Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி

 


னப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் கைகேயிலா? சூர்ப்பனகையிலா? மண்டோதரியிலா?

அப்போது எனக்கு வயது பதினொன்று. தொண்ணூற்றொராம்  ஆண்டு யாழ்ப்பாணக் கம்பன் விழா. நல்லை ஆதீனத்தில், இட நெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று எட்டி எட்டிப் பார்த்தபோது வெறுமனே உயரமான நடுவர் இருக்கையில் இருந்தவர் மாத்திரமே தெரிந்தார். மேடை தெரியவில்லை. அப்பாவை இம்சித்து என்னைத் தோளில் தூக்கி வைத்துக் காட்டச்சொல்லிப் பார்த்த பட்டிமண்டபம் அது. 

இராமன் சீதைக்கு முதலிரவு. 

நெருங்கிவந்து சீதையின் கைமீது இராமனது கைபடர அவள் சடக்கென்று தன் கையை பின்னே இழுக்கிறாள். சந்தேகம். ‘இவனை  நம்பலாமா? இவன் அப்பனுக்கு அறுபதினாயிரத்து மூன்று மனைவியராயிற்றே. இவன் வேறு விஷ்ணுவின் அவதாரமல்லவா? பல பெண்டிரோடு மெனக்கெடுவானே. ஆடின காலும் பாடின வாயும் இப்பிறவியிலும் சும்மா இருக்குமா?’. அவள் மனதில் பல கேள்விகள். பலத்த சந்தேகம். இவனுக்கும் அது புரிகிறது. மெல்லிய சிரிப்போடு சொல்லுகிறான்.

இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும்
தொடேன் 

சொல்லுமபோது ராமன் மீது ஒருவித மதிப்பும் பாசமும் வரும். அதே ராமன் பின்னாலேஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட மாண்டிலைஎன்று சீதைக்குச் சிதை மூட்டச் சொன்னபோதுச்சீ நீயும் ஒரு ஆண்மகனா?என்று ஓங்கி ஒரு அறை விட வேண்டும்போல இருக்கும். பின்னர் அக்கினி இவள் கற்பினால் தீய்ந்து அனல் பொறுக்காமல் இராமனிடம் சீதையைக் கூட்டிச்சென்று உன்னவள் தூயவளே என்று ஒப்படைக்கும்போதுபழியும் இன்று; இனிக் கழிப்பிலள்என்று இராமன் சமாதானம் சொல்வான் ... ம்ஹூம் தப்பாட்டம் வாத்தியாரே.

வாலி வதைப்படலம்.

ஆவியை சனகன் பெற்ற அன்னத்தைஎன்று மிகவேகமாக ஆரம்பித்து, பின்னர்அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்ததாலேஎன்று குரலை கொஞ்சம் தளர்த்தி, முடிக்கையில்திகைத்தனை போலுன் செய்கைஎன்று வாலி கூறியதை, மென்மையான ஏக்கப்பெருமூச்சோடு அவர் சொல்லும்போது சொக்கித்துப்போய்ப் பார்ப்பேன். அவர் அப்படி விவரிக்கையில் ராமனில் கோபம் வரும். பேடிபோல அம்பு எய்தாலும் அது பெண்ணின் மீதான காதலால்தான் என்று சொல்லித் தன்னைக் கொல்ல அம்பு எய்தியவனையே வக்காலத்து வாங்கும் வாலியைப் பார்க்க அவன் மீது மதிப்பும் வரும். அண்ணனைக் கொல்லத் துணிந்த துரோகி சுக்ரீவனைக் கல்லால் அடிக்கத் தோன்றும். தோன்றவைப்பார் அவர். பின்னர் அவரே,

தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும்
இருமையும், தெரிந்து எண்ணலை, எண்ணினால்
அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ 

என்று இராமன் சொல்வதைச்சொல்லி வாலிக்கு இராமனின் முன்னே நின்று போரிடும் தகுதியே கிடையாது என்ற ரீதியில் பதில் சொல்வார். அட அதுவும் சரிதானே என்று நம்ப வைப்பார். நாமும் நம்பினோம். 

சண்டாளி சூர்ப்பனகை தாடகைபோல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர் 

என்று கம்பராமாயண தொடர் விரிவுரையில் ஔவையாரையும் அறிமுகப்படுத்துவார். திருவள்ளுவரும் வருவார். கோத்தும்பியும் வரும். செம்புலப்பெயல் நீரும் பாயும். கம்பராமாயணம் ஒரு ஊற்றுத்தான். அதில் இருந்து தமிழ் பெருகிப் பிரவாகித்து கடலைச் சேரும்போது தமிழிலக்கியத்துக்கு என்று தனி அறிமுகமே நிகழ்ந்திருக்கும்.  

கம்பவாரிதி .ஜெயராஜ். 

யார் இவர்? ஈழத்தில் தொண்ணூறுகளிலே தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய பெருந்தகை. ஜெயராஜ் என்றால் யார்? என்பதைத் தொண்ணூறுகளின் ஆரம்பக் காலத்தில் சிறுவர்களாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருந்தவர்களைக் கேளுங்கள். கதை கதையாய்ச் சொல்வார்கள். அவர் சொன்னக் கதைகளைத் தத்தம் குழந்தைகளுக்கும் சொல்வார்கள். அவர் அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு வித இலக்கிய எழுச்சியை உருவாக்கிக்கொண்டு இருந்தவர். போர் முரசும் மாவீரர் தினங்களும் சோக கீதங்களும் வெற்றி முழக்கங்களும் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் சோழ நாட்டில் வீரத்தோடு இலக்கியமும் இணைக்கு இணையாய்த் தழைத்தது என்று நாங்கள் மார் தட்ட கம்பவாரிதி ஜெயராஜ்தான் முழுமுதற் காரணம் என்றால் அது மிகையே இல்லை. 

சித்திரை மாசம் என்றால் கம்பன் விழாத் தொடங்கிவிடும். பள்ளிக்கூடம் முடிய, அப்படியே நல்லூர் வடக்கு வீதிக்குப்போய் ஆவென்று அவ்வளவு நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு, வீடு போய்க் கைகால் முகம் கழுவிச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் பின்பத்திக்குப் போவேன். அங்கே நித்திரை கொள்ளும் எங்கள் வீட்டு நாய் ஹீரோவை இழுத்துக்கொண்டு, தாயோடு நிற்கும் ஆட்டுக்குட்டி குட்டியனையும் கூட்டிக்கொண்டு முற்றத்துக்குப் போவேன். பக்கத்துக்கு மூன்றாய் கதிரைகளை அடுக்கிவைத்து அண்ணர்மார் இரண்டுபேரையும் முன்னாலே இருங்கடா என்பேன். 

கம்பன் விழா தொடங்குகிறது. 

எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடிகளை என் சிரமேற்
பணிந்து வணங்கி…” 

ஹீரோ தூங்கி வழியும்.

அவையில் உள்ள பெரியோர்களே. தாய் மார்களே. குழந்தைகளே. ஹீரோவே…” 

ஹீரோ கணக்கே எடுக்காது. கண் மூடியவாறே வாலினைக் கடமைக்கு ஆட்டிவிட்டுத் தொடர்ந்து தூங்கும்.. 

என் இனிய குட்டியனே…” 

தன் பெயரைக் கேட்டவுடன் குட்டியன் சடக்கென்று ஓடிவந்து என் நெஞ்சில் இரண்டு கால்களையும் வைத்து மூஞ்சியை நீட்டுவான். அவனை ஒரு கொஞ்சு கொஞ்சிவிட்டு மீண்டும் கொண்டுபோய் இருத்துவேன். 

கம்பவாரிதி பேச்சைத் தொடருவார். 

மன்னவன் பணி அன்றாகின்நும் பணி மறுப்பெனோ. கம்பன் என்ன சொல்லுகிறான்?தாயே கைகேயி. என் தந்தை சொன்னால்தான் நான் ஏற்பேன் என்று நினைத்தாயோ? நீ சொல்லியிருந்தாலும் நான் தட்டமாட்டேனே என்கிறான் இராமன். அதை மட்டும் சொல்லிவிட்டு போயிருந்தால் அவன் இராமன் கிடையாது. கம்பன் கவிச் சக்கரவர்த்தியும் கிடையாது . மன்னவன் பணி அன்றாகின்நும் பணி மறுப்பெனோ …. மன்னவன் தசரதன் எனை காடேகச் சொல்லவில்லை. கைகேயி நீதான் சொல்ல வைத்தாய். ஆனாலும் உன் ஆணையை நான் மறுக்கமாட்டேன். என் பின்னவன் பரதன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ... ” 

பெற்றதன்றோஎன்ற இடத்திலே குரலைத் தழைய விடும்போது ஹீரோ வாலை சடக்கென்று இலையான் துரத்தவென அடித்துவிட்டுத் தொடர்ந்து நித்திரை கொள்ளும். குட்டியன் மட்டும்ங்கேஎன்று முழித்திருப்பான். பட்டிமன்றம் முடிந்தபின் நானே கரகோசம் செய்ய, தன்னைத்தான் கூப்பிடுகிறேன் என்று மீண்டும் மடியில் வந்து கிடப்பான். இப்படி எனக்கு நானே என் செல்லப்பிராணிகளோடு கம்பன் விழா நடத்திய காலம் ஒன்று உண்டு. 

ஆச்சரியமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சிறுவர்களும் இதைச் செய்தார்கள். தங்களை ஒரு குட்டி கம்பவாரிதி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்கள். அப்படி ஒரு ஹீரோ அவர். அப்பப்பா தமிழை காதலிக்க வைத்தவர். அவர் கம்பனை காதலிக்க, நாங்கள் அவரைக் காதலிக்க, எம்மைப் பலர் காதலித்தார்கள் என்றால் கதை வேறு எங்கோ போய்விடும். வேண்டாம்.

ஜெயராஜ் எப்படி இந்த எழுச்சியை ஒரு முக்கிய போராட்ட காலத்தில் நிகழ்த்தினார் என்பதை இப்போது யோசிக்கையில் ஆச்சரியம் விளைகிறது. புலிகளின் ஆட்சியில் சுற்றிவர இராணுவ முகாம்களை எல்லைகளாகக் கொண்ட அன்றைய யாழ்ப்பாணம். அப்போது மின்சாரம் இல்லை. டிவி இல்லை. நிம்மதி இல்லை என்று எங்களுக்குப் பல இல்லைகள். இல்லல்கள். ஒருமுறை ஜெயராஜ் பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில் குண்டு விமானங்கள் வந்துவிட்டன. மக்கள் கூட்டமோ அலை மோதுகிறது. விளக்குகளை அணைத்துவிட்டார்கள். எல்லோரும் அமைதியாக இருந்தனர். விமானங்கள் சென்றபின்னர் மீண்டும் பிரசங்கம் தொடங்கியது. மக்கள் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்து முடியும்வரை பிரசங்கத்தைக் கேட்டனர். அதுதான் ஜெயராஜ்.

 அதுதான் எம் மக்களும் கூட.

பாடசாலை, வீடு, தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வப்போது கிரிக்கெட் இதுதான் எமது வாழ்க்கை. யாழ்ப்பாணம் ஒரு வித மழைநீர்த் தேக்கம்போல இருந்த காலம். வேறு நதிகள் வந்திணையாத நேரம். அங்கே பரிசுத்தமான மழை நீர் மட்டுமே தேங்கி இருந்தது. அதனால் எந்த நீர் எந்த நதியிலிருந்து வருகிறது என்று வடிகட்டவேண்டிய தேவை புலிகளுக்கும் இருக்கவில்லை. மக்களுக்கும் இருக்கவில்லை. மக்கள் ஒன்று சேர்வது இரண்டு காரியங்களில்; ஒன்று போராட்ட நிகழ்வுகள் மற்றயது வழிபாட்டு நிகழ்வுகள். ஆரம்பத்தில் கம்யூனிசம் பேசிய புலிகள் பின்னர் அதில் பாராமுகம் காட்டியது ஒரு நல்ல இலக்கியச் சமயச் சூழலுக்கு வழிவிட்டது எனலாம். கம்பனும் ஜெயராஜும் சாதி சமயம் தாண்டி இலக்கியத்தின் மூலம் மக்களைச் சென்றடைந்துகொண்டு இருந்தனர். 

ஜெயராஜ் இந்தக் களத்தை நன்றாகவே கையாண்டார். கம்பன் கழகம் என்ற அமைப்புத்தவிர அவரின் தனிப் பிரசங்கங்கள் பலவும்   கோவில் திருவிழாக்களின் மூல நிகழ்வுள் ஆயின. யாழ்ப்பாணத்தில் பெயர் தெரியாத கோயில்கள் எல்லாம் பிரபலமாகின. கலட்டி எச்சாட்டி மகாமாரியம்மன் கோயில் அத்தகையது. அங்கே ஜெயராஜ் செய்த கம்பராமாயணப் பிரசங்கத்துக்கு வெகுதூரத்திலிருந்தெல்லாம் மக்கள் வந்தார்கள். கோயிலைத் தரிசிக்கவல்ல. ஜெயராஜுக்காகாவே அந்த நெடிய பயணம்.

அதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெயராஜின் நிறுவனப்படுத்தப்பட்ட இலக்கிய சேவை. ஜெயராஜ் ஒரு பிரசங்கம் என்றால் அந்த காலத்திலேயே ஐயாயிரம் ரூபாய் வாங்குவாராம். அது ஏன் என்று இப்போது புரிகிறது. தமிழும் தமிழ் சார்ந்த இலக்கிய சேவையும் இலாபநோக்கமின்றி செய்யப்படவேண்டும் எனக் கருதும் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். அது ஒரு வெட்டிப்பேச்சு. தமிழ் ஒன்றும் எவருடைய இலவச சேவையையும் எதிர்பார்த்து நின்றதில்லை. நிற்கப்போவதும் இல்லை. பணம் கொடுக்கும்போதுதான் அதை ஒழுங்குசெய்பவர்களும் அந்த நிகழ்வு வெற்றிபெற உழைக்கவேண்டியவராகின்றனர். பணம் கொடுத்து வாங்கும் பொருளுக்கு இருக்கும் மதிப்பை நாம் இலவசத்துக்குக் கொடுப்பதில்லை. தமிழ் இலக்கியத்தை நிறுவனப்படுத்துவதன் மூலம் இந்த நிகழ்ச்சி பலரை சென்றடைகிறது. பல இளைஞர்கள் தமிழறியச் செய்கிறது. கிழக்கு இந்தியக் கம்பனி இதை அந்தக் காலத்திலேயே ஆங்கிலத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் செய்தது. ஜெயராஜ் இன்று செய்கிறார். அவ்வளவே. 

அந்தக் காலத்தில் ஜெயராஜை அதிகம் விமர்சித்த பலர், குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் சமூகத்தினர், தாங்கள் எதைச் சமூகத்துக்குச் செய்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தார்களில்லை. நம் துறையில் நம்மை விட ஒருவன் பிரகாசிக்கும்போது கசக்கும்தான். அதுவும் நம்மைப்போலப் பட்டம் எதுவும் பெறாதவன் செய்கையில் கடுப்பு இன்னமும் அதிகமாகும். சோகம் என்னவென்றால் புதுவையும் கூட கம்பவாரிதிக்கு எதிராக ஒருகாலத்தில் நின்றமைதான். 

ஈழநாதம் பத்திரிகையில் புதுவை வெளியிட்ட கவிதை இது.

கொத்திவயல் அம்மன்கொடியேறி
இன்று பத்தாம் திருவிழா.
பகலிரவு இரு பொழுதும்
வெட்டிரும்புச் சுப்பர்விழா உபயம்.
இரவுக்கு
பட்டிமன்றம் என்று பத்திரிகை விளம்பரம்.
நரை விழுந்தால் இருவரில் யாரழகு?
திரைகடலை தாண்டிய சீதையா?
அல்லது
கரையாத கற்புடையாள் கண்ணகியா?
இது தலைப்பு

என்று நீண்டு செல்லும் கவிதையில்,

பகிடியெல்லாம்
விடுவார் நடுவர்.
விடியும்வரை கேட்டாலும்
அலுக்காது.
அப்படியொரு அறிவுக்கடல் அமிர்தம்.

என்று தொடரும் நக்கல் கவிதை இறுதியில் காட்டமாக முடியும்.

போர் நடந்தாலென்ன? புலி இறந்தாலென்ன?
வேரறுந்தாலென்ன? வீடிழந்து மக்களெல்லாம்
ஆவிகலங்கி அலைந்தாலும் நமக்கென்ன?
காவியமே பெரிது.
கண்ணகியே கற்பரசி.
சீதையவள்தானே திருச்செல்வி.
மேடையிலே
வாதிடலே எமக்குரிய வரலாற்றுக் கடமை.
ஆதலினால்
கட்டாயம் பட்டிமன்றம் காணல் புண்ணியமாம்.

கவிதை முடியும் தறுவாயில் முத்தாய்ப்பாய் ஜெயராஜை ஒரு தாக்கு தாக்கும்.

எட்டு மணிக்கே எழுந்தருள்வீர் ஜெகத்தீரே!”

இப்போது யோசிக்கையில் சுவாரசியமாக இந்த ஊடலை ரசிக்கமுடிகிறது. இது புலவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியே அன்றி வேறொன்றுமில்லை. புதுவையும் கம்பவாரிதியும் ஆரம்பக்காலங்களில் ஒன்றாகத் தமிழ் வளர்த்தவர்களே. தடங்கள் வேறு என்றாலும் அவர்கள் பின்னாளில் வளர்த்த தமிழ் என்னவோ ஒன்றுதான். ஈழத்து இலக்கியம் பொதுவாக விமர்சன ஆராய்ச்சி சார்ந்த தமிழிலக்கிய கர்த்தாக்களையே அதிகம் கொண்டாடி வந்திருக்கிறது. சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் அதற்குச் சிறந்த உதாரணங்கள். எனக்கென்னவோ அந்த வரிசை போன்றே செங்கை ஆழியானும் மஹாகவியும் ஜெயராஜும் புதுவையும் ஈழத்துக்குச் செய்த சேவையும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. இவர்கள் எல்லோருமே எங்கள் அடையாளங்கள். 

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு யாழ்ப்பாணப் பெரும்  இடப்பெயர்வோடு கம்பன் கழகம் கொழும்புக்குச் சென்றுவிட்டது. கொழும்பு என்பதால் மழைநீர்த் தேக்கத்தில் பல நதிகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் இப்போது சேரத்தொடங்கியிருந்தன. வடிகட்டிகள் அங்கே இல்லாததால் சிறந்த குடிநீர்த் தேக்கம் என்ற அருகதையை அந்தக் குளமும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத்தொடங்கி இருந்தது. இவ்வேளையில் ஜெயராஜ் பற்றிய விமர்சனம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. முக்கியமாக அவர் தெரிவித்ததாக சொல்லப்படும் சில அரசியல் கருத்துகள். 

நம்மவருக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. எந்தத் துறையினரும் அரசியலில் நாம் விரும்பும் கருத்தையே எடுத்து ஆதரிக்கவேண்டும் என்பது. இலக்கியவாதிக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? அவர் ஏன் அரசியலில் கருத்துச் சொல்லவேண்டும்? என்றெல்லாம் யோசிப்பதில்லை. அசின் இலங்கைக்குப் போனதால் அவரைத் தடை செய்யவேண்டும் என்று ஒரு நண்பன் சொல்லியிருந்தான். அவன் இருப்பது கொழும்பில். வேலை செய்வது சிங்களவர் கம்பனியில். இதுதான் நாம். ஆர் ரகுமான் ஒஸ்கார் வாங்கும்போது ஈழத்தமிழருக்குக் குரல் கொடுக்கவில்லை என்று புலம்பவில்லையா? பஸ்ஸிலே பார்வையற்ற ஒருவர் இருக்கை கிடைக்காமல்  நின்றுகொண்டிருக்கும்போது நான் எழுந்து இடங்கொடுக்காமல், என் பக்கத்திலிருப்பவர் எழுந்து இடம் கொடுக்கிறார் இல்லையே என்கின்ற அங்கலாய்ப்பு. இதை நாங்கள் சௌகரியமாகச் செய்வோம்.  நாம் முரண்நகைகளின் கூடாரம்.

நாம் தமிழர்.

இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஜெயராஜ் நிகழ்த்திய பேச்சு ஒன்றைத் தருவது அவசியமாகிறது. 

நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா? ஒருவன், மற்றொருவரைச் சுதந்திரமாக நடமாடவிடுவது, சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்தச் சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும் என் எல்லையை உணர்ந்து உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன். 

ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால் சொர்க்கத்துக்குப் போனவர்கள் யார் யார் என்று யாருக்குத் தெரியும்?... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" 

எனக்கென்னவோ ஜெயராஜின் அந்த நெருப்பு அப்படியேதான் இருக்கிறது. இந்தியாவில் அவரைக் கொண்டாடுகிறார்கள். ஈழத்தமிழருக்குத் தன்னளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறார். ஆனால் புதிதாக ஒரு தலைமுறை ஆரியக்கூப்பாடு போட்டுக் கம்பனையும் ஜெயராஜையும் நிராகரிக்கிறது. கம்பனைச் சரியாக அறியாமல் ஜெயராஜை சரியாக புரிந்துகொள்ளாமல் முன்வைக்கப்படும் அவசரக் கூற்றுகள் அவை. சாதாரண இராமன் கதையைச் செவ்வியல் இலக்கியமாக்கியவன் கம்பன். கடவுள் வாழ்த்து என்று சொல்லும் ஒற்றைப்பாடலே கம்பன் எந்த அளவுக்கு ஒரு வற்றாத தேடல் நதி என்பதைக் கட்டியம் கூறும்.

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்.
பல என்று உரைக்கில் பலவே ஆம்.
அன்றே என்னில் அன்றே ஆம்.
ஆமே என்னில் ஆமே ஆம்.
இன்றே என்னில் இன்றே ஆம்.
உளது என்று உரைக்கின் உளதே ஆம்.
நன்றே நம்பி குடி வாழ்க்கை.
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா.

அதே சமயம் நாங்களும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். பதின்மூன்று வயதில் எனக்குக் கம்பவாரிதியை மட்டுமே தெரியும். இப்போது ஓஷோ, லாஹிரி முதல் டெர்ரி பிரச்செட்வரை; ஜெயமோகன் சொல்வதுபோல பாலகுமாரனை வாசித்துப் பின் அதைத் தாண்டி வா. தாண்டிவிட்டோமா என்று தெரியவில்லை. எனினும் மேலும் மேலும் தேட முயல்கிறோம். ஆனாலும் ஜெயராஜின் ஒரு பேச்சைக் கேட்க ஆரம்பித்தால் சர்வ நாடியும் ஒடுங்கி அவரை மெய்மறந்து ரசிக்க ஆரம்பிக்கிறோம். பதினொரு வயது பாடசாலை செல்லும் சிறுவனுக்கு ஜெயராஜின்  தேவை இன்னமும் அதிகமாகத் தேவையாகிறது. 

இப்போதெல்லாம் யோசித்தால் ஜெயராஜின் கருத்துகளில் பல இடங்களில் மாறுபடுகிறேன். வாலி பிறன்மனை நோக்கினான். இந்த ராமன் தன் மனைவியைச் சந்தேகித்தான். முன்னையதை விடப் பின்னையது இன்னமும் அசிங்கம். மற்றவன் புறம் சொல்லுவான் என்று நீ அப்படிச் செய்தால் புறம் சொல்பவனைக் கணக்கில் எடு என்று ஆகிறதே. இருக்கட்டும். அது கம்பன்தானே. எல்லாமே சரியாகச் சொல்ல அவன் என்ன கடவுளா? அட கடவுளாய் இருந்தால் மட்டும் சரியாக சொல்லிவிடுவானா என்ன?

 *****

ஜெயராஜை சிறுவயது முதலே தூரத்தில் பார்த்து வளர்ந்த சிறுவன் நான். அவர் இலக்கியத்துக்குப் பக்தன். அவர் பேச்சு யாழ்ப்பாணத்தின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் அது கம்பராமாயணம், மகாபாரதம் என்று எந்த வகைப் பேச்சாக இருந்தாலும் வலித்து வலித்துச் சைக்கிள் மிதித்து அந்த கோயிலுக்குச் சென்று சைக்கிளை ஒரு கரண்டு போஸ்ட் பக்கத்தில் சாய்த்து வைத்துக்கொண்டு, அங்கிருந்தே அவரை, அவர் பேச்சைப் பார்த்து ரசித்த சிறுவன் நான். கம்பவாரிதி என்ற துரோணாச்சாரியாரிடம் முறையாக வித்தைப் பயிலாத ஏகலைவன். அவரைப் பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் எப்போதுமே இருந்தது. ஆனால் நெருங்கிப்போய் அறிமுகப்படுத்தக் கூச்சம். 

கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணல் நான் இல்லை ஆனாலும் அன்று தொட்டு நோக்குகிறேன்.
அவள் நீ ஜெயராஜ் எப்போது எனை நோக்குவாயோ?

என்றெல்லாம் கம்பரை உல்டா பண்ணிக் கவிதை எழுதத்தெரிந்த அளவுக்கு அவரிடம் போய்ப் பேசுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. 

இருபது வருடங்கள் கழிந்து அந்த நாளும் கனிந்தது. அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவுக்கு ஜெயராஜ் வருகிறார். நான் மேடையில் பேசவேண்டும். ஐயா அவர்கள் அதே காவி உடை, பணிவான உடல், நெளிந்த நிலை என்று அவையில் இருந்து கைகூப்ப, மேடையில் இருந்த எனக்கு வேட்டி நழுவியது. பேச வந்த விடயம் மக்கர் பண்ணியது. ஆனால் மைக் பிடித்துஎழுத்துக்கு வேந்தர் சுஜாதா, எங்கள் கம்பவாரிதி இருவருக்கும் என் வணக்கம்என்று வழமைபோலச் சொல்லிப்  பேச்சை ஆரம்பிக்க என் துரோணரே நாக்கில் வந்து உட்கார்ந்தமாதிரி ஒரு மனநிலை. என்னை அறியாமலேயே விறு விறுவென்று பேசிவிட்டுக் கீழிறங்க ஐயா வந்து கைகளைப் பிடித்துமுருகா முருகா முருகாஎன்று புலம்பிக்கொண்டிருந்தார். தான் பொரித்த கோழிக்குஞ்சு தன்னை அறியாமலேயே வளர்ந்து வந்துநின்று கூவும்போது தாய்க்கோழிக்கு இருக்குமே ஒரு மிதப்பு அது என்றார். சில்லிட்டது. ஊர் திரும்பிய பின்னர் ஒரு நீண்ட மடல் அவரிடமிருந்து வருகிறது. 

ஆற்றல்மிகுந்த உங்களைப்போன்ற இளைஞர்கள்,

விருட்சமாய் விரிந்து நின்று வித்தாய் எமை இனங்காட்ட,

உளம் விதிர்விதிர்க்கின்றது.

இதுநாள்வரையிலான வாழ்வின் பயன் கண்டு மகிழ்கிறேன்.

புத்தியுள்ள பிள்ளையொன்றுஇது இவன் தந்ததுஎன்று உரைக்கும்போது,

கற்றார் நெஞ்சு களிக்காமல் விடுமா?

நான் துரோணரா? தெரியவில்லை. நீங்கள் ஏகலைவன் என்பதில் ஐயமில்லை.

எனது முயற்சி, தொண்டு, ஆற்றல் அனைத்தும்,

எம் மண்ணில் விழலுக்கிறைத்த நீராயிற்றோ? என ஏங்கி நின்றேன்.

எங்கோ இருந்து இல்லையென்கிறீர்கள்.

மனம் நிம்மதியுறுகிறது.
நீள நினைந்திருப்பேன்.

வேறென்ன வேணும் பராபரமே? 

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட