Skip to main content

அரங்கேற்ற வேளை !


“நீ எங்க சுத்தினாலும் கடைசில சுப்பரின்ட கொல்லைக்க தான் வந்து சேரோணும்”
அக்கா அன்று சொன்னபோது நான் அவளை ஏளனமாக பார்த்து இன்றோடு ஆறு வருடங்கள்  இருக்குமா? நான் ஒவ்வொரு முறை எழுதும்போதும் என் வீட்டில் இருந்து இப்படி ஒரு கமெண்ட் வருவது எனக்கு இப்போது பழகி விட்டது. பத்து வயது இருக்கும், தனியார் வகுப்பறையில் நான் எழுதிய முதல் கதை எல்லோருடைய பாராட்டையும் பெற்றபோது எனக்கு அம்மா சொன்னது.

“கதை எழுதி கிழிச்சது போதும், புத்தகத்தை எடுத்து படிக்கிற வழிய பாரு”

நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம் “The Namesake” வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiri யாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseini ஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி  ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு "Island of Blood" உம் "Broken Palmyrah" உம் எழுதுவதற்கு  அனிதா பிரதாப்  உம்  ரஜனி திரணகமவும் வேண்டி இருந்திருக்கிறது என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது. ஷோபா ஷக்தி யின் "Traitor" வாசித்த போது எங்கே இந்த புத்தகம் ஈழத்தமிழர் வாழ்க்கையின் பதிவாக அறிய பட்டு விடுமோ என்ற பதட்டம் வந்தது. சத்தியப்ரகாஷ்க்கு vote போடாமல் சாய்சரண் க்கு "Super Singer" title குடுத்து விட்டார்களே என்று புலம்புவதில் அர்த்தமில்லை தான்.  ஈழத்து வாழ்க்கையை தமிழில் எழுதி என்ன பயன்? எங்கள் வாழ்க்கையை எம்மை விட சிங்களவர்களும் மற்றவர்களும் அல்லவோ அறிய வேண்டும் என்று ஒவ்வொரு முறை  ஆங்கிலத்தில் எழுதும் போதும் நினைத்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சிங்களவர்களை யாழ்ப்பாணம் கூட்டிச்சென்று எம் கண்களினூடே அவர்களுக்கு எங்கள் வாழ்க்கையை காட்டியதும் இதற்காக தான்.  அப்பிடி ஒன்றும் பலதை நான் ஆங்கிலத்தில் எழுதவில்லை, ஆனால் எழுதியதை  பலர் வாசித்தார்கள், பலரை வாசிக்க வைத்தேன்! 2004 இல் bloglines இல் ஆரம்பித்து blogspot க்கு மாறி, மாறி மாறி எழுதியதில் ஒரு கட்டத்தில் அயர்ச்சி வந்தது என்னவோ உண்மை தான். ஆங்கிலத்தில் எழுதுவதில் பலதையும் பலத்தையும் இழக்கிறேன் என்பது புரிந்தது. அது சேரவேண்டியவர்களை போய் சேர்ந்தாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உறைத்தது. அப்பிடி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால் எனக்கு முன் அதை ஏற்கனவே பலர் செய்திருக்க முடியுமே என்பதும் புரிந்த கணத்தில் நல்ல வேளை அக்கா வீட்டில் இல்லை.

 “மச்சான் நீ இங்கிலீஷ்ல எழுதி தேவையில்லாம உண்ட energy யை waste பண்ணுறாய். தமிழுக்கு வாடா”

என்று கீர்த்தி சொன்னபோது ஏதோ சுஜாதாவை கமல் சினிமாவுக்கு விக்ரம் படத்துக்கு  அழைத்தது தான் ஞாபகம் வருகிறது. எங்கள் சட்டத்தில் நாங்கள் சுஜாதாவும் கமலும் தானே, பாத்ரூமில் "உதயா உதயா"  வை ஹரிகரனை விட நான் நன்றாக பாடுவது போல. இங்கே எல்லாமே ஒரு சார்பு தான். காந்தியை மகாத்மா என்று அழைப்பது மூலம் இன்னொரு மகாத்மா உருவாவதை  தடுத்து விடாதீர்கள் என்று கமல் சொன்னதை நான் மறுவாசிப்பு செய்வது மீண்டும் அந்த சார்பு விதியின் அடிப்படையிலேயே.

தமிழ் வலை உலகம் எனக்கு புதிது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எப்போது அறிமுகம் என்பது ஞாபகம் இல்லை. ஆனால் ஓசை செல்லா கொடி கட்டி பறந்த காலம் அது. தமிழச்சி விவகாரத்தில் தமிழ்மணம் இரண்டு பட்டதும் யுவகிருஷ்ணா தமிழ்மணத்தில் நீக்கப்பட்டு மீண்டும் உள்ளீடு செய்யப்பட்டதும் பசுமையாக நினைவில் நிற்கிறது. தமிழ் வலையுலகத்தில் ஒரு silent observer ஆகவே ஏழு ஆண்டுகள் காலத்தை ஓட்டிவிட்டேன். ஒரு சில தடவைகள் கானா பிரபாவின் போட்டிகளில் பங்கேடுத்திருக்கிறேன். அதை கூட ஆங்கிலத்தில் comment செய்ததாக தான் ஞாபகம்.

 இது முதல் பதிவு தான். இதுவே கடைசி பதிவாக கூட இருக்கலாம். அல்லது ஆரம்பித்த ஆர்வத்தில் இன்னும் ஒரு நான்கு பதிவு எழுதிவிட்டு காணாமலும் போகலாம். அல்லது இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்து இந்த எழுத்தை தொடரும் சந்தர்ப்பம் கூட இருக்கிறது. அதனால் எங்கு போகப்போகிறேன், என்ன எழுதப்போகிறேன் என்று எல்லாம் சொல்ல போவதில்லை. ஒரு முயற்சி தான். முடியும் என்று நினைக்கிறேன். முடியவில்லையா? இன்னொரு முயற்சி ஆரம்பிக்க வேண்டியது. அப்போது இது முடிகிறது இல்லையா? எனது மனநிலையை எப்படி விவரிப்பது என்பது  தெரியவில்லை. Terry Prachet இன் “Mort” வாசித்து இருக்கிறீர்களா? அதிலே “இறப்பு"(Death) தன் பொறுப்பை Mort இடம் கொடுத்து விட்டு ஒரு restaurant இல் வேலை செய்ய வருகிறது(‘வருகிறது’ வா? இல்லை வருகிறானா? இல்லை வருகிறாரா? இறப்புக்கென்ன மரியாதை!). அப்போது இறப்பு அந்த ரெஸ்டாரன்ட் waiter ஐ பார்த்து கேட்கிறது.
“What is it called when you feel warm and content and wish things would stay that way?” 
அதற்கு அந்த waiter சொல்கிறான்.
“I guess you'd call it happiness”
“என்ன மாமா விளங்கிற மாதிரி தமிழிலாவது எழுதுங்களேன்” என்று பிரான்ஸ் இல் இருக்கும் மருமகள் இதற்கு comment போட போகிறார் என்பது நிச்சயம். 

எங்கு தொடங்க எங்கு முடிக்க ஒரு வழியும் தோன்ற வில்லை. இன்றில் இருந்து தொடங்கி விட்டேன். இது வரைக்கும் கேள்வி இல்லை எனற வைரமுத்து கவிதையில் தொங்க வேண்டியது தான். ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்களுக்கே நூறு நாட்கள் அவகாசம் கொடுத்து விமரிசனம் செய்யும் நாகரிக சமூகம் இது. நான் எழுதுவது கொஞ்சம் ஓவர் போல எனக்கே தோன்றுவதால் ஒரு மூன்று பதிவாவது அவகாசம் தாருங்கள். அதற்குள் settle ஆக முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லையா? ஜூட் தான்.

ஒரு நிமிடம், ஆம் அக்காள் தான் அழைத்தாள்.
“என்னடா செய்கிறாய்”
 “ப்ளாக் எழுதுறன் அக்கா, இந்த முறை தமிழில எழுதலாம் எண்டு …” 
“ஆரம்பிச்சிட்டியா? உருப்படுற வழிய பார்ப்பியா? எவண்டா வாசிக்கிறான் உண்ட கதைய?" 
“வாசிக்கிறாங்கள் அக்கா” 
“கிழிச்சாங்கள், நீ கேட்டிருப்ப, அவங்களும் கடமைக்கு பார்த்திருப்பான்கள்”

ஆரம்பமேவா?  நீ எந்த ஆணி புடுங்கினாலும் அது தேவை இல்லாதது தான்!!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக