அதிகாலையிலேயே போடாபோடாசுகளின் ஹோர்ன் சத்தங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டன. நான் எழுந்து திரைச்சீலையை விலக்கிப்பார்த்தேன். பள்ளமான முட்டுச் சந்து ஒன்றில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. முட்டாமல் மோதாமல் விலகியும் நழுவியும் ஓடுவதுதான் கம்பாலாவில் வாகனம் ஓட்டுவதற்கான கலை. ஒரு ரக்பி வீரர் எப்படி சுழித்துக்கொண்டு பந்தை அடுத்த கரைக்குக் கொண்டுசேர்ப்பாரோ அதுபோல போடாபோடாசுகள் ஓடிக்கொண்டிருந்தன. பாதையோரங்களில் சூட்டும் சப்பாத்தும் அணிந்த பாடசாலை மாணவர்கள் புழுதிக்கு இடையே நடந்துபோனார்கள். உகண்டாவில் பாடசாலைகள் அதிகாலையே ஆரம்பித்து மாலை ஆறு மணிவரைக்கும் நீளும் என்று ஜெகன் சொல்லியிருந்தான். அங்கே இன்னமும் ஆங்கிலக்கல்விதான். பிரித்தானியக் காலனித்துவம் இந்த நிலத்தில் பூர்வீகமாகப் பரவி வாழ்ந்த பலவிதமான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களை (clans) ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடு என்பதால் இன்னமும் ஆங்கிலம் பொதுமொழியாக உகண்டாவில் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் தத்தமது இனக்குழுக்களிடையே அவர்கள் தமது மொழியைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆங்கிலத்தை இந்த நாட்டில் எல்லோருமே பேசுவார்கள். அது ஒரு தொடர்பாடல் மொழியாக மா...