Skip to main content

"வெள்ளி" நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன்.

ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை  அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர்.  எனினும்  ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும்,  அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.

தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை இணைய இதழில் கேட்டிருந்தார்.

இங்கு நான் குறிப்பிடும் ஜே.கே. “ படலை “ என்ற வலைத்தளமும் வைத்திருக்கிறார். அதிலும் இவரது ஆக்கங்களை நாம் படிக்கமுடியும்.


“படலை" என்றால் அது என்ன..?  எனக்கேட்கும் வாசகர்களுக்காக நான் ஒரு அகராதிதான் உருவாக்கவேண்டும்.

சரிபோகட்டும், ஜே.கே. ஏற்கனவே  என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை முதலான படைப்புகளை நூலுருவில் தந்திருப்பவர். இவை பற்றியும் ஏற்கனவே எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கின்றேன்.

ஜேகே.யின் இந்த மாயப்புனைவு நாவலைப்பற்றி சொல்வதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் நான்  அவுஸ்திரேலியாவிலும், பிரான்ஸிலும், இங்கிலாந்திலும் சந்தித்த மூன்று அனுபவங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

சம்பவம் -01

கடந்த மே மாதம் சிட்னியில் மறைந்த கவிஞர் அம்பி அவர்கள் இறுதியாக எழுதிய சொல்லாத கதைகள் நூலை முழுமையாக கணினியில் பதிவுசெய்து கொடுத்தபோது, அந்த நூலுக்கான முன்னுரையை ( அம்பி சொல்லச்சொல்ல எழுதியது ) அம்பியின் புதல்வர் திருக்குமாருக்கு அனுப்பியிருந்தேன்.

அவ்வேளையில் அம்பியால்,  பேசமுடியாது போய்விட்டது. ஆனால், அவர் அதனை வாசித்தார்.

சில நிமிடங்களில் அம்பியின் புதல்வர் என்னைத் தொடர்புகொண்டு,  வாட்ஸ் அப்பை பார்க்குமாறு சொன்னார். பார்த்தேன்.

அம்பியின் முன்னுரையை அவரது மருமகள் கூகுளில் பதிவேற்றியிருக்கிறார்.

ஒரு இனிமையான பெண்குரல்  அந்த முன்னுரையை தெளிவாகவும் சிறந்த உச்சரிப்புடனும் வாசித்தது. அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாது!

சம்பவம் – 02


பிரான்ஸில் ஒரு நண்பர் வீட்டுக்கு மதிய விருந்துக்குச்சென்றிருந்தபோது, அவர் தான் நடத்துகின்ற ஒரு இணையத்தளத்திற்கு வாழ்த்துச்செய்தி கேட்டுவிட்டு, அதனை காணொலியில் பதிவுசெய்தார்.  பின்னர் என்னைப்பற்றிய அறிமுகக் குறிப்பு கேட்டார்.

எனது பெயரை  கூகுளில் பதிவேற்றினால், என்னைப்பற்றிய அறிமுகமும் எனது படங்களும் எனது ஆக்கங்களும் வரும் என்றேன்.

உடனே அவர், தனது கைத்தொலைபேசியை தனது வாயருகில் வைத்து,  “ முருகபூபதி  “ என்று உச்சரித்தார்.  உடனே அந்தக் கைத்தொலைபேசித் திரையில் என்னைப்பற்றிய விபரங்கள் வந்தன.

சம்பவம் – 03

இங்கிலாந்தில் எனது பெறாமகன் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.

2019 ஆம் ஆண்டு இரண்டு தரப்பிலும்  பேசி, முன்னின்று நடத்தி வைத்திருந்த ஒரு திருமணத்தையடுத்து  அந்த மணமக்களின் வாழ்வு ஒரு வருடகாலத்தில்  திடீரென குழம்பி,   விவாகரத்துக்குச் சென்றுவிட்டது. அது தொடர்பான ஒரு ஆவணம் எனது வாட்ஸ் அப்பிற்கு சிங்கள மொழியில் வந்திருந்தது.  அதனை வைத்துக்கொண்டு ஆழ்ந்து யோசித்தேன்.

பெறாமகனின் புதல்வி. இங்கிலாந்தில் கண்மருத்துவத் துறையில் படிப்பவர். ஐரோப்பிய நாடொன்றில் பிறந்தவர். தமிழும் நன்கு பேசுவார், எழுதுவார்.

 “ என்ன தாத்தா யோசிக்கிறீங்க… ?   “ எனக்கேட்டார்.

 “ குறிப்பிட்ட ஆவணம் சிங்கள மொழியில் வந்திருக்கிறது. வாசிக்க முடியவில்லை .. “ என்றேன்.

 “ தாத்தா… இதற்கேன் யோசிக்கிறீங்க…. எனது வாட்ஸ் அப்பிற்கு அதனை அனுப்புங்கள். அதனை தமிழில் மொழிபெயர்த்து தருகின்றேன் .  “ என்றார் பேத்தி.

நானும் அனுப்பினேன். சில நிமிடங்களில் அந்த ஆவணம் எனக்கு முழுமையாக சிறந்த மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்தது.

இத்தகைய  பின்னணி அனுபவங்களுடன்தான் ஜே.கே. யின் புதிய படைப்பான வெள்ளி மாயப்புனைவு நாவலுக்குள் பிரவேசித்தேன்.

இதில் இடம்பெற்றுள்ள முழுப்பக்க – அரைப்பக்க – கால் பக்க ஓவியங்களுடன்  உள்ளடக்கம் மொத்தம் 152 பக்கங்கள்தான்.  ஓவியங்களை விடுத்துப் படித்தால் நாம் வாசிக்கும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஓவியங்கள்:  ஜனகன்.  நூலின் வடிவமைப்பு கஜன்.

பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம்,  நவீன தமிழ் இலக்கியம்,  யதார்த்த இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம் என நாம் கடந்து வந்திருக்கின்றோம்.

இதிலும் ஈழத்து இலக்கியமானது  மண்வாசனை,  தேசியம்,  தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், பிரதேச இலக்கியம் முதலானவற்றையும் கடந்து,  புலம்பெயர்ந்தோர் – புகலிட இலக்கியம் என்ற மாற்றங்களை நோக்கி வளர்ந்துவிட்டிருக்கும் காலப்பகுதியில் ஜே. கே. மாயப்புனைவு இலக்கியம் படைத்திருக்கிறார்.

தற்காலத்தில் எமது வாசகர்களுக்கு இந்த மாயப்புனைவு இலக்கியம் குறித்தும் வகுப்பு எடுக்கவேண்டியிருக்கிறது.

இந்தத் துறையில் ஏற்கனவே இலங்கையிலும் தமிழகத்திலும் பலர் எழுதியிருக்கிறார்கள் என்பதைவிட எழுதிப்பார்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்மவர்கள் மட்டுமல்ல,  மேலைத்தேய இலக்கியப்படைப்பாளிகளும் இந்தத் துறையில் எழுதியிருக்கிறார்கள்.

பிரெஞ்சுப்புரட்சியின் குழந்தை என வர்ணிக்கப்படும்  ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி ( 1797 – 1851 ) எழுதிய பிரேத மனிதன் நாவலை புதுமைப்பித்தன் 1943 ஆம் ஆண்டிலேயே தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

பல கதைகளை பின்நவீனத்துவப் பாங்கில் ஏற்கனவே எழுதியிருக்கும் ஜே.கே.,  சாத்தியமற்ற விடயங்களை சாத்தியமாக்க முடியும் என்ற கற்பனையில் எழுதப்பட்ட மாயப்புனைவுகளின் வரிசையில்  எமக்குத்  தமது வெள்ளி நாவலை வரவாக்கியிருக்கிறார்.

எமது பழந்தமிழ் இலக்கியங்களில் -  இராமாயணத்தில் வரும்  சீதை, நளவெண்பாவில் வரும் தமயந்தி,  சகுந்தலை காவியத்தில் வரும் சகுந்தலை,  அரிச்சந்திரன் கதையில் வரும்  சந்திரமதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி… இவர்கள் அனைவருமே  காதல் கணவனை  தற்காலிகமாக இழந்த வர்கள்தான்.  அவர்களின் வரவுக்காக காத்திருந்து  வாடியவர்கள்தான்.  இந்தப்பாத்திரங்களை படைத்தவர்கள் அனைவருமே ஆண்கள்தான்.  இந்த ஆண்மனங்களின் பார்வையில் படைக்கப்பட்ட பாத்திரங்கள் அப்பெண்கள்.

ஆனால், சங்கப்பாடல்களில் வரும் வெள்ளிவீதியார் என்ற பெண் புலவர்  காதலனின்  பிரிவுத்துயரத்தை எழுதியவர்.  சத்தி முத்தப்புலவரின் நாராய் நாராய் பாடலும்  காதலின் பிரிவையே உணர்த்துகிறது.  ஜே.கே தமது புதிய நாவலுக்கு இவர்களையும்  நன்றியோடு உசாத்துணையாக கொண்டிருக்கிறார்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காலாண்டு மின்னிதழ் பூமராங்கில்  ( ஏப்ரில் 2024 ) பெண் உளவியலும் வெள்ளி வீதியார் பாடல்களும் என்ற தலைப்பில் ஜெர்மனியில் வதியும் எழுத்தாளர் கௌசி என்ற சந்திரகௌரி சிவபாலன் சிறப்பானதோர் ஆக்கத்தை எழுதியிருந்தார்.

நாம் ஜேகே என்ற ஆண் எழுத்தாளரின் பார்வையில் வெள்ளிவீதியாரை பார்க்கின்றோம்.

நவீன விஞ்ஞான தொழில்  நுட்பம் தந்திருக்கும் வரப்பிரசாதங்களுடன் பார்க்கின்றோம்.

வெள்ளி தனது காதலன் கோடனைத் தேடுவதிலிருந்து தொடங்குகிறது இந்த மாயப்புனைவு.

நம் தலைவர் நிலத்தைத் தோண்டி அதனுள்ளே புகுந்திருக்கமாட்டார். வானத்தில் ஏறி மேலே சென்றிருக்கமாட்டார்.

நிலத்தின் குறுக்கே உள்ள பெரிய கடலில் காலால் நடந்து சென்றிருக்கமாட்டார்.

அவரை ஒவ்வொரு நாடாக , அதிலுள்ள ஒவ்வொரு ஊராக , ஒவ்வொரு வீடாக முறையாகத் தேடினால் கிடைக்காமல் போய்விடுவாரா..?

என்ற வெள்ளிவீதியாரின் பாடலின் உறைபொருளுடன் நாவல் தொடங்குகிறது.

நாவலின் நாயகன் கோடன்  ஊரிலிருக்கும் தனது தாத்தாவுக்கு ஹோம் மூலம் கடிதம் எழுதுகின்றான்.

நாம்  தற்காலத்தில்  கைத்தொலைபேசி ஊடாக எமது செய்தியை எமது குரலில் அனுப்புகின்றோம்.  இது கடந்த காலங்களில் சாத்தியமாகியிருந்ததா..?  

கோடனின் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள்.  கோடனுக்கு அப்பா மீதுதான் பாசம் அதிகம். அம்மாவின் புதிய துணை பொப்போவிக்கை கோடனுக்கு பிடிக்கவில்லை. அம்மாவை பார்க்கச்சென்றால்,  தனது வருகையை அம்மா ரசிப்பதில்லை என்பதும் கோடனுக்குப்புரிகிறது.

தனது பிறந்தநாளை அம்மா மறந்துவிட்டார் என்ற ஆதங்கமும் கோடனுக்கு.  அப்பா ஒரு இயந்திர சாதனம் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறார். ஒரு வெல்வெட் கேக்கும் வருகிறது.

ஒரு செஸ் ஆட்டத்துடன் கோடனின் காதலும் முடிவுக்கு வந்துவிடுகிறது. இந்தத்தகவலையும் ஐஹோம் மூலம் கோடன் சொல்கிறான்.

அவனது காதலி புளோராவும் அவனைவிட்டுப்பிரிகிறாள்.

இவ்வாறு செல்லும் கதையில்தான் , குறுந்தொகை , நற்றிணை யாவும் வருகின்றன.

இந்த நாவலில்  எடுத்தாளப்பட்ட சங்க இலக்கியப்பாடல்களின் பட்டியலையும் ஜே.கே நூலின் இறுதியில் தருகின்றார்.

கோடன் சங்கநாட்டுக்குள் பிரவேசிக்கின்றான்.  வெள்ளியை சந்திக்கின்றான்.

வெள்ளி என்ற இந்த அழகான பெயரை ஏன் தங்கள் ஊரில் பெண் பிள்ளைகளுக்கு சூட்டுவதில்லை என்ற யோசனையும்                    கோடனுக்கு வருகிறது. தந்தையின் இரும்புப்பட்டறையில் வேலை செய்து அவளது உள்ளங்கைகள்  பழுத்து காய்ந்திருக்கின்றன.

தாயின் புறக்கணிப்பு காதலியின் இழப்பு அனைத்துக்கும் ஈடாக வரும் வெள்ளியின் காதலை கோடன் உள்வாங்கும் மாயப்புனைவு இந்நாவல்.

வெள்ளி வரும் வரையில் கோடன் வானில் தவழும் நிலாவுடன் பேசுகிறான்.

ஜே.கே எழுதுகிறார்:   “ தன்னை விட்டு ஏன் எல்லா முகில்களுமே ஓடுகின்றன. என்று அதற்குக் கவலை.

 “ அவளிடம் சொல்லுங்கள், முகில்கள் எல்லாம் பூமிக்குச்சொந்தமானவை என்று. நெஞ்சிலே ஈரம் இருப்பவர்களிடம்தான் முகில்கள் தங்கும்.  பூமியிடம் இருக்கிறது.  தங்குகின்றன. உந்த நிலவிடம் ஈரம் துளிகூட கிடையாது. அதனால், தப்பி ஓடுகின்றன.

தாயின் நேசத்தை, காதலியின் பரிவை இழந்திருக்கும் கோடனும்  முகிலைப்போன்றவன்தானோ..? 

இவ்வாறு பல இடங்களில் படிம உத்தியுடன் இந்த நாவல் நகர்த்தப்பட்டிருக்கிறது.

சங்க இலக்கியங்களை குறிப்பாக வெள்ளிவீதியாரை படித்த அருட்டுணர்வில் எழுதப்பட்டுள்ள இந்த மாயப்புனைவில் 123 ஆம் பக்கத்தில் ஒரு பந்தியையும் இங்கே தருகின்றேன்:

  அடுத்த வரியை வாசிக்கப்போன ஐஹோம்,  டென்ஷனில் அப்படியே ரிக்கவர் பண்ண முடியாமல் ஹங் ஆகிவிட்டது. இவ்வளவு இமோஷனால் லோடைத் தாங்கும் சி. பி. யு. பவர் அதனிடம் கிடையாது. சிறிது நேரம் காத்திருந்த கோடன் பொறுமையில்லாமல் அதனை ரீபூட் பண்ணினான்.

நவீன தமிழ் புனைவு இலக்கியத்தில் சங்க இலக்கியத்தை தூவினாலும் கூட   ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுத முடியாது எனவும் சொல்லவருகிறது இந்த நாவல்.

இந்த நாவல் ஜேகே யின் பரீட்சார்த்த முயற்சியா ?  எனவும் எண்ணத்  தோன்றுகிறது.

இனிவரும் காலத்தில் எமது தமிழ்ச்சூழலில் இத்தகைய நேர்கோட்டில் அமையாத நாவல்களும் வெளியாகும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றது ஜேகேயின் வெள்ளி.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட