Skip to main content

Posts

Showing posts from 2025

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 3 - சிம்பன்சி முதல் செயற்கை நுண்ணறிவுவரை

மழை துமிக்க ஆரம்பித்தது. கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

உகண்டாவில் ஒன்பது நாட்கள் - பாகம் 2 - ஊர் எனும் யானை

விமானம் திடும்மென்று தரையிறங்கி பெரும் இரைச்சலோடு ஊர்ந்தபோது உள்ளிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலர் மளமளவென எழுந்து தம்முடைய கைப்பைகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். ஏன் அந்த அவசரம் என்று எனக்குப் புரிவதேயில்லை. விமானம் அதுபாட்டுக்கு ஊர்ந்து, நிலையத்தைச் சென்றடைந்து, கதவு திறக்கப்பட்டு, முதல் வகுப்பு இருக்கைப் பயணிகளையும் வெளியே அனுப்பிய பின்னர்தான் எங்களை வெளியேறவே அனுமதிப்பார்கள். அப்போதும்கூட முன்னிருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து, தம் கைப்பைகளைச் சாவகாசமாக எடுத்து நகரும்வரை நாம் காத்திருக்கவேண்டும். அதற்குள் அதறிப் பதறி எழுந்து முட்டிமோதி நிற்பதில் என்ன பயன்? நான் கல்லுப்பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். காதில் இளையராஜா தேஷாக இசைத்துக்கொண்டிருந்தார். இருபத்தெட்டு மணி நேர நெடிய பயணம். தூக்கம் வராது, தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது என்று சித்திரா இறைஞ்சிக்கொண்டிருக்க எனக்கோ தூக்கம் தூக்கிப்போட்டது.

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 1 - பாடசாலை நண்பனின் திருமணம்

ஏனைய எந்த நட்பிலும் இல்லாத பெரு விசயம் ஒன்று பாடசாலை நட்பில் இருக்கிறது. ஆறாம் ஆண்டில் நான் பரியோவான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு அந்தச் சூழலே புதிது. அதிலும் எண்பதுகளில் தின்னவேலியில் பிறந்து வளர்ந்தவனுக்கு அரியாலைப் பகுதியே புதிதாகத்தான் இருந்தது. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் ஆண்டிலிருந்து கூடப்படித்த பப்பாவைத் தவிர வேறு எவரையும் அப்போது அங்கே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னோடு சேர்ந்து எங்கள் வகுப்பில் முப்பத்தாறு பேர் ஆறாம் ஆண்டு அனுமதிப் பரீட்சையில் தெரிவாகி வந்திருந்தார்கள். பண்டத்தரிப்புமுதல் அச்சுவேலி, இருபாலை, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கிலிருந்த ஆரம்பப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து இணைந்திருந்தார்கள். அவர்களோடு பரியோவானிலேயே பாலர் கல்வியிலிருந்து கற்று வந்த இரண்டு வகுப்புகளும் சேர்ந்து, ஏ பி சி என மொத்தமாக மூன்று வகுப்புகள். கொஞ்சம் பயம். கொஞ்சம் குழப்படி. கொஞ்சம் படிப்பு. நிறைய விளையாட்டு என்ற எளிமையான பதினொரு வயது சிறுவர்களைக்கொண்ட மூன்று வகுப்புகள் அவை. அப்படி ஆரம்பிக்கும் நட்புகளில் பெரும் பந்தம் ஒன்று இருக்கிறது. பாடசால...

முக்குழி அப்பம்

தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம். எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், தோசை, உரொட்டிபோல முக்குழி அப்பமும் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி சமைக்கப்படும் ஒரு உணவு. எங்கள் வீட்டைப்போலவே எல்லா வீடுகளிலுமே இதனைச் சமைப்பார்கள் என்றுதான் சிறு வயதில் நான் எண்ணியுமிருந்தேன். ஆனால் பின்னாட்களில் முக்குழி அப்பம் என்ற பெயரையே பலரும் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றறிந்தபோது ஆச்சரியமே மேலிட்டது. அம்மாவிடமே கேட்டேன்.

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

என் தலைக்கு மேல் சரக்கொன்றை

டெல்சுலா ஆவ் எழுதிய Laburnum For My Head என்கின்ற ஆங்கில நூலை எம். ஏ. சுசீலா தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். டெம்சுலா அசாமில் பிறந்த நாகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்திய உபகண்டத்தின் அசாம், நாகாலாந்து போன்ற வடகிழக்குப் பிராந்தியங்களின் காடும் மலையும் சூழ்ந்த நிலத்துக் குடிகளின் பல்வேறு வாழ்வுச் சிக்கல்களையும் போராட்டங்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் எல்லைகளுக்குள் நின்று பேசக்கூடிய புத்தகம் இந்த ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. தொகுப்பின் முதற் சிறுகதை ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. கொன்றை மரங்களை வீட்டில் வளர்க்க முயன்று தோற்றுப்போன ஒரு வயதான பெண்மணி ஈற்றில் தனக்கான கல்லறையை அவரே இயற்கையாக வடிவமைத்து அங்குக் கொன்றைகளை நடுவதற்கு முயற்சி எடுக்கிறார். அவரது மரணத்துக்குப் பின்னர் அவர் விரும்பியதுபோலவே கல்லறை இயற்கையாக அமைக்கப்பட்டுக் கொன்றை மரங்களும் அங்கு வளர்ந்து பூத்து நின்றன என்று கதை முடிகிறது. மரணத்துக்குப் பின்னரும் தான் எப்படி நினைவுகூரப்படவேண்டும் என்று தீர்க்கமாக வேலை பார்க்கும் ஒரு பெண்மணியின் கதை ஒரு ஆதாரம். கற்களாலும் சீமெந்தினாலும் கல்லறை அமைத்து மரணத்தை வெல்ல மனிதர்க...

அந்தி மழை பொழிகிறது

அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. ஒரு பார்வையற்றவனுக்கு எப்படித் தன் காதலியின் முகம் மழைத்துளிகளில் தெரியமுடியும் எனப் பலர் இப்பாடலை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இவ்வரிகளை அவ்வாறான நேர்கோட்டு அர்த்தத்தில் அணுகக்கூடாது என்று நினைக்கிறேன். பகல் முழுதும் வெயில் சுட்டுக்கிடக்கும் காலத்தில் அந்திப்பொழுது இதத்தினைக் கொணரும். அந்த இதத்தோடு மழையும் சேரும்போது அதன் உணர்வே அலாதியானது. அந்திப்போழுது ஆதலால் மறுநாள் சூரியன் எழும்வரை இரவெல்லாம் நீடிக்கக்கூடிய இதம் அது. இப்போது பார்வைப்புலனற்ற காதலில் வசப்பட்ட ஒருவனின் கோணத்திலிருந்து யோசித்துப்பாருங்கள். இத்தனை காலமும் மதிய வெயில் சுட்டு வரண்டுபோய்க் கிடந்தவன் நான். அந்திப்பொழுது எனக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. அப்போது பெய்யும் மழையின் துளிகள் என் உடலை வருடிச்செல்கின்றன. அவற்றில் உன் முகத்தை நான் அறிகிறேன். துளிகளின் ஸ்பரிசத்தை நீ கொடுக்கும் முத்தங்களாக உணர்கிறேன். காதலற்று உலர்ந்து கிடந்த நிலத்தில் பொழிந்த அந்தி மழையின் அணைப்பு நீ. பார்வையற்றவனுக்கு எழக்கூடிய காதலின் உன்மத்தம். அதுதான், அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு...

வரலாற்றின் புனைவு

உண்மை சொல்லப்படும்போதே புனைவாக மாற ஆரம்பிக்கிறது என்ற வாசகத்தை வரலாற்றை அறியும்போதெல்லாம் நமக்கு நாமே நினைவூட்டவேண்டியிருக்கிறது. சொல்லப்படும் கணத்திலேயே புனைவாக மாறக்கூடிய ஒன்று, பல நூற்றாண்டுகள் தாண்டி நம் கையில் வந்து சேரும்போது எப்படி மாறியிருக்கும்? அதுதான் வரலாறு. ஒரு வண்ணாத்திப்பூச்சியைப் பார்க்கையில், சில நாட்களுக்கு முன்னர்தான் அது வெறும் புழுவாக மரக்கிளையில் நெளிந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா? அதுபோலத்தான் வரலாறும். Metamorphosis என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணமே வரலாறாகத்தான் இருக்க முடியும். ஜாக்கு லூயி தாவித் வரைந்த நெப்போலியனின் பதவியேற்பு ஓவியம் அப்படிப்பட்டது. இந்த ஓவியத்தைப் பாரிசின் லூவர் நூதன சாலையில் கண்ணுற்றபோது முதலில் அதன் பிரமாண்டமும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் பெரும் வியப்பையே உண்டு பண்ணின. 1804ம் ஆண்டு நிகழ்ந்த தனது பதவியேற்பு வைபவத்தை ஆவணப்படுத்தி ஓவியமாக்குமாறு நெப்போலியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாவித் இந்த ஓவியத்தை ஆரம்பித்திருக்கிறார். புகழ்பெற்ற நொஸ்றடாம் தேவாலயத்தில் நிகழ்ந்த அந்தப் பதவி ஏற்பில் தாவிதும் கலந்துகொண்டு ஓவியத்துக்கான குறிப்புக...

கலைஞர்களின் சொர்க்கம்

மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிருக்கிறார். இங்கிருந்த ஒரு காலப்பகுதியில் எழுபது நாட்களில் எண்பது ஓவியங்கள்வரை மனுசன் வரைந்து தள்ளியிருக்கு. இம்பிரனிசம், கியூபிசம், சரயலிசம் போன்ற கலை வடிவங்கள் முகிழ்வதற்கு ஏது செய்த ஊரென்றும் இதனைச் சொல்லமுடியும். இன்றைக்கும் மொன்மார்த் நகரம் கலைஞர்களின் சொர்க்கமாகத்தான் திகழ்கிறது. இங்கு ஓவியர்களுக்கான திடல் ஒன்று காலை வேளைகளில் உயிர் பெறுகிறது. பல்வேறு ஓவியர்கள் அங்கு உட்கார்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை நாம் நேரடியாக கண்டு வியக்கலாம். அவர்களின் கண்களும் விரல்களும் ஒருசேர இணைந்து இயங்கு...

பிரியாவின் கதை

Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன். சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் துன்பகரமான பயணத்தை ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியோடு பிரியா முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிரியாவின் பார்வையில் பிரதானமாக நகரும் இந்நூலில் அஞ்செலா, ரொபின் அந்தக் குடும்பத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த பலரின் வாக்குமூலங்களும் இந்தப் போராட்டம் எப்படி அந்தச் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைகளை மாற்றியமைத்தது பற்றியும் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது.