அசோகவனத்தில் கண்ணகி நாடகம் விமர்சனம் - ரஸஞானி

May 4, 2016

 

3

 

"வேத்தியல் பொதுவியலாக இருந்த நாடகம், கோயில்களில் தஞ்சமடைந்து பின் தெருக்கூத்தாக இருந்து பார்சி நாடக வருகையால் மறு எழுச்சி பெற்றுப் புராணம், வரலாறு, சமூகம் என்ற வகைகளைப் பெற்று மேடையில் வளர்ந்தது, அதன்பின் நாடகம் படிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத் திரைப்படம் போலத் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும் அது ஆயிற்று."

இவ்வாறு எழுதப்பட்ட குறிப்பொன்றை இக்கால நாடகவகைகள் என்ற ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தேன்.

இன்று தொலைக்காட்சி நாடகங்களின் தீவிரத்தால், மேடை நாடக அரங்காற்றுகைகள் நலிவடைந்து வருகின்றன.

அத்துடன் குறும்படங்களும் அவ்விடத்தை ஆக்கிரமித்துவிட்டன.

எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூத்து முயற்சிகளையும் மேடை நாடகங்களையும் அவதானித்து வருகின்றோம்.

இந்தப்பின்னணியில் நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் அரங்கேறிய இளம் படைப்பாளி ஜே.கே.ஜெயக்குமாரனின் அசோகவனத்தில் கண்ணகி என்ற நாடகம் பற்றிய எனது ரஸனைக்குறிப்பை இங்கு பதிவுசெய்கின்றேன்.

இந்த நாடகம் அரங்கேறி, இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எழுதநேர்ந்தமைக்கு, எனக்கிருந்த வேலைப்பளுவும் ஒரு காரணம். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டதாகத்தான் இராம காவியத்தின் மூலம் அறிந்திருந்தோம்.

எப்படி மதுரையை எரித்த சிலப்பதிகார கண்ணகி அங்கு வந்தாள்...?

மதுரையைப்பற்றி இன்றைய தமிழ்த்திரைப்படங்களில் உருவகிக்கப்படும் செய்தி, அங்கு வீரம் நிறைந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். படத்தின் நாயகனோ, அல்லது அவன் நண்பனான துணை நடிகரோ, " நான் மதுரைக்காரன்டா" என்று மீசையை முறுக்கிவிட்டுக்கொள்ளும் காட்சியைப் பார்க்கலாம்.

மதுரையை எரித்த கண்ணகியிடம் மீசை இல்லை. அவளுக்கு அந்தப் பெருநகரம் பூர்வீகமும் அல்ல.

அவள் அசோகவனத்தில் தங்கியிருந்தால் எப்படி இருக்கும் ? என்பதை அங்கதச்சுவையுடன் பகிர்வதே ஜே.கே.யின் பதிவு.

அமரகாவியங்கள் எனச்சொல்லப்படும் மகா பாரதம், இராமாயணம் ஆகியனவற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் குந்திதேவி, பொல்லாதநேரத்தில் சூரியனை நினைத்தமையால் கர்ணனை சுமக்க நேர்ந்து. அந்தக்குழந்தையை நதியில் விட்டு விட்டு காலம் பூராவும் துயரப்பட்டு, இறுதியில் போர்க்களத்தில் அவன் மாண்டபோது " மகனே மகனே " என்று புலம்பினாள்.

திரௌபதி, ஐந்துபேருக்கு வாழ்க்கைப்பட்டதாலோ என்னவோ புத்திரபாக்கியமில்லாத குறையுடன், சூதாட்டத்தில் கணவர்கள் தோற்றதால் துச்சாதனின் கையில் தனது சேலை முந்தானையை சிக்கவைத்து அவஸ்தைப்பட்டாள்.

கணவன் திருதராட்டிரனுக்கு கண் பார்வையில்லை எனத்தெரிந்தும் அவனைக்கட்டிக்கொண்டு, தியாகியாக வாழ்ந்து, தனது கண்களையும் இறுகக்கட்டி, வாழ்நாள் பூராவும் குருடியாகவே வாழ்ந்தாள் காந்தாரி.

