ராஜாவுக்கு பிறந்தநாள்!
வெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை.

முதலில் தமிழின் ஜானகி பாடிய “காற்றில் எந்தன் கீதம்”, ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே. ஹிந்தியில் பாடும்போது ஒரு வித “கட்” எப்போதும் இருக்கும். பாடல்களில் சுரங்களின் போது sustain இருக்காது. அது அந்த மொழி பாடல்களுக்கேயுரிய அழகு. ஏய் ஹைரதே ஆஷாகி என்று ஹரிகரனும் ஏய் அஜு நபி என்று உதித்தும் பாடும்போது அவை தமிழை விட அழகாக இருப்பதற்கு இந்த சாரம் தான் காரணம். ஆஷா அந்த தாளக்கட்டோடு பாடுகையில், ஜானகி பாடுவதில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது. எது சிறந்தது என்றெல்லாம் வாதம் தேவையில்லை. இரண்டுமே ராஜா தான்!
அடுத்த பாடல் hona hai என்ற, தமிழில் வந்த “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”. மனோவும் ஆஷா போன்ஸ்லேயும் பாடியது. பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருந்தால் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கவேண்டியது. Arrangements மொத்தமாக மாற்றியிருக்கிறார். தமிழ் பாடலின் interlude எல்லாம் உலகத்தரம். வயலின்கள் ரீங்காரம் செய்து ஒரு சின்ன சிம்பனியே நிகழ்த்தியிருப்பார். ஹிந்தியில் இதெல்லாம் மிஸ்ஸாகி ராஜாவின் வழமையான தொண்ணூறுகளின் பிற்பாதி பாணி வந்துவிட்டது!
அடுத்த பாடல் எங்கள் எல்லோருக்கும் favourite ஆன “காதல் ஓவியம். ஆஷா தான் மீண்டும். Meri Zindagi என்ற பாடல் எழுத்தோட்டமாக சில நிமிடங்களே வரும். ஹிந்தி இசை பிரியர்களிடம் கேட்டால் இந்த பாடலின் instrumental version ஐ வெகுவாக சிலாகிப்பார்கள். இரண்டையும் தருகிறேன்.
1989ம் ஆண்டு Mahaadev என்று ஒரு படம். அதில் “அந்த நிலாவை தான் நான்” முதல்மரியாதை பாட்டை பாவித்திருக்கிறார். அழகு!
அதே படத்தில் தான் இந்த Rim Jhim Rim Jhim பாட்டு. இதை தான் அண்மையில் யுவன்சங்கர்ராஜா பாலா படத்துக்காக “தீண்டி தீண்டி” என்று அப்பன் பாக்கட்டில் இருந்து உருவி போட்டிருந்தார். ஆட்டை கடிச்சு ஆன்ரியாவை கடிச்சு கடைசில அப்பனையே கடிச்சிட்டான் பாவி!
ராம்கோபால் வர்மா ராஜாவின் ரசிகன் என்பது தெரிந்தது தானே. அவரின் சிவா என்ற படத்து பாடல். தமிழில் இது “ஆனந்த ராகம்”.
காமக்னி என்று ஒரு படம்(இப்பிடி படத்துக்கெல்லாம் இசையமைக்கலாமா பாஸ்?). படம் எப்படியோ, தலைவர் பாட்டில் குறை வைக்கவில்லை. இந்த பாட்டு தமிழில் வந்ததா என்று தெரியாது. ஆனால் இந்த பாட்டை முதல் தரம் கேட்டாலே பிடிக்கும். அவ்வளவு இனிமை. கேளுங்கள்!
There you go. சத்மா! ராஜாவின் மிகச்சிறந்த ஹிந்தி அல்பம் இது. மூன்றாம் பிறை ரீமேக். ஓரளவுக்கு musical sense உள்ள எந்த வட இந்தியர்களிடமும் கேட்டு பாருங்கள். இந்த படத்தையும், படத்தில் ராஜாவின் இசையையும் சிலாகிக்காமல் இருக்கமாட்டார்கள். முதலின் கண்ணே கலைமானே. அண்மையில் ஸ்ரேயா கோஷல் கூட மேடையில் கலக்கிய பாடல்.

என் இனிய ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பிற்குறிப்பு!தளபதி, நாயகன் போன்ற பாடல்கள் ஹிந்திக்கு போனாலும் அவற்றை வேறு யாரோ தான் மிக்சிங் செய்தார்கள்(ராஜா மணிரத்னம் கருத்துவேறுபாடும் காரணம்). அவை நன்றாக இருந்தாலும் இங்கே தவிர்த்துவிட்டேன். இந்த லிஸ்ட்டில் சீனிகம்மை ஏற்கனவே நான் காதலித்து விட்டதாலும்! “பா” பாடல்களை எல்லோருமே அறிந்திருப்பதாலும் குறிப்பிடவில்லை!