தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை மீண்டும் பிடித்துத் தோளில் போட்டபடி நடக்க ஆரம்பித்தான். அப்போது வேதாளம் அவனைப்பார்த்துச் சற்று எள்ளலுடன் கூறியது. “ஏ விக்கிரமாதித்தியா, நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், நீயும் கடமை துஞ்சாது சதா என்னை முருங்கை மரத்திலிருந்து பிடித்துக்கொண்டு செல்கிறாய். நானும் எப்படியோ தப்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறேன். இப்படியே உன்னுடைய காலம் கழிகிறது. நீ பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாய். உனக்கு நான் ஒரு கதை சொல்லி இறுதியில் சில கேள்விகளைக் கேட்கப்போகிறேன். அந்தக்கேள்விகளுக்கு உனக்குச் சரியான பதில் தெரிந்தும் சொல்லாவிடில் உன் தலை சுக்கல் நூறாக வெடித்துச் சிதறிவிடும்” விக்கிரமாதித்தன் அதற்கு ஆமோதித்துத் தலையாட்டவும், வேதாளம் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.