கேட்கக்கூடாத வரத்தைக்கேட்டு கணவனை இழந்தாள் கைகேயி.

சுபத்திரை, அம்பை, பானுமதி, சுபாங்கி முதலான பெண் பாத்திரங்கள் யாவும் வஞ்சிக்கப்பட்டவர்கள்தான்.

இராமாயணத்தில் வரும் சீதை - " இராமன் இருக்குமிடம்தான் தனக்கு அயோத்தி " என்று வாழ்ந்தவள். அதனால் யாரோ இட்ட கட்டளைக்கு ஏகபத்தினிவிரதனுடன் காட்டுக்கும் சென்றாள். இராவணனால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டாள்.

தீக்குளித்தாள். மீண்டும் வனம் சென்றாள். அரண்மனையில் பெற்றெடுக்கவேண்டிய லவனையும் குசனையும் வனத்திலே ஈன்றாள்.

இறுதியில் பூமாதேவியிடம் புதையுண்டாள்.

இந்தப்பெண்களின் கதிதான் இப்படியென்றால், சிலப்பதிகார கண்ணகி பாடும் அதோ கதிதான். மாதவிபாடும் அதோ கதிதான்.

கண்ணகிக்கு புத்திர பாக்கியமும் இல்லாமல் போய்விட்டது. மாதவிக்குப்பிறந்த மணிமேகலையோ சிற்றின்பம் ஏதும் அறியாத துறவியானாள்.

மொத்தத்தில் இந்தக்காவியங்களை இயற்றிய ஆண்கள் அனைவரும் பெண்களை எவ்வாறு வஞ்சித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

f731d108-2693-4364-ac72-c0fec876ee8d

சிலவேளை பெண்கள், இந்தக்காவியங்களை எழுதியிருந்தால், ஆண்களை வஞ்சிக்கும் விதமாக பாத்திரங்களையும் சம்பவங்களையும் காட்சிகளையும் சித்திரித்திருப்பார்களோ ???

வியாசருக்கும் வால்மீகிக்கும் கம்பருக்கும் இளங்கோவடிகளுக்கும் ஏன்தான் இந்த ஓரவஞ்சனை ?????

இந்தக்கேள்வியை கேட்பதற்கு இன்று அவர்களும் இல்லை.

ஆனால், மேடைகள்தோறும் இவர்கள் படைத்த பாத்திரங்களுக்காக விழாக்களும் பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் இடம்பெறுகின்றன. திரைகளிலும் சின்னத்திரைகளிலும் அவர்கள் தோன்றுகிறார்கள்.

நவீனமாகவும் வித்தியாசமாகவும் இந்தக் காவிய மாந்தர்களை சித்திரித்தால் எப்படி இருக்கும் ? என்று யோசித்திருக்கிறார் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் இளம் படைப்பாளி ஜே.கே. ஜெயக்குமாரன்.

அசோகவனத்தில் சீதை இருந்ததாகத்தான் படித்தோம். திரைகளிலும் பார்த்தோம்.

ஆனால், அசோகவனத்தில் கண்ணகி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துள்ளார் இந்நாடகத்தை எழுதி இயக்கிய ஜே.கே.

அந்தக் கண்ணகி பாத்திரத்தை ஜே.கே. யின் கற்பனைக்கு ஏற்றவாறு நடித்துக்காண்பித்துள்ளார் ஜே.கே.யின் மனைவி ஜீவிகா.

கடந்த மார்ச் மாதம் மெல்பனில் நடந்த அனைத்துலக பெண்கள் தினவிழாவில் மேடையேறிய அசோகவனத்தில் கண்ணகி என்ற நாடகம், பெண்கள் தினத்திற்குப் பொருத்தமானதுதான். அங்கதச்சுவைகொண்டது. இந்நாடகம் பற்றி யாராவது எழுதுவார்கள் என்று இதுநாள் வரையில் காத்திருந்துவிட்டு, இறுதியில் நானே எழுத முன்வந்தேன்.

பார்வைக்குப் பஞ்சமில்லை. எழுத்துக்குத்தான் பஞ்சம்.

இலங்காபுரியில் இலங்கேஸ்வரனின் ஆளுகைக்குள் இருந்ததாகச் சொல்லப்படும் அசோகவனம் தற்பொழுது சீத்தா எளிய என்று சிங்களத்தில் அழைக்கப்படுகிறது.

அந்த அசோகவனத்தில் தமிழ்நாடு மதுரையை எரித்த கண்ணகியை சிறையெடுத்து வந்த இராவணன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.

இந்நாடகத்தில், இராவணன், கண்ணகி, அனுமான், மண்டோதரி, திரிசடை ஆகிய நான்கு பத்திரங்கள்தான் வருகின்றன.

முதல் காட்சியே சிரிப்பை வரவழைத்துவிட்டது.

அசோகவனத்தில் கண்ணகி நவீன உடையான சுடிதார் அணிந்து கூந்தலை அவிழ்த்த நிலையில் ஏதோ யோசனையுடன் நடமாடுகிறாள். அவள் தோளில் பெண்களில் கைப்பை (Hand Bag) தொங்குகிறது. அங்கு ஒரு சுழல் நாற்காலி. அதில் ஆங்கிலத்தில் Reserved for Ravanan என்ற அட்டை.

அங்கு மண்டோதரியும் திரிசடையும் வருகின்றனர். மண்டோதரி கையில் ஒரு தட்டத்தை வைத்துக்கொண்டு மிக்கஷர் கொரிக்கிறாள். இவர்கள் இருவரும் கண்ணகியின் பார்வைக்கு அழகாகத்தெரிகின்றனர்.

அவளுக்கு கோவலனின் பலவீனம் நினைவுக்கு வருகிறது. மதுரையை விட்டு அசோகவனம் வந்து செட்டில் ஆகிவிடுவதற்கு நினைக்கும் அவளுக்கு இங்கும் கோவலனை மயக்கத்தக்க மாதவிக்கு ஈடான பெண்கள் இருப்பதுதான் கவலை.

அதனை கண்ணகி ஆழ்ந்த யோசனையுடன் சொல்லும்பொழுதே சிரிப்பொலி அரங்கில் எழுகிறது.

இவ்வாறு முதல் காட்சியே ரசிகர்களை சிரிப்பால் கவர்கிறது இந்த நாடகம்.

கண்ணகி தனக்குள் பேசுகிறாள்.

இங்கு அழகான ஒரு மனைவி மண்டோதரி வடிவில் இருக்கத்தக்கதாக இந்தியாவுக்கு வந்து ஏன் பெண் கடத்தல் நாடகம் செய்கிறான் இந்த இராவணன் ?

மண்டோதரிக்கு மனிதாபிமானம் அதிகம் என்பதும் சொல்லப்படுகிறது.

கண்ணகிக்கு என்ன தேவையோ , அதனை செய்துகொடுக்கவும் தயாராக இருக்கிறாள்.

அதனால் அசோகவனத்தில் ( நுவரெலியாவில் இருக்கிறது) இருக்கும் கண்ணகி, குளிரைத்தாங்க ஒரு எலக்ட்ரிக் ஹீட்டர் கேட்கிறாள். மண்டோதரியும் அதற்கு ஆவனசெய்வதாகச் சொல்கிறாள்.

உடன்வந்த திரிசடைக்கு கண்ணகியின் கையில் சதா நேரமும் இருக்கும் அந்த ஹேண்ட் பேக்கில்தான் கண்.

" கண்ணகி அக்கா, அந்த ஹேண்ட் பேக்கில் அப்படி என்னதான் வைத்திருக்கிறீர்கள் ? " எனக்கேட்கிறாள்.

தன்னிடமிருந்த நகைகளையெல்லாம் பெற்று விற்றுத்தீர்த்து மாதவிக்கு கொடுத்துவிட்ட கோவலன், அவள் பார்வையில் களவாணிப்பயல். எஞ்சியிருப்பது அந்த பேக்கில் மற்றும் ஒரு காற்சிலம்பு. அதாவது பத்திரமாக எஞ்சியிருப்பதை இவளிடம் எப்படிச்சொல்வது என்ற தயக்கம் கண்ணகிக்கு.

அடுத்த காட்சியில் இரவணன் பாரதியின் வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்ற பாடலை அபஸ்வரமாகப் பாடிக்கொண்டுவருகிறான்.

( இராவணன் வீணை வாசிப்பதில் சிறந்தவன். அவன் சிவ பக்தன் என்பது ஐதீகம்)

பாரதியின் பாடலை அவன் கொலை செய்வதால் கண்ணகி ஆத்திரமடைகிறாள்.

அவனை நிறுத்தச்செய்துவிட்டு, கண்ணகி இனிய குரலில் அதனைப்பாடுகிறாள்.

அதனைக்கேட்டுவிட்டு , மீண்டும் அதே பாடலை மேலும் மோசமாகப்பாடுகிறான் இராவணன்.

" நிறுத்து. எப்படித்தான் அந்த சிவபெருமான் உனது பாட்டில் மயங்கி லைக் (Like) போட்டாரோ தெரியவில்லை எனச்சொல்லும் கண்ணகி, விஜய் தொலைக்காட்சியைப்பார்த்து பயிற்சி பெறச்சொல்கிறாள். அத்துடன் சிங்களத்திலும் பேசி அவனைத்திட்டுகிறாள்.

கண்ணகியை பாட்டினால் கவரமுடியாத இராவணன், வடிவேலு பாணியில் கறுப்புக்கண்ணாடி அணிந்துவந்து, " கண்ணகி டு யூ லைக் மீ...? " எனக்கேட்கிறான்.

அதனைக்கேட்டவுடன் கண்ணகிக்கு தும்மல் வந்துவிடுகிறது. மண்டோதரியும் தும்முகிறாள்.

ஆனால், அவனோ, " கண்ணகிக்கு தடிமன் பிடித்துவிட்டது. மண்டோதரி. அவளுக்கு சித்தாலேப்பை தைலம் எடுத்துவந்து கொடுக்கும்படி " சொல்கிறான்.

அதற்கு மண்டோதரி, " பத்துத்தலை மண்டையா எனக்கும்தான் தடிமன் பிடிச்சிட்டுது " என்கிறாள்.

" சித்தாலேப்பையும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் " என்று இலங்கைத்தமிழ்ப்பாணியில் கண்ணகி சொன்னதும், இலங்கை வந்து விரைவில் இலங்கைத்தமிழ் பேசக்கற்றுக்கொண்டதை இராவணன் பாராட்டுகிறான்.

இந்தக்காட்சியில் இலங்கை - இந்தியத்தமிழ் பேச்சு வழக்குகள் பற்றி சில கணங்கள் வாதம்.

இன்று போய் நாளை வருவதாக சொல்லிவிட்டு இராவணன் அகன்றதும், " எப்படியம்மா இவனோடு குடும்பம் நடத்துகிறாய் ?" என்று மண்டோதரியிடம் கேட்கிறாள் கண்ணகி.

" நானெங்கே இவனுடன் குடும்பம் நடத்துகின்றேன். நான் தினமும் சண் ரி.வி.தானே பார்க்கின்றேன் " என்கிறாள் மண்டோதரி.

இவ்வாறு இந்த நாடகம் முழுவதும் இன்றைய யுகத்துடன் அந்த காவியமாந்தர்களின் இயல்புகளை இணைத்துவைத்து வேடிக்கை காண்பிக்கிறது.

கண்ணகியின் வாயாடித்தனத்தால் ஆடிப்போய்விடும் இராவணன், " மாதவி, சகுந்தலை, அகலிகை என்று ஆயிரம் அழகிகள் இருக்கும்பொழுது இவளை ஏன் தூக்கிவந்து இப்படி கஷ்டப்படுகிறேன் " என்று தனக்குள் தானே பச்சாதாபப்படுகின்றான்.

10262224_10208692806820333_8319445872882808284_n

இறுதியில் கோவலன் தூது அனுப்பிய அனுமான் வருகிறான்.

அவன் கோவலனின் உண்மையான தூதுவனா என்பதை கண்ணகி அறியமுயன்றால், அதுவும் அவசியமில்லாமலாகிவிடுகிறது.

கோவலன், தனது அடையாளம் காண்பிக்க குறைந்த பட்சம் ஒரு கணையாழியும் கொடுத்தனுப்ப துப்பின்றி வர்த்தகத்தில் வங்குரோத்தாகியிருக்கிறான் என்ற செய்தியும் இந்நாடகத்தில் வருகிறது.

வந்திருக்கும் அனுமானோ கண்ணகியை மீட்டுச்செல்ல வந்தவனாக இல்லை.

கோவலனுக்காக கண்ணகியின் ஹேண்ட் பேக்கில் எஞ்சியிருக்கும் காற்சிலம்பைத்தான் மீட்டு எடுத்துச்செல்ல வந்திருக்கும் அனுமானை விரட்டி அடிக்கிறாள். அத்துடன் ரசிகர்களின் பலத்த சிரிப்பொலியுடன் நாடகம் நிறைவுபெறுகிறது.

இந்நாடகத்தின் வசனங்களில் அங்கதம் துள்ளிவிளையாடுகிறது. இந்தப்பாணியில் தனது பதிவுகளை எழுதிவரும் ஜே.கே. அரங்காற்றுகைக்காகவும் கண்ணகியையும் இராவணனையும் இந்தக்கோலத்தில் சித்திரித்துப் பார்த்திருக்கிறார்.

ஒரு காலத்தில் நடிகவேள் எம். ஆர். ராதா, இராமாயணத்தை கீமாயணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பலத்த கண்டனத்துடனும் அரசின் தடைகளுடனும் மேடையேற்றிவந்தார்.

காவியங்களின் காட்சிப் புனைவுகளை இன்றைய யுகத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ???

காவிய மாந்தர்களை இன்றைய கால கட்டத்தில் எப்படிவேண்டுமானாலும் சமூக அரசியல் பொருளாதார மாற்றங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதற்கு ஏற்றவாறே இன்றைய நவீன ஊடக சாதனங்களும் பெருகியுள்ளன.

காண்டவ தகனத்தை இன்றைய காடழிப்புடன் ஒப்பிட்டு கூத்தாக காண்பிக்க முனைந்தார் பேராசிரியர் மௌனகுரு.

இராமாயணத்தின் பெண்கடத்தலையும் அவளுக்கு வைக்கப்பட்ட அக்கினிப்பிரவேச பரிசோதனையையும், சிலப்பதிகாரத்தில் மாதவிக்காக நகைகளை கண்ணகியிடமிருந்து கவர்ந்து இறுதியில் ஓட்டாண்டியாகிப்போன கோவலனின் இழிநிலையையும் இந்நாடகம் இன்றைய யுகத்துடன் ஒப்பிட்டுள்ளது.

இக்காவியங்களை படைத்தவர்கள், ஆண்களை விடுத்து, பெண்களையே அதிகம் வஞ்சித்தனர்.

ஆனால், இந்நாடகப்பிரதியாளர் ஜே.கே., பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தி, ஆண்களின் இயலாமையை பரீட்சார்த்தமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்நாடகத்தில் ஜீவிகா விவேகானந்தன், தமிழ்ப்பொடியன், நிருத்தன் சுந்தரசிவம், பிரவீணா சந்திரநாயகம், லாவண்யா அறிவழகன் ஆகியோர் நடித்தனர்.

12825259_10154112115473313_151793603_n

மேடை நாடகமாகவும் வானொலி நாடகமாகவும் நடிக்கத்தக்கதாக இந்தப்பிரதியை ஜே.கே. எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அங்கதச்சுவையுள்ள ஒரு நாடகத்தை பார்த்த நிறைவுடன் அன்று அந்த மண்டபத்திலிருந்து விடைபெற்றேன்.

----0---

ரஸஞானி - மெல்பன்

Contact form