Skip to main content

Posts

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

ஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்

  எழுத்தாளர் சயந்தன் மெல்பேர்ன் வந்திருப்பதைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆதிரை, ஆறாவடு பற்றிய ஒரு வாசகர் சந்திப்பை நேற்று மாலை செய்திருந்தோம். ஆதிரை பற்றி ஒரு சந்திப்பு செய்யவேண்டுமென்பது மூன்று வருடக்கனவு. நிறைவேறியிருக்கிறது. கடைசிநேர அழைப்பு என்றாலும் நேரம் ஒதுக்கி கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. நம்முடைய கதைகளை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்துகொண்டிருந்த சயந்தனுக்கும் நன்றி.

பெற்ரா

இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள். “சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. “ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”

சமாதானத்தின் கதை - கருத்துகள்

' சமாதானத்தின் கதை ' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை. அன்புடன் பிரிய வாசகன் முருகபூபதி

குஷி

நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு,  ‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’ பதிலுக்கு நான்,  ‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’ சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை. 

உலகப் பழமொழிகள்

மொழிபெயர்ப்புகளில் கீதா மதிவாணன் அக்காவுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. நிறைய அவுஸ்திரேலிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அவர் பல்வேறு சமூகங்களில் வழக்கத்திலுள்ள் பழமொழிகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருக்கிறார். மூலம் சிதறாமலும் அதே சமயம் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவண்ணமும் அவை மிக இயல்பாக இருக்கின்றன. உதாரணத்துக்கு சில. முட்டாள்கள் சந்தைக்குப் போகாவிடில் மோசமானவை எல்லாம் எப்படி விற்பனையாகும்? - ஸ்பெயின் கழுதையிடம் பூக்களை முகர்ந்துபார் என்று நீட்டினால் அது தின்றுவிடும். - ஆர்மீனியா சேவலைத் தலைவனாய்க் கொண்டு நடந்தால் கோழிப்பண்ணைக்குத்தான் வழி நடத்தப்படுவாய். - லெபனான் பட்டப்பகலை அரசன் இரவென்று சொன்னால், அதோ நட்சத்திரங்கள் என்று சொல். - அரேபியா உலகம் முழுதுமே மனிதர்களும் குணங்களும் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது இவற்றை வாசிக்கும்போது மீளவும் உறுதிப்படுத்தப்படும். மிக எளிமையான இவ்வகை பழமொழிகளை நம் தமிழ்போட்டிகளில் பயன்படுத்தக்கொடுக்கலாம். மாணவர்களிடம் இவற்றின் ஆங்கில வடிவத்தைச் சொல்லி தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்கலாம். கீதா அக

விருந்து

ஶ்ரீயும் நிர்மாவும் ஒன்றாகப் படகில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக அவர்கள் புரோட்மெடோஸில் இருந்த தடுப்பு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். வெளியில் விட்டபின்னரும் அவர்களுக்கு இங்கே ஒழுங்கான ஒரு வேலை கிடைக்கவில்லை. ஒரு வழியாக உதவிநிறுவனம் ஒன்றினூடாக அவர்கள் ‘விருந்து’ என்கின்ற ஒருநாள் உணவகத்தை ஆரம்பிக்கிறார்கள். நான்கு மாதங்களின் பின்னர் நிரோவும் தடுப்புமுகாமிலிருந்து வெளியே வருகிறார். பின்னர் நியேதனும் முகாமிலிருந்து வெளியேறி இவர்களோடு இணைகிறார். இப்போது உணவகம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று நான்கு நாள்களும் நடைபெறுகிறது.

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?  தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

மனிசர் கொலையுண்டார்

“கல்லொன்று வீழ்ந்து  கழுத்தொன்று வெட்டுண்டு  பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு  சில்லென்று செந்நீர் தெறிந்து  நிலம் சிவந்து  மல் லொன்று நேர்ந்து  மனிசர் கொலையுண்டார்”  — தேரும் திங்களும், மஹாகவி உருத்திரமூர்த்தி  மே மாதம் என்பதே அயர்ச்சியும் கழிவிரக்கமும் இயலாமையும் நிரம்பியிருக்கும் மாதம்தான். எதை வாசித்தாலும் எதை எழுதினாலும் எதை நினைந்தாலும் அவை எல்லாம் வெறும் அபத்தத்தின் மறுவடிவங்கள் என்ற எண்ணமே இக்காலத்தில் மேலோங்குகிறது. ‘மனிசர் கொலையுண்டார்’ என்ற வார்த்தைகள் அர்த்தப்படும் நாள்கள் இவை. மஹாகவி சொல்லும் அந்த ‘கொலையுண்ட மனுசர்’ யார் என்று யோசிக்கிறேன். வீழ்ந்துபட்டவர்களை அது குறிக்கவில்லை. மாறாக வீழ்த்தியவர்களையும் மனுசர் வீழும்போது பார்த்துக்கொண்டு வெறும்வாய் மெல்லுபவர்களையும்தான் அது குறிக்கிறது. அதிகாரத்தைவிட அதிகாரத்துக்கு எதிராக வாளாவிருப்போர்தான் ஆபத்தானவர்கள். அவர்களே அதிகாரத்துக்கான உரத்தைக்கொடுப்பவர்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் அதிகாரம் மேலும் கிளை பரப்பி விரிகிறது. அவர்கள் வேறு யாருமிலர். நானும் என் சக நான்களும்தாம் அவர்கள். அமைதி காப்

பூமியை அழகாக்குபவர்கள்

இன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்ட

நிரோஜன்

முதற்பாகம் : அருண்மொழி இரண்டாம் பாகம் : பார்த்திபன்   ‘வானம் திறந்தால் மழை இருக்கும்…’ என்று பாடிக்கொண்டிருந்த சித்ராவை அப்பிள் மப்ஸ் பெண் இடைநடுவில் குறுக்கிட்டாள். “உங்கள் பாதையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுப் பாதையில் ஒன்றில் மூன்று நிமிடங்கள் சீக்கிரமாகவே செல்லலாம். மாற்றப்போகிறீர்களா?” நிரோஜன் ‘நோ’ என்று சொல்லவும் அந்தப்பெண் எந்தச் சுழிப்புமில்லாமல் நன்றி சொல்லி மீண்டும் சித்ராவுக்கு வழிவிட்டாள். ‘என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்’ என்று அவர் குரல் உருகி வழிந்தது. எத்தனை அழகான பாட்டு இது. எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் அந்த இடத்திலேயே காரை வீத்யோரம் நிறுத்திவைத்து, பாட்டை முழுதாய் ரசித்துக் கேட்டால் என்ன? ஜெயச்சந்திரனின் காந்தக்குரல் தொடர்ந்து தாலாட்டியது. “இரவைத் திறந்தால் பகல் இருக்கும். என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய். என் மேல் …” படக்கென்று சுயநினைவு வந்து கண்களைத் திறந்தவன், சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்ததை இறுதிக் கணத்திலே கவனித்துச் சடுதியாக பிரேக் போட, கார் ஒருமுறை தூக்கிக் குலுங்கி நின்றது.

பார்த்திபன்

முதற்பாகம் : அருண்மொழி பார்த்திபன் மறுபடியும் டொய்லட்டுக்குள் அவசரமாக ஓடினான்.  சிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுவொரு பெரும் பிரச்சனை. ஏதாவது பரீட்சை என்றால். மேடையில் ஏறிப் பரிசு வாங்குவது என்றால். வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும்போது அடுத்த பெயர் அவனது என்றால். தவமணி வாத்தி ரவுண்ட்ஸ் வந்தால். யாரேனும் வீடுகளுக்கு விஸிட் சென்றால். விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால். வீதியில் செல்லும்போது தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால். தூரத்தே பொலீஸ் வாகனம் நின்றால். டெண்டுல்கர் சேஸிங் செய்தால். டெலிபோன் அடித்தால். இப்படி எந்தச் சின்ன டென்சன் என்றாலும் எங்கிருந்தோ ஒரு பூரான் நுழைந்து குடல்வழியே ஊர ஆரம்பித்துவிடுகிறது.  ஒவ்வொரு தடவையும் அவன் புதிதாகக் காதல் வயப்படும்போதும் வயிற்றைக்குழப்பி, ‘இந்தா இப்போதே கலக்கி அடிக்கிறேன்’ என்று அது பாவ்லா காட்டும். ஆனால் உள்ளே போய்க்குந்தினால் சனியன் பூரான் சருகுக்குள் போய்ப்பூந்துவிடும். சிறிதுநேரம் முக்கிவிட்டு இது வேலைக்காகாது என்று முடித்து வெளியே வந்தால் திரும்பவும் பூரான் மெதுவாக ஊர்ந்து வெளியேவரும். பார்த்திபன் இந்தச் சிக்கலுக்கு வைத்தியரிடம

அருண்மொழி

குளித்து முடித்துத் தலையைத் துவட்டியவாறே அருண்மொழி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். ஐபோனிடம் மெல்பேர்ன் நேரத்தைக் கேட்டாள். பத்தரை. கூடவே அங்கு வெப்பநிலை எட்டு டிகிரி செல்சியஸ் என்றது. அவளுக்குப் புழுக்கமாக இருந்தது. ‘சனியன் குளித்து ஐஞ்சு நிமிசங்கூட ஆகேல்ல, அதுக்குள்ள அவியுது’ என்று புறுபுறுத்தாள். ஏனோ எட்டு டிகிரி மெல்பேர்ன்மீது எரிச்சலும் கோபமும் வந்தது. குளிர் மனிதர்களைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது என்று முணுமுணுத்தாள். பதினொரு மணிக்குப் பார்த்திபன் ஸ்கைப்கோல் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். நேரம் இருந்தது. ஒரு கிரீன்டீ போடலாம் என்று குசினிக்குள் நுழைந்து கேத்திலை ஓன் பண்ணினாள்.  யார் இந்தப் பார்த்திபன்?

யாழ்ப்பாண நண்டு

என் சக யாழ்ப்பாண நண்டு ஒன்றை அண்மையில் தற்செயலாகச் சந்திக்கவேண்டிவந்தது. கவனித்திருக்கவே மாட்டேன். தூர்ந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்க்கும் பழக்கம் எல்லாம் இப்போது அடியோடு போய்விட்டது. ஆனால் உள்ளிருந்த நண்டுக்கு என் காலடித்தடம் கேட்டிருக்கவேண்டும். “ஆரது,  நம்மட தம்பியா போறது” குரல் வந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தேன். குப்பைகள். சிகரட் பெட்டிகள். அணைந்த எச்சம். பியர் போத்தல்கள். கொக்ககோலா, பன்ரா, ஷொப்பிங்பாக் என இன்னபிற பிளாத்திக்குகள். சிறு நண்டும் ஒன்று. கிணற்றுத்தரை முழுதும் நண்டுகள் ஊர்ந்து திரிந்ததில் பக்கங்கள் பல நிறைந்திருந்தன. “என்னைஸே இப்பெல்லாம் எழுதுறது குறைஞ்சுபோச்சு” அது கேட்ட தொனியில் மெல்லிய சந்தோசமும் இழையோடியது. இப்படியே தொடர்ந்தால் இவன் எழுதாமலேயே நிறுத்திவிடுவான். ஒரு நண்டு, அதுவும் வெளியில் உலாவும் நண்டு எழுதாமல் விடுவதில் கிணற்று நண்டுக்குத்தான் எத்தனைப் பேரின்பம். என்றோ ஒருநாள் எதேச்சையாக அந்த நண்டு என்னை வாசித்திருக்கலாம். அந்த ஒரு வாசிப்பையே என் எழுத்தாகப் பிரமாணம் செய்து அது வாழ்நாள்பூராகவும் கழித்துவிடும். கேட்டால், ஒரு சோறு, ஒரு பதம் விளக்கம்

உடல்களின் துயர்

மரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது? எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது? அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா? நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது? பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது? 

பக்

அலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள். ஒரு பக். எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது? ஆனால். இந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். அவ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும். ஆனால்.

புலம் (பெயர்) பொதுமைப்படுத்தல்கள்

“புலம்பெயர் தமிழர்கள் நடைமுறைச்சாத்தியமில்லாத தமிழீழத்துக்கான தீர்வையும் தேவையேயில்லாத தேசியத்தையும் கள நிலவரங்கள் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்” சமீப காலங்களில் இப்படியான அல்லது இந்தக்கருத்து சார்ந்த பலகருத்து நிலைகளைக் காணமுடிகிறது. என்னுடைய கேள்வி நடைமுறைச்சாத்தியங்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. நடைமுறைகள் என்றாலே அது காலத்துக்காலம் மாறுபவை அல்லது மாற்றப்படுபவைதான். அப்போது சாத்தியங்களும் மாறும். அதல்ல விசயம். விசயம் இதுதான்.

பழைய வீடு

எங்கள் குடும்பம் சற்றுப்பெரியது. நான் பிறக்கும்போது ஏற்கனவே குடும்பத்தில் பதின்மூன்று, ஒன்பது, எட்டு, ஆறு வயதுகளில் சிறுவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மூன்று அக்காமார். அண்ணா. தமக்கெல்லாம் ஒரு தம்பி வந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். பொறுப்பு, பொறாமை, சினேகம், விளையாட்டுக்கு ஒரு துணை. எத்தனை எண்ணங்கள் வந்து போயிருக்கும். எழுபத்தேழு கலவரத்தில் நுகேகொடவிலிருந்து அடித்துக்கலைப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த குடும்பம் அப்போதுதான் ஓரளவுக்குச் செட்டில் ஆகிக்கொண்டிருந்த சமயம். கம்பஸடியில் வாங்கிப்போட்டிருந்த காணியில் ஒரு கொட்டில் வீடு போட்டுக் குடியேறியிருந்தார்கள். வீடு என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு வரவேற்பறை. ஒரு படுக்கையறை. ஒரு பத்தி. பத்தியில்தான் சமையல் எல்லாம். பின்னர் அங்கிருந்தபடியே அம்மாவும் அப்பாவும் காணிக்குள் இப்போதிருக்கும் புது வீட்டினைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

பதற்றப்படாதே!

இன்று ஊடகங்களிலும் அலுவலகத்திலும் வானொலி, தொலைக்காட்சிகளிலும் “Space X” பற்றியே கதையாக இருக்கிறது. மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடிய மூன்று பூஸ்டர்களின் உதவியுடன் எலன் மஸ்கினுடைய சொந்த டெஸ்லா காரை விண்வெளியில் துப்பிவிடும் இந்தத்திட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியிருக்கிறது. மூன்றாவது பூஸ்டர் பிழைத்துப்போனாலும் ஏனைய இரண்டும் திரும்பிவிட்டன. டெஸ்லா கார் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்துவிட்டது. இந்தத்திட்டத்தின் நோக்கங்கள், இது அடியெடுத்துக்கொடுத்திருக்கும் அடுத்தடுத்த சாத்தியங்கள் பற்றியெல்லாம் இணையத்தில் ஏராளம் கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களிலும் எப்படியும் இரண்டொரு நாள்களுக்குள் அவை வந்துவிடும். சிலதில் வரப்போகின்ற கூகிள் மொழிபெயர்ப்பை நினைக்கத்தான் அச்சமாக இருக்கிறது. “Musk” என்ற சொல்லை கூகிள் “கஸ்தூரி” என்று மொழிபெயர்க்கிறது. நம்மட ஆளுகள் “நடிகை கஸ்தூரி தன்னுடைய மின்சார வண்டியை விண்வெளிக்கு அனுப்பினார்” என்று தலைப்புச்செய்தி இட்டாலும் இடுவார்கள். நான் சொல்லவந்தது வேறு.

கீழடி

தொல்லியல் படிமங்களிலிருந்து வரலாற்றை அறிதல் என்பது கிளிஞ்சல்களினின்று ஆழ்கடலை அறியமுற்படுவது போன்றது. அவை ஆழ்கடலை வியப்புடன் நோக்கவும் அதனுள் பரந்து விரிந்து கிடக்கும் உலகை மேலும் அறியவும் உத்வேகம் கொடுக்கும். அதன் சாத்தியங்கள் நம்மை மிரட்டும். காற்சட்டையை மேலும் இழுத்துவிட்டு கடலினுள் இறங்கி இன்னும்பல கிளிஞ்சல்களைப் பொறுக்குவதற்குத் தூண்டும். முன்னொருமுறை எழுதியதுபோல, வரலாறு ஒரு சாகசக்காரிக்கேயுரிய கொஞ்சலுடன் நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சிறு வெளிச்சங்களைக்காட்டி, நம்மை அருகே இழுத்து, வசீகரித்து, கிளர்ச்சியை உண்டுபண்ணி ஈற்றில் அதுவாகவே நம்மையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது.