அன்றைக்கு ‘ஸ்ரீ லங்கா பிரஸ்’ முதலாளியின் வீட்டுவாசலில் நானும் நான்கு நண்பர்களும் நின்றது இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. கதவை அரைவாசி திறந்துவைத்தபடி ‘என்ன தம்பி, டிக்கட் விக்க வந்திருக்கிறீங்களா?’ என்று கேட்ட முதலாளியிடம் தயக்கமாகச் சொல்கிறோம்.
“ஒரு புத்தகம் அடிக்கோணும் அங்கிள்”
அப்போது பன்னிரண்டு வயசு. அம்மா காற்றடிக்கவும் அவ்வப்போது கிழங்கு ரொட்டி வாங்குவதற்கும் தந்த பணத்தை மிச்சம் பிடித்து ஒரு நூறு ரூபா சேர்த்து வைத்திருந்தேன். பிரேம்நாத், கொஞ்சம் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவன், ஐந்நூறு ரூபாய் சுளையாக வீட்டிலிருந்து கொண்டுவந்தான். ரங்கன் அவன் பங்குக்கு ஒரு நூறோ, இருநூறோ. வாயைக்கட்டி வயித்தத்கட்டி கையில் எண்ணூறு ரூபாய்களும் கொஞ்ச சில்லறைகளும் சேர்த்துவிட்டோம். புத்தகம் பதிப்பிட.
மயில்வாகனம் சேர் பதிப்பித்த ‘பொது அறிவுப் பூங்கா’ மற்றும் ‘அறிவுக்களஞ்சியம்’ சஞ்சிகைகள் மீது சின்ன வயதில் அப்படி ஒரு மோகம். அறிவுக்களஞ்சியம் ஒற்றை ரூல் பேப்பரில் பதிப்பாகும் புத்தகம். ரூல் கோடுகள் சஞ்சிகையின் எழுத்துகளை மறைத்து நிற்கும். ஆனாலும் அதில் வரும் கட்டுரைகளும் தகவல்களும் சொக்கத்தங்கம். வெளியாகும் முதல்நாளே பூபாலசிங்கம் கடை வாசலில் நின்று மணக்க மணக்க வாங்கிவந்து வாசிப்போம். அப்படி ஒரு பைத்தியம். கோகுலம், கதைமலர், பூந்தளிர், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் என்று அந்த வரிசை நீண்டுகொண்டே போகும். அந்தப் பைத்தியத்தின் உச்சந்தான் நாமே புத்தகம் வெளியிடவேண்டும் என்கின்ற பேராசை. பதின்மூன்று வயதில்.
நாலு கட்டு கொப்பிவாங்கி, வெள்ளை உறை போட்டு ‘அறிவுப் பூங்காவனம்’ என்று தலைப்பு எழுதி, பொலித்தீன் கவர் போட்டு, கையெழுத்துப் பிரதி எழுதி முடித்தாயிற்று. விடயம் மிகவும் சின்னது. நூலகத்தில், சுஜாதாவில், கல்கண்டுவில், சிந்தாமணியில் என்று ஆங்காங்கே படித்த விடயங்களை கொஞ்சம் ஊர்ப்பாணியில் எழுதி, ஆங்காங்கே படங்கள் போட்டு, இடையிடையே விஞ்ஞான விளக்கங்களைப் பள்ளிக்கூடத்துப் பகிடிகளுடன் சேர்த்து எழுதித் தொகுக்கப்பட்ட ஒரு பொது அறிவுப் புத்தகம். அவ்வளவுதான். நினைக்கையில் சிரிப்பு வருகிறது. அப்போது அது எங்களுக்கு இலக்கியம். ரங்கன், பிரேம்நாத் என்று எல்லோருமே எழுதுவதிலிருந்து, பிழை திருத்தி, காசு சேர்த்து என்று என்னோடு கூட அலைந்தார்கள். பள்ளிக்கூடத் தமிழாசிரியர் காசிநாதன் சேர் தான் நூலின் ‘போதகராக’ இருப்பதாக உறுதி அளித்தார்.
எங்களுக்கு வாசிப்பும் கொஞ்சம் எழுத்தும் தெரியுமே ஒழிய, புத்தகம் பதிப்பிடுவது, வெளியிடுவது, அதன் பின்னாலே இருக்கும் வலிகள் என்று எதுவுமே தெரியாது. எழுதிவிட்டால் அடுத்தநாளே பதிப்பித்துத் தருவார்கள் என்று முட்டாள்தனமாக நினைத்தோம். வீட்டில்கூட நாங்கள் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதே தெரியாது. தெரிந்தால் படிக்கிற நேரத்தில எதுக்கு வேண்டாத வேலை என்று கிழித்துப் போட்டுவிடுவார்கள். போட்டிருக்கிறார்கள்.
யார், எவர் என்று தெரியாமல் ஸ்ரீலங்கா பிரஸ் முதலாளி வீட்டு வாசலில் போய் நின்ற முட்டாள்தனம் பிரஸ் அங்கிள் பேச ஆரம்பித்தபோதுதான் விளங்கியது. முதல் கேள்வியே புத்தகத்தைப் பற்றியதல்ல. காசைப்பற்றியதே.
“தம்பியவை எவ்வளவு காசு வச்சிருக்கிறீங்கள்?”
பிரேம்நாத் ஒரு பிரவுன் என்வலப்பை வெளியே எடுத்தான். சில்லறைகள் கீழே தவறுதலாகச் சிதறின.
“எண்ணூற்றிச் சொச்சம் சேர்”
முதலாளி சிரித்தார். புத்தகம் வெளியிட ஐயாயிரம் ரூபாய்கள் வேண்டுமென்றார். ‘தம்பிமார் போய்ப் படியுங்கோ’ என்று திருப்பி அனுப்பிவைத்தார். அம்மாவிடம் போய்க்கேட்டால் நெருப்பு எடுப்பார் என்று தெரியும். என்ன செய்வது? எழுத்தாளர் ஆகும் ஆசையைக் கொஞ்சக்காலம் ஒத்திவைத்துவிட்டு எக்ஸாமுக்குப் படிக்க ஆரம்பித்தோம். அடுத்த சிலநாட்களில் மண்டைதீவு அடிபாடு ஆரம்பமானது. தொடர்ச்சியாகச் சண்டைகள். அம்மா ஒருநாள் உடுப்பு அடுக்கும்போது அந்த என்வலப்பைக் கண்டுவிட்டார். அவ்வளவுதான். திட்டுவிழுந்தது. ‘காசை வாங்கியமாதிரி கொண்டுபோய்த் திருப்பிக்கொடு’ என்று பிரம்பு முறிந்தது.
என் முதல் புத்தகம் கர்ப்பத்திலேயே கலைந்தது.
*******
‘ஈழத்து இலக்கியம்’ என்ற அடையாளம் கடந்த முப்பது வருடங்களில் போர், இடம்பெயர்வு, ஏ. கே 47, சக்கை, இயக்கம், மரணங்கள், அழிவுகள், துரோகம், எதிர்ப்பாளர், தேசியவாதம் என்ற யுத்த வலயத்துக்குள்ளேயே பெரும்பாலும் சுருங்கிவிட்டது. எவர் எம்மைக் கண்டாலும் ‘ஐயோ பாவம்! நீங்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்’ என்ற ரீதியிலேயே பார்க்கிறார்கள். எங்களுடைய எழுத்துக்கள் இந்தவகை கழிவிரக்கத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதெல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் எப்படி வாழ்க்கையை அணு அணுவாக ரசித்துக் கொண்டாடினோம் என்பதைப் பெரிதாக யாரும் ஏனோ எழுதுவதில்லை. தலைக்கு மேலால் ஷெல் கூவும்போது ‘அது சும்மா கப்பு கழட்டுகிறது, டவுனுக்குள்தான் விழும்’ என்று சொல்லிவிட்டு கள்ளன் பொலீஸ் விளையாடும் சிறுவர்கள். இடம்பெயர வேண்டுமென்ற அறிவித்தல் வந்தவுடன், உடுப்பு புத்தகங்களோடு தாயம் விளையாடவென மறக்காமல் சோகியையும் எடுத்துவைக்கும் அக்காமார். அகதிகளாக ஏதாவது பாடசாலையில் ஒதுங்கியிருக்கும்போது, களவாக பக்கத்து வளவுகளில் கோழி பிடித்து, கறிக்கு உரித்துக்கொடுக்கும் இளைஞர்கள். அங்கேயே ஒரு காதல், கணவன் மனைவிச் சண்டை, செத்தவீடு, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், மண்ணெண்ணெய் ஜெனரேட்டரில் சினிமாப் படங்கள், கிரிக்கட் என்று வாழ்க்கையை அதியுச்ச அளவில் கொண்டாடியவர்கள் நாம். மரணம் மூலையில் காத்திருக்கும்போது வாழ்வது எளிதாகிறது. வாழ்வை மிக இயல்பாகக் கொண்டாட முடிகிறது. அந்தக் கொண்டாட்டம்தான்,
“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்”.
ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே கொல்லைப்புறம் இருக்கிறது. அம்மிக்கல்லு, மோட்டர்ப்பெட்டி, நாய்க்குட்டி, ஈரச்சாக்கு, கட்டித்தொங்கும் தென்னைமட்டை என்று நிறைந்திருக்கும், நாம் மட்டுமே அறிந்த நமது கொல்லைப்புறம். நம் நினைவுகளும் அப்படியே. ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர், பிள்ளையார் கோயில், ஒழுங்கைக் கிரிக்கட், இளையராஜா முதற்கொண்டு பிரேமதாசா போட்ட பீக்குண்டுவரை அத்தனையும் நம் பிரத்தியேக கொல்லைப்புறத்துக் காதலிகளே.
சில காதலிகளை நினைக்கும்போது கண் கலங்கும். சில பெயர்கள் உதட்டோரத்தில் புன்னகையை வரவழைக்கும். ஊருக்குத் திரும்பும்போதும் மனம் அவர்களையே தேடிப்போகும். பேசினவற்றை மீட்டிப்பார்க்கும். பேசமறந்தவற்றைப் பேசி முடிக்கும். சிலதுக்குச் செவிட்டைப்பொத்தி அறையவேணும்போலவும் தோன்றும். சிலது நமக்கு அறையும்!
சிலவருடங்களுக்கு முன்னர், நான் வாழ்ந்த தின்னவேலி வீட்டுக்குச் சென்றபோது என் கொல்லைப்புறத்தைத் தேடி ஓடினேன். கொல்லைப்புறங்கள் பெரும்பாலும் காலத்தால் உருமாற்றம் அடைவதில்லை. அது அப்படியே என் வருகைக்காகக் காத்திருந்ததுபோலத் தோன்றியது. என்னைக்கண்டதும் அதற்கு என்ன ஒரு புளகாங்கிதம். ஆச்சிமார்போலக் கட்டிக்கொஞ்சியது. அதே வாசம். எப்படி மறப்பேன். இறந்துபோன ஆச்சிமார்கள் எல்லோரும் கொல்லைப்புறத்திலேயே தங்கிவிடுகிறார்கள். கொல்லைப்புறமாகவே மாறிவிடுகிறார்கள்.
ஆட்டுக்கல்லில் போய் அமர்ந்தேன். அசரீரி கேட்டது.
“என்ன மறந்திட்டியா … ஆட்டுக்கல்லில இருக்கக்கூடாது ... வீட்டுக்குத் தரித்திரம்”
ஆச்சிமாரோடு இதுதான் ஒரு தொல்லை. போய் மோட்டர்ப்பெட்டியில் அமர்ந்தேன். வாழ்வின் அத்தனை கணங்களும் மீண்டும் வந்து சேர்ந்தன. அந்தச்சிறுவன் சம்பல் இடித்துக்கொண்டிருந்தான். நேர்சரியில் கூடப்படிக்கும் ராதிகா தனக்கு மனைவியாக அமையவேண்டுமென்று அம்பாளைக் கும்பிட்டுக்கொண்டிருந்தான். ‘முத்துமணி மாலை’ ஹம்மிங் பண்ணினான். வெளியே மழை பெய்யும்போது, கொல்லைப்புறத்திலேயே விறகு மட்டையால் தனியே சுவரில் பந்தை அடித்து கிரிக்கட் விளையாடினான். திடீரென்று அவன் ஆட்டுக்குட்டி ஓடிவந்து முன்னிரண்டு கால்களையும் உயர்த்தி அவன் நெஞ்சில் வைத்தது. செல்லநாய் சுற்றிச் சுற்றி ஓடிவந்தது.
எங்களை எல்லாம் மறந்துவிடுவாயா என்று என் பள்ளிக்கால நண்பி குட்டி கேட்டாள். திடீரென்று குட்டி அங்கே வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. திரு திருவென முழித்தேன். மறந்துதான் விடுவேனோ? உள்ளுக்குள் ஏதோ ஒரு அச்சம்.
அந்தக்கணங்களைப் பதியவேண்டுமே. அவற்றைக் கர்ப்பத்திலேயே சுமந்து கொண்டிருந்தால் காலப்போக்கில் என்னோடு சேர்ந்து என்றோ ஒருநாள் அவையும் கலைந்துவிடும். கூடாது. எமக்குப் பின்னாலும் நம் வாழ்க்கை நிலைபெறவேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளை ஒவ்வொன்றாக உலகறியப் பிரசவிக்கவேண்டும்.
“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்”
முதல் பிரசவம்.
அன்புடன்
ஜேகே
Comments
Post a Comment