ராசாளி

May 27, 2016

நான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். "பொத்திவச்ச மல்லிகை மொட்டு" என்று யோசித்தாலே போதும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.

ஆனால் என்றேனும் ஒருநாள் ஒருபாட்டு வானிலிருந்து வந்து குதிக்கும். குளிர்கால அதிகாலைபோல என்னை எதுவுமே செய்யவிடாமல் உறையவைக்கும். வேலை ஓடாது. சிந்தனை வேறு நிலை கொள்ளாது. மனைவியோடு முதல்நாள் பேசிய நாளின் இரவினைப்போல மனம் சந்தோசத்தில் தத்தளித்துக்கொண்டேயிருக்கும். சோகப்பாட்டென்றால் அவள் வழியனுப்பிவைக்காத வேலைநாளைப்போல தொந்தரவு செய்யும். சமயத்தில் அதிகம் பேசப்படாத பாடல்களே அப்படி அலுப்படிப்பதுண்டு். "அரும்பாகி மொட்டாகிப் பூவாகி", "குண்டுமல்லி குண்டுமல்லி", "காடு திறந்து", "கொஞ்சநேரம் என்னை மறந்தேன்", "பூமாலையில் ஓர் மல்லிகை", "முன்பே வா", "ஆகா காதல் கொஞ்சி கொஞ்சி", "நினைத்தால் நெஞ்சுக்குழிக்குள்", "தீரா உலா" இப்படி நாள்முழுதும் வரிசைப்படுத்தினாலும் தீராத லிஸ்ட் அது. இது வெறும் தமிழ் வரிசைதான். ஹிந்தியில் சஜுடா, தும் தக், ஆங்கிலத்தில் என்யா, சானியா டிவைன், கோர்ஸ் என்று இது ஒரு அற்புதமான பயணம். நீண்ட நெடிய வரிசை.

அந்தத் தீரா உலாவில் ஏறி உட்கார்ந்திருக்கிறது "ராசாளி".


இசை, குரல், வரிகள் என்று மும்மூர்த்திகளும் ஒன்றாய் சேர்ந்து அவதாரம் எடுத்து முன்னே வந்துநிற்பதுபோல ஒரு பாட்டு. Its a magic.

"நானே வருகிறேன்" என்ற அதிசயம் நிகழ்ந்து இரண்டே ஆண்டுகளில் மீண்டும் சத்யப்பிரகாஷ் சாஷா திருப்பதி கூட்டணி. என்ன குரலடா. சுசீலா, சித்ரா, ஸ்ரேயாகோஷல் என்கின்ற என்னுடைய ஆதர்ச வரிசையில் ஷாஷா உட்கார்ந்துவிடுவார்போலத் தெரிகிறது. இந்தக் குரலும் சங்கதிகளும் கனவிலே மாத்திரமே சாத்தியமாகக்கூடியது. சத்யப்பிரகாஷ் என்ன மனுஷன்யா நீ? அற்புதமான காஞ்சிப்பட்டுக்கொசுவம் தோளில் தங்கமுடியாமல் வழுக்குவதுபோல ஒரு குரல். அதை அடிக்கடி எடுத்து அழகாகச் சரிசெய்வதுபோன்ற சங்கதிகள். என் ஒரே சுப்பர் சிங்கர்! (அல்கா அதுக்கும்மேலே, விட்டுவிடுவோம்).

வரிகள் தாமரை.
எட்டுத் திசை முட்டும் எனை -பகலினில் கொட்டும் பனி மட்டும் துணை -இரவினில் நெட்டும் ஒரு பட்டுக் குரல் - மனதினில் மடிவேனோ?
முன்னும் இதுபோலே - அனுபவம்
கண்டேன் என சொல்லும்படி - நினைவிலை
இன்னும் எதிர் காலத்திலும் - வழியிலை
மறவேனே!
கார்த்திக்கைக் கேட்டால் அது ஜெஸ்சி என்பான். மணிவாசகரைக் கேட்டால் ஈசன் என்பார். பாரதி கண்ணம்மா என்பான். எனக்கு ஒவ்வொரு கணமுமே இந்த அனுபவம்தான். இக்கணம்போல முன்னும் இல்லை. பின்னும் இல்லை.இதுவே சாசுவதம். தரித்து நிற்கட்டும். தாமரை இப்பாடல் எழுதிய காலப்பகுதியை சிந்திக்கையில் கவிஞராக அவர்மீது பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது. நன்றி கலந்த வாழ்த்துகள்.

Last but not least, A R Rahman.

சிநாமிகா, காதல் அணுக்கள் ரகத்தில் தொடங்கும் இசை. சரணத்திலேயே நான் வேற லெவல் என்று பறை தட்டிவிடுகிறது. வயலின் பீஸ் முடிய ஆரம்பிக்கிறது திருப்புகழ் சந்தம். ஒருபுகழுக்கும் உருகாதான் திருப்புகழுக்கு உருகினன்! இயலுமானால் வெற்றிக்கொடி கட்டு பாடலையும் கூடவே கேளுங்கள். ரகுமானின் அந்த spectrum விளங்கும். இந்தப்பாடலையே தனியாக கொல்லைப்புறத்துகாதலியாக எழுதலாம். அவ்வளவு இருக்கு.
"முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்,
வாழ்வினில் ஒரு பயணம் - இது முடிந்திட
விடுவேனோ?
ம்ஹூம். எப்படி விடுவேன் நான்? எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால்,

"மசிர விட்டான் சிங்கன்."

Contact Form