Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

உள்ளக விசாரணை - අතිශය අභ්‍යන්තර පරීක්ෂණය

ஆதிரை வெளியீடாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ச் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதில் "சமாதானத்தின் கதை" தொகுப்பில் இடம்பெற்ற "உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்" சிறுகதையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குரங்கு

  “ அம்மோய் .. குரங்கு வந்திட்டுது ” தகப்பனினுடைய மோட்டர்சைக்கிளின் சத்தம் கேட்கவும் அதற்காகவே   காத்திருந்தவன்போலத் தம்பியன் கேற்றடியை நோக்கி ஓடினான் . பின்வளவில் உடுப்புக் காயப்போட்டுக்கொண்டிருந்த அவனின் தாய்க்காரியும் போட்டது போட்டபடியே முற்றத்துக்கு விரைந்தார் . பக்கத்து வீட்டு மதில்களுக்கு அப்பாலிருந்தும் பல தலைகள் அவசரமாக எட்டிப்பார்த்தன . தம்பியன் போய்க் கேற்றை வேகமாகத் திறந்துவிடவும் மோட்டர்சைக்கிள் முற்றத்துக்குள் நுழைந்தது . எல்லோர் கண்களும் அதன் பின் சீற்றிலிருந்த கூட்டையே பின்தொடர்ந்தன .   வீட்டுப் போர்டிகோவில் மோட்டர் சைக்கிள் போய் நிற்கவும் பின்னாலேயே ஓடிவந்த தம்பியன் , அந்தக்கூட்டின் அருகே போய் ,   அதை மூடிக்கட்டியிருந்த சாக்கினைச் சற்று விலத்திப் பார்த்தான் .   உள்ளே , ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் , மிரட்சியோடு கண் சிமிட்டாமல் அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது அந்தக் குரங்கு .

அப்பாவின் தொலைபேசி

எண்பதுகளில் எங்கள் ஒழுங்கையிலேயே புறொக்டர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. அந்த வட்டாரத்தில் இருந்த இருபது முப்பது வீடுகளுக்கும் அதுதான் ஒரே தொலைபேசி. அதிலும் நாம் போய் அழைப்பு எடுக்க அந்தப் புரொக்டர் மனிசி விடாது. ஆனால் அவசர அழைப்பு ஏதும் வந்தால் எங்களுக்குச் சொல்லி அனுப்புவார்கள். அப்படி அழைப்பு எடுத்து விசயம் சொல்லுமளவுக்கு அங்காலப்பக்கம் தொலைபேசி வசதிகொண்ட எவரையும் வட்டாரத்துக்கும் தெரியாததால் பெரிதாக அழைப்பு எதுவும் எமக்கு வருவதில்லை. வெளிநாட்டுக்கு ஆட்கள் போகத்தொடங்கியிராத காலம் அது. அல்லது போனவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுமளவுக்கு வசதியும் வந்திராத காலம். எப்போதாவது அப்பாவுக்கு வேலை விசயமாக அழைப்பு வரும். தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது என்றதுமே அப்பாவின் முகத்தின் பின்னே ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கும். அது செருப்பை அணிந்துகொண்டு, ஒழுங்கையால் நடந்து புரொக்டர் வீட்டுக்குப் போய், தொலைபேசியில் கதைத்துவிட்டுத் திரும்பும்வரைக்கும் நிலைத்து நிற்கும். வருகின்ற வழியில் சிங்கன் குறைந்தது நான்கு வீடுகளிலாவது கேற்றடியில் நின்று அந்த அழைப்பைப்பற்றிப் பெருமைப்பட்டுப் பீத்

டைனோசர் முட்டை

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனிதா நாயரின் 'லேடிஸ் கூப்' நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதையில் மார்கரட் போல்ராஜ் என்றொரு பெண் பாத்திரம் வரும். அவருக்கு, வீட்டில் கொடுமை செய்யும், சுயநலக்கார, பெண்கள் மீது பலவீனம் கொண்ட, ஸ்மார்ட் லுக்கிங் உள்ள ஒரு கணவன். மார்கரட் தன் கணவனை எப்படி வழிக்குக் கொண்டுவந்து அவனை ஒன்றுமேயற்றவனாக்குகிறார் என்பதுதான் அந்தக் கதை. நாவலில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே வருகின்ற மார்கரெட் பல ஆண்டுகளாக நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தார். அந்தப் புள்ளி பல வருடங்களாக உப்புத்தண்ணிக்க போட்ட நெல்லிக்காய் மாதிரி ஊறிக்கொண்டே கிடந்தது. பல தடவைகள் என் வாசக வட்ட நண்பர்களோடு மார்கரட் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய நாள் ஜீவியோடு இதுபற்றி உரையாடியிருக்கிறேன். அந்தப் புள்ளியை எடுத்து விளையாடவேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. தன்னைவிட சுப்பீரியராக இருக்கக்கூடிய ஒரு துணையை எப்படி அணு அணுவாக மழுங்கடிப்பது என்கின்ற புள்ளி. ஆனால் அதற்குச் சரியான கதை ஒன்று அமையவில்லை. திடீரென்று ஒருநாள் அந்த மார்கரட் ஆணாகியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தேன்

ஒரு பனங்கொட்டை உதயமாகிறான்

நாளைக்கு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வந்துவிடும் என்றார்கள். அருமைநாயகம் சேர் சுட்டெண் வாங்கியிருந்தார். ஆனால் தகவல் எதுவும் வந்திருக்கவில்லை. பெறுபேற்றுக்காகக் காத்திருந்த இந்த மூன்று மாதங்களில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்திருந்தது. மறுபடியும் இன்னொருமுறை பரீட்சைக்குப் படிக்கும் முனைப்பும் அருகியிருந்தது. மீண்டும் அசேதன இரசாயனத்தை நினைத்தாலே SO2 மூக்குக்குள் போய்க் குமட்டிக்கொண்டு வந்தது.

கரண்டிக் கிராமம்

நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கி ஊர் முழுவதுமே முடங்கியிருந்த நாட்கள் அவை. அந்தக் காலத்தில்தான் நாங்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்திருந்தோம். அம்மா என் தம்பியைத் தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வருவார். நானோ அப்பா எனக்குப் புதிதாக வாங்கிக்கொடுத்த ஸ்கேட்போர்டில் ஓடிவருவேன். சமயத்தில் அப்பாவும் எங்களோடு நடைப்பயிற்சியில் சேர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அவர் வந்தாலும் எம்மோடு ஒன்றாகச் சேர்ந்து நடக்கமாட்டார். நாங்கள் மெதுவாக நடக்கிறோம் என்று குறை சொல்லிக்கொண்டு அவர் தன்பாட்டுக்குப் பாட்டுக் கேட்டபடியே ஓடத் தொடங்கிவிடுவார். அதற்காக அம்மா அவரைக் கோபித்துக்கொள்வதுண்டு. நான் எதுவுமே சொன்னதில்லை.

தறிகெட்ட கதை

நான் படிப்பெல்லாம் முடித்து வேலை செய்ய ஆரம்பித்திருந்த காலம். கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அது. நான் இணைந்த காலத்தில் அங்கே பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் அணியிலும் ஓரிருவர். அவர்களில் ஒருத்திதான் பெல்லா. பெல்லா என்றால் அழகானவள் என்று அர்த்தம். இத்தாலிக்காரி. பெல்லா என் பெயரின் அர்த்தத்தையும் கேட்டாள். ஜேகே என்றால் ஜெயக்குமரன் என்று சொன்னேன். அதாவது வெற்றிகரமான இளைஞன் என்று பொருள். ‘வாவ் ஸோ ஆப்ட்’ என்றாள். ஆப்ட் என்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் தாங்ஸ் சொன்னேன். பெல்லாவோடு, சந்தித்த இரண்டாவது நாளே நான் டூயட்டும் பாடியிருந்தேன். அப்போது கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் பேமசாகியிருந்த நேரம். இதையே கிசோகர் என்றால் உண்மையைப் புட்டு வைத்திருப்பான். அந்தக் கைங்கரியம் எனக்கில்லை. எங்கள் அணியிலேயே பிரசாத் என்றவனும் கூட இருந்தான். எனக்கு அவன் சீனியர். மினுவாங்கொடவைச் சேர்ந்தவன். வெறுமனே தற்செயல்தான். பிரசாத்துக்கு இங்கிலிஷ் சுட்டுப்போட்டும் வராது. எனக்கும் வராது. ஆனாலும் ஜொனியன் என்பதால் தெரியாத இங்கிலிஷை பிரிட்டிஷ்காரனுக்

பேய்க்கிழவாண்டி - இறுதிப் பாகம்

முதற்பாகம் தாத்தா யோசித்தார். “ஒரு கப் மாட்டு மூத்திரம் கிடைக்குமா? வந்ததுக்கு குடிச்சிட்டுப்போறன்” ஸீ. நான் இந்தச் சம்பவத்தை எழுதி வெளியிட முயற்சி செய்யாததற்குக் காரணம் இதுகள்தான். தாத்தா பேசின பேச்சுகள் எல்லாவற்றிலும் ஒரு அரசியல் சமூக பிரச்சனையைப் பேசுவதற்கான லீட் வந்துகொண்டேயிருந்தது. ஆனால் நான் எழுதினால் வெறுமனே லீடுக்காகத்தான் தாத்தாவைப் பேசவைத்தேன் என்பார்கள். வேண்டாம். உண்மையைச் சொல்லும்போதே இவர் புனைவாக்குகிறார் என்று ****க் கதை கதைப்பார்கள். Again, ஆண்பால் சார்ந்த வசை. இந்தா பிடி விண்மீனை.

பேய்க்கிழவாண்டி - முதற்பாகம்

வழமையான பேய்க்கதைகளைப்போலவே இக்கதையும் ஒரு மழைக்கால இரவில் ஆரம்பித்தது. இடி முழங்கியது. எதிர்பார்த்தாற்போலவே திடும்மென வீட்டுக் கதவு தட்டப்பட்டது. “தட் தட்” போய்த் திறந்தேன். வாசலில் என் தாத்தா. ஜம்மென்று நின்றார். விறாந்தை மாடத்தில் உழுத்துப்போன கறுப்புவெள்ளைப் புகைப்படத்தில் மெலிதாகச் சிரித்துக்கொண்டிருக்கும் அதே தாத்தா. ஏதோ ஒரு ஸ்டூடியோ திரைக்கு முன்னே அலங்காரக் கதிரையில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் அதே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. மெல்லிய உருவம். ஜீவானந்தம் மாஸ்டருக்கு கொஞ்சம் தொந்தி சேர்த்தாற்போல. தாத்தா மழையில் தொப்பென்று நனைந்திருந்தார்.

ஊபர் ஈட்ஸ்

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஒரு ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்துரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4

தட்ஸ் ரைட். என்ர போன் கொமெடுக்க விழுந்திட்டுது. பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. என்னதொரு அறுந்த சீவியம் இண்டைக்கு. ச்சைக். அருமையான ஐபோன் எக்ஸ் போன் அது. ரிலீஸ் ஆன கையோட ஆசை ஆசையா ஓடிப்போய் வாங்கியோண்டு வந்தது. போட்டோ எல்லாம் சும்மா பளீரென்று எடுக்கும். பூவை போக்கஸ் பண்ணினா பின்னால கிடக்கிற இலை, குப்பைத்தொட்டி, வேலி எல்லாம் மறைஞ்சு பூ மட்டும் பிச்சுக்கொண்டு தெரியும். அர்ஜுனன் கிளிக்கழுத்த போக்கஸ் பண்ணினதுபோல. ஒருக்கா வீட்டில வாழையிலைச் சாப்பாடு. நான் தண்ணியைத் தெளிச்சு வழிச்சிட்டு சோத்தைப் போட ரெடி. அப்பப்பார்த்து ஒரு தண்ணித்துளி வாழையிலைத் தண்டுக்குள்ள சிக்கிக் கிடந்துது. உடனே போனை எடுத்தன். துளியை போக்கஸ் பண்ணினன். துளியை குளோசா எடுக்கேக்க அதில எண்ட மூஞ்சி தெரியிறமாதிரி. ஈ லோகத்தில வேற எவனும் அப்படி ஒரு படம் எடுத்திருக்கமாட்டான். நான் என் போனில எடுத்தன். படமெண்டா நெருப்புப் படம்.

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3

கொமெண்டை அழிப்பது என்று சொல்லிவிட்டேனே ஒழிய எனகெண்டால் அதற்கு மனமே இல்லை. வெண்முரசு அளவுக்கு இல்லையாயினும் விஷ்ணுபுரம் அளவுக்கு நீண்டுவிட்ட ஒரு அற்புதமான கொமெண்ட். இதனைப்போய் அடிச்சுவடியே இல்லாமல் அழிப்பதா என்று ஒரே கவலையாக இருந்தது. கருத்து நல்லா இருக்கு. கிசோகருக்குத்தான் வேணாம். தனியா நானே படலைல ஒரு பதிவாப் போட்டால் என்ன? இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும்? நாலாயிரம் பிரண்டுகள் இருந்தாலும் நாலு பேரை மாத்திரம் விட்டிட்டு மத்த எல்லாரையும் அன்பஃலோ பண்ணி வச்சிருக்கிறதால மார்க்கு அலேர்ட் ஆகி என்னை இந்த சமூகத்திற்கு இருட்டடிப்பு செய்கிறான் என்று தெரிந்தது. என்ன செய்யலாம்?

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2

‘மல்லி …’ கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன். ‘மல்லி உன்னைத்தான்’ அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன். ‘நீயா பேசியது?’ ‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1

போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.

எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்

000 ஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை.  “என் கண்ணே பட்டுவிடும்போலத் தோன்றுகிறது. ஒரு பாதிரியாருக்கு இவ்வளவு பயங்கர அழகு கூடாது. அதுவும் உன் கண்கள் இருக்கிறதே. அவை அதி உன்னதமானவை.” 

கறுப்பி

கறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது.  மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும் காலத்தில் வாங்கியது. அறாவிலைக்கு ஓட ஓட நடுவழியில் நட்டுகள் கழன்றுவிழும் நிலையில் இருந்த வாகனத்தை வாங்கித் திருத்தி ஓட ஆரம்பித்தது. ஆனால் எத்தனை நட்டுகள் விழுந்தாலும் அந்த வாகனம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. வாங்கிக் கொஞ்சக் காலத்துக்கு ஹீட்டர் கூலர் இரண்டுமே வேலை செய்தது. பின்னர் ஹீட்டர் மாத்திரம் வேலை செய்தது. அதன் பின்னர் கூலர் கரைச்சல் கொடுத்தது. கொஞ்ச நாளைக்குப்பின்னர் வெறும் காற்று மட்டும் மெல்லிய எஞ்சின் நெடியுடன் பறந்தது. பாட்டுப்பெட்டிக்கும் அதே கதைதான். முதலில் சிடி பிளேயர் முழுதாக வேலை செய்தது. பின்னர் கனலில் கருவாகி புனலில் உருவானதை மாத்திரம் அது தொடர்ந்து ரிப்பீட் பண்ணியது. அதன்பின்னர் வானொலி மட்டும் தனியே பாடியது. ஈற்றில் வெறும் இரைச்சல் மாத்திரம். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தமுடியாமற்போனது. எஞ்சின் அதற்கும்மேலே. அடிப்பகுதியில் இங்கிங்கெனாது எங்கெனும் ஒயில் ஒழுகியது. ரேடியேட்டர் தண்ணீர் வடிந்தது. பெற்றோல் குடிக்கப்பட்டது. இயக

நாய் கொண்டான்

இப்பக் கொஞ்சக் காலமாகவே எனக்கு நாய்களின்மீது ஒரு தனிப்பாசம் வர ஆரம்பித்துள்ளது.  நான் நித்தமும் நாய்களோடு வேலை செய்யும் அனுபவத்தில் சொல்கிறேன். அதுகள் அவ்வளவுக்கு மோசமென்று சொல்வதற்கில்லை. நாய்கள் மீது ஒருவித கரிசனைகூட எனக்கு வந்துவிட்டது. அதுகளும் என்ன செய்யும் சொல்லுங்கள்? அதுகளாக வந்து என்னை எடுத்து வளர்த்துவிடு என்று கெஞ்சியதா? இல்லையே. நீ, மனுசன், உனக்கு ஒரு அடிமை வேணும் எண்டதுக்காக நாயை வாங்கி, நலமடிச்சு வளர்த்திட்டு, நாய்கள் கியூட் என்கிறாய், நாய் நன்றியுள்ள மிருகம் என்கிறாய், நாய் வளர்ப்பது நல்லது என்கிறாய், நாய் வீட்டில் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும் என்றும் சொல்கிறாய். நாய்களோடு கூட வளர்ந்தால் இம்மியூனிட்டி அதிகமாகும் என்கிறாய். இப்படி எல்லாமே நாய்களால் உனக்கும் நீ பெத்ததுகளுக்கும் என்ன நன்மை என்று வரிசைப்படுத்துகிறாயே ஒழிய நாய்களைப்பற்றி நீ எப்பனேனும் யோசித்தாயா? கேட்டால் நாய்க்கும் என்னைப்பிடிக்கும் என்று சொல்கிறாய். கூப்பிட்டோன என்னட்ட ஓடிவரும் என்கிறாய். நாய்களுக்கு ஊருலகத்தில அப்பிடி என்னதான் பிரச்சனை? என்று திருப்பி என்னையே கேட்கிறாய். அப்படியே

நிஸ்ஸி

நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான். “உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது” “என்ன நடந்தது?” என்றேன். “வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது” தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

பக்

அலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள். ஒரு பக். எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது? ஆனால். இந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். அவ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும். ஆனால்.