இன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி.
நன்றாக இருட்டிவிட்டது. தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது. எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார். பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க, விர்ர்…ரென்று பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து பார்க்க, அது மைதானத்தைத் தாண்டி, வீதியைத் தாண்டி, மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு.
“பட் பட் பட் ... கொக்கரக் ... கோ”
சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தேன். ச்சிக். வெறுங்கனவு. இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. பிக்மட்ச் தொடங்க இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருக்கின்றன. மீண்டும் படுத்தேன். நித்திரை அதற்குப்பிறகு வரவில்லை.
“கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடிச்சு அஞ்சு விக்கட்டையும் விழுத்தோணும்”
*****
தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு.
அது ஒரு மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா முன்தினம் சுட்டு வைத்திருந்த ஐந்தாறு ரோல்சுகளை வாழை இலைக்குள் வைத்துச்சுற்றி, உதயன் பேப்பரால் கட்டி ஒரு பாக்கினுள் போட்டுத்தரத் தயக்கத்தோடு வாங்கினேன். பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள் என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்குச் செய்த ரோல்ஸ். வெகு அருமையாய்க் கிடைப்பது. பின்னேரம் வீடு திரும்பும்போது ஒன்று கூட மிச்சம் இருக்காது. வெட்கத்தைப் பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒரு ‘பிபி’ பாக்கிற்குள் வைத்துக்கொண்டேன். அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால் எல்லாமே மங்கலாகத் தெரிந்தது. இருக்கட்டும், லஞ்ச் பிரேக்கின்போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் பிபிக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி. சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்தத் தொப்பி. சிவப்பு டீசேர்ட் அணிந்துகொண்டு அம்மாவிடம் திரும்பிவந்தேன்.
“அம்மா … ஒரு இருபது ரூவா தாறீங்களா? கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு”
கேட்டதும் தாமதம். அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.
“அதான் தேசிக்காய்த்தண்ணி, ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ. உண்ட அப்பர் இங்க உழைச்சுத்தானேக் கொட்டிக்கொண்டு இருக்கிறார். ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…”
அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராகப் பணி புரிந்துகொண்டிருந்த காலம். கொஞ்சக் காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கோபம் அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது கோபம் வந்தது.
“என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டால் கோனாவது வாங்கிக் குடிக்கலாம். ஐஸ் சொக் கூட பத்து ரூவா. ப்ளீஸ் ... சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்குக் காசு கொண்டு வருவாங்கள்”
‘சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்கோ” என்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னைப் பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினார். வாங்கிப் பொக்கட்டினுள் போட்டுவிட்டு அக்காவைப்பார்த்து நெக் காட்டினேன். பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; அக்கா எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது
வீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது வாசலில் கீர்த்தி வந்து நின்றான். ஆளையும் தோரணையையும் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா கொடுத்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத் துணியில் தைத்த காற்சட்டை. அது பாட்டுக்கு பாவாடையாட்டம் பொங்கிப்போய்க்கிடந்தது. சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், உடம்பை இறுக்கிப்பிடித்திருந்தது. அவனுடைய மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும். கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்புக் கறுப்புக் கொடி என்று ஆள் ஒரு முடிவோடுதான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா? அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின்னர் நடக்கும் முதல் பிக் மட்ச் அது. ஏதோ இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போன்ற பீஃலிங்கைக் கொடுத்தது. கையில் அன்றைய உதயன் பேப்பரில் வந்திருந்த சிறப்பு பிக்மட்ச் செய்திகளை மனப்பாடம் செய்துகொண்டிருந்தான் அவன். அணிகளின் படங்களும் அதில் இருந்தன.
“மச்சான் ... எங்கட ஆக்கள் ஸ்டைலா கொலரை கோர்ட்டுக்கு வெளிய விட்டிருக்கிறினம் .. சென்றல்காரர் உள்ளுக்கு விட்டிருக்கிறினம்”
“அதுக்கென்ன?”
கீர்த்தி பதில் சொல்லாமல் தொடர்ந்தான்.
“டேய் … நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணைப் பரல் கேனும் தேடோணும் ... இண்டைக்குக் கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது”
கீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாகப் பத்தியடிக்குப் போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை ஊற்றி வைக்கும் தகரக்கேனை எடுத்தேன். அதில் கால்வாசிக்குப் பொரித்த எண்ணை ஊற்றியிருந்தது. அதை இன்னொரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணைக் கேனை கிணற்றடியில் 'உரஞ்சிக்' கழுவினேன்.
“என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்தனி. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற?”
“ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு ... கழுவிக்கொண்டிருக்கிறன்”
சத்தம்போடாமல் குசினி யன்னலுக்குக் கீழாகப் பதுங்கிக் கேற்றடிக்குப் போனேன். கீர்த்தி ஏற்கனவே பழையத் தும்புத்தடியை ரெண்டாக உடைத்து வைத்தபடி தயாராக நின்றான். டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் மிதிக்க அவன் பார்த்தடியில் இருந்தபடி தகர டின்னை வைத்து தாளம் போடத் தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர், சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய் இறுதியில் நல்லூரை எட்டியது. ‘சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும். காண்டீபன் அண்ணே செஞ்சரி போடோணும்’ என்று நல்லூரானுக்குத் தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்குப் போகிறோம். அங்கே பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்புக் கறுப்புக் கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகளப் படுத்தியது.
“கொலிஜ் கொலிஜ் … சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“எங்கட கொலிஜ் ... சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“அப்பேக் கொலிஜ் ... சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“வாட்ஸ் த கலர்? ரெட் அண்ட் ப்ளக்”
“ஹூ இஸ் த கப்டின்?” காண்டீபன்”
“ஹூ இஸ் த கப்டின்?” காண்டீபன்”
“தீபன் தீபன் ... காண்டீபன்”
“எங்கட தீபன் … காண்டீபன்”
“செஞ்சரி தீபன் … காண்டீபன்”
“அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்”
“போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க”
“சென்றலால ஏலாது”
“ஏலுமெண்டா பண்ணிப்பார்”
“ஏலாட்டி விட்டிட்டு போ”
தகரச் சத்தமும் கூச்சலும் சிவப்புக் கறுப்புக் கொடியுமாக போகும் சமயத்தில் தூரத்தில் ‘தமிழீழக் காவல் துறை’ வேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதைக் கண்டவுடன் நாங்கள் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில் பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள் திடீரென்று ஒன்றின் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாகப் போக ஆரம்பித்தோம். வேம்படிச் சந்தியில் ஒரு காவல்துறை அண்ணர் தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்கத் தாளம் மீண்டும் ஆரம்பித்தது.
“எங்கட துறை காவல் துறை”
“மக்களின் துறை காவல் துறை”
காவல் துறைக்குக் ‘காதல் துறை’ என்றும் ஒரு பட்டப்பெயர் இருந்தது. அந்தப்பெயருக்குக் காரணம் அப்போதெல்லாம் காவல்துறை அடிக்கடி காதல் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதுண்டு. ஓடிப்போன காதலர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அது பெரிதாக சமூக வன்முறைகள் இல்லாத காலப்பகுதியாதலால் அவர்களின் தலையாய பணி அதுவாகவே இருந்தது.
கீர்த்தி அடுத்த நூலை எடுத்துவிட்டான்.
“எங்கட துறை காதல் துறை”
“மக்களின் துறை காதல் துறை”
பதிலுக்கு அவர் கோபத்தில் ஏதோ சொல்லி எங்களை நிறுத்துமுன்னரேயே நெக் காட்டிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடித்தோம்.
*****
யாழ்ப்பாணத்துக் கிரிக்கட். எங்களுக்கெல்லாம் நினைத்தவுடனேயே சும்மா ஜிவ்வென்று சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால் அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட்தான். வெறும் ஆறு மணிநேரம் டிவி முன்னால் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்தக் காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயம். ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகிக் கூடவே பொருளாதாரத் தடைகளும் வந்து சேரவே, டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்துவிட்டு, யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்தது.
*****
மைதானத்தை அண்மித்தபோது கூச்சலும் விசில் சத்தமும் வானத்தை எட்டியது.
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு, கறுப்பு, நீலம், பிரவுண் எனக் கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசுகள். அந்த வெயிலிலும் சப்பாத்துப் போட்டு ஸ்டைலாகத் திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்குப் பக்கம் மணிக்கூண்டு கோபுரம். அதில் இயங்காத கடிகாரம். அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால்தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலேயே ஒரு கர்ணபரம்பரைக்கதை பரவ ஆரம்பித்தது. இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்.
கிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தைப் பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள். அங்கேதான் ஆட்டத்தின் சியர்ஸ்கேர்ள்ஸ் நிற்பார்கள். ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு மத்திய கல்லூரி அணிக்குச் சப்போர்ட் பண்ண, மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள் எங்களுக்கு, அதாவது சென்ஜோன்சுக்குச் சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள்.
அதிகமாகக் கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவேதானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் எப்போதும் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் எதிர்ப்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டுப் போகும் பெண்கள் இந்தப் பெண்கள்தாம். அவர்களிடம் அழகும் திமிரும் அதிகம் இருக்கும். எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்த ‘மீ அண்ட் மை டிவி’ யை வைத்துச் சமாளிப்போம்.
ஆனால் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். அவர்கள் வெட்கத்தில் நிறைய நிஜம் இருக்கும். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியைப் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுபவர்கள். சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப், பட்ச்அப், பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள்தான் என்று இந்த இடத்தில் சொல்லிச் சமாளிக்கவேண்டிய தேவையிருக்கிறது.
மீண்டும் மத்திய கல்லூரி மைதானத்துக்கு வருவோம். கிரவுண்டுக்குத் தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி உட்கார்ந்து வசதியாக ஆட்டத்தைப் பார்க்க ரெடியாக இருந்தார்கள். ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல், கச்சான் கடைகளில் கூட்டம் அள்ளியது. மேற்கே யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம் சந்திரிக்கா பின்னாளில் மீண்டும் திருத்தித் தந்தபின் தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டித் தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான். உன்னால் என்ன செய்யமுடியும்? என்று அது என்னைப் பார்த்துப் பல தடவைகள் நக்கலடித்ததுண்டு.
*****
தொண்ணூற்று இரண்டாம் ஆண்டுமுதல் தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு இடம்பெயர்வுவரை யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ஏக காலத்தில் எல்லாப் பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள். முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம். நடக்கும்போது ஒரு பக்கம் சரிந்து நடக்கும் ஸ்டைல் அவருக்கே உரியது. அதைப்பார்த்து எல்லாச் சிறுவர்களும் அப்படியே அந்தக்காலத்தில் சரிந்து நடப்பார்கள். காண்டீபன் அண்ணா ஓபன் பவுலிங் லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்திலிருந்து இரண்டு மீட்டர் பின்னாடி போய்நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாகப் போய் பட்ஸ்மனைச் சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி நடப்பார். அதே காண்டீபன் அண்ணாதான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மனும். சச்சின்போல. ஒரே சீசனில் அவர் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ். அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள் பல.
சென்ஜோன்ஸ் கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், கோழி சுரேஷ், லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலைக் கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம் அது. வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங்போல உதயனிலும் அப்போது ரேட்டிங் ஒன்று போய்க்கொண்டிருந்தது. சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். வென்றால் பரிசு நூறு ரூபாய். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ், நரேஷ் பெயர்கள் பொதுவாக முன்னிலையில் இருக்கும்.
யாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்திய கல்லூரித் திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. ஆர்மி ஷெல் அடிப்பான் என்று அம்மா அங்காலப் பக்கம் போகவிடமாட்டார். அதனால் யாழ் இந்துக்கல்லூரி மைதானம்தான் எங்களின் ரோமானிய கொலோசியம். பயங்கர சின்ன கிரவுண்ட் அப். ஷோயிப் அக்தர் ஒரு பவுன்சர் போட்டாலே பந்து மதிலுக்கு அப்பால் இரண்டு வளவு தாண்டிப்போய் விழுமளவுக்குச் சின்ன கிரவுண்ட்.
மணி ரியூசனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்குப் பீஸ் கட்டுவதே அந்த வகுப்பைக் கட் பண்ணுவதுக்குத்தான். காலையிலேயே உதயனில் ‘இன்றைய ஆட்டங்கள்’ பார்த்துவிடுவேன். வகுப்பைக் கட் பண்ணி யாழ் இந்து மைதானத்துக்குப் போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டோரமாகச் சைக்கிளை மதிலில் சரித்துவிட்டுச் சீட்டில் இருந்தவாறே மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளுக் கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் எச்சில் சுண்ணாம்பு பட்டுக் கை அவியும். வெயில் கொளுத்தும். ஒரு உப்பு மிளகாய்த்தூள் போட்ட மாங்காய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே ஆட்டத்தைப் பார்த்தால் சும்மா ‘கமறும்’.
ஆட்டத்தில் கண் இருக்கும்போது வீதியிலும் ஒரு கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால் ஆட்டத்தை மறந்துவிடுவோம். எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் நாங்கள் கவனிக்கமாட்டோம். பதினாலு வயசு. எங்கட மக்ஸிமம் லொள்ளு இவ்வளவுதான்.
“அக்கோய் ... பின் சில்லுக்குக் காத்து போயிட்டுது”
“மஞ்சள் சட்டை ... உம்மட கொப்பி சைக்கிள் கரியரால விழப்போகுது”
“கண்ணாடி நல்லா இருக்கு? எங்க வாங்கினீங்கள்?”
“டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் ... எண்ட ஆள்டா”
“என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை. சிங்காரக் குடை, சிங்க மார்க் குடை”
“கொண்டையில் தாழம்பூ, கூடையில் வாழைப்பூ, நெஞ்சிலே என்ன பூ?”
அநேகமாகக் கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிர்ஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவுதான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால் வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியனாக, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காததுபோல மட்ச்சைக் கவனமாகப் பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்தப் பாதையால் போனால் வீட்டில்போய் போட்டுக்கொடுத்து விடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாகக் காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.
*****
பாடசாலை கிரிக்கட்டுகள் பொதுவாக வெள்ளி மதியம் ஆரம்பித்துச் சனியும் தொடர்ந்து நடைபெறும். சென்றல்-சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும் போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையிலான பொன் அணிகள் போரும் வெள்ளி, சனி என இரண்டு நாட்களும் திருவிழாவைப்போல நடைபெறும்.
பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்கின்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி சென்றல். அவர்கள் முன்சுற்று ஆட்டங்களில் சொதப்பினாலும் பிக்மட்ச் என்று வந்தாற் பின்னுவார்கள். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் பிக் மட்ச்சில் தடுமாறிவிடும். யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிடவும் ஸ்கந்தா, ஸ்டான்லி, யூனியன், மகாஜனா என்றும் அணிகள் இருந்தன. அவை எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது சென்பற்றிக்ஸ் கல்லூரி. சத்தம்போடாமல் சில நேரங்களில் அவர்கள் பெரும் ஜாம்பவான்களைச் சாத்தி அனுப்புவார்கள். அதில் பல தடவை அடிவாங்கிச் செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணிதான்.
அப்போது பல கிண்ணங்களுக்குப் போட்டி நடக்கும். KCCC கிண்ணம், உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜொலி ஸ்டார்ஸ் கிண்ணம் எனப் பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி எனப் பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூரி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்களும் அணியில் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இரும்பன் ரன் அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால் கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும்.
கொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதைவிட வளவு என்று சொல்லுவதே சாலப்பொருத்தம். அதன் இரண்டு பக்கங்களின் நீளமும் முப்பது மீட்டர்கள்கூட வராது. மதில் சுவர்தான் பவுண்டரி லைன். சுவரில் புல்லாகப் போய்ப் பட்டாலும் பவுண்டரிதான் கொடுப்பார்கள். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒருமுறை யாழ் பல்கலைக்கழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச் நடக்கிறது. ஓபன் பட்டிங் திலக். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில் சுடுமணலில் செருப்பைப் போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் அண்ணா பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டுத் தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சின்ன சைஸ் அந்த மைதானம்.
எங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில் சின்ன வரதன், பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டுப் பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வராக் கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்குக் கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரைச் சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங்கைக் கூடப் ப்ரீ ஷோவாகப் பார்க்கலாம். அந்த ‘என்ன கலர்? என்ன கலர்? என்ன கலர்?’ என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவைச் சீனியர் நாதாறி ஒருத்தன் மிரட்டிக் கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காகப் போய்விடும். வேண்டாம்.
ஒருமுறை ஆறுபேர் கொண்ட அணிகளுக்கான ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. அதிலே யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு அணி பங்குபற்றியது. அது ஒரு கனவு அணி. ட்ரீம் டீம். அந்த அணியில் விளையாடிய ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் தரிப்பிடத்துக்கு மேலாகப் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபன் அண்ணாவும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க,
ஒரு நிறைவேறாத ஆசை.
எமக்கென்று ஒரு அணி. அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலகக் கிண்ணத்தில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என எல்லா நாட்டு அணிகளையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டி இந்தியாவுடன் ஆடுகிறது. அந்தப் பக்கம் சச்சின், காம்பிளி. இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன் அண்ணா.
எப்படி இருந்திருக்கும்?
*****
மீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு ஆட்டம். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முந்நூறுக்கும் மேலே அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் ஐந்து விக்கட்டும் காண்டீபன் நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்துக் கைப்பற்றினார்கள். சென்றல் பக்கம் ஆகாஷ் எழுபது ரன்கள் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்துச் சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பொயிண்ட் என்று எல்லா இடமும் சரமாரியாக அடித்து முப்பத்துச் சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன், இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழந்தார். சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து ஆட்டம் டிரோவில் முடிந்தது.
தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு. மத்திய கல்லூரியில் அண்டர் பிஃப்டீன் ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகும்வழியில் சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று நான், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான குரூப் மத்திய கல்லூரி மைதானப்பக்கம் சைக்கிளை விடுகிறது. சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அரைக்காற்சட்டை போட்டு, தைபாட் கூட வெளியே தெரியத்தக்கதாக அணிந்திருந்த பன்னிரண்டு வயதுத் தவ்வல். அவன் சூரியனைப் பார்த்து வணங்கியவாறே துடுப்பெடுத்தாட மைதானத்துக்குள் நுழைகிறான். நடையில் ஒரு கர்வம். சிங்கம்போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் எண்ணி உறுதிப்படுத்திப் பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படிப் பெரியவங்கள் போடுற பந்தைச் சமாளிக்கப் போகிறான்? என்று எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் த லெந்தில் விழுந்த அந்தப் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்குப் போய் பின்னர் வேகமாக புஃரொண்ட் புட்டுக்குச் சென்று எக்ஸ்ட்ரா கவரில் சடக்கென்று ஒரு டிரைவ்.
தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்குக் கலக்கிய, இன்றைய திகதிக்குத் தமிழர்களில் இருந்து உருவான மிகச்சிறந்த கிரிக்கட் வீரன். எந்த ஒரு சர்வதேச அணியிலும் முதல் ஆளாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கக்கூடியன். சிம்பிளாக அந்த டிரைவை அடித்துத் தன் வரவைச் சத்தம் போடாமல் அறிவித்துவிட்டு அடுத்த பந்துக்குத் தயாராகிறான். அவன் பெயர்.
ஏ.டி.கௌரிபாகன்.
*****
ஒழுங்கைக் கிரிக்கட்.
பன்னிரண்டு அடி அகல, பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் ஒழுங்கை. தார் முழுதும் எடுபட்டு, சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதிற் சுவர்கள். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினாற் சரிந்து விழுந்துவிடும். அதுதான் ஒழுங்கைக் கிரவுண்ட்.
ஒழுங்கைக் கிரவுண்டின் ஒருபக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, ‘றெக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்’ கனவுப் பாட்டில் உங்கள் சைக்கிள் கரியரில் உட்கார்ந்துவரும் குஷ்பூ அக்கா. குஷ்பூ அக்காவை ரூட்டுப் போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார் அந்த ஏரியாவில் சீ-ப்ளேன் ஓட்டுவார்கள். அவளின் வீட்டில் இருப்பவருக்கு டவுட் வராமல் அவளைச் சைட் அடிப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே வழி கிரிக்கட். ஏரியாவில் இருக்கும் சின்ன பெடியளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒழுங்கையிலேயே கிரிக்கட் ஆட்டம் ஆடுவார்கள். அவ்வப்போது சைட். அடிக்கடி அவள் வீட்டுக் கூரைக்கு மேலாகச் சிக்ஸர்கள் பறக்கும். அங்கிள் என்று கூப்பிட்டுக்கொண்டு கேற்றைத்தட்டி, உள்ளே போய்ப் பொறுக்குவார்கள். மூன்றாம் நாள் பந்து போனால் குஷ்புவின் அப்பருக்குச் சந்தேகம் வந்துவிடும். பந்தைத் திருப்பித் தரமாட்டார். திட்டி அனுப்புவார். இப்படித் தொலைந்த பந்துகளின் கணக்கே ஒரு தொகை வரும்.
ஒழுங்கைக் கிரிக்கட்டுக்கு என்று ஒன்றும் பெரிதாகச் செலவழிக்கத் தேவையில்லை. நல்ல காய்ந்த தென்னை மட்டையை அரிந்து ‘பட்’ சரிக்கட்டிக் கொள்ளலாம். டெனிஸ் பந்து என்பதால் பிட்ச்சும் பெரும் சிக்கல் இல்லை. ஆனால் பந்து சல்லிக்கல்லில் பட்டு அங்கேயும் இங்கேயும் எகிறும். அதனால் பந்து வீசுபவன், தான் வசீம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்விங் பண்ணுவதாக நினைத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் நல்ல மொங்கான் எடுத்துப் பட்டிங் கிரீஸைச் சமப்படுத்தவேண்டும்.
விக்கட்டுக்கு ‘பை’ வைத்தாலே போதுமானது. ‘பை’ என்றால் வேறு ஒன்றுமில்லை. இரண்டடி இடைவெளியில் செருப்பையோ அல்லது கல்லையோ வைத்தால் அது ‘பை’. அதற்குள்ளால் பந்து போனால் ஆள் அவுட். அதிகம் உயரமாகப் போனாலோ அல்லது புஃல்லாக விழுந்தாலோ அல்லது காலில் பட்டாலோ அவுட் தரமாட்டார்கள். பட் பண்ணுபவன் அதிக வயதுக்காரன் என்றால் அவனாக விரும்பி அவுட் தந்தாலே ஒழிய வேறு எந்த