நூலகம் அமைப்பைப் பற்றி எத்தனை தடவை சிலாகித்தாலும் போதாது என்றே தோன்றுகிறது. என்னுடைய ஈழம் சார்ந்த, தமிழ் சார்ந்த பல தேடல்கள் எல்லாம் நூலகம் தளத்திலேயே போய் முடிவடைந்திருக்கின்றன. அநேகமான உசாத்துணைகள் எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். யாழ்ப்பாணப் பொது நூலகம் என்பது எங்களுடைய வரலாற்றுரீதியான ஒரு கலாசார சொத்து என்றாலும் ஒரு முழுமையான நூலகத்துக்கான பலனை உலகம் முழுதும் கொடுத்துக்கொண்டிருப்பது என்னவோ நூலக இணையம்தான். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஐக்கிய நாடுகளின் நிறுவனரீதியான பங்களிப்புடன் செய்யக்கூடிய ஒரு பெரும் முயற்சியை, ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, தன்னார்வப் பணியாளர்களின் உதவியோடு தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்வதென்பது ஒரு பெரும் சாதனை. அதுவும் எந்தவித சர்ச்சைகளும் குழப்படிகளும் பொதுவெளிக்குள் வரவிடாத ஒழுங்கமைப்புடன் இருக்கும் அமைப்பு. ஈழத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கு ஒரு மாதிரி அமைப்பாக நூலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. சின்ன உதாரணம் ஒன்று. ஒரு சிறுகதைக்காக ஈழத்தின் நாட்டுக்கூத்து முயற்சிகள், சித்தர்பாடல்கள் பற்றித் தேடிக