ஆக்காட்டி நேர்காணல் - 6

Aug 27, 2015


இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன். 
  
முதலில் என் எழுத்துக்கள் சுவாரசியம் என்றமைக்கு நன்றி. என்னை நான் முன்னிலைப்படுத்துவதில்லை என்பதையும் ஓரளவுக்கு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். குறுகிய பரப்புக்குள் நிற்கிறேன் என்பதும் உண்மைதான். ஆனால் அதைவிட்டு வெளியே எப்படி வருவதென்று தெரியவில்லை. வரக்கூடாதென்றில்லை. வர எடுத்த முயற்சிகள் என்னை மீண்டும் அவ்வட்டத்தை குறுக்கியதாகவே முடிந்திருக்கின்றன.

நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை என்று நண்பர்கள் குறைப்படுவதுண்டு. ஆனால் அதில் உண்மை இல்லை. ஆனந்தவிகடன் எடிட்டருக்கு என்னுடைய 'குட்டி' என்ற சிறுகதையை அனுப்பினேன். 'கிடைத்தது' என்ற பதில்கூட வரவில்லை. அப்புறம் இன்னொரு கதையை எழுதி உடைந்த மூக்கை மீண்டும் உடைக்க மனம் ஒப்பவில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு என் சிறுகதைகளில் பத்தை அனுப்பி, அவை பதிப்பிடத் தகுதியானவையா என்று கேட்டேன். பதிலில்லை. நண்பர் ஒருவர் சொன்னதற்கமைய சுஜாதா விருதுகளுக்கு கூட விண்ணப்பம் செய்தேன். விருதை விடுங்கள், ஒரு ரிப்ளைகூட கிடைக்கவில்லை. ஒரு சிறுகதைப்போட்டியிலும் இப்படித்தான் அவமானப்படுத்தினார்கள். எழுத்தாளர்களையும் தொடர்புகொள்ள ஏதோ தடுக்கிறது. “இந்தா பாருங்கள் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன், வாசித்துச்சொல்லுங்கள்” என்று கேட்க அந்தரமாக இருக்கிறது. எதுக்கு கேட்கவேண்டும் என்று புத்தி தலையில் குட்டுகிறது. நீ ஏன் எழுத வந்தாய் என்பதை மறந்துவிடாதே என்கிறது. உன் அரிப்புக்கு எழுதுகிறாய். பிடிக்கிறவன் வாசிக்கிறான். அவ்வளவுதானே என்று தடுத்தாட்கொள்கிறது. 

புத்தகம் பதிப்பிடுதல் என்பதும் இன்னொரு தலையிடி. தாவு தீர்ந்துவிட்டது. ஒரு பதிப்பாளர் இரண்டாயிரம் டொலர்கள் வேண்டுமென்றார். இன்னொருவர் காசே தேவைப்படாது என்று சொல்லி என்னிடம் வந்தார். கடைசியில் கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு என் கையால் நான்காயிரம் டொலர்கள் செலவாகிவிட்டன. பதிப்பாளர் ஒற்றைப்புத்தகம் விற்றுத்தரவில்லை. இந்தியாவிலாவது விற்றுத்தரக்கேட்டேன். ரிப்ளை இல்லை. நானே எல்லா புத்தகங்களையும் படலை மூலமே விற்கிறேன். நல்லகாலம், வாசகர்களால் முதலுக்கு மோசமில்லை. 

இதில் எவரையும் குறை சொல்லவில்லை. எனக்கு இந்த விடயங்களில் அனுபவமில்லை. எழுதுவதில் இருக்கும் ஆர்வம், பதிப்பாளரை அணுகுவதில் இல்லை. அணுகும்விதமும் தெரியவில்லை. என் இயல்பும் இதற்கு பொருந்துவதில்லை. இதெல்லாவற்றையும் யோசித்தால் விசர் பிடிக்கும்! எழுதுவது இலகுவாகவும் இயல்பாகவும் அமைகிறது. படலைக்குள்ளேயே குறுக்கிக்கொள்கிறேன்.

இந்த இடத்தில் ஆக்காட்டியிடமும் பதாகையிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். படைப்பு வேண்டுமென்று பல தடவை கேட்பார்கள். எழுதுவேன். முடித்தபின் பொறுமையில்லாமல் படலையிலேயே பதிவுசெய்துவிடுவேன். இனிவரும் காலங்களில் இவ்விரண்டு சஞ்சிகைகளுக்கும் அதிகம் எழுத முயலுகிறேன். அமுதவாயன் தொடர் ஆட்காட்டிக்காக சிறுகதையாக ஆரம்பித்தது. இறுதியில் குறுநாவலாகிவிட்டது.

ஒரு விடயம். 

என் எழுத்துகளை எனக்கு முந்தைய தலைமுறை வாசித்தால் நிறைய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் பின்னைய தலைமுறை வாசித்தால்தான் அது நிலைக்கும். எனக்கு அங்கீகாரம் அவ்வளவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டுதான். கொண்டையை மறைத்து பிரயோசனம் இல்லை. நான் ஒன்றும் யோகி கிடையாது. அதேசமயம் என்னைவிட ஒரு பத்து வயது குறைந்த தலைமுறை நிறைய வாசிக்கிறது என்பதில் அதீத பெருமையும் சந்தோசமும். ஒரு சிறு கதை எழுதினால் ஆயிரம்பேர் வாசிக்கிறார்கள். அது போதும். தமிழிலே எழுத முயலாதவர்கள்கூட பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அது சந்தோசம். அவர்கள்தான் அடுத்த கதை எழுத என்னை இருக்கையில் அமர வைப்பவர்கள். சாரு நிவேதிதாவைவிட ஓவராக புலம்பிவிட்டேன்போல. லூஸ்ல விடுவோம்!

சில வருடங்களுக்கு முன்னர், தற்போதைய அப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், இப்பதவிக்கு வரமுன்னர் லிங்கன் சொன்ன வாசகத்தை சொல்லியிருப்பார், அதை எப்போதும் நான் ஞாபகப்படுத்திக்கொள்வேன்.

“I will prepare, and someday my chance will come”

அவ்வளவுதான்!
நீங்கள் எழுத வந்ததிற்கான நோக்கம் நிறைவேறியதாக எண்ணுகின்றீர்களா?புது வரவு எழுத்தாளர்களுக்கு நீங்கள் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?

அப்படியொரு மகா நோக்கத்தோடெல்லாம் எழுத வரவில்லை. எழுதுவது சுய திருப்தியை கொடுக்கிறது. போதை. அதற்காகவே எழுதுகிறேன். அதிலும் நான் ஒரு தவ்வல். தத்தித் தத்தி பேசும் குழந்தையிடம் உன் நோக்கம் நிறைவேறியதா என்று கேட்டால், "முதலில சொக்கிலேட் வாங்கித்தா".

புதுவரவு எழுத்தாளர்களிடமும் ஒன்றும் கூறுவதற்கில்லை. அப்படியே சொன்னாலும் கேட்கப்போவதில்லை. எழுத்து என்பது ஒரு அரிப்பு. அரிப்பிருக்கிறவன் சொறிந்தே தீருவான். ஒன்றேயொன்று சொல்லுகிறேன். எவனும் கவனிக்கிறான் இல்லை என்ற கவலை எழுதி கொஞ்சநாளில் வரத்தொடங்கும். அதற்காக சொறிவதை நிறுத்திவிடாதீர்கள். அந்தக்கவலை எல்லாம் கொஞ்சநாள்தான். 

அப்புறம் பழகிவிடும்.  

************ முற்றும் ************

Contact Form