கள் பாடசாலை ஹண்டி நூலகம். பள்ளிப்பருவத்தின் பல மணி நேரங்கள் அங்கேயே கழிந்தன. எனக்கு பரியோவான் கல்லூரியில் அமைந்த மிகச்சிறந்த ஆசான் அந்த நூலகமே.

எழுத்தின் ஆரம்பம் உல்டாவில் ஆரம்பித்தது. ரெண்டாம் வகுப்பா, மூன்றாம் வகுப்பா தெரியாது, சம்பந்தர் ஞானப்பால் உண்டுவிட்டு தோடுடைய செவியன் பாடிய பாடம் படித்த அன்றைக்கு நானும் நாலு வரியில் ஒரு மொக்கைத்தேவாரம் எழுதி அம்மாவிடம் கொடுத்தேன். "இதுகளை தூக்கி எறிஞ்சிட்டு போய் கொப்பி புத்தகத்தை எடுத்து படி" என்றார். பதினொரு வயதில் ஒரு சிறுகதை. மேனகா என்ற பதின்ம சிறுமியின் கதை. முடிவில் அவள் வாகனவிபத்து ஒன்றில் இறப்பாள். மரண மொக்கை கதை. இரண்டாயிரமாம் ஆண்டில் உலகம் எனறு ஒரு கற்பனை. இந்தியா சோவியத் யூனியன் மாதிரி உடையும் எனறு எழுதியது ஞாபகம் வருகிறது.

பதின்மூன்று வயது. அப்போது யாழ்ப்பாணத்தில் அறிவுக்களஞ்சியம் எனறு ஒரு சஞ்சிகை வெளிவந்தது. கூடவே சுஜாதாவின் "ஏன். எதற்கு எப்படி" கொடுத்த தாக்கமும் சேர்ந்துகொள்ள, நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு புத்தகம் போட முயனறோம். 'பொது அறிவுப் பூங்கா'. காசு எல்லாம் சேர்த்தும் பெரிதாக பெரியவர்கள் ஆதரவு கிட்டாமையால் அது சரிவரவில்லை. அதன் கையெழுத்துப்பிரதி இன்னமும் வீட்டில் இருக்கிறது. அந்த முயற்சி வெற்றியடைந்திருந்தால் இன்னமும் சீரியசாக அப்போதே நான் எழுதியிருக்கலாம். அழிந்தும் போயிருக்கலாம்!

ஒரளவுக்கு குறிப்பிடத்தக்க சிறுகதைகள் பல்கலைக்கழகம் சென்றபின்னர் எழுதினேன் என்று நம்புகிறேன். ஜி. பிரதீபன் என்ற சீனியர் அண்ணா அப்போது நிறைய ஆதரவு தந்தார். "வானம் மெல்ல கீழிறங்கி" எனறு இப்போது படலையில் இருக்கும் சிறுகதை அப்படியானது. இன்னொரு சிறுகதை ஒரு பல்கலைக்கழக தமிழ் மாணவன் சிங்களப்பெண்ணை காதலிக்கிறான். யாழ்ப்பாணம் கூட்டிச்செல்கிறான். போகும்வழியில் நாவற்குழிப்பாலத்தில் தரித்து நிற்கிறார்கள். நடந்ததை சொல்லுகிறான். அரதப்பழசான ஈழத்துக்கதைக்கரு.

பின்னர் இணையம் வந்தபிறகு என்னிஷ்டம். முதல் ஆங்கிலப்பதிவு 2002 என்று நினைக்கிறன். அனேகமானவை தொழில்நுட்பபதிவுகள். பின்னர் சிறுகதைகள். Coffee, Doormat, Girl is Mine போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒன்பது வருடங்கள் ஆங்கிலத்தில் வண்டியோட்டி பின்னர் 2011 இல் படலையை ஆரம்பித்தேன். அதற்கப்புறம் என்னவானது என்று ஓரளவுக்கு தெரிந்திருக்கும்.

அவ்வளவுதான் என் சுவாரசியமில்லாத முன்கதைச்சுருக்கம்!

ஆரம்பத்தில், ஆங்கிலத்தில் மாத்திரமே எழுதி வந்த நீங்கள் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்களுடைய பெரும்பாலான படைப்புகளை நீங்கள் தமிழ் மொழியிலேயே எழுதி வருகின்றீர்கள். ஒரு படைப்பை ஒரு படைப்பாளி தன்னுடைய பிறப்பு மொழியில் எழுதுவதற்கும், அன்னிய மொழியில் எழுதுவதற்கும் இடையிலான வேறுபாடு என்னென்ன? எது அவனை அதிகம் பரவசமூட்டுகின்றது?
கதையை சிந்திக்கும் மொழியிலேயே எழுதுவதே பரவசமூட்டும் என்று நினைக்கிறேன். நம் சிந்திக்கும் மொழி காலத்துக்கேற்ப மாறுகிறது. ஒரு அலுவலகக்கதையை யோசிக்கையில் சிந்தனை ஆங்கிலத்திலேயே ஓடும். அதுவே யாழ்ப்பாணத்தில் நடக்கும் கதை என்றால் எண்ணம் தமிழிலேயே சுழலும். "Coffee" என்றொரு சிறுகதை, மெல்பேர்ன் ரயில் பிரயாணத்தின்போது ஒரு ஈழத்து வாலிபனும் வெள்ளைக்காரியும் சந்திக்கின்ற மிக எளிமையான சிறுகதை. அது ஆங்கிலத்திலேயே சிந்தித்து ஆங்கிலத்திலேயே எழுதியது. அதனை பின்னாளில் "என்ர அம்மாளாச்சி" என்று தமிழ்ப்படுத்த முனைகையில் நிறைய சிரமப்பட்டேன். ஆங்கில புத்தகங்களின் வாசிப்பனுபவங்களை தமிழில் எழுதும்போதும் அச்சிக்கல் நிகழும். அதே சமயம் "அக்கா" என்ற சிறுகதை, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து நாவற்குழி வீதியால் நடந்து செல்லுகின்ற அக்காவையும் தம்பியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலில் ஆங்கிலத்திலேயே ஆரம்பித்தேன். இரண்டாம் பந்திக்குப்பின்னர் கதை நகரவில்லை. காட்சிகள், விவரணங்கள் முதல் வசனங்கள் வரை எல்லாமே தமிழிலேயே வசனங்கள் அமைந்தன. ஆங்கிலத்துக்கு மாற்றும்போது உப்புச்சப்பில்லாமலிருந்தது. சில விவரணங்கள் தமிழுக்கே உரியவை. "ஈழத்தமிழன்போல ஆங்காங்கே அடங்காமல் பறக்கும் நரைமுடிகள்" என்று பி.கே வாத்தியைப்பற்றி “சப்புமல் குமாரயாவின் புதையல்” விவரிப்பதை ஆங்கிலத்தில் எழுதினால் அபத்தமாகவிருக்கும். "We all came out of Gogol's overcoat" என்பதை எப்படி தமிழில் எழுதுவது? கதை சிந்திக்கப்படும் மொழியிலேயே எழுதுவது இயல்பாக அமையும். மொழியாளுமையும் முக்கியமே, ஆனால் அது இரண்டாம் பட்சம்தான்.
புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவே முன்னோடி. பலரின் எழுத்தில் அவரின் சாயல் தெரிகின்றது. உங்களுடைய எழுத்தில் அது அதிகமாகவே தெரிகின்றது. என்னுடைய ஆதர்சன எழுத்தாளரும் அவரேயென்று நீங்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றீர்கள். ஆனால் சுஜாதா ஒரு இலக்கியவாதியல்ல, அவரொரு வெகுஜன எழுத்தாளர் அவ்வளவே என்கின்ற ஒரு விமர்சனம் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது, முன்வைக்கப்பட்டும் வருகின்றது. சுஜாதாவின் பரம விசிறியான நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?
இலக்கியவாதி, இலக்கியவாதி அல்ல என்ற பகுப்பு மூலம் என்னத்தை அடைந்துவிடப்போகிறோம்? "ஏன், எனக்கு, எப்படி" முதன்முதலில் என் கைகளுக்கு வரும்போது வயது பத்து. அதனை ரசிப்பதற்கு எனக்கு சுஜாதா
இலக்கியவாதியா என்கின்ற தகவல் தேவைப்படவில்லை. சுஜாதா விஞ்ஞானி என்ற தகவலும் தேவையாயிருக்கவில்லை. புத்தகம் என்னைக் கட்டிப்போட்டது. "பிரிவோம் சந்திப்போம்" முதல் "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" வரை சுஜாதாவின் எந்த புத்தகங்களை வாசிப்பதற்கும் அவர் வெகுஜன எழுத்தாளர், இலக்கியவாதி என்ற அடையாளங்கள் காரணமாகவிருக்கவில்லை. ஸ்ரீரங்கத்துக்குப் போகிறவர்கள் எல்லோரிடமும் சித்திரைத்தெருவில் இன்னமும் கிரிக்கட் ஆடுகிறார்களா? நோஞ்சானாக ஒரு பையன் பந்து பொறுக்குகிறானா என்று நான் இப்போதும் கேட்கத்தவறுவதில்லை. ஸ்ரீரங்கத்து தேவதைகள் கொடுத்த மாறாத தாக்கம் அது. குறுந்தொகையை புதுக்கவிதை வடிவில் எழுதிய அவரது புத்தகம், வாசித்தபின் அகநானூறு பாடல்களோடு மாசக்கணக்கில் படுத்துக்கிடந்தேன். நேற்று "தேடாதே" என்ற அவருடைய குறுநாவலை மீண்டுமொருதடவை வாசித்தேன். அது இலக்கியமா? இல்லை என்று யாராவது சொல்லப்போகிறார்களா? ஹூ கெயார்ஸ்? 

இன்றைக்கு சுஜாதா. நாளைக்கு எஸ். ராவையும் இலக்கியவாதி இல்லை என்பார்கள். இன்னொருவர் ஜெயமோகனை இலக்கியவாதி இல்லை என்பார். எழுத்து என்பதே வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமிடையான கலவி. அதிலே பூசாரிக்கு வேலையில்லை. சுஜாதா இலக்கியவாதியில்லை என்று யாரும் வாசகனுக்கு விளக்குப்பிடிக்கத்தேவையில்லை. சுஜாதா இலக்கியவாதி இல்லையா? சரி வச்சுக்கோ. நீதான் இலக்கியவாதியா? எடுத்துக்கோ. அவ்வளவுதான் விஷயம். ஊரிலே நிறைய சுண்ணாம்புச் சுவர்கள் உனக்காக காத்திருக்கின்றன!
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணிபுரிந்த முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிந்தபின்னர் அல்லது அவ்வியக்கத்தின்செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக மௌனமடைந்துள்ள இந்தச் சம காலத்தில் ஞானோதயம் அடைந்தவர்களைப் போல் புலிகளையும் அவர்களின் முன்னைநாள் செயற்பாடுகளையும் விமர்சித்துக் கொண்டு திரிகின்றனர்.இன்னொரு முறையில் கூறுவதாக இருந்தால் அறியப்பட்ட சமகால எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பலர் புலிகள் இயக்க விமசகர்களாகவே இருக்கின்றனர்.ஏன் இந்த மாற்றம்.இது ஒரு நியாயமான காரணங்களின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை.மாறாக அவர்கள் அனைவரும் தங்களின் ஒரு நிலையான இருப்புக்கு,அல்லது இறந்த யானையை வைத்துக் கொண்டு அதன் மூலம் பொன் சம்பாதிக்கவேண்டும் என்கின்ற மொண்ணை அரசியலின் அடிப்படையில் தங்கள் காய்களை நகர்த்துவதாகவே எனக்குத் தோன்றுகின்றது.நான் இதை இவ்வாறுதான் புரிந்து கொள்கின்றேன்.என்னுடைய இந்த புரிதலை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றீர்கள்? அல்லது இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
'தனித்து ஒலிக்கும் குரலே எழுத்தாளனது குரல்' என்பார் ஜெயமோகன். அதிலே ஓரளவு உண்மையுமிருக்கிறது. ஒரு தீவிர எழுத்தாளன் ஒரு அமைப்பு சார்ந்து தொழிற்படமாட்டான். அது அவனுக்கு முடியாததொன்று. ஆக புலி எதிர்ப்பு என்ற அரசியலின் அடிப்படையில் இந்த எழுத்தாளர்கள் கூட்டாக காய்கள் நகர்த்துகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் தத்தமது எழுத்துக்களையே, அரசியலையே முன் வைக்கிறார்கள். கொலம்பசின் வரைபடத்தின் அடிப்படையில் போர்க்கால பயணியின் நாட்குறிப்புகள் அமையவில்லை. யோ. கர்ணனும், தமிழ்க்கவியும், கருணாகரனும் சமகாலத்தில் வன்னியில் வாழ்ந்திருந்தமையால் அவர்களின் எழுத்துகளில் ஒருவித பொதுமைத்தன்மை தெரிகிறது. அவ்வளவே. 

புலிகளின் எழுச்சிக்காலத்தில் ஏராளமான புலிகளுக்கு சார்பான ஊடகங்களும் எழுத்துக்களும் வெளிவந்துகொண்டிருந்தன. அப்போதிருந்த புலி எதிர்ப்பு ஊடகங்களைவிட புலிகள் சார்பான ஊடகங்களும் எழுத்துக்களும் வலிமையாகவிருந்தன. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் புலிகளுக்கு ஆதரவான எழுத்துக்களில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுத்தாளர்கள் சிறிது ஓய்ந்துவிட்டார்கள். ஆனால் புலி எதிர்ப்பு எழுத்துக்களோ, எழுத்தாளர்களோ தேங்கவில்லை. புலிகள் இல்லாததும், "I told you so" என்ற எண்ணமும் அவர்களை மேலும் தொடர்ந்தும் எழுதத்தூண்டுகிறது. இந்த சமநிலை மாற்றமே நம்மை அவ்வாறு எண்ணதூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

மற்றயது நம்முடைய பார்வைக்கோணம்.

'ஈழத்து எழுத்து எனறாலே அது போரிலக்கியம் என்ற எண்ணத்தாலும் ஈழம் சார்ந்த எழுத்தாளர்களிடம் போரியல் சார்ந்த எழுத்துக்களை மாத்திரமே எதிர்பார்க்கும் மனப்பாங்கினாலும் நாம் போர் சாராத எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறிவிடுகிறோம். செங்கை ஆழியான் கடைசியாக எழுதிய நாவலை நாம் அறியோம். 'அசோகனின் வைத்தியசாலை'யை நம்மில் பலர் வாசிக்கவில்லை. உமாஜீ எழுதுவதை வெறும் வலைத்தளம் என்ற மட்டுக்குள் அடக்கிவிடுகிறோம். அன்றைக்கு விக்கி விக்னேஷ் என்கின்ற தம்பி சிறுகதை ஒன்றை எழுதியனுப்பியிருந்தார். வெள்ளைவத்தை ஓட்டோ ஒன்றிலே நடக்கும் கதை. பேய்க்கதை. அதனை எத்தனைபேர் வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.

எழுத்தாளர்களை எழுத்தாளர்களாவே பார்ப்போம். குழு மனநிலை வேண்டாம்.  எழுத்தையும் வாசிப்பையும் எந்த எல்லைக்குள்ளும் அடக்கவேண்டாமே.
பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களின் கதைகளில் தங்களையே ஒரு பாத்திரமாக இணைத்துக் கொள்வார்கள். உங்களுடைய சில கதைகளை வாசித்த பொழுது நானும் அவ்வாறே உணர்ந்தேன்.நிஜ ஜெயக்குமரனுக்கும், கதையில் வருகின்ற குமரனுக்குமிடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா?நிஜ ஜெயக்குமரன் கதையில் வருகின்ற குமரனுக்கு எவற்றைக் கற்றுக் கொடுத்தான்? அல்லது கதையில் வருகின்ற குமரனிடமிருந்து நிஜ ஜெயக்குமரனான நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
பாத்திரங்களில், குறிப்பாக பாத்திரமே கதை சொல்லியாகவும் இருக்கும் சமயங்களில் நிஜ எழுத்தாளர் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடியாது. அதுவும் கொல்லைப்புறத்துக் காதலிகள் போன்ற புனைவுக்கட்டுரைகளில் நிஜ எழுத்தாளரையும் பாத்திரத்தையும் வேறு பிரிப்பதுவும் கடினம். ஆனால் உண்மையை அப்படியே எழுத முடியாது. எழுதினால் நாளைக்கு தாரணியின் கணவன் பொலீசில் புகார் கொடுப்பான். நண்பர்கள் அன்பிரண்ட் பண்ணுவார்கள். சொந்தவீட்டிலேயே புகையத்தொடங்கும். தவிர நிஜ வாழ்க்கையை அப்படியே. சொன்னால் அவ்வளவு சுவாரசியமானதாகவும் இருக்காது. இரண்டு மூன்று பேர்களின் சுவாரசியமான அனுபவங்களை சேர்க்கும்போது கதையில் ஒரு ஓட்டம் வரும். உண்மை சொல்லப்படும்போதே பொய்யாகத்தொடங்கிவிடுகிறது என்பார் சுஜாதா.

குமரன் என்பது என் கதைகளில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் பாத்திரம். மேகலா பெண்பாத்திரம். குமரனைவிட மேகலாவிடம் என்னுடைய தனி இயல்புகள் அதிகம் இருக்கும். இது சுஜாதாவிடமிருந்து சுட்ட ஐடியா. ஆரம்பகாலத்தில் அவர் கணேஷ்-பிரியா என்று இரண்டு பிக்ஸ்டான பாத்திரங்களை வைத்து நிறைய கதைகள் எழுதினார். பிரியா அடிக்கடி கெட்ட ஜோக் எல்லாம் அடிப்பாள். பின்னாளில் பிரியா வசந்த் ஆகிவிட்டாள். குமரன், மேகலாவை வைத்து (ஆங்கிலக்கதைகளில் ஜேக், ஜெஸ்ஸி என்று வருவார்கள்) அப்படிக்கொஞ்சநாள் எழுதிக்கொண்டிருந்தேன். பலன், நான் சொந்த அனுபவத்தையே எழுதுகிறேன் என்று நினைத்துவிட்டார்கள்.மேகலா யார் எனறு தேடவும் தொடங்கிவிட்டார்கள். குமரன் இவ்வளவு கருமத்தையெலாம் செய்தானா என்று சந்தேகிக்கிறார்கள். தொந்தரவு. 

வாசகர்கள் ஒரு பாத்திரத்தின்மீது நிஜ எழுத்தாளனின் முகத்தை ஒட்டிவிட்டால் வாசிப்பனுபவம் ஒரு தளத்துக்கு மேலே நகராது. ஜே.ஜே சில குறிப்புகளில் சுந்தரராமசாமியின் முகத்தை ஜே.ஜே மீது பொருத்தினால் அபத்தமாக இருக்காது? அமுதவாயனை வாசிக்கும்போது என்னை நினைத்தால் மறுநாள் தெருவில் கண்டால் ஒதுங்கிப்போவீர்கள்.

வாசிக்கும்போது எழுத்தாளனை மறந்துவிடுங்கள். டேட்டாபேசில் நோர்மலைசேஷன் என்று ஒரு வஸ்து இருக்கிறது. தகவல்களை வினைத்திறனுக்காக வேறுபிரிப்பது. எழுத்தாளன்-எழுத்து-வாசிப்பு-வாசகன் என்ற அமைப்பில் வாசிப்பும் வாசகனும் தனியே இயங்கவேண்டும். எழுத்தாளனும் எழுத்தும் தனியே இயங்கவேண்டும். எழுத்தும் வாசிப்பும் முடிந்தபின்னர் வேண்டுமானால் அதுபற்றி கலந்துரையாடலாம். ஆனால் எழுதும்போது எழுத்தாளன் இதை பலர் வாசிப்பார்களா, போய்ச்சேருமா என்று கவலைப்பட்டபடி எழுதக்கூடாது. அதேபோல வாசிக்கும்போது வாசகனுக்கு எழுத்தாளனின் முகம் நினைவில் வரவும்கூடாது. நெடுங்குருதியில் திருமால் தவளையோடு பேசிக்கொண்டிருப்பதை வாசிக்கும்போது “எஸ். ரா பின்னியிருக்கார்டா” என்று நினைத்தால் அது வாசிப்பனுபவத்தின் தோல்வி. கந்தசாமியும் கலக்சியும் நாவலில் சுமந்திரன் சோமரத்னவுடன் பேசும் வசனங்களை எழுதும்போது, ஐயோ இதை வாசித்தால் நிஜ சுமந்திரனோடு ஒப்பிட்டு அரசியல் ஆக்குவார்களோ என்று நான் கவலைப்பட்டால் அது எழுத்தனுபவத்தின் தோல்வி. இரண்டு விசயங்களையும் தவிர்க்கவேண்டும். கடினம். ஆனால் தொடர்ந்த வாசிப்பு, எழுத்துகளால் அது முடியும்.

வாழ்ந்தவர்களின் வரலாற்றை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கூறுதலே இலக்கியம் எனப்படுமென்று இணையத்தில் எழுதியிருந்தார்கள். இது இலக்கியம் என்பதற்கான சரியான வரைவிலணக்கனம் தானா? வெகுஜன எழுத்து எவ்வாறு இலக்கிய எழுத்திலிருந்து வேறுபடுகின்றது?

வாழ்ந்தவர்களின் வரலாற்றை வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கூறுதல் என்பதும் இலக்கியமே. மிக அவசியமானதும்கூட. ஆனால் இலக்கியத்தின் வரையறை கட்டுக்கடங்காதது. கடவுள் போல. வரையறைகளை நமக்கேற்றபடி செய்துகொள்ளலாம். இலக்கியமே வெத்து என்று பகுத்தறிவும் பேசலாம். வெகுஜன எழுத்தும் அப்படியே. நூறு பேர் வாசிப்பது வெகுஜன எழுத்தா? ஆயிரம் பேர் வாசிப்பதா? அல்லது ஆயிரம் பேருக்கு தெரிந்த பிரபலம் எழுதுவது வெகுஜன எழுத்தா? இது எல்லாமே வெத்து வாதங்கள். ஒரு புத்தகம் வாசித்து இரண்டு நாட்களுக்குப்பின்னரும் என்னை போட்டுத்தாக்கிக்கொண்டிருந்தால் அது என்னளவில் இலக்கியமே. அவ்வளவுதான்.

தொடரும்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட