மேதினம். அதற்கு முதல்நாளே இயக்கவாகனங்கள் கம்பஸ் பக்கம் அலையத்தொடங்கிவிடும். எங்கள் பக்கத்து தோட்டக்காணிக்குள் 50கலிபர் பூட்டுவார்கள். கம்பசுக்கு பின்னாலே மேஜர் டயஸ் வீதியில் 90கலிபர் பூட்டப்படும். கலிபர் பொசிஷனைச் சுற்றி வட்டமாக பங்கர் வெட்டுவார்கள். ஆனால் பொம்மர் வந்து அவனுக்கு அடித்தால் எங்கள் மேலேயே விழும். அதனால் நாங்களும் வீட்டு பங்கரை முதல்நாளிரவு துப்பரவாக்கி வைப்போம்.
மே தினத்தன்று பள்ளிக்கூடம் இல்லை. டியூஷன் இல்லை. கடைகள் பூட்டப்பட்டு பாணையும் பேப்பரையும் மாத்திரம் வெளியில் வைத்து விற்பார்கள். அரைக்கிலோ சீனி என்றால் களவாகத்தந்து மிச்சக்காசு சில்லறை இல்லை என்பார்கள். காலையிலேயே கம்பஸ் வாசலில் ஒலிபெருக்கி “வாருங்கள் தோழர்களே” என்று பாடத் தொடங்கிவிடும். உதயன் பத்திரிகையில் தொழிலாளர் தின ஸ்பெஷல், பத்துப்பக்கத்தில் வெளியாகும். வழமையான கத்தி, அரிவாள், புரட்சிப் படங்கள். மேதின ஊர்வலம் பற்றிய தகவல்கள். ஈழநாதத்தில் புதுவையின் கவிதை. ஏனைய பத்திரிகைகளில் “அடிமை விலங்கு உடைக்குக” ரக விசுக்கோத்துக் கவிதைகள். முதலாளிகளின் அடக்குமுறை, தொழிலாளர்களின் விடுதலை, லெனின் தொழிலாளர் புரட்சி ஒரு தேசத்தின் விடுதலையாக மலரவேண்டும் என்று எங்கோ சொல்லியதை மையமாக வைத்து ஆசிரியர் தலையங்கங்கள். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் முதல் வெதுப்பக உரிமையாளர் சங்கம் வரை ஆளாளுக்கு வாழ்த்து விளம்பரங்கள் என்று அன்றைய பத்திரிகை பின்னிப் பெடலெடுக்கும்.
மதியத்துக்குப் பின்னர் மருதனார்மடத்திலிருந்து மேதினப் பேரணி ஆரம்பிக்கும். பேரணி நடைபெறும் வீதியோரமாக மக்கள் கூடிவிடுவார்கள். பெடியள் எல்லோரும் மதிலில் ஏறி இருந்து பார்ப்பார்கள். பெட்டைகள் மதிலுக்கு உள்ளே சீமேந்துக்கல்லு அடுக்கி அதில் ஏறி நின்று எட்டிப்பார்ப்பார்கள். சிலர் பந்தல் போட்டு மோர், சர்க்கரைத்தண்ணீர் கொடுப்பார்கள். தமிழீழ காவல்துறை மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும். பொறுப்பாளர்கள் கறுப்பு யன்னல் பதித்த பஜிரோக்களில் வந்தால் வழி அமைத்துக் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு சமாசங்களும் ஆளாளுக்கு அவர்கள் வசதிப்படி ஏதோ ஒரு நிகழ்வைச் செய்வார்கள். எல்லாமே விடுதலைப்போராட்டம், பொருளாதாரத் தடை, பாலியல் வல்லுறவு கொடுமைகள் சார்ந்து இருக்கும். சிலர் கலாச்சார பாண்ட் வாத்தியக்குழு கொண்டு வருவார்கள். சிலர் ட்ரக்டரில் மட்டையால் செய்த கட் அவுட் செய்துவருவார்கள். கட் அவுட்டில் தொழிலாளர் புரட்சி தொட்டு மரம் நடுகை வரைக்கும் விஷயம் இருக்கும். சிலர் வாய்கட்டி வருவார்கள். தெருக்கூத்துகளும் இடம்பெறும். வீதி நாடகங்கள் நடக்கும். ஒவ்வொரு சந்தியிலும் நின்று நடித்துக்காட்டுவார்கள். எல்லாமே குறியீடுகளோடு முகம் முழுக்க கரி பூசி சிறுவர் பெரியோர் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக நடிப்பார்கள். என் வயசுக்கு எதுவுமே புரியாது. இராமநாதன் வீதிக்குள் இறங்குவதற்குள் வியர்வையில் கரி கரைந்து ஒழுகி குறியீடு பின்நவீனத்துவமாக மாறிவிடும். பிரேமதாசா, சந்திரிகா, ரத்வத்தை, இந்திய அதிகாரம் என்று பலவித கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு ஒப்பாரி வைக்கப்படும். ஒரு மேதின ஊர்வலத்தில் பிரேமதாஸா தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நிஜமாகவே எரிந்துபோனார். இந்த நிகழ்வுகளில் சிறப்பாக செய்பவர்களுக்கு பரிசுகள்கூட வழங்கப்படுவதுண்டு.
என் வீட்டிலிருந்து மேதின நிகழ்வுகள் நடைபெறும் கலைப்பீட மைதானம் இரண்டு நிமிட நடைதூரத்தில்தான் இருந்தது. ஆனால் நாங்கள் சைக்கிள் எடுத்தால் நேரே கம்பசுக்குள் நுழையாமல் குமாரசாமி வீதி, அரசடி வீதி, பிரவுண் ரோட், அங்கிங்கிருந்த குச்சொழுங்கைகளுக்குள்ளால் நாச்சிமார்கோயிலடிவரை சென்று சாந்தி, கமலா, விமலா, ஜெயந்தி, ராகினி, ரூபிணி, ருக்குமணி மற்றும் கிருஷ்ணவேணி வீடுகளையெல்லாம் தரிசித்து, வாசலில் குரைக்கும் நாய்களுக்கெல்லாம் காலைத்தூக்கி ஹாண்டிலில் வைத்துவிட்டே மைதானத்துக்கு வருவோம். பொதுவாக என் வகுப்பு தோழிகள் நிகழ்வுக்கு வருவதில்லை. ஓரிருவர் காம்ரேடுகளாகவும் பெண்ணியவாதிகளாகவும் அப்போதே இருந்திருக்கலாம். ஞாபகம் இல்லை.
ஒருமாதிரி ஏழுமணிக்கு கம்பஸ் கிரவுண்டில் அத்தனைபேரும் கூடிவிடுவார்கள். கலைநிகழ்ச்சிகள், அவ்வப்போது மேடைப்பேச்சுகள், ஐந்து ரூபாய்க்குக் கச்சான், அபிராமியில் கிழங்கு ரொட்டி என்று எங்களுக்கு இரவு பத்து மணி வரைக்கும் கொண்டாட்டம் தொடரும். பின்னர் தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி. சிறுமி ஒருத்தி “செவ்வானம் சிவந்தது ஏன்” என்பாள். சீருடையிலேயே சிட்டு, நிரோஜன் என்று பலரும் பாடுவார்கள். சிட்டு பாடினால் கண்மூடி லயிக்கலாம்.
இங்கு வந்து பிறந்த பின்பேஇருந்த இடம் தெரியும் - நாளைசென்று வீழும் சேதி சொல்லஇங்கெவரால் முடியும்?வாழ்க்கை என்னும் பயணம்இதை மாற்றிடவா முடியும்?எல்லாமே இயக்கப்பாட்டுகள்தாம். ஒருமுறை சினிமாப்பாட்டு ஒன்றைப் பாடப்போவதாக அறிவிக்க கரகோஷம் கலட்டிச்சந்தி வரை கேட்டது. அறிவிப்பாளரே “நானாக நானில்லை தாயே” என்று பாடி அழுதார். நாமும் அழுதோம்.
அடுத்தநாள் வெள்ளன வழமைபோல குளிச்சு, வெளிக்கிட்டு, பள்ளிக்கூட சீருடை போட்டு, பேக்கரிக்கு சுடச்சுட பாண் வாங்கப்போகும் வழியில் இராமநாதன் வீதி, கம்பஸ் மைதானம் முழுதும் குப்பைக்கூடமாய் இருக்கும். ஷொப்பிங் பாக்குகள் பறக்கும். ஒழுங்கை முகப்புகளில் மூத்திரநாற்றம் அடிக்கும். நாய்களும் காகங்களும் சாப்பாட்டு எச்சங்களுக்காக அடிபட்டுக்கொண்டிருக்கும்.
பேக்கரியில் பாணுக்கு நீண்ட கியூ நிற்கும். போரணையில் ஒரு சிறுவன் வெறும்மேலுடன் பாண் எடுத்து தட்டில் அடுக்கிக்கொண்டிருப்பான். விடியக்காலையிலேயே வியர்வை வழிகின்ற முகத்தை வெறுங்கையால் துடைத்துக்கொண்டிருப்பான்.
முதல் நாள் கரியையும் சேர்த்து.
Comments
Post a Comment