முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக. “அல்லா ராக்கா ரகுமான்” இந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.