ஆக்காட்டி நேர்காணல் - 4

Aug 25, 2015 2 comments

ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர். பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?

முதலில் ஜாக் ஓடியா வென்றது எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச விருதே ஒழிய ஒரு பிரான்சு படைப்பாளியைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டு விருதே. அதே படத்தை ஒரு இலங்கையர் எடுத்திருந்தால் கான்ஸ் விருது கிடைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. இந்தப்படம் ஒஸ்காரிலோ, பாப்டாவிலோ கவனிக்கப்பட்டால் அப்போது பிரஞ்சியர்களுக்கு அது சர்வதேச விருது. ஓடியாவின் திறமையையோ தகுதியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விருதுக்குரிய பின்னணிகளையும் நாம் ஆராயவேண்டியே இருக்கிறது. இதற்குமேல் படத்தைப்பற்றி கருத்துச்சொல்ல ஏதுமில்லை. படம் திரையரங்குகளுக்கு வரட்டும்.நம்மாட்களில் சர்வதேச தரத்தில் படமெடுக்க ஆட்கள் இல்லையா என்றால், பதில் நாம் இன்னும் தயாரில்லை. நீண்ட வரலாற்றைக்கொண்ட பிரஞ்சு திரைத்துறையோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நம் திரைப்படத்துறை இப்போதுதான் நடை பயில்கிறது. அது ஒரளவுக்கு நிமிர்ந்து ஓடப்பழகும்வரை கூட்டு முயற்சிகளே அங்கீகாரங்களை கொண்டுவரும். அவ்வகை கூட்டு முயற்சிகள் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. அங்கே எதைச்செய்தாலும் ஒருவன் அருவாள் தூக்குவதால் ஒரு நேர்மையான ஈழத்துப்படம் அங்கிருந்து உருவாவதை எதிர்பார்க்கமுடியாது. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் சென்சர்க்காரன் சீவிவிடுவான். நாங்கள் சமரசமில்லாத கூட்டு முயற்சிகளை ஒரளவுக்கு முன்னேறியிருக்கும் சிங்கள திரைப்படத்துறையோடு செய்யலாம். புலம்பெயர்ந்தவர்கள், மேலைத்தேயரோடு சேர்ந்து செய்யலாம். அதற்கு நல்ல ஸ்கிரிப்ட், லொபியிங், தொடர்புகள் வேண்டும். டானி போயல் "Q and A" நாவலை வாசித்து ஸ்லம்டோக் எடுத்ததுபோல, யார் கண்டார் நாளை "Still Counting The Dead" வாசித்து ஸ்கிரிப்ட் எழுதினாலும் எழுதலாம். “தீபன்” இதற்கான முதல்படியாக அமையட்டும்.

தற்போதுள்ள ஈழத்தோடு தொடர்புபட்ட படைப்பாளிகளுள் கண்ணன் அருணாசலம் எமக்கு சர்வதேச விருதுகளை வென்று தருவார் என்று நம்புகிறேன். சமரசங்கள் இன்றி உட்பொருள், தரம், செய்நேர்த்தியை மாத்திரமே நம்பி எடுக்கப்படும் ஆவணப்படங்கள் அவருடையவை. அவர் அல்ஜசீரா, ஐஆம் மூலம் வெளியிட்ட படைப்புக்கள் உலகத்தரமுடையவை. ஆனால் அவரை நம் தமிழ் மீடியாக்கள் எவையும் சீண்டுவதில்லை. வழமைபோல அவருக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்தபின்னரே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தலை விதி.

இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திறமை மட்டும் விருது வாங்க போதுமானதல்ல. தொடர்புகள் வேண்டும். முதலில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடையே உருவாகவேண்டும். சோ. பத்மநாதன் மாத்திரம் போதாது. அடுத்தது விருதுக்குழுவுக்கு கொண்டுபோகுமளவுக்கு லொபி பண்ணக்கூடிய பதிப்பாளர்கள் கிடைக்கவேண்டும். நியூயோர்க்டைம்ஸ், ஏஜ் போன்ற பத்திரிகைகளில் பத்தி வரவேண்டும். போலா கோயல்லாவின் ஆகிமிஸ்ட் நாவல் முதலில் வேலைக்காகாது என்று ஸ்பானிய மொழியிலேயே பதிப்பிக்க தயங்கினார்கள். ஆனால் வெளியானபின்னர் அது ஸ்பானிய மொழியில் சக்கைபோடு போட்டது. பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஒரு பெரிய பதிப்பு நிறுவனம் அவரை தொடர்புகொண்டது. அதற்குப்பிறகு என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு.

இங்கே தமிழில் எந்த ஆசிரியரின் புத்தகம் சக்கை போடுகிறது? ஆயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். எழுத்தாளர்களே ஆங்கிலத்தில் எழுதி பதிப்பாளரை அணுகினால்தான் உண்டு. நம் மத்தியிலிருந்து ஒரு ஆகிமிஸ்ட் உருவாக சாத்தியமே இல்லை. சிலவேளை ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்திலேயே மூல நூலை எழுதினால் ஒரு காலித் ஹொசெய்னியாக சாத்தியம் உண்டு. குறைந்தபட்சம் சேட்டன் பகத், அரவிந் ஆடிகோவாக கூட வரலாம். புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையிடமிருந்து ஜூகும்பா லாகிரிமாதிரி ஒரு எழுத்தாளர் உருவாகலாம். 

அதற்கு நாங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். அடுத்த தலைமுறை பேஸ்புக்கின் குட்டி சைஸ் ஸ்டேடஸ் கவர்ச்சிகளுக்குள்ளும் லைக்குகளுக்குள்ளும் சிக்காமல் சீரியசாக நாவல், சிறுகதை என்று எழுதவேண்டும். அப்படி எழுதுபவர்களுக்கு நாங்களும் நிறுவனரீதியான சப்போர்டுகளை கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு கிரவுட்சோர்சிங் போன்ற கட்டமைப்புகளை நம் படைப்புக்களுக்காக உருவாக்கலாம். எழுநா ஒரளவுக்கு அதனை செய்தது. நின்று பிடிக்கமுடியவில்லை. அடிப்படை பிரச்சனை வாசிப்பு எண்ணிக்கைதான். End of the day, வாசகன் இல்லாவிட்டால் படைப்புகள் எல்லாம் எழுத்தாளனின் டயரியாகிவிடும். 

Comments

  1. ஆக்காட்டி இதழின் அட்டை படத்தில் ஷோபாசக்தி இருப்பதை பார்த்தேன், எனவே அதில் "தீபன்" பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தெரியாது. நான் ஷோபாசக்தியின் பேட்டியை YouTubeல் பார்த்தேன், அதில் அவர் இயக்குநர் பிரான்ஸில் வசிக்கும் அகதிகளை பின்னணியாக கொண்டு ஒரு காதல் கதையை எடுக்க விரும்பி அதற்காக ஈழத்து அகதிகளை தெரிவு செய்ததாக சொல்லியிருக்கிறார், அதனால் ஈழ மண் சார்ந்த விஷயங்கள் எந்த அளவு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பது நீங்கள் சொன்னபடி படம் வெளிவந்தபின்தான் தெரியும்.

    ReplyDelete
  2. ஜேகே அண்ணாவின் நேர்காணலில் பல படைப்பாளிகளின் நேர்காணல்கள் உள்ளடங்கியிருக்கின்றனவா என்று தோன்றுமளவிற்கு அருமையான பகிர்வு அண்ணா....

    ReplyDelete

Post a comment

Contact form