நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

May 13, 2016
செங்கை ஆழியான், புன்னியாமீன், கே. விஜயன் ஆகியோரின் நினைவரங்கும் இலக்கிய சந்திப்பும் நாளை இடம்பெறவுள்ளது. கந்தராஜாவின் தலைமையிலான இந்நிகழ்வில் ஈழத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஞானசேகரன், சந்திரசேகரன், பாலஸ்ரீதரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். 

செங்கையாழியான் நினைவுரையைச் செய்கின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. செங்கை ஆழியான் உயிரோடு இருக்கும்போதே நானும் ஜூட் அண்ணாவும் அவருடைய புத்தக அறிமுக அரங்கைச் செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். கைகூடிவரவில்லை.

இன்னொரு இருபது வருடங்களுக்குப்பிறகு செங்கையாழியான் எப்படி, எதற்காக வாசிக்கப்படலாம் என்பதை விரிவாக எடுத்துப்பேசலாம் என்று நினைக்கிறேன். வந்தால் கலந்துரையாடலாம்.

நிற்க.

இலக்கியச்சந்திப்புகள், இயல் அரங்கங்கள் மீதான ஆர்வம் இப்போதெல்லாம் வடிந்துபோய்விட்டது. மேடைப்பேச்சுகளின் பயன் பற்றிய குழப்பங்களும் கூடவே எழுகின்றன. இதெல்லாம் எதற்காக?புத்தகங்களினூடு நாங்கள் எப்போதுமே பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்? எல்லாவற்றையும் தூக்கிக்குப்பையில் போட்டுவிட்டு ஒரு முடிவுறாத ரயில் பயணத்தில் யன்னல்கரையோரம் உட்கார்ந்துகொண்டு கூதல்காற்றில் ஒற்றைகள் பறக்க புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போலத்தோன்றுகிறது. எனக்கு நானே சிரித்துக்கொண்டு, அழுதுகொண்டு. யாமத்திலே நீலகண்டம் என்கின்ற நாய்க்குப்பின்னாலே பயணிக்கின்ற பண்டாரம்போல ஒரு புத்தகத்திடம் என்னை ஒப்படைத்து, இந்தாப்பா, என்னைப்பத்திரமாக் கொண்டுபோ என்று சொல்லிவிடவேண்டும். ரயில் எங்குவேண்டுமென்றாலும்செல்லட்டும். யன்னலுக்கு வெளியே விட்டேத்தியாகப் பார்க்கிறேன். யார் யாரோ படித்து முடித்து வீசியெறிந்த புத்தக‌ங்களின் தாள்கள் எல்லாவிடமும் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரும் எரிக்கப்பட்ட நூலகத்திலிருந்து பறக்கும் கருகிய ஒற்றைத்துண்டுகளாகின்றனர். ஒரு புத்தகத்துக்கு தான் எரிக்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் தெரியுமா? அறியவேண்டும். 

திடீரென்று யாரோ ஒருவரின் ரயில் கண்ணாடியினூடு நான் தெரிகிறேனோ என்கின்ற பிரக்ஞையும் கூடவே எழுகிறது.நிமிர்ந்துபார்க்கிறேன். நானே எரிந்துகொண்டிருக்கிறேனோ என்ற நினைப்பில் வெம்மை பரவுகிறது. ரயில் அசையாமலேயே வேகம் பிடிக்கிறது.

Contact Form