Skip to main content

மடொல் டூவா என்கின்ற கிராஞ்சி



சிங்கள இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு நாவல் மடொல் டூவா. நாற்பதுகளில் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய இந்த நாவல் ஆங்கிலத்தில் அதே பெயரிலும் தமிழில் மடொல் தீவு என்றும் மொழிபெயர்க்கப்பட்டு இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கைக் கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்திலும் இந்த நூல் உள்ளடங்கியிருக்கிறது.

நாவலில் கதை இதுதான்.

ஒரு கிராமத்து முதலாளியின் மகனான ஏழு வயது உபாலி கினிவெலவும் அவர்களுடைய வீட்டு வேலைக்காரச் சிறுவனான ஜின்னாவும் சேர்ந்து அந்த ஊரிலே பல்வேறு குழப்படிகளைச் செய்கிறார்கள். அவன் தொல்லை தாங்கமுடியாமல், பாடசாலையை மாற்றி ஒரு ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்துப் படிப்பித்தாலும் உபாலியின் கொட்டம் அடங்குவதாகயில்லை. ஒரு நாள் உபாலியும் ஜின்னாவும் கிராமத்திலிருந்த ஓர்சார்ட் பண்ணைக்குள் புகுந்து அதை நாசமாக்குகிறார்கள். பின்னர் பொலிசில் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அப்படி ஓடி வேறொரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும்போது, அங்கு ஒடும் ஆற்றுக்கு மத்தியில் மனித நடமாட்டமில்லாத சதுப்பு மரக்காடுகளாலான தீவு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதுதான் மடொல் தீவு. அந்தத் தீவில் அடிக்கடி சிறு வெளிச்சம் தெரிகிறது என்றும் அங்கே ஒரு பேய் வாசம் செய்கிறது என்றும் கிராமத்தவரிடையே பேச்சு நிலவியதால் யாருமே அங்கு செல்வதில்லை. ஆனால் உபாலியும் ஜின்னாவும் தாம் வேலை செய்யும் தோட்டத்து முதலாளியின் உதவியோடு அங்கு சென்று நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பேய் வெளிச்சத்துக்குக் காரணம்கூட அந்தத் தீவில் ஒளிந்துவாழும் ஒரு தப்பியோடிய குற்றவாளி என்றும் கண்டுபிடிக்கிறார்கள். நாளடைவில் இவர்களோடு புஞ்சி மாத்தையா எனும் ஒரு சோம்பல்கார நலிந்த இளைஞனும் அந்தத் தீவுக்கு வந்து சேர்கிறான். ஈற்றில் மூவரும் சட்ட ரீதியான அனுமதி பெற்று அந்தத் தீவையே ஒரு விவசாயம் செழிக்கும் நிலமாக மாற்றிச் சிறப்பாக வாழ்கிறார்கள்.

000

சிங்கள எழுத்தாளர் இசுரு சமர சோமவீரவின் பத்து சிறுகதைகள் தமிழில் ரிஷான் ஷெரிப்பால் மொழி பெயர்க்கப்பட்டு ‘திருமதி பெரேரா’ என்ற பெயரில் ஆதிரை வெளியீடாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இந்தத் தொகுப்பிலிருக்கும் முதலாவது சிறுகதை ‘கிராஞ்சி’. பல்கலைக்கழகப் படிப்பு ஒன்றுக்காக மன்னார் மாவட்டத்திலிருக்கும் கிராஞ்சி என்கின்ற சதுப்பு நிலத்தில் உள்ள மீன்களைப்பற்றிய ஆய்வுக்காகச் செல்லும் சிங்களவர் ஒருவரின் பார்வையில் நகர்கின்ற கதை இது.

‘கிராஞ்சி’ கதை ஒரு கொடுங் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு துவண்டுபோய்ப் பிதற்றிக்கொண்டிருக்கும் ஒருவனிலிருந்து ஆரம்பிக்கிறது. கனவுக்கும் நினைவுக்கும் நிஜத்துக்குமாய் அவன் சிந்தனைகளை அலைபாய்ந்தபடியே இருக்கின்றன. அந்தச் சிந்தனைகளின் போக்கிலேயே கதையும் அலைபாய்கிறது. முதலில் அவன் முற்றிலும் வெண்மை சூழ்ந்த ஒரு தனியறைக்குள் சிக்கியிருக்கிறான். சுவர், மேற்கூரை முதற்கொண்டு தலையணை, விரிப்புவரை எல்லாமே வெண்மை. அவன் கட்டிலுக்கு அருகிலிருக்கும் தண்ணீர்க்குவளையின் மூடிகூட வெண்மையாக இருக்கிறது. வெண்ணிற ஜன்னல்திரைகள் அப்பாலிருக்கும் அத்தனையையும் அவனிடமிருந்து மறைத்து நிற்கின்றன என்று அவனுக்கு விசனம் வருகிறது. ஒருகாலத்தில் இதே வெண்மைக்காக ஆசையுற்றவனுக்கு அக்கணம் அந்த வெண்மை வெறுமையாய்த் தோன்றுகிறது. இப்போது சிந்தனை நிஜ உலகத்துக்குப் பாய்ந்து தொற்றியிருக்கும் காய்ச்சலைப்பற்றி எண்ணி மாளுகிறது. உழட்டிக்கொண்டேயிருக்கிறான். இந்தக் கோதாரிபிடித்த காய்ச்சலால் செத்துவிடுவேனோ என்று அஞ்சுகிறான். தலைவலி பொறுக்கமுடியாமல் துடிக்கிறான்.

அது ஒரு தீவு. கிராஞ்சி சிவபுரம் கடற்கரையிலிருந்து பார்த்தால் தெரியும் தீவு. அந்தத் தீவில் செழிப்பாக விளைந்து நிற்கும் ஒரு மரக்கறித்தோட்டம். அங்கு காய்த்திருந்த பெரிய கத்தரிக்காய்கள்மீது புழுக்கள் ஊர்ந்தன. வட்டக்காய்ப்பூக்களிடையே தேனீக்கள் பறந்தன. அங்கே அவனும் கோப்ரல் சமன் குமாரவும் சிறிய வீடொன்றின்மீது அமர்ந்திருந்து தோட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சமன் குமாரவை ஜின்னாவாகவும் தன்னை உபாலியாகவும் அவன் உணர்கிறான். தூரத்தே ஒரு முள்ளம்பன்றியைக் கண்டதும் சமன்குமாரவின் கண்கள் பிரகாசிக்கின்றன. ‘இந்தப் பன்றிதான் நம் பயிரை நாசம் செய்கிறது’ என்று சமன் துப்பாக்கியால் குறிவைத்து அந்    த பன்றியை நோக்கிச் சுடுகிறான். அப்புறம்தான் தெரிகிறது அது பன்றியல்ல, வெறும் முயல் என்று. சமனோடு சேர்ந்து இவனும் சிரிக்கிறான்.

இப்போது இருவரும் கடற்கரை ஒன்றில் கிடக்கிறார்கள். சமனுக்கு இவன் ரொபின்சன் குரூசோவின் கதையைச் சொல்கிறான். எப்படி ரொபின்சன் குரூசோவும் பிரைடேயும் அந்தத் தீவிலேயே தனியாக வாழ்கிறார்கள் என்பதை அவன் சமனுக்கு விளக்குகிறான். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாமும் இந்தத் தீவில் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியுமோ என்று சமன் அங்கலாய்க்க இவன் சமனின் நெற்றியில் முத்தமிடுகிறான். இருவரும் சிகரட் ஒன்றை மாறி மாறிப் புகைக்கிறார்கள். இவன் இரவு வானத்தைக் காட்டி இது ஒரியனுடைய பெல்ட் என்று சில நட்சத்திரங்களைச் சுட்டிக் காட்டுகிறான். ‘அடடா உனக்கு நட்சத்திரங்கள், மீன்கள், ஆங்கிலம், தமிழ் என எல்லாமே தெரிகிறதே’ என்று சமன் சொல்ல ‘ஆனால் எனக்கு வேட்டு வைக்கத் தெரியாது, விவசாயம் செய்யத் தெரியாது’ என்று இவன் சொல்லுவான். உடனே சமன் சுதாகரித்தவனாய்ச் சொல்லுவான்.

“நான் ஏன் உபாலியாகாமல் ஜின்னாவானேன்? நீங்கள் எல்லோருமே ஒன்றுதான். எல்லோருமே ஏமாற்றுகிறீர்கள். நானும் எந்நாளும் ஏமாந்துகொண்டேயிருக்கிறேன்.”

அவன் திரும்பவும் போர்த்தியபடி புரண்டு படுக்கிறான்.

