தமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்

Nov 22, 2015

 

Jantjes_sm

 

ஒரு சின்ன சந்தேகம்.

தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு வார்த்தைகளை புரிந்துகொள்வது இலகுவாகவிருக்கும். மாண்டரின் படித்தால் எதிர்காலத்தில் உத்தியோகங்களுக்கு பயன்படலாம். பிரெஞ்சு ஸ்பானிஷ் படித்தால்கூட வேறு நாடுகளுக்குச் செல்லும்போது சமாளிக்கலாம். தமிழை எதற்காகப் படிக்கவேண்டும்? பெற்றோர்களின் மொழி தமிழ் என்பதற்காக குழந்தைகளும் படிக்கவேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதால் படிக்கவேண்டுமா? வள்ளுவனும் பாரதியும் கம்பனும் தமிழில் இருப்பதால் தமிழைப் படிக்கவேண்டுமா? அற்புதமான இலக்கியங்கள் இருப்பதால் படிக்கவேண்டுமா? எந்த மொழியில்தான் இலக்கியங்கள் இல்லை? சமகாலத்தில் தமிழில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? யோசியுங்கள். பாரதிக்குப்பிறகு பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறமாதிரி எந்த அறிஞனுமே உருவாகாத, உருவானாலும் அப்படியான அறிஞர்களை பாடத்திடடங்களில் உள்வாங்காத, பழைமையிலே குளிர்காயும் ஒரு மொழியை எதற்கு எம் பிள்ளைகள் மெனக்கெட்டுப் படிக்கவேண்டும்? திருக்குறளைக்கூட தமிழில் பொழிப்புரையில்தானே படிக்கவேண்டியிருக்கிறது. அதற்குப்பதிலாக ஆங்கில மொழிபெயர்ப்பையே படிக்கலாமே? உலகின் எந்த நடைமுறைகளையும் மாற்றியமைக்கமுடியாத, செல்வாக்குச்செலுத்த முடியாத, தம்மினத்தின் விடுதலையைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாமல் தம்முள்ளேயே பிணக்குற்று நிற்கும் ஒரு சாதாரண, bogan என்று எள்ளி நகையாடப்படக்கூடிய ஒரு இனம் பேசக்கூடிய மொழியை, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளரும் இக்குழந்தைகள் ஏன் படிக்கவேண்டும்? தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு போன்றவை எல்லாம் வெறுமனே உணர்ச்சிவயமான வெற்றுக்கோசங்களேயொழிய, தமிழ் மொழியைப் படிப்பதற்கான காரணங்களாக அவை அமைய சந்தர்ப்பமில்லை.

அப்படியென்றால், தமிழை எதற்குத்தான் நாம் படிக்கவேண்டும்?

இந்தக்கேள்வி இப்போதில்லை, இருபது வருடங்களுக்கு முன்னமேயே இங்குள்ள மாணவர்களுடைய வயதில் நான் இருந்தபோது எனக்கு எழுந்தது. ஒரு மழைநாளில், மொத்த ஊரையுமே ஒரே இரவில் இடம்பெயரச்சொன்னபோது எழுந்தது. ஐந்து கிலொமீட்டர் தூரத்தை சாமான் சக்கட்டுகளை காரியரில் கட்டி ஒரு இரவு முழுதும் சைக்கிள் உருட்டியபடி நடந்து கடந்தபோது எழுந்தது. பின்னாலே சரிந்துவிழும் சூட்கேஸ் கட்டுகள். சைக்கிள் ஹாண்டிலில் இரண்டு பெரும் பைகள். மழை. மக்கள் கூட்டம். தாகம் எடுத்தாலும் சைக்கிளை எங்கேயும் நிறுத்திவிட்டு குடிக்கமுடியாது. மூக்கு வழியே ஒடிவரும் மழைத்துளிகளையே குடித்தபடி நகருவோம். தூரத்தே குண்டுச்சத்தங்கள் கேட்கும். குளிர். பயம். நடுக்கம்.

அப்போது எனக்கு அந்தச் சிந்தனைவந்தது.

எதற்காக தமிழனாய்ப் பிறந்து தொலைத்தேன்? நான் ஏன் ஈழத்திலே பிறந்தேன்? அதுவும் போயும்போயும் ஒரு யுத்தகாலத்தில் ஏன் பிறந்தேன்? ஏன் என் அம்மா அப்பாவுக்குப்போய்ப் பிறந்தேன். எங்கேயாவது யுத்தம் இடம்பெறாத நாட்டிலே நான் பிறந்திருக்கக்கூடாதா? இரவிலே, இடம்பெயராமல் மக்கள் நிம்மதியாக தூங்கக்கூடிய நாட்டிலே பிறந்திருக்கக்கூடாதா? அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்ஸிலோ, நியூசிலாந்திலோ, கனடாவிலோ, நோர்வேயிலோ பிறந்திருக்கக்கூடாதா? ஆங்கிலம் பேசி, அழகான பண்ணைவீட்டிலே குதிரை லாயம், டிசெம்பருக்கு கிறிஸ்மஸ், ஆண்டுக்கொருமுறை உலகச் சுற்றுலா, எனக்கேன் இப்படியொரு பிறப்பு அமையவில்லை? 

பதினைந்து வயதில் எழுந்த இக்கேள்வி பல ஆண்டுகளாகவே என்னை உறுத்திக்கொண்டிருந்தது. அது உறுத்திக்கொண்டிருந்தபோதெல்லாம் நான் என்னை விடுத்து இன்னொருவராக மாறவே முயன்றுகொண்டிருந்தேன். பில் கிளிண்டனாக, ஸ்டீவ் ஜொப்ஸாக, ஏ.ஆர்.ரகுமானாக, சச்சினாக, டேவிட் லெட்டர்மென்னாக, அமெரிக்கனாக, ஆங்கிலேயனாக, என் கனவுகள் எல்லாம் சிலிக்கன் வாலியிலும், மவுண்டின் வியூவிலும், நியூ யோர்க் ஓப்ராவிலும் சுற்றிக்கொண்டிருந்தன. நன்றாகப்படிப்பது, உழைப்பது, யுத்தபூமியை விட்டு தப்பியோடுவது. இவைதான் என்னுடைய முழுச்சிந்தனையும். சிங்கப்பூர் சென்றேன். நன்றாக உழைத்தேன். அமெரிக்கா செல்வது அடுத்த கட்டம். வாழ்வில் யாராகவெல்லாம் மாறவேண்டும் என்று நினைத்தேனோ அவர்களாக ஆவது இறுதிக்கட்டம். இதுவே வாழ்க்கையின் இலட்சியமானது. அலுவலகத்தில் என் பெயரை நாக்கில் இலகுவாக புரள்வதற்காக ஜேகே என்று அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். பிடித்திருந்தது. ஜெயக்குமரன் என்ற பெயர் மறந்துபோயிருந்தது. உடைகள் மாறின. உடல் மொழிகள் மாறின. நான் யார் என்பதையே மறக்க முயன்றுகொண்டிருந்தேன். என் நண்பர்கள் எவரும் தமிழர்களாக இருக்கவில்லை. தமிழ் மீது ஒரு ஏளனம் இருந்தது. தமிழ் படிச்சு என்னத்தைக் கிழிச்சம்? உயிரழிவையும் நாட்டை விட்டு துரத்தியதையும் தவிர தமிழ் எங்களுக்கு வேறு என்னத்தை செய்தது? தமிழை கெட்ட வார்த்தையால் திட்டினேன். தமிழரகளை கீழ்த்தரமானவர்களாக கருதினேன்.

ஆனால் ஒவ்வொருமுறையும் நான் என்னை மாற்ற முயன்றபோது முடியாமல் தோற்றுப்போனேன். சிங்கப்பூர் பூங்காக்களிலும் பேரூந்துகளிலும் விசரன் பேயன் மாதிரி அலைந்திருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு பூங்காவிலே தனியே நடந்திருக்கிறேன். வீடு திரும்புதல் என்பதே விரும்பாமல், நான் யார், இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கின்ற குழப்பத்தில் தினமும் காலையில் விழித்திருக்கிறேன். நல்ல வேலை. நிறையப்பணம். யுத்தமில்லாத, சூட்டுச்சத்தங்கள் இல்லாத வாழ்க்கை. ஆனால் நிம்மதியில்லை. ஒருநாள் சீனத்தோட்டம் ஒன்றில் நடந்துகொண்டிருந்தபோது என்னைத்தாண்டி பல்வேறுபட்ட மனிதர்கள் கடந்துபோனார்கள். சிங்கப்பூரர், மலேசியர். அமெரிக்கர். வியட்னாமியர். இந்தியர். பங்களாதேசி என்று ஒவ்வொரு இனத்தவர். இவர்கள் எவருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை. இவர்களில் ஒருவராக நான் இல்லை. அப்படியென்றால் என் இடம் எது என்ற குழப்பம் வந்தது. என் அடையாளம் என்ன? What is my identity? நான் யார்? நான் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்கின்ற குழப்பங்கள் கொடுத்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தக்குழப்பத்துக்கான பதிலை ஒரு நாவல் தந்தது. ஒரு இருநூறு பக்க நாவல் என்னுடைய பத்து வருட குழப்பத்துக்கு பதில் தந்தது. ஒரு நாவல் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றுமா என்றால், ஆம் மாற்றத்துக்காக தயாராக இருப்பவனை மாற்றும்.

அந்த நாவலின் கதையை இப்போது சொல்லப்போகிறேன். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜூஹும்பா லாகிரி எழுதிய “The Namesake” என்கின்ற நாவலின் கதை. இந்தக்கதை கிட்டத்தட்ட இந்த அரங்கில் இருக்கின்ற அனைவருக்குமே பரிச்சயமான கதையாகவிருக்கலாம். சொந்த வாழ்க்கையில் நடந்த கதையாக இருக்கலாம். நடக்கப்போகின்ற கதையாக இருக்கலாம்.

இந்த மாணவர்களின் வாழ்வில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக இன்றைக்கு உங்களோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் பிறந்து வளர்ந்த அசோக், அமெரிக்கவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கவென புலம்பெயர்ந்து வருகிறான். சில வருடங்களுக்குப்பின்னர் கல்கத்தாவைச்சேர்ந்த ஆஷிமா என்கின்ற பெண்ணைத் திருமணம் முடித்து இருவரும் அமெரிக்காவில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. ஊரிலே என்றால் சொந்தக்காரர் புடைசூழ திருவிழாபோல நடக்கும் குழந்தைப்பேறு இங்கே யாருமேயில்லாமல் ஆஸ்பத்திரி வார்டிலே இடம்பெறுகிறது. குழந்தைக்கு கோகுல் என்று பெயர் வைக்கிறார்கள்.

கோகுல் வளர்கிறான். இங்கிருக்கும் மாணவர்களைப்போல. வீட்டிலே தாயும் தந்தையும் இந்தியர்களாக, இந்திய வாழ்க்கையே வாழ்கிறார்கள். விடுமுறை என்று ஒவ்வொரு வருடமும் அவர்கள் கல்கத்தாவுக்கே செல்கிறார்கள். வேறு எந்த நாடுகளுக்கும் செல்வதில்லை. வீட்டிலே ஒரு விருந்து என்றால் இந்தியர்களே வருவார்கள். இந்திய உணவுகள், இந்தியக்கதைகள், இந்தியப்பகிடிகள், இந்தியத்திரைப்படங்கள், அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தாலே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த உணர்வு ஏற்படும்.

கோகுல் வளர்ந்து பள்ளிக்குப்போகிறான். அப்போதுதான் தன் வீடும் பள்ளியும் வேறு வேறு என்பது அவனுக்கு புரிகிறது. முதல் சிக்கல் நிறம். அப்புறம் பெயர். அப்புறம் உணவு. பழக்க வழக்கங்கள். கோகுல் வெள்ளையின மாணவர்களால் மட்டம் தட்டப்படுகிறான். கோகுலுக்கு தான் ஒரு அமெரிக்கன் இல்லையோ என்கின்ற குழப்பம் வருகிறது. தான் மட்டும் ஏன் வெள்ளையனாக இருக்கவில்லை என்று கவலைப்படுகிறான். வீடும் தாய் தந்தையும் அந்த உணவும் அவர்கள் வைத்த பெயரும் அவனுடைய வெறுப்புக்கு உள்ளாகின்றன. குடும்பத்தோடும் வீட்டோடும் அவனுக்கு மிகப்பெரிய இடைவெளி உருவாகிறது. பதின்ம வயது கோகுல் குடும்பத்தை எள்ளி நகையாடுகிறான். தன் பெற்றோரை இந்தியர்கள் என்றும் தன்னை அமெரிக்கன் என்றும் சொல்லுகிறான். குடும்பத்தின் இந்தியக்கலாச்சாரத்திலிருந்து அமெரிக்காவின் கலாச்சாரத்துக்கு மாறுவதற்கு முயல்கிறான்.

இருபதுகளில் கோகுலின் இந்தக்குழப்பம் மேலும் அதிகமாகிறது. பதினெட்டு வயதில் கோகுல் தன் பெயரையே மாற்றிவிடுகிறான். அவனுக்கு அமெரிக்க வெள்ளையினப்பெண்களோடு தொடர்பு ஏற்படுகிறது. ஒரு வெள்ளைக்காரியின் வீட்டிலேயே அவளின் அம்மா அப்பாவோடுபோய்த் தங்கிவிடுகிறான். தன் தாய் தந்தையோடு தொடர்பே கொள்வதில்லை. ஏறத்தாள அவன் வெள்ளையனாகவே நினைத்து வாழத் தொடங்கிவிட்டான்..

அப்போதுதான் கோகுலின் தந்தை இறந்துவிடுகிறார். கோகுலும் அவனுடைய வெள்ளைக்காரக் காதலியும் அவன் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டில் மீண்டும் இந்தியத்தனம். ஒப்பாரி. சோகம். அந்த வெள்ளைக்காரி முகத்தை சுழிக்கிறாள். இங்கே இருக்கவேண்டாம். எங்கேயாவது சுற்றுலா போவோம் என்கிறாள். அப்போதுதான் கோகுலுக்கு தான் யார் என்பது முகத்தில் அடிக்கிறது. பெற்ற தகப்பன் இறந்த துக்கத்தில்கூட பங்குகொள்ள முடியாமல் சுற்றுலா போவோம் என்கின்ற உறவு என்னத்துக்கு என்று அவளோடு முரண்படுகிறாள்.

கோகுல்போலவே அமெரிக்காவில் பிறந்து வளர்கின்ற இன்னொரு பெண் மௌஷ்மி. கோகுலுக்குள் இருக்கும் அடையாளப்பிரச்சனைதான் மௌஷ்மிக்கும். அவளும் பல ஆண் நண்பர்களோடு தொடர்பு வைத்தவள். தன்னை ஒரு இந்தியப்பெண்ணாக உணர்வதை நிராகரித்தவள். பெற்றோர்கள் வற்புறுத்தலால் கோகுலும் மௌஷ்மையும் திருமணம் முடிக்கிறார்கள். ஆனாலும் மௌஷ்மிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. அவளுக்கு ஒரு பிரெஞ்சுக்காரனோடு தொடர்பு ஏற்படுகிறது. கோகுலும் மௌஷ்மியும் பிரிகிறார்கள். இருபத்தாறு வயதில் கோகுல் மீண்டும் தனித்து விடப்படுகிறான். தன்னுடைய அடையாளம் எதுவென கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர, மீண்டும் தன் தாயோடும் தங்கையோடும் சேருகிறான்.

Identity Crisis எனப்படுகின்ற அடையாளச் சிக்கல் பதின்ம வயது மாணவர்களுக்கே வருகின்ற ஒரு பொதுவான பிரச்சனை. எல்லோருமே இதைக்கடந்தே வருவார்கள். ஆனால் இரண்டாம் தலைமுறை குடியேறிகளின் அடையாளச்சிக்கல் என்பது இலகுவில் கடந்துவிடக்கூடிய விடயம் அல்ல. எனக்கு ஏற்பட்ட அடையாளச்சிக்களை விட கோகுலுக்கும் மௌஷ்மிக்கும் ஏற்பட்ட அடையாளச்சிக்கல் இன்னமும் மோசமானது. கோகுலுக்காவது அவன் தெளிவானபின்னர் மீள்வதற்கு அவன் தாயும் தங்கையும் இருந்தார்கள். மௌஷ்மியின் வாழ்க்கையே தறிகெட்டுப்போய்விடுகிறது.

இந்த எல்லாக்கதைகளின் நபர்களுக்கும் ஒரு விடயம் நன்றாகப் புரிந்திருந்தால் எந்தச்சிக்கலும் வந்திருக்காது.

“End of the day you can’t change who you are. It’s just simple as that. You can’t change who you are. You better accept it and more importantly you better embrace it”

பெயரை மாற்றலாம். மொழி மாறலாம். துணையை மாற்றலாம். ஊரை மாற்றலாம். தோலின் நிறத்தைக்கூட மாற்றலாம். ஆனால் எங்கள் அடையாளத்தை மாற்றமுடியாது. Fortunately or unfortunately you can’t change it! எனக்கு அந்த அடையாளம் எது என்று யோசித்தபோது, அது வேறு எதுவுமில்லை தமிழ் என்பது விளங்கியது.

Tamil is my identity. Because I am a Tamil ... I am Tamil.

இங்கே தமிழ் என்பது வெறும் மொழியல்ல. தொடர்பாடல் ஊடகம் அல்ல. உத்தியோகம் பார்ப்பதற்காக படிக்கும் விடயம் அல்ல. Skill அல்ல. தமிழ் என்பது அடையாளம். தமிழ் என்பது ஒரு உள்ளுணர்வு. தமிழ் என்பது எமெக்கெல்லாம் வீடு. Feeling home என்பார்களே அது. Sweet home Tamil.

தமிழ் என்னுடைய அடையாளம் என்று அறிந்த கணத்தில் இருண்டுகிடந்த உலகம் உடனேயே வெளிக்கத்தொடங்கியது. நான் தனியாள் இல்லை என்பது புரிந்தது. நான் வாழ்ந்த உலகமும், என் அம்மா அப்பா வாழ்ந்த உலகமும் விளங்க ஆரம்பித்தன. என் முன்னாலே ஒரு பெரும் வாழ்க்கையும் வரலாறும் விரிந்தன. என் அப்பம்மாவும் அம்மம்மாவும் தமிழே பேசினார்கள். தமிழிலேயே கதைகள் சொன்னார்கள். அவர்கள் வாழ்வும் தமிழோடே இருந்தது. வயல்களில் விவசாயம் செய்தார்கள். மரக்கறிகள் நட்டார்கள். வண்டிகளில் நெல்லுமூட்டைகளை ஏற்றி சந்தைக்கு கொண்டுசென்று விற்றார்கள். புகையிலை வளர்த்து சுருட்டு சுற்றினார்கள். பனைகளில் ஏறி கள்ளு இறக்கினார்கள். கடல்களில் மீன் பிடித்தார்கள். கோயில்கள் கட்டினார்கள். ஏராளமான கடவுள்களைப் படைத்தார்கள். நிறைய இலக்கியம். நிறைய விஞ்ஞானம், நிறைய சமூகவியல் படைத்தார்கள். வீடு தேடி வந்தவனுக்கு சோறு போட்டார்கள். தம்மினத்துக்கு ஒரு அநீதி என்றவுடன் உயிரைக்கொடுத்து போராடினார்கள். உங்கள் பெற்றோரும் என் பெற்றோரும் நானும் நீங்களும் எம் அடுத்த சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் என்று முகம்தெரியாத ரமேஷும் சுரேஷும் ராதாவும் பாமினியும் குண்டடிபட்டு இறந்துபோயிருக்கிறார்கள்.

“Can you believe it? They died for us.”

இவையெல்லாமே எமது அடையாளம்.

அவுஸ்திரேலியா என்பது பல்லினங்கள் வாழும் தேசம், அதுவே அவுஸ்திரேலியனின் அடையாளமும் கூட. இங்கே எல்லோருமே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள். ஆனால் ஆங்கிலம் அவர்களின் அடையாளம் அல்ல. ஒரு அவுஸ்திரேலியன் பூர்வீகக்குடியாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் ஆங்கிலேயனாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் மாசிடோனியனாக இருப்பான். ஒரு அவுஸ்திரேலியன் சைனீஸ்காரனாக இருப்பான். இத்தாலியனாக இருப்பான். பிரெஞ்சுக்காரனாக இருப்பான். வியட்னாமியாக இருப்பான். இந்தியனாக இருப்பான். ஒவ்வொரு அவுஸ்திரேலியனும் அவனுடைய பூர்வீக தேசத்தாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இங்குள்ள மாணவர்கள் தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

I am not an aborigine. I am not English. I am not Macedonian. I am not Italian. I am not French. I am not Vietnamese. I am not Indian.

Then who am I?

I am Tamil.

இது எம்முடைய இரண்டாம் தலைமுறை பிள்ளைகளுக்கு புரியவேண்டும். எம் அடையாளம் என்பது எமது இனம். எமது இனத்தின் அடையாளம் என்பது எம் மொழி. தமிழ். அது தெரியாமல் போனால் இருபதுகளில் நம் இரண்டாம் தலைமுறை, கோகுல் போன்றும் மௌஷ்மி போன்றும் திசைமாறிப்போகின்ற நிலை வந்துவிடும்.

ஹரிசா குவேர்சின் என்ற ஆராய்ச்சியாளர் இந்த அடையாளச்சிக்கலைப்பற்றி இப்படிச் சொல்கிறார்.

A child connects to his parents, family, relatives, culture, history, identity and religion through his mother tongue. Native language links the child with the culture of the society the child comes from and shapes his identity. A lot of children from immigrant families, who don’t know their native language well, are at a crossroads of identity crisis. When a child doesn’t know his language well we cannot say that he will be nurtured with his culture properly for the fact that the relationship between language and culture is deeply rooted. Mother tongue is one of the most powerful tools used to preserve and convey culture and cultural ties.

Children who are unaware of their culture, their language, and their history will lose confidence in themselves, the family, society and the nation to which they belong and will have no other option than seeking an alternate identity.

பள்ளி வாழ்விலும் பின்னரும் வரப்போகின்ற அடையாளச்சிக்கலை நம் பிள்ளைகள் எதிர்கொள்ள தமிழறிவு அவர்களுக்கு மிக அவசியம். மீண்டும் வலியுறுத்துகிறேன், புள்ளிகள் அதிகம் வரும் என்று இரண்டாம் மொழியாக லாட்டின் மொழியையோ பிரெஞ்சு மொழியையோ பயில்வதால் அவர்களுக்கு அந்த மொழிகளில் பரிச்சயம் மாத்திரமே கிடைக்கும். தமிழ் மொழியை பயில்வதால் இந்த மாணவர்களுக்கு தாம் யார், தம் வரலாறு என்ன, தம் பின்னணி என்கின்ற அடையாளம் கிடைக்கும். மாணவர்கள் தம் அடையாளத்தைக் கொண்டாடத்தொடங்குவார்கள். ஒரு இத்தாலியன் தன்னை இத்தாலியனாக உணர்வதுபோல நம் பிள்ளைகளும் தம்மை தமிழர்களாக உணரத்தொடங்குவார்கள்.

தமிழ் எங்கள் அடையாளம். தமிழ் உங்கள் அடையாளம். அதைத்தொலைத்தால் உங்களையே தொலைத்ததாகிவிடும் என்பதை உண்மையில் எம் பிள்ளைகளுக்கு சொல்லுவதைவிட பெற்றோர்களுக்கே சொல்ல வேண்டியிருக்கிறது. தன் பிள்ளைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். புதிய உடுப்பு, ஐபாட், மொபைல் என்று எல்லாமே வாங்கிக்கொடுக்கிறார்கள். நீச்சலும் டெனிசும் பரதநாட்டியமும் பியானாவோம் சொல்லிக்கொடுக்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தவுடனேயே கூடவே இன்வெஸ்ட்மென்ட் புரப்பர்டி வாங்குகின்ற பெற்றோரைக்கூட கண்டிருக்கிறேன். இதையெல்லாம் செய்யும் பெற்றோர்கள் ஏன் நம் பிள்ளைகளோடு காலம்பூராகத் தொடரப்போகின்ற தமிழ் என்ற அடையாளத்தை கொடுக்கத்தவறுகிறார்கள்? எம் பிள்ளைகள் அடையாளச்சிக்கல்களில் அல்லல்படுவதற்கு நாமே காரணமாகலாமா? எப்படித்தூங்க முடிகிறது? என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என்கின்ற எண்ணமே ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தவேண்டாமா? என் பிள்ளை தான் யார் என்று தெரியாமல் தறிகெட்டுப்போகப்போகிறதே என்பது உங்களுடைய முக்கிய கவலையாக இருக்கவேண்டாமா? முதலில் பெற்றோர்கள் தாம் தமிழர்களாக உணர்தல் வேண்டும். அவர்கள் முதலில் தம்முடைய அடையாளச்சிக்கல்களிலிருந்து மீள வேண்டும். தமிழ்மீதும் அளவு கடந்த காதலும் மதிப்பும் கொள்ளவேண்டும்.

If the parents embrace their identity, then the children also will follow the suit”

ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். தமிழை பிள்ளைகளுக்கு படிப்பிப்பது தமிழை வளர்ப்பதற்காகவல்ல. தமிழை யாரும் வளர்க்கத்தேவையில்லை. அது தன்னாலே வளருகின்ற மழைக்காடுபோல. தானே முகிலைக்கூட்டி தனக்குத்தானே மழை பொழிந்து காலமெல்லாம் நிலைத்து நிற்கும் மழைக்காடுபோல தமிழும் இலக்கியவாதிகளாலும் அறிவாளிகளாலும் எப்போதும் தன்னை உயிர்ப்பித்து வளர்த்தே வந்திருக்கிறது. இனிமேலும் வளரும்.

தமிழை நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கவேண்டியது அவர்கள் வளர்வதற்கே. மொழியைக் கடத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமுமல்ல. காடுகளிலும் பாலைகளிலும் உணவுக்காக அலைந்த நம் முன்னோர்களே தம் பரம்பரைகளுக்கு இந்தச் செழுமையான மொழியைக் கடத்தியிருக்கிறார்கள். ஒரு காட்டுவாசி செய்திருக்கிறான். படித்து, சொந்த வீடு, நிலம், சொத்து, மூன்று வேளையும் சாப்பாடு, சகல சுகபோகங்களும் இருக்கின்ற நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்கின்ற நாமே நம் குழந்தைகளுக்கு நம் மொழியை கொண்டுசெல்ல முடியாமல் இருக்கிறது என்றால் அது எந்தப்பெரிய அவமானம்? அதிகம் வேண்டாம். வீட்டிலே பிள்ளைகளோடு தமிழிலேயே பேசுங்கள். பிள்ளை பள்ளிக்குப்போனபின்னரும் தமிழிலேயே பேசுங்கள். ஆங்கிலத்தை அது தன்னாலே பயின்றுகொள்ளும். தமிழை, நீங்கள் ஆதரவு கொடுக்காவிட்டால் அதனால் பயில இயலாது. தமிழ் பயிலாவிட்டால் தன் அடையாளம் தொலைந்துவிடுமே என்கின்ற எண்ணம் சிறுபிள்ளையிடம் இருக்கப்போவதில்லை. நாம்தான் பொறுப்புடன் எடுத்துச் சொல்லவேண்டும். இதிலே குடும்ப நண்பர்களோடு கூட்டாக இணைந்து செயற்படவேண்டும். எல்லா நண்பர்களிடமும் இதை எடுத்துச்சொல்லுங்கள். உங்கள் வீட்டில் மாத்திரம் தமிழ் பேசினால் போதாது. நண்பர்களின் பிள்ளைகளும் தமிழ் பேசவேண்டும். பிள்ளை வளரும் பருவத்தில் உங்களோடு பேசும் நேரத்தைவிட உங்கள் நண்பர்களின் பிள்ளைகளோடே அதிகம் பேசிப்பழகப்போகிறது. அவர்கள் அப்போது பேசும் ஊடகம் தமிழாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தாழ்மையான சில வேண்டுகோள்கள்.

தமிழை வெறுமனே ஒரு மொழியாக படிப்பிக்காதீர்கள். தமிழை பிள்ளைகள் ஒரு கொண்டாட்ட மனநிலையோடு படிப்பதை உறுதிசெய்யவேண்டும். திருக்குறள் கூட வேண்டாம். “கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பதில் இருக்கின்ற இறுக்கமான மிரட்டலான மொழிநடை வேண்டாம். பல் உடைந்துவிடும். எளிமைப்படுத்துங்கள். கதைகளாகச் சொல்லுங்கள். ஒவ்வொரு திருக்குறளுக்கும் நூறு நீதிக்கதைகள் இருக்கின்றன. கதைகளினூடாக நீதியைச் சொல்லுங்கள். கதைகள் எப்போதுமே எம் மனதைவிட்டு அகலாது. கதைகள் சொல்லப்பட்ட மொழியும் அகலாது. சிறுவயதிலே படித்த முலாம்பழக்கதையும், அம்புலிமாமாக் கதைகளும் அவற்றின் மொழியோடு அப்படியே எம் ஞாபகத்தில் இருக்கிறது. என் அம்மா எனக்கும், என் அம்மாவுக்கு என் அம்மம்மாவும்,  அம்மம்மாவுக்கு பூட்டியும் என்று நம் மூதாதையினர் எல்லோருமே கதைகளினூடே எம் அடையாளங்களை மெருகேற்றி வந்திருக்கிறார்கள். கதை, சொல்லப்படும் மொழியிலேயே நம் மூளையில் தங்கி விடுகிறது. “கந்தன் ஒரு கமக்காரன்” என்று தொடங்கிய கதை இப்போது நான் ஆங்கில மொழியில் தொழில் புரிவதால் “Kanthan is a farmer”  என்று மாறப்போவதில்லை. பாடல்களை விட கதைகளுக்கு ஒரு பலம் உண்டு. பாடல்களை சமயத்தில் அர்த்தம் புரியாமலும் ஞாபகப்படுத்தமுடியும்.  கதைகள் அப்படியல்ல. அவற்றை சொல்லும்போது மொழியின் அர்த்தத்தோடு சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மொழிச்சொல்லின் அர்த்தங்களும் காட்சிகளோடு படிகிறது. அந்தக்கதையை ஞாபகப்படுத்தும்போதெல்லாம் மொழியும் விரிகிறது. நிறையக் கதைகள் சொல்லுங்கள்.

எம் தமிழ்க் கதைகள் அவுஸ்திரேலியா சூழலுக்கு ஏற்றபடி மாற்றப்படுவதும் முக்கியமாகிறது. “கந்தன் நல்ல கமக்காரன், காய்கறித்தோட்டம் செய்திடுவான்” என்பதை “பீட்டர் கிப்ஸ்லாண்டிலேயே மிகப்பெரிய சோளப்பண்ணை வைத்திருக்கிறான்” என்றுகூட மாற்றலாம். தப்பில்லை. அவுஸ்திரேலியாவிலேயே நிறைய ஆதிவாசிக்கதைகள் சிறுவர்களுக்காக இருக்கின்றன. மாத்தளை சோமு தமிழிலேயே எழுதியிருக்கிறார். கால் முளைத்த கதைகள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். கங்காரு எப்படி குட்டியை மடியில் காவிக்கொண்டு திரிகிறது என்பதற்கு ஒரு கதை சொல்லலாம். கடல் ஏன் உப்பாகவிருக்கிறது, பூனை ஏன் எலியைத்துரத்துகிறது என்று ஏராளமான ஆதிவாசிக்கதைகள் இருக்கின்றன. தமிழில் சொல்லுங்கள். ஊர்பூராக கதையடிக்கத்தெரிந்த எமக்கு சொந்தப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதா கடினம்?

இன்னொன்று உங்கள் குடும்பக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சிறு வயதில் எந்தப்பாடசாலைக்குப் போனீர்கள். சைக்கிளில் சென்றீர்களா? நடந்து சென்றீர்களா? உங்கள் ஊரிலே மழை பெய்தால் காகிதக்கப்பல் விடுவீர்களா? உங்கள் பாட்டி என்ன கதை சொல்லுவார்? உங்கள் தாத்தா கடை வைத்திருந்தாரா? நாங்கள் சொல்ல வெட்கப்படுகின்ற, தேவையில்லை என்று நினைக்கின்ற சின்ன சின்ன விடயங்களில்கூட குழந்தைகளுக்கு ஆர்வமாகவிருக்கும். ஓரளவுக்கு பெரியவர்கள் என்றால் எங்கள் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தைப் பற்றியும் அண்ணனும் அக்காளும் தம்பியும் தங்கையும் எப்படியெல்லாம் எமக்காக போராடினார்கள் என்பதையும் சொல்லுங்கள். சரியோ பிழையோ நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் மறைப்பது தவறு. நம் பிள்ளைகள் அவர்களின் பூர்விகத்தினை தெரிந்து வைத்திருப்பது உரிமை.

உங்களுக்குத்தான் சொல்ல நேரம் இல்லையென்றால் மாணவர்களுக்கு வாசிக்கப்பழக்குங்கள். தமிழில் வாசிக்கப்பழக்குங்கள். அம்புலிமாமாவிலிருந்து ஆரம்பிக்கலாம். இன்றைக்கு ஏராளமான சிறுவர் நூல்கள் வந்துவிட்டன. தயவுசெய்து தொலைக்காட்சியோ ஐபாடோ யூடியூபோ வேண்டாம். வாசிப்பு சிறுவர்களுக்கு ஒரு உலகத்தை திறந்துவிடும். இரண்டு கதைகளை வாசித்துப்பழகிவிட்டால் மூன்றாவது கதையை அவர்களே ஆர்வத்தோடு வாசிக்கத்தொடங்கிவிடுவார்கள். என் அக்காவின் மகன், சிங்கப்பூரில் பிறந்தவன். பத்து வயது. நூலகத்தில் மகாபாரதம் எடுத்து வாசித்து, அண்ணர் தானே ஒரு மகாபாரதத்தை ஜெயமோகனுக்கு போட்டியாக எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி குறைத்து மதிப்பிடுவது அவர்களுக்கு நாம் செய்யும் அநீதியும் கூட.

குழந்தைகளையும் தமிழில் கதை சொல்ல விடலாம். தமிழ்ப்போட்டிக்கு வந்த சிறுமி ஒருத்தியிடம் “சின்ரெல்லா” கதையை தமிழில் சொல்லச்சொன்னேன். ரசித்து அனுபவித்து குழந்தை சின்றெல்லா கதையை சொன்னாள். சித்தி என்ற தமிழ் வார்த்தை அதன் மூளைக்கு எட்டவில்லை. “சின்ரெல்லாவை அவவிண்ட அப்பாண்ட செக்கண்ட் பொண்டாண்டி கொடுமைப்படுத்தினா” என்கிறாள். எவ்வளவு அழகு. இதே மெல்பேர்னில் பாட்டி வடை சுட்ட கதையை மையமாக வைத்து பட்டிமண்டபம் செய்திருக்கிறோம். பேசியவர்கள் எல்லோருமே நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

இன்னொன்று தமிழை அட்சரம் பிசகாத ஆஸ்பத்திரி சுத்தத்தோடு அணுகாதீர்கள். எந்த மொழியுமே காலத்தின் ஓட்டத்தில் வேறு மொழிகளோடு கலக்கவே செய்கிறது. நாம் அன்றாடம் பேசுகின்ற சப்பாத்து, கக்கூஸ், குசினி போன்றவை ஐரோப்பிய வார்த்தைகள். நாம் தமிழ் என்று எண்ணிக்கொண்டிருக்கின்ற பல சொற்கள் தமிழ் சொற்களே கிடையாது. அவற்றில் நிறைய சமஸ்கிருதமும் சிங்களமும் கலந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் சுவீகரித்துக்கொண்டே தமிழ் இத்தனை வளர்ந்திருக்கிறது. பிறகு ஆங்கிலக் கலப்புக்கு மட்டும் ஏன் தடை போடுகிறீர்கள்? மொபைலை மொபைல் என்றே சொல்ல விடுவோம். செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மகிழூந்து என்று அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலவார்த்தைகளை தமிழ்ப்படுத்தி சாகடிக்கவேண்டாம். ஒரு குழந்தை நம்மோடு பெசும்போது தமிழ் தவறாகப் பேசிவிடுவேனோ என்கின்ற பயத்திலேயே பேசாமல் விட்டுவிடுகிறது. அதனை அளவுக்கேற்ற ஆங்கிலத்தை கலந்து பேசவிடுங்கள்.

முக்கியமான விடயம். என் நண்பரின் மகள் ஒருவர் VC வகுப்பில் லத்தீன் மொழியை இறுதியாண்டில் மாத்திரமே படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தாள். இப்படி ஏராளமான மாணவர்கள் லத்தீனையும், சிங்களத்தையும், பிரெஞ்சையும் படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் வீட்டிலே தமிழ் படித்து, தமிழ் பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று பயின்று, தமிழிலே சிறந்த ஆளுமை கொண்ட மாணவர்களுக்கும் இங்கே ஐம்பது மதிப்பெண்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இதிலே மாணவர்களை குறை சொல்லமுடியவில்லை. காரணம் அதே இதே மாணவர்கள்தான் ஏனைய பாடங்களில் அதிக புள்ளிகளை பெறுகிறார்கள். ஆகவே VC வகுப்பிலே நாம் மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் முறையிலே எங்கேயோ தவறு இருக்கிறது. அல்லது பரீட்சையையும் திருத்துவதையும் நாங்கள் மிகக்கடினமாக மேற்கொள்கிறோம் என்பது அர்த்தமாகிறது. மாணவர்களை தமிழ் படிக்கவைப்பது அவர்கள் என்றென்றும் தமிழோடு தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே. ஆனால் நாமே அவர்கள் தமிழை விட்டு விலகுவதற்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது. பரீட்சைகளில் இனிமேல் சிறிது இலகுத்தன்மையை காட்டுங்கள்.

தமிழ்ப் போட்டிகளிலும் இதுவே நடக்கிறது. திருக்குறளை அப்படியே ஒப்புவிப்பதன்மூலம் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடப்போகிறது? பொழிப்பைக்கூட அப்படியே ஒப்புவிக்கவேண்டும். இல்லாவிட்டால் புள்ளியைக் குறைக்கிறார்கள். குழந்தையும் கிளிப்பிள்ளைமாதிரி ஒப்புவித்துவிட்டு லொலிபொப்பை வாங்கிக்கொண்டு அடுத்த கணமே திருக்குறளை மறந்துவிடுகிறது. ஒரு தொடர்பாடல் போட்டியிலே கம்பராமாயணப் பாடலைக் கொடுத்து வாசிக்கச்சொல்கிறார்கள். இது கிட்டத்தட்ட சிறுவர் துஷ்பிரயோகமாக எனக்குப்படுகிறது. பேச்சுப்போட்டிகளிலும் இன்னமும் பாரதி பிறந்த இடம் எட்டயபுரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் சென்ற நூற்றாண்டிலேயே இன்னமும் இருப்பதுவும், மாற்றங்கள் செய்ய முயல்பவர்களுக்கு முட்டுக்கட்டைகள் போடுவதுமே இப்படியான விடயங்கள் நடப்பதற்கான முக்கிய காரணங்கள்.

இறுதியாக ஒருவிடயத்தை சொல்லி அமர்கிறேன்.

எங்கள் வேலை குதிரைக்கு தண்ணி காட்டுவது. குடிநீரின் சுவையைக் சொல்லிக்கொடுப்பது. நீரின் குளிர்ச்சியையும் இதத்தையும் தெரியவைப்பது. அதைச்சரியாகச் செய்யவேண்டும். பின்னர் நீர் குடிப்பதுவும், நீச்சல் அடிப்பதுவும் குதிரை தானாகே செய்யவேண்டிய வேலை. ஆனால் நாங்களோ குதிரைக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்கிறோம் என்று தலையை உள்ளே போட்டு அழுத்துகிறோம். குதிரையோ மூச்சுத்திணறி திமிறிக்கொண்டு பயத்தில் பாய்ந்தோடிவிடுகிறது. அதற்குப்பிறகு குளத்தைக் கண்டாலே அது மிரள்கிறது.

வேண்டாமே.

நன்றி வணக்கம்.


Photo :
http://www.franklin.uga.edu/sites/franklin.uga.edu.chronicles/files/Jantjes_sm.jpg

Contact Form