வெள்ளி அதிகாலை. காதுகளில் இலையுதிர் பருவத்து கூதல். கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும் இளையராஜாவும். ரயில் பயணத்தில் யன்னலோரமாய் நான். நீயும் இருந்து பாரேன். நிச்சயம் பிடிக்கும். யன்னலோரத்தையும் பிடித்துவிடுவாய். வரிகள் மாறுகிறது. யன்னலோரமாய் நீ. இயர்போனில் எனக்கு ஒரு காது. உனக்கு மறு காது. "இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே" யூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து? திரும்பிப் பாரேன் என்னை. கருந்துளை விழிகளால் கவர்ந்திழுக்கிறாய். விழுந்தவன் தொலைந்து போனேன். "உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும். நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்" தான் நாணி நமை வாழ்த்தும் தமிழும் தன் வார்த்தை தொலைத்தது! குறுஞ்செய்தி ஒலி. பக்கத்தில் இருந்தும் எஸ்எம்எஸ் அனுப்பும் வேடிக்கை விநோதக்காரியே. இந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது. அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நான் பாட வேண்டாமா?" சுணங்காமல் வந்துவிடு- இங்கே குளிர்காலம் வந்துவிட்டது.