சதுப்புநிலங்கள் சூழந்த கிராஞ்சிக்கு அவனும் அவனது ஆய்வுக் குழுவினரும் முதன்முதலாய்ப் போகிறார்கள். திலீபன் என்பவன் அவர்களுடைய வழிகாட்டியாகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் இருக்கிறான். அங்குள்ள சிவபுரத்தில் அவர்கள் யசோதரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அந்த வீட்டில் யசோதரனின் அம்மாவும் தங்கையும்தான் இருக்கிறார்கள். அப்பா கொல்லப்பட்டுவிட்டார். யசோதரன் காணாமலாக்கப்பட்டுவிட்டான். யசோதரனின் அம்மா இவன் கையைப்பிடித்து ‘யசோ யசோ, என் பிள்ளை’ என்கிறார். வீட்டுப் புகைப்படங்களை யசோதரனின் தங்கையான நிலாமதி காட்டுகிறாள். புகைப்படத்தில் யசோதரன் முள்ளம்பன்றித் தலைமயிரோடு கட்டுமஸ்தான உடலோடு தோற்றமளித்தான். நிலாமதி தன் அண்ணனின் கதையைக் கூறுகிறாள். யசோ, வாகி, கமலா எனும் இயக்கத்திலிருந்த பெண் என ஒரு முக்கோணக்கதை அது. இவனுக்கு அந்தக் கதையைக் கேட்டதும் வேறொரு சிந்தனை தோன்றுகிறது. பின்னர் அப்படி நினைத்ததை எண்ணி அவனே அருவருப்படைகிறான்.

திரும்பவும் காய்ச்சலில் அரற்றும் உலகத்துக்கு அவன் திரும்புகிறான். வாந்தியெடுக்க முயன்றாலும் கொட்டுவதற்கு உள்ளே ஒன்றுமில்லாததால் வெறுமனே ஓங்காளித்துக் கிடக்கிறான். தலைவலி உயிரை எடுக்கிறது.

கிராஞ்சியில் வைத்து அவன் ஆமிக்காரன் சமன்குமாரவைக் காண்கிறான். சமன்குமார நந்திக்கடலடியில் செயலணியில் இருந்தவன். அந்தநேரம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சாகும் நிலைக்குப்போய் மீண்டவன். வீட்டில் சமனையும் தம்பிக்காரனையும் பிக்குவாக நேர்ந்திருக்கிறார்கள். சமன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டிலேயே தங்கி பின்னாளில் ஆமியில் சேர்ந்துவிட்டான். தம்பிக்காரன் பிக்குவாகிவிட்டான். சமனோடு நின்று இவன் புகைப்படமும் எடுத்து தொலைபேசி இலக்கத்தையும் வாங்கிக்கொள்கிறான்.

காய்ச்சலில் கிடந்து உழற்றும் இவனுக்கு சுபாணிஸ் மாமா என்பவர் மந்திரம் சொல்லி தேசிக்காய்களை வெட்டிப்போடுகிறார். இவனுக்கு எண்ணங்கள் கிராஞ்சிக் கரையிலேயே சுழல்கின்றன. தொலைவிலிருந்த தீவிலிருந்து யாரோ தன்னைக் காப்பாற்றுமாறு கையை அசைக்கிறார்கள்.

அது அவனா? யசோவா? சமனா? அல்லது திலீயா?

000



இசுருவின் இந்தக் ‘கிராஞ்சி’ சிறுகதையைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் முதலில் சொன்ன மார்ட்டின் விக்கிரமசிங்கவின் ‘மடொல் டூவா’ நாவலின் கதையைத் தெரிந்திருப்பது அவசியம். மடொல் டூவா நாவல் என்பது எளிமையான கிராம வாழ்வின் கூறுகளைச் சற்றே நனைவிடை தோய்தலுடன் புனிதப்படுத்தி சில இடங்களில் ரொமாண்டிசைஸ் பண்ணி எழுதப்பட்டது. ஆர். கே. நாராயணனின் சுவாமி அண்ட் பிரண்ட்ஸ், காலித் ஹொசெய்னியின் கைட் ரன்னர், ஶ்ரீரங்கத்து தேவதைகள், என் கொல்லைப்புறத்துக் காதலிகள் போன்ற நூல்கள் எல்லாம் அந்த வகையைச் சார்ந்தவையே. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் நிலமொன்றின் கதையை இளம் பிராயத்தின் நினைவுகளினூடாகச் சொல்லுபவை அவை. அவற்றினூடு அவ்வவ் நிலங்களின் பிரச்சனைகளையும் அவை பேச விளைந்தாலும் அவற்றுக்கு என்று ஒரு எல்லை உண்டு. அந்த நிலங்களுக்கேயுரிய நுண்ணிய பன்முகத்தன்மை வாய்ந்த சிக்கல்களை இவ்வகை நூல்கள் முன்னிலைப்படுத்துவதில்லை. அதற்கான நோக்கங்களோடும் அவை எழுதப்படுவதில்லை. அவை கோரி நிற்கும் வாசிப்பும்கூட எளிமையான ஒரு இனிய அனுபவத்தைத் தேடுகின்ற வாசிப்புத்தான்.

இசுருவின் ‘கிராஞ்சி’ சிறுகதை மேற்சொன்ன கூறுகளைக்கொண்ட மடொல் டூவாவை மையமாக வைத்து அதனை மறுவாசிப்புச் செய்ய முனைகிறது. அல்பேர்ட் காம்யூவின் ‘அந்நியன்’ நாவலைப் பிறிதொரு கோணத்தில் மறுவாசிப்புச் செய்து காமெல் தாவுத்தால் எழுதப்பட்ட ‘மெர்சோ மறுவிசாரணை’ நாவலைப்போன்ற ஒரு முயற்சிதான் கிராஞ்சியும். காம்யூவின் நாவலுக்கும் தாவுத்தின் மறுவிசாரணைக்கும் இடையில் இடைவெளி சுமார் எழுபது ஆண்டுகள். அதே இடைவெளிதான் மடொல் டூவாவுக்கும் கிராஞ்சிக்கும்.

மடொல் டூவாவின் மையம் உபாலி என்றால் அதன் விளிம்பு ஜின்னா ஆகிறான். கைட் ரன்னரில் வருகின்ற அமிரும் ஹசனும்போல. ஜின்னா உபாலியோடு கூடவே சேர்ந்து அத்தனை குழப்படியும் செய்வான். உபாலியும் ஜின்னாவும் சிறுவர்கள் என்றாலும் ஜின்னா உபாலியின் பணியாளன்போன்றே செயற்படுவான். அவன் கேட்பதையெல்லாம் இவன் செய்வான். முடிவுகளை உபாலி எடுக்க வேலைகள் அத்தனையையும் செய்வது ஜின்னாவாக இருப்பான். உபாலி உயர்குடி என்றால் ஜின்னா அவர்களிடம் வேலை பார்க்கும் சமூகத்தைச் சேர்ந்தவன். இந்தச் சமூக அமைப்பு அவர்களை அறியாமலேயே சிறுவயது முதலே அவர்களிடமும் தொற்றிவிடுகிறது. வெள்ளையானையில் ஜெயமோகன் குறிப்பிட்டதுபோல கருவிலேயே இந்த ஏற்றத்தாழ்வு இரண்டு தரப்பின் மூளைகளில் ஏறிவிடுகிறது. இது பற்றி அவர்கள் யோசிப்பதேயில்லை. எழுதும் மார்ட்டின் விக்கிரமசிங்கவும் யோசிப்பதில்லை. வாசிக்கும் நாமும் யோசிப்பதில்லை. இசுருவின் கிராஞ்சி அதனைக் கேள்விக்குட்படுத்துகிறது. ‘நான் ஏன் உபாலி ஆகாமல் ஜின்னா ஆனேன்?’ என்று கதை சொல்லியிடம் சமன் குமார கேட்கும் தருணத்தில் அது நிகழ்கிறது. உயர்குடி எப்போதும் தன்னை உபாலியாகவே பாவனை செய்து கொள்கிறது. இதனைப் புரிந்துகொண்டு கதை சொல்லி சமன் குமாரவைக் கட்டியணைக்கப்போகும்போது அவன் தள்ளிவிடுகிறான்.

“நீங்கள் எல்லோருமே ஒண்ணுதான். நீயும் என்னை ஏமாத்துறாய்”

ஈழத்தின் முடிவுறா இனப்போராட்டத்தில் நிகழ்வதும் இதே சங்கதிகள்தான். உபாலிகள் அரசியலைச் செய்ய சமன்குமாரக்கள்தான் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்ச்சூழலிலாவது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் சிங்களச் சமூகத்தில் படையில் இணைந்து போர்முனையில் நின்றவர்கள் எல்லோருமே சமன்குமார போன்றவர்களே. அவர்களுக்கு முயலுக்கும் முள்ளம்பன்றிக்கும் வித்தியாசமும் தெரிவதில்லை. எல்லாமே ஆபத்துகள்தான். எல்லோரும் கொல்லப்படவேண்டியவர்கள்தாம். தூரத்தில் விலங்கைக் கண்டதும் சமன்குமாரகளுக்கு கண்கள் பிரகாசிக்கவும் செய்கிறது.

இசுரு மடொல் டூவாவுக்கு பிறிதொரு பரிமாணத்தையும் கொடுக்கிறார். மடொல் டூவாவை ஈழத்தீவுக்கான ஒரு படிமமாகக் கொண்டால் உபாலி வங்கத்திலிருந்து கப்பலில் வந்த இளவரசன் விஜயன் ஆகிறான். ஜின்னா அவனது நண்பர்குழாமின் பிரதிநிதி. இருவரும் வெறும் சதுப்பாகக் கிடக்கும் தீவைச் செப்பனிட்டு செழிப்பாக்குகிறார்கள். இவர்களோடு பின்னாளில் வந்து சேர்ந்துகொள்ளும் புஞ்சி மாத்தையாதான் ஈழத் தமிழர்கள். அல்லது ஜின்னா வேட்டையாடும் பன்றியைக்கூட ஈழத்தமிழருக்கு ஒப்பிடமுடியும். ஈழத்துக்கு யார் முதலில் வந்து சேர்ந்தார்கள் என்கின்ற வாதப் பிரதிவாதங்களை ஒதுக்கிவைத்து, இசுருவினதும் மார்ட்டின் விக்கிரமசிங்கவினதும் பார்வையில் மடொல் டூவா நாவலை அணுகும்போது முற்றிலும் வேறான ஒரு வாசிப்பனுபவம் நமக்குக் கிடைக்கிறது. தாமே செப்பனிட்டு செழிப்பாக்கிய மடொல் டூவாவில் தொடர்ந்து வசிப்பதற்கு தீவுக்கு, வெளியே சென்று அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதுகூட ஒருவகையான காலனித்துவத்தின் கூறுதான். இசுரு இப்படி ஒரு மறுவாசிப்பை ஒரு சிறுகதையினூடாக சாத்தியமாக்குகிறார்.

000

‘திருமதி பெரேரா’ என்ற இசுருவின் சிறுகதைத் தொகுப்பில் பத்து சிறுகதைகள் இருக்கின்றன. ஆயினும் அதில் போரின் அகோரங்களைப் பேசுவது ‘கிராஞ்சி’ மாத்திரமே. பல சிறுகதைகள் பொதுச் சமூகத்தினால் கவனிக்கப்படாத விளிம்பு மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. சில மனித இயல்புகளைப் பேசுகிறது. சமகாலத்தில் நவீன இலக்கியவாதிகள் எடுத்தாளும் பொதுவான கருப்பொருட்களைப் பல சிறுகதைகள் எடுத்தாளுகின்றன. ஆயினும் இனப்பிரச்சனையும் போரும் பல தசாப்தங்களாக ஊழித் தாண்டவம் ஆடிய, இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிற ஒரு நிலத்தில், ஒரு தரப்பு அந்த அனுபவங்களையே வகைதொகையின்றிக் கொட்டிக் கொட்டி எழுதிக்கொண்டிருக்கும்போது மறுதரப்பில் அது வெறும் பத்தில் ஒரு சிறுகதையாக மாத்திரமே வந்துபோவது பல விசயங்களை உணர்த்துகிறது. பல சிங்கள மக்களுக்குப் போர் என்பது எங்கோ வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்துகொண்டிருந்தது. போரோடு சேர்ந்து இனப்பிரச்சனையும் முடிவுக்கும் வந்துவிட்டது. போரின் பாதிப்பை அவர்களும் அனுபவித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தமிழர்கள் எதிர்கொண்ட துயரத்துக்கு ஈடாகாது என்பதுதான் உண்மை. துயரங்களை ஒப்பிடமுடியுமா? மரணம் என்பது எல்லோருக்கும் பொதுதானே என்றொரு கேள்வி உருவாகிறது. தனிமனிதருக்கு அது பொருந்தும். ஆனால் சமூகத்தின் துயரம் என்பது வேறு. உயிர்களை, உடைமைகளை, தலைமுறைகளை, நிலங்களை இழந்து சிதறிப்போய்க்கிடக்கும் ஒரு சமூகத்தின் துயரோடு ஒப்பிடுகையில் சிங்களத்தரப்பின் துயர் என்பது மாற்றுக் குறைவானதுதான். அதுதான் அவர்களின் இலக்கியங்களிலும் எதிரொலிக்கிறது. நம் கதைகளில் போர் எங்காவது ஒரு மூலையில் வந்துபோனபடியே இருக்கும். குறைந்தது தூரத்தே குண்டுச்சத்தங்களாவது கேட்கும். அதைவிடுத்து வேறொன்றை எழுதுவது நம்மில் பலருக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது.

சிங்கள இலக்கியவாதிகளிலும் மஞ்சுள வெடிவர்த்தனவின் கவிதைகளில் போரும் மக்களின் அவலமும் பேசப்பட்டிருக்கிறது. பாசாங்குகள் இல்லாத இருதரப்புக்கும் குரல் கொடுக்கும் போலி நடுவுநிலைமைகள் இல்லாத எழுது மஞ்சுளவுடையது. அவருடைய “மேரி எனும் மரியா” என்ற சிறுகதைத் தொகுப்பு இருபது ஆண்டுகளாக இலங்கையில் தடைசெய்யப்பட்டு இருப்பதன் காரணமும் அதுவே. ஆனால் இசுருவின் கதைகள் அப்படியல்ல. இவரின் ‘கிராஞ்சி’ சிறுகதைகூட போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதையைப் பேசுவதாகத்தான் முதலில் தோன்றும். ஆனால் அப்போதும் அவர்கள் தனிப்பட்ட முரண்களுக்காக முட்டிக்கொண்டவர்கள் என்றொரு சந்தேகத்தையும் விதைத்தே செல்கிறது. மற்றும்படி பாதிக்கப்பட்டவர்களை பரிதாபத்தோடு பார்த்து அதற்கானக் காரணங்களைத் தேடிக் குற்றவுணர்ச்சியைப் பேசும் கதை ‘கிராஞ்சி’. இசுருவுக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான இலங்கை சாகித்திய அக்கடமி விருதும் கிடைத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. போரை எழுதவேண்டும் என்று கேட்பதும் எதிர்பார்ப்பதும் ஒரு வித வாசக ஆதிக்க மனநிலை என்பதில் மாற்றமில்லை. இசுரு இதனைத்தான் எழுதவேண்டும் என்று எவரும் கோரி நிற்கவில்லை. ஆனால் இசுருவும் சக சிங்கள இலக்கியவாதிகளும் இயல்பாக எழுதுவதை வைத்தே இந்தப் பார்வை. சிங்கள நண்பர்களோடு பேசி உறவாடும்போதும் இதே சிந்தனை எனக்குள் தோன்றியிருக்கிறது. எப்படி இவர்களால் போர் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாழமுடிகிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர்களைப்பொறுத்தவரையில் ஈழத்தின் இனப்பிரச்சனை என்பது அரசியல் யானைகளுக்காக எறும்புகள் மோதிக்கொள்ளும் போர் மட்டுமே. எல்லோரும் அப்படி நினைப்பதல்ல என்றாலும் விதிவிலக்குகளுக்காக பொதுமைப்பாடுகளைப் புறந்தள்ளிவிடமுடியாது (Slothful Induction). ஆனால் தமிழர்கள் தரப்பில் போர் எறும்புகள் யானைகள் என்று யாரையும் வேறுபடுத்தவில்லை. பெருச்சாளிகளை மாத்திரம் அது விட்டுவைத்தது. பெருச்சாளிகள் எந்தப்போரிலும் தப்பிவிடுகின்றன என்பதுதானே வரலாற்று உண்மை. இசுரு முன்னுரையில் கூறும் விடயம் முக்கியமானது. ‘காது கேளாதவர்களாக, ஊமைகளாக அனைத்தையும் தவிர்த்திருக்கிறோம்’ என்கிறார் அவர். எவ்வளவு உண்மை?

மார்ட்டின் விக்கிரமசிங்கவின் மடொல் டூவாவை மறுவாசிப்பு செய்ய முனைந்து இன்னொடு மடொல் டூவாவாகப் போன சிறுகதை கிராஞ்சி.

000

வியூகம் இதழ் 6

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக