ஏனைய எந்த நட்பிலும் இல்லாத பெரு விசயம் ஒன்று பாடசாலை நட்பில் இருக்கிறது. ஆறாம் ஆண்டில் நான் பரியோவான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு அந்தச் சூழலே புதிது. அதிலும் எண்பதுகளில் தின்னவேலியில் பிறந்து வளர்ந்தவனுக்கு அரியாலைப் பகுதியே புதிதாகத்தான் இருந்தது. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் ஆண்டிலிருந்து கூடப்படித்த பப்பாவைத் தவிர வேறு எவரையும் அப்போது அங்கே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னோடு சேர்ந்து எங்கள் வகுப்பில் முப்பத்தாறு பேர் ஆறாம் ஆண்டு அனுமதிப் பரீட்சையில் தெரிவாகி வந்திருந்தார்கள். பண்டத்தரிப்புமுதல் அச்சுவேலி, இருபாலை, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கிலிருந்த ஆரம்பப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து இணைந்திருந்தார்கள். அவர்களோடு பரியோவானிலேயே பாலர் கல்வியிலிருந்து கற்று வந்த இரண்டு வகுப்புகளும் சேர்ந்து, ஏ பி சி என மொத்தமாக மூன்று வகுப்புகள். கொஞ்சம் பயம். கொஞ்சம் குழப்படி. கொஞ்சம் படிப்பு. நிறைய விளையாட்டு என்ற எளிமையான பதினொரு வயது சிறுவர்களைக்கொண்ட மூன்று வகுப்புகள் அவை. அப்படி ஆரம்பிக்கும் நட்புகளில் பெரும் பந்தம் ஒன்று இருக்கிறது. பாடசால...