விